காசா: அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுகொலைகளைச் செய்யும் பாசிச இஸ்ரேல்!

இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பல கைதிகளை பிணவறைக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அங்கிருந்து இராணுவ வீரர்கள் மட்டும் வெளியேறினர்

பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலை போர் அக்டோபர் 7 அன்று தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. பல வகையான போர் முறைகளை கையாண்டு வருகிறது பாசிச இஸ்ரேல் அரசு. அதன் தொடர்ச்சியாக காசாவின் மருத்துவமனைகளைக் குறிவைத்து தாக்கியும் அழித்தும் வருகிறது. போர் தொடங்கியதிலிருந்தே மக்கள் உணவு பற்றாக்குறையினால் கடும் பட்டினியில் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையும் ஓர் போர் ஆயுதமாக கையிலெடுத்துள்ளது இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசு.

இந்த வாரம் வடக்கு காசாவில் இஸ்ரேலிய இராணுவப் படைகளால் அல்-ஷிஃபா மருத்துவமனை சோதனையிடப்பட்டு பலரும் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 20 அன்று யூரோ மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் போது குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களில் பலர் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் கூறியுள்ளன. இதில் டஜன் கணக்கானவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டும், அடித்தும் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

இதனையொட்டி, மருத்துவமனையில் தடுப்பு காவலில் இருந்தவர்களிடம் நேர்காணல் செய்ததில், மூன்று நாட்களாக சித்திரவதைகள் செய்து மரணதண்டனை கொடுத்து வருவதாக கூறுகின்றனர். ஒரு கைதி கூறுகையில், ”இஸ்ரேலிய இராணுவப் படையினர் என்னைக் கைது செய்த பின் கைவிலங்கைப் போட்டனர். பின் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக நான் ஆடையின்றி இருந்தேன். இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பல கைதிகளை பிணவறைக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அங்கிருந்து இராணுவ வீரர்கள் மட்டும் வெளியேறினர்” என்கிறார். மற்றொரு கைதி கூறுகையில், “இஸ்ரேலிய இராணுவப் படைகள் ஒரே நேரத்தில் எட்டு அல்லது பத்து பாலஸ்தீனியர்களை சவக்கிடங்கிற்கு அழைத்துச் சென்று துப்பாக்கி சூடு நடத்திக் கொலை செய்து வருகின்றனர்” என்று கூறினார்.

இதைப்பற்றி இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட செய்தியறிக்கையில் சுமார் 90 பயங்கரவாதிகளை அழித்துவிட்டதாக கூறியுள்ளது. மருத்துவமனையில் தடுப்பு காவலில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டவர்களில் மக்கள் மட்டுமல்ல மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களும் அடங்குவர். காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் முன்னாள் அவசர அறுவைசிகிச்சை நிபுணர் ஒருவரை சித்திரவதை செய்துள்ளது இஸ்ரேல் இராணுவம்.


படிக்க: காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு


இஸ்ரேலிய இராணுவப் படையினரால் மருத்துவமனை ஊழியர்கள் கைது செய்யப்பட்டு பல மணி நேரம் குளிர்ச்சியான அறையில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலரை மருத்துவமனையில் இருந்து அடையாளம் தெரியாத இடங்களுக்கு வெளியே அழைத்து செல்வது மற்றும் அரை நிர்வாணமாக பலரையும் காசாவின் தெற்கு பகுதி நோக்கி அழைத்து செல்வது என அட்டூழியங்களை செய்துவருகின்றது இஸ்ரேல் இராணுவம். இஸ்ரேல் இராணுவப் படைகள் எந்தவொரு விதிமுறைகளையும் பின்பற்றாமல் போராளிகள், மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் மீது எந்தவொரு வேறுபாடுமின்றி இனப்படுகொலையை நடத்தி வருகிறது.

போரின் விளைவாக வடக்கு காசாவில் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையும், தொற்றுநோயும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழலில் இனவெறிப்பிடித்த இஸ்ரேலிய படையினர் மருத்துவமனையைக் குறிவைத்து அங்குள்ளவர்களை வெளியேற்றியும், மரணதண்டனைகளை விதித்தும் வருகிறது.

இதுமட்டுமல்லாமல், மருத்துவமனையில் பத்திரிகையாளர்களையும் சித்திரவதை செய்துள்ளது இஸ்ரேல் இராணுவம். அல்ஜசீரா பத்திரிகையாளர்களை தடுப்பு காவலில் குளிர்ச்சியான அறைகளில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக CNN ஊடகம் தெரிவித்துள்ளது. அல்ஜசீரா அரபு நிருபர் இஸ்மாயில் அல்-கோல் மற்றும் அவரது குழுவினரையும் கைது செய்து சுமார் 12 மணி நேரம் கடுமையாக சித்திரவதை செய்து தாக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதர அமைப்பின் அறிக்கையின்படி, அக்டோபர் 7 முதல் 410 சுகாதர நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இத்தாக்குதலில் “685 பேர் இறந்ததாகவும், 902 பேர் காயமடைந்ததாகவும், 99 மருத்துவ நிலையங்கள் மற்றும் 104 ஆம்புலன்ஸ்கள் சேதமடைந்ததாகவும்” கூறப்பட்டுள்ளது.

காசா பகுதி முழுவதும் உணவு பற்றாக்குறையால் பசி, பட்டினி தீவிரமாகி வருகிறது. கடந்த புதன்கிழமை வெளியிட்ட உலக வங்கியின் அறிக்கையின்படி “காசாவில் 1.1 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையினால் பேராபத்தில் உள்ளதாக” கூறப்பட்டுள்ளது. இது ஒரு “பேரழிவு” எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், உணவு பற்றாக்குறையால் 8,54,000 பேர் “அவசரநிலையை” எதிர்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.


படிக்க: காசா குழந்தைகளுக்கு அழக்கூட உடம்பில் தெம்பில்லை!


காசாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் தினசரி உணவை தவிர்ப்பதுடன், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கணிசமானோர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் மற்றும் பணி நிறுவனத்தின் (UNRWA) கமிஷனர் ஜெனரல் பிலிப் லாஸரி கூறுகையில் ”முற்றுகைப் போர், பசி மற்றும் நோய்கள் காசாவின் மக்களை கொல்லும் முக்கிய கொலைகருவியாக மாறும்” என்று எச்சரித்துள்ளார்.

மார்ச் 19 மற்றும் மார்ச் 20 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரையிலான இறப்பு 31,923 ஆக உள்ளது. இதனோடு காணாமல் போனவர்களை சேர்த்தால் 40,000-ஐ தாண்டியுள்ளது.

இஸ்ரேல் காசாவின் மக்களை கொல்வதற்கு உணவை ஓர் ஆயுதமாக எடுத்துள்ளதும், பட்டினியால் கொல்வதற்காக உணவுப் பொருட்களுக்கு தடைவிதித்தும் , குறிப்பாக முதலுதவி பணியாளர்களை குறிவைத்தே தாக்குதல் தொடுத்துக் கொன்று வருவதாக கூறப்படுகிறது. காசாவின் அரசாங்க ஊடக தகவலின்படி, கடந்த வாரத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட முதலுதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இஸ்ரேல் அரசு பட்டினியை நிரந்தரமாக்குவது மற்றும் பரந்த அளவில் உணவு பற்றாக்குறை ஏற்படுத்துவதையே கொள்கையாக மாற்றியுள்ளதாக காசாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் அதிபர் நெதன்யாகு பாராளுமன்ற வெளியுறவு குழுவிற்கு அளித்த அறிக்கையில்  “காசாவில் அமெரிக்காவால் கட்டப்படும் துறைமுகம் பெயரளவிலான உணவு தேவைகளை பூர்த்தி செய்யலாம்” எனவும், “காசா மக்கள் வெளியேற எந்தவொரு தடையும் இல்லை, ஒருவேளை தற்போது கட்டும் துறைமுகத்தின் வழியாக காசா மக்கள் வெளியேறக் கூட பயன்படுத்தப்படலாம், ஆனால் உலகில் எந்த நாடுகளும் பாலஸ்தீனியர்களை வரவேற்கத் தயாராக இல்லை” என இனவெறி வன்மத்தை கக்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசு, நெதன்யாகுவை விமர்சித்து வந்தாலும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு நிதி மற்றும் ஆயுதங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளவும் விரிவுபடுத்தவும் இஸ்ரேலின் அனைத்து வகையான அடாவடித்தனத்தையும் அங்கீகரித்து வருகிறது.

செய்தி ஆதாரம்: Countercurrents


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க