காசா: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் இராணுவம்!

காசாவின் வடக்கு பகுதியிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளையும் அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களையும் புல்டோசர்களால் இடித்தும், மீண்டும் அங்கே வர இயலாதபடி தீ வைத்து எரித்தும் வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

டந்த மார்ச் 18 அன்று, காசாவின் வடக்கு பகுதியான அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதலைத் தொடங்கியது பாசிச இஸ்ரேல் ராணுவம். அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொது ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் தஞ்சமடைந்திருந்த மக்கள், முதலுதவியாளர்கள் மீது விவரிக்க இயலாத வகையில் கடுமையான தாக்குதலையும், சித்திரவதைகளையும் செய்து வருகிறது பாசிச இஸ்ரேல். சுற்றியுள்ள குடியிருப்புகளையும் காலி செய்ய நிர்ப்பந்தித்து வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

மருத்துவ வளாகத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய இராணுவப் படையினர் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்து வருகின்றனர். இத்தாக்குதலை நேரில் கண்ட பெண்ணான ஜமீலா அல்-ஹிசி கூறுகையில் “பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பசி, பட்டினி, சித்திரவதை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனை கொடுக்கப்படுகிறது” என்கிறார்.

மேலும், சித்திரவதைக்குள்ளான ஒருவர் கூறுகையில் “எங்களுக்கு ஆறு நாட்களாக உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்காவது தண்ணீர் வழங்க கேட்கிறோம். ஆனால் இஸ்ரேல் இராணுவம், அழுக்கு நீரையும், அழுகிய உணவையும் சாப்பிட கட்டாயப்படுத்துகிறது” என்று கூறுகிறார்.

இஸ்ரேல் இராணுவம் மருத்துவ வளாகத்தை சுற்றியுள்ள 65 குடும்பங்களை வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவ வளாகத்தை சுற்றியுள்ள பல வீடுகளை எரித்தும், குடும்பங்களை படுகொலை செய்தும், அந்த இடத்தை விட்டு துரத்தியடித்தும் வருகிறது. இதனை வேதனையோடு கூறிய ஒருவர்  “எங்கள் வீடுகளை அழித்துவிட்டு துரத்துகிறீர்கள், எங்களது உணவு பசியைப் போக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை. நாங்கள் எங்கே செல்வதன்று தெரியவில்லை” என்கிறார்.


படிக்க: காசா: அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுகொலைகளைச் செய்யும் பாசிச இஸ்ரேல்!


இதுவரை, அல்-ஷிஃபா மருத்துவமனையில் உதவியாளர்கள், நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் என 140 பேருக்கு மரணதண்டனையை நிறைவேறியுள்ளதாக இஸ்ரேலிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்கிற காரணத்தை கூறிக்கொண்டு அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக துன்புறுத்தி இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றனர். மருத்துவமனையை சுற்றியுள்ளப் பகுதிகளை பார்க்கும் போது முற்றிலுமாக அழிந்தது போல் காட்சியளிக்கின்றன.

மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது  இஸ்ரேல் இராணுவம். அதற்கு பல மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மறுப்பு தெரிவிக்கும் மருத்துவர்களை சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றும் வருகின்றனர். அவ்வாறு மறுப்பு தெரிவித்ததற்காக, மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது மருத்துவர் முகமது ஜாஹிர் அல்-நோனோவை நோயாளி முன்பே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

போரினால் இடம்பெயர்ந்து, மருத்துவமனையை சுற்றி 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மக்களை தெற்கு காசாவை நோக்கி கட்டாயப்படுத்தி துரத்தியடித்து வருகிறது இஸ்ரேல் இராணுவம். ஆனால், அங்குள்ள மக்கள் தங்களுக்கு நடந்து செல்லக் கூட உடம்பில் தெம்பில்லை எனக் கூறுகின்றனர். மேலும், “நாங்கள் சோர்வாகவும், பசியிலும், பணம் எதுவும் இல்லாமலும் இருக்கிறோம். எங்கும் எங்களால் செல்ல முடியாது. தயவு செய்து இந்த போரை யாராவது நிறுத்துங்கள்” என்று அங்குள்ள பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கூறுகையில் “ஷிஃபா மற்றும் போரினால் இடம்பெயர்ந்த மக்களை பார்க்க உலகை அழைக்கிறேன். அங்கே யாரும் இல்லை, எல்லோரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்” என்கிறார். மேலும், அவர் கூறுகையில் ”குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களுக்கு முன்னால் தூக்கிலிடப்படுகிறார்கள். அவர்களின் உடன்பிறப்புகள் மற்றும் தாய்மார்களுக்கு முன்னால் வெளிப்படையாக மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது” என்கிறார்.


படிக்க: காசா குழந்தைகளுக்கு அழக்கூட உடம்பில் தெம்பில்லை!


மருத்துவமனைக்கு அருகாமை வீட்டிலிருந்து தப்பிய முதியவர் கூறுகையில் “நாங்கள் மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் வசிக்கிறோம். நாங்கள் பார்த்ததும், கேட்டதும் துப்பாக்கி சூடும் குண்டு மழையும் தான்” என்கிறார். மேலும், இராணுவப் படையினர் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளின் கதவுகளை உடைத்து, உள்ளே நுழைந்து நாயை ஏவி மக்களை துன்புறுத்தி வருவதாக அவர் கூறுகிறார்.

துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில் “இராணுவத்தினர் நாயை என் கணவர் மீது கடிக்க விட்டனர். அவரது மார்பு, வயிறு மற்றும் அவரது காலை மோசமாக கடித்து, அவரை முழுவதுமாக கடித்துக் குதறியது. இதனால் அதிகமான இரத்தம் வெளியேறியது. ஒரு கிலோவுக்கும் அதிகமான இரத்தத்தை இழந்தார்”. இஸ்ரேல் இராணுவப் படையினரின் அட்டூழியங்களை எவராலும் சகிக்க முடியாதவையாக இருந்து வருகின்றன.

காசாவின் வடக்கு பகுதியிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளையும் அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களையும் புல்டோசர்களால் இடித்தும், மீண்டும் அங்கே வர இயலாதபடி தீ வைத்து எரித்தும் வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

மருத்துவமனையை முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்து வருவதை பல நாடுகளும், அமைப்புகளும் கண்டித்தாலும் இனவெறிபிடித்த நெதன்யாகு போரை நிறுத்த முன்வருவதில்லை. தொடர்ச்சியாக, ரஃபா எல்லை பகுதியைத் தாக்கி அழிக்க முனைப்புக் காட்டி வருகிறார். ரஃபா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்த அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறது இஸ்ரேல். இத்தாக்குதல் தொடங்கப்பட்டால் மிக அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என பலரும் எச்சரித்து வருகின்றனர்.


படிக்க: காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு


மார்ச் 23 அன்று ரஃபா எல்லையை பார்வையிட்ட ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ போர் நிறுத்தத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் கூறுகையில் “7,000 உதவி ட்ரக்குகள் காசாவுக்குள் நுழைவதற்கு இஸ்ரேலின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. பாலஸ்தீனியர்கள் பட்டினியில் வாடி வருகின்றனர். இது, தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை” என அறிவித்துள்ளார். உலக சுகாதர அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் கூறுகையில், “நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் மருத்துவமனைகள் போர்க்களங்கள் அல்ல. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் காப்பாற்றப்பட வேண்டும்” என்கிறார்.

இன்று மனிதாபிமானம் காப்பாற்றப்பட வேண்டும் என கூறிக் கொண்டிருக்கும் இவர்கள் ஏன் ஜோ பைடனையும் நெதன்யாகுவையும் போர் குற்றவாளியாக அறிவிக்க தயங்குகின்றனர். மார்ச் 25 அன்று ”உடனடி போர் நிறுத்தம்” செய்யப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட இஸ்ரேல் இனப்படுகொலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது; ஐ.நா-வும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. போரை துவங்கியதிலிருந்தே சிறுசிறு கண்டனங்களை தெரிவித்துவிட்டு வேடிக்கை பார்த்த அமெரிக்க அடிவருடிகளான இவர்களா உலக மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்பினர், கண்டிப்பாக இல்லை. ஏகாதிபத்தியங்களின் கொள்ளை லாப வெறிக்கு மக்களை பலியிட உதவுபவர்கள் தான் இவர்கள்.

பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் பல நாடுகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சரிந்துவரும் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள அமெரிக்கா இந்த இன அழிப்பு போரை தொடர்ந்து நடத்தி வருகிறது. எனவே, இஸ்ரேல் – அமெரிக்காவுக்கு எதிராகவும், ஏகாதிபத்திய கும்பலின் போர்வெறிக்கு எதிராகவும் சர்வதேச உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்தாக வேண்டும்.

செய்தி ஆதாரம்: Countercurrents


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க