ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!

கட்சி தொடங்கப்பட்ட 28 ஆண்டுகளில், கீழ்த்திசை நாடுகளின் புரட்சிக்கு ஏங்கும் காலத்தில் தனது முதல் வெற்றியை பறைசாற்றியது மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி.

0

ஷ்ய போல்சுவிக் கட்சியின் உதவியுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 1, 1921 அன்று உதயமானது. கடந்த ஜூலை 1, 2021 அன்று தனது நூறாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. 13 பேரை மட்டுமே கொண்டு உருவான ஒரு சிறிய குழு அது. அதில், தோழர் மாவோவும் ஓர் உறுப்பினர்.

அக்கட்சி தனது முதல் கட்டமான (1921-1949) புதிய ஜனநாயகப் புரட்சி கட்டத்தில், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும், ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் களமாடி வெற்றிக்கண்டது. கட்சி தொடங்கப்பட்ட 28 ஆண்டுகளில், கீழ்த்திசை நாடுகளின் புரட்சிக்கு ஏங்கும் காலத்தில் தனது முதல் வெற்றியை பறைசாற்றியது மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி.

பல்லாயிரக் கணக்கான தோழர்களின் அளப்பறிய தியாகத்தால், கட்சி தலைமையின் கூர்மையான அரசியல் வழிகாட்டுதல்களால் தனது முதல்கட்ட புரட்சியை சாதித்தது. அதன்பின், ரஷ்ய போல்சுவிக் கட்சியின் பொதுக் கோட்பாடுகளை வரித்துக் கொண்ட அதே நேரத்தில், சீனாவின் தனிச்சிறப்பு நிலைமைகளுக்கு ஏற்ப ஓர் சோசலிச நிர்மாணத்தை கட்டியெழுப்பியது மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் ஆய்வுகளில் தோழர் மாவோவின் பங்கு மிகவும் முக்கியமானது. அதற்கான புதிய வழிமுறையாக கலாச்சாரப் புரட்சியை மாவோ தொடங்கி வைத்தார்.

படிக்க :

♦ பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ

♦ புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ

பல்வேறு அரசியல் கோட்பாடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை கட்சிக்குள் செழுமைப்படுத்திக் கொண்டே இருந்தார் தோழர் மாவோ. சீர்செய் இயக்கத்தை முன்னெடுத்து தவறுகளை திருத்த சளையாத போராட்டத்தை மேற்கொண்ட ஓர் மகத்தான கட்சிதான் மாவோ தலைமையிலான சீனப் பொதுவுடைமை கட்சி. மார்க்சிய – லெனினியத்தை அடுத்தக்கட்ட பாய்ச்சலாக வளர்த்தெடுத்ததில் முக்கிய பாத்திரம் தோழர் மாவோவிற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகார சகாப்தத்தில் உண்டு.

கம்யூனிஸ்டுகளாகிய நமது இறுதி இலட்சியம் கம்யூனிசம் மட்டுமே. அதை அடையும் வரலாற்று கட்டத்தில் நாம் பயணிக்கிறோம். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தனது வரலாற்றில் அரை நூற்றாண்டுகள் சோவியத் கட்டுமானத்தை நிலைநாட்டியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏறத்தாழ முப்பதாண்டுகள் தனது சோசலிச கட்டுமானத்தை நிலைநாட்டியது. நம் பயணம் வெற்றியும் தோல்வியும் முன்னேற்றமும் பின்னடைவும் கொண்டதுதான். ஆனால் தோல்வியில் இருந்து பாடம் கற்று வெற்றியை நோக்கி வீறுநடைப்போடுவதுதான் மார்க்சியத்தின் மகத்தானக் கூறு.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற அறிவியலின் அடிப்படையில் செயல்படும் இந்த மார்க்சியத் தத்துவம் நூற்றாண்டுகள் கடந்தாலும் இளமைத் துடிப்புடன் தன்னை புதுப்பித்துக் கொண்டு வருகிறது. அதேபோல், உலகப் பாட்டாளி வர்க்கத்தில் முன்னணிப்படையான கம்யூனிஸ்ட் கட்சியும், ஒவ்வொரு நாடுகளிலும் புரட்சி கனலை மூட்டிக் கொண்டிருக்கிறது. எனவே நமது இறுதி இலக்கான சோசலிசம் – கம்யூனிச சமூகத்தை நாம் அடைந்தே தீருவோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர்களாக நாம் கம்யூனிச சமூகத்தை வரலாற்றில் படைப்போம்!

கம்யூனிசமே நம் இறுதி இலட்சியம் !

மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனை நீடுழி வாழ்க !

வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க