ஃபத்தா, ஹமாஸ் உள்ளிட்ட 14 பாலஸ்தீன இயக்கங்களை ஒன்றிணைத்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 3 நாள் பேச்சுவார்த்தைக்கு சீனா ஏற்பாடு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 23 அன்று பாலஸ்தீன இயக்கங்களுக்கு இடையே “தேசிய ஒற்றுமை ஒப்பந்தம்” கையெழுத்தாகியுள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் பாலஸ்தீனத்தின் மீதான தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள, பிரதான பாலஸ்தீன இயக்கங்களுக்கு இடையே இருந்த அதிகாரப் போட்டியைப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் பாலஸ்தீன தேசிய ஒற்றுமையை அடைவதற்கான ஆக்கப்பூர்வ முன்னேற்றம் என ஹமாஸின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஹோசம் பத்ரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். போர் முடிவடைந்த பிறகு பாலஸ்தீனத்தை கட்டமைப்பதற்கான சிறந்த மற்றும் மிகவும் பொருத்தமான தேசியத் தீர்வை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒற்றுமை ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஹமாஸ் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பாலஸ்தீன தேசியக் கூட்டணியின் சட்டப்பூர்வ பிரதிநிதியாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை (பி.எல்.ஓ) ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுள்ளன. போர் முடிந்த பிறகு அல்-குத்ஸ் நகரை பாலஸ்தீனத்தின் தலைநகராகக் கொண்டு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கும், ஒரு இடைக்கால தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் இந்த ஒப்பந்தம் உறுதியளித்துள்ளது.
சொந்த நிலத்தில் இருந்து துரத்தப்பட்ட பாலஸ்தீனர்கள் திரும்பி வருவதற்கான உரிமையை உறுதி செய்ய ஐ.நா. அவை தீர்மானம் 194 இன் படி இந்த ஒப்பந்தத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டிற்கு திரும்பி வர விருப்பம் இல்லாதவர்களின் உணர்வை மதிக்கும் வகையில் அவர்கள் இழந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும், இதனை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படிக்க: காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு பாலஸ்தீன மக்களின் உரிமையும், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின்படி கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் போராட்ட உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் “ஒற்றுமை ஒப்பந்தத்தின் வெற்றி, அனைவருக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. பாலஸ்தீனர்களுக்கான எதிர் காலத்தைக் கொடுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “மத்திய கிழக்கில் ஒரே நாள் இரவில் அமைதியைக் கொண்டு வந்து விட முடியாது. சரியான பாதையில் பயணித்து அமைதியை அடைய நாம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும். அமைதிக்கான பாதையை நம்பிக்கை இழக்காமல் நாம் தொடர வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒற்றுமை ஒப்பந்தத்தை பாலஸ்தீன ஆதரவு நாடுகள், அமைப்புகள், ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வரவேற்றுள்ளன. பாலஸ்தீன ஒற்றுமையை உருவாகியுள்ள இந்த ஒப்பந்தத்தை ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார். மேலும் “பாலஸ்தீன ஒற்றுமையை உருவாக்குவதில் இது முக்கிய முன்னெடுப்பு. பேச்சுவார்த்தை மூலம் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை கைவிட்டு ஒன்றிணைந்துள்ள பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் எடுத்துள்ள முடிவில் உறுதியாக நின்று நிறைவேற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு அமைதி செயல்முறைக்கான ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு பிரதிநிதி ஸ்வென் கூப்மன்சும் இந்த உடன்பாட்டை வரவேற்றுள்ளார். “சீனாவின் இந்த அமைதி முன்முயற்சி குறிப்பிடத்தக்க சாதனை. மத்திய கிழக்கு பகுதிகளில் அமைதிக்கான சமாதான முன்னெடுப்புகளில் சீனா தனது நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்கை முழுமையாக நிரூபிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்குகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மலேசியா, பாகிஸ்தான், துருக்கி, ஓமன் நாட்டின் தலைவர்களும் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வரவேற்றுள்ளனர்.
படிக்க: பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை ஆதரித்து நிற்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, “சர்வதேச அரசியல் சூழல் எப்படி மாறினாலும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிறுவவும், பாலஸ்தீனர்களின் உரிமையை நிலை நாட்டவும் சீனா தொடர்ந்து செயல்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
“காசாவில் தற்போது நடக்கும் போரால் மட்டும் பாலஸ்தீனர்கள் பாதிக்கப்படவில்லை; வரலாற்று ரீதியாகவே அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களது நிலம் அவர்களுக்கு சொந்தமாக வேண்டும்; அதை அவர்கள் வழிநடத்த வேண்டும்; அவர்கள் ஆட்சி செய்ய வேண்டும். அது தான் வரலாற்று ரீதியாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்யும் வழி” எனவும் வாங் யீ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஈரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையே சீனா ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தற்போது பாலஸ்தீனப் பிரச்சனையில் சீனா தலையிட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கம் சரிய துவங்கியுள்ள சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய கிழக்கில் சீனா தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள முயல்கிறது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube