பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள காசா மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவதற்காக சென்று கொண்டிருந்த தொண்டு நிறுவன வாகனத்தின் மீது இஸ்ரேல் ஏப்ரல் 1 ஆம் தேதியன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் அந்த தொண்டு நிறுவனத்தின் 7 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
“வேர்ல்டு சென்ட்ரல் கிச்சன்” (டபிள்யு.சி.கே) அறக்கட்டளை என்ற அந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வெளிநாட்டினர்.
மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள வான்வழித்தாக்குதலைத் தொடர்ந்து டபிள்யு.சி.கே அறக்கட்டளை நிறுவனமானது, தான் சேகரித்த உணவுப் பொருள்களுடன் காசாவை நோக்கி சென்றுகொண்டிருந்த நிவாரணக் கப்பல்களை திருப்பி அழைத்துக்கொண்டது.
படிக்க: நெதன்யாகு பதவி விலகக் கோரி இஸ்ரேலிய மக்கள் போராட்டம்
இது குறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் எங்களது அறக்கட்டளையைச் சேர்ந்த 7 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பிரிட்டன், ஆஸ்திரேலியா, போலந்து, பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களும், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவரும் அடங்குவர்.
மோதல் நடைபெறாமல் அமைதியாக இருந்த பகுதி வழியாக, டபிள்யு.சி.கே அறக்கட்டளையின் இலச்சினை (Logo) பெரிதாகப் பொறிக்கப்பட்ட வாகனங்களில் சென்றுகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு எத்தகைய குழப்பத்தையும் காரணமாகக் கூற முடியாது. டேய்ர் அல்-பாலா உணவுக் கிடங்கிலிருந்து எங்களது குழுவினர் சென்றுகொண்டிருந்தனர். இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்திடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. எங்களது ஒவ்வொரு அசைவையும் இஸ்ரேல் ராணுவத்துடன் ஒருங்கிணைந்தே மேற்கொண்டோம். அப்படி இருந்தும், எங்கள் வாகனத்தைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது டபிள்யு.சி.கே அறக்கட்டளை மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை, ஒட்டுமொத்தமாக அனைத்து தொண்டு நிறுவனங்களையும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள தாக்குதல்.
போரில் உணவு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் மிக மோசமான சூழலுக்கிடையே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மன்னிக்கமுடியாதது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படிக்க: காசா: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் இராணுவம்!
உணவுப் பற்றாக்குறையால் தவித்து வரும் காசாவுக்கு தரை வழியாகவும், வான்வழியாகவும் மட்டுமின்றி கடல் வழியாகவும் நிவாரணப் பொருள்களை அனுப்ப அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் முன்னோட்டமாக, பிரபல அமெரிக்க சமையல் கலை வல்லுநர் ஜோஸ் ஆண்டர்ஸின் டபிள்யு.சி.கே அறக்கட்டளையால் சேகரிக்கப்பட்ட 200 டன் உணவுப் பொருள்களுடன் சைப்ரஸின் லார்னாகா துறைமுகத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் 12-ஆம் தேதி புறப்பட்ட கப்பலொன்று, 4 நாள்களுக்குப் பிறகு காசாவிலுள்ள தற்காலிக துறைமுகத்தை அடைந்தது.
ஐரோப்பிய யூனியனின் அனுமதியுடன் ஸ்பெயின் நாட்டின் “ஓப்பன் ஆர்ம்ஸ்’ சேவை அமைப்பு அந்தக் கப்பலை அனுப்பியது. கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து காசாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல அந்நாட்டின் ஆணையம் அனுமதி வழங்கியது இதுவே முதல்முறையாகும்.
இந்த நிலையில், இந்த கடல்வழி நிவாரணப் பொருள் விநியோகத் திட்டத்தின் 2-ஆம்கட்டமாக, 400 டன் உணவுப் பொருள்களுடன் 3 கப்பல்கள் சைப்ரஸ் துறைமுகத்திலிருந்து கடந்த மார்ச் 30 அன்று புறப்பட்டன.
இந்த நிலையில், ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்ட உணவுப் பெருள்களை விநியோகிக்கும் பணியில் டபிள்யு.சி.கே அறக்கட்டளை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
உணவுப் பொருள்கள் விநியோகம் செய்பவர்களை அச்சுறுத்துவதற்காகவே இஸ்ரேல் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியுள்ளது. டபிள்யு.சி.கே அறக்கட்டளையின் அறிக்கை இதை அம்பலப்படுத்துகிறது. அக்டோபர் 7 தொடங்கி மார்ச் 20 வரை மட்டும், பாலஸ்தீனப் பகுதிகளில் மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்டிருந்த 196 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் இனப்படுகொலையின் காரணமாக 33,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அங்கு பட்டினி காரணமாக இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐ.நா.வும், பிற தொண்டு அமைப்புகளும் எச்சரித்துவருகின்றன.
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube