காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு

காசா அரசாங்கம் மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் நிவாரணப் பொருட்களை வழங்கும் விநியோக மையங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அதில் 56 பேர் கொல்லப்பட்டதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

டந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி தொடங்கிய பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் மிகக் கொடூரமான இன அழிப்புப் போர் 160 நாட்களைக் கடந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உலகின் பல நாடுகளில் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக மக்கள் போராட்டங்கள் இன்றுவரை நடைபெற்று வரும் சூழலிலும் இஸ்ரேலும் அமெரிக்காவும் திட்டமிட்டு பாலஸ்தீனத்தின் மீதான கொடிய தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

இஸ்ரேலின் கொடிய தாக்குதலால் தன் குடும்பத்தினரை இழந்து வாழும் பாலஸ்தீனியர்களின் குமுறல்களும், மருத்துவமனையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் தன் மகனை பார்த்து கதறும் தாயின் கதறல்களும், உணவு, குடிநீர் தட்டுப்பாட்டால் எலும்பும் தோலுமாகி இறந்துபோன குழந்தைகளை பார்த்து கதறும் தாய்மார்களின் அழுகுரல்களும் நம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

ஒருபுறம் தெற்கு காசாவின் ரஃபா எல்லையில் தற்காலிக கூடாரங்கள், மருத்துவமனைகள், ஐ.நா. அகதிகள் முகாம்கள் மீது போரில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை கொத்துக் கொத்தாக வீசியும், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியும் பாலஸ்தீன மக்களை படுகொலை செய்து வரும் இஸ்ரேல் அரசு, மறுபுறம் உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியும் மக்களை படுகொலை செய்து வருகிறது.

மேலும், தற்போது உலகின் பல நாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்களாக அனுப்பிவைக்கப்படும் உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள காத்திருக்கும் மக்கள் மீதும், லாரிகளில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை பெற முயலும் மக்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தி பாலஸ்தீனிய மக்களை இனப்படுகொலை செய்துவருகிறது, யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு.


படிக்க: காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா


கடந்த வியாழன் (14.03.2024) அன்று காசா நகரில் நிவாரணப் பொருட்களைப் பெறுவதற்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இக்கொடிய தாக்குதலை “புதிய, திட்டமிட்ட படுகொலை” (new, premeditated massacre) என்றும் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர்கள், டாங்கிகள், ட்ரோன்கள் மூலம் இத்தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் அல் ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதை மறுத்துள்ளதோடு, ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்களே தாக்குதலுக்கு காரணம் என்றும் அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட தன்னுடைய அறிக்கையில், “வியாழன் (14.03.2024) அன்று நிவாரணப் பொருட்களின் வருகைக்காக காசா மக்கள் காத்திருந்த போது ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர், காசா மக்கள் லாரிகளில் உள்ள பொருட்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர்” என்று பச்சைப் பொய்யைக் கூறியுள்ளது.

உணவு மற்றும் பிற அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை பெறுவதற்காக காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் இதற்கு முன்னரும் தாக்குதல் நடத்தி வந்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கள நிலவரத்தின் படி, படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கும்.


படிக்க: காசாவில் பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல்!


காசா அரசாங்கம் மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் நிவாரணப் பொருட்களை வழங்கும் விநியோக மையங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அதில் 56 பேர் கொல்லப்பட்டதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவம் நிவாரணப் பொருட்களை பெறுவதற்காக காத்திருந்த அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு உலகின் பல நாடுகளில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. மார்ச் 15 அன்று, ஐ.நா.வின் அவசரக்கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கி-ரிஃபித்ஸ், “உணவுப் பொருட்களுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, காசாவின் மக்கள்தொகையில் 25 சதவிகிதத்தினர் (குறைந்தபட்சம் 5,76,000 பேர்) பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக அல் ஜசீரா போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், உணவுப் பொருட்களுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது பஞ்சத்தை தீவிரப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இறப்பு விகிதத்தையும் அதிகரிக்கவே செய்யும்.

காசா சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின் படி, யூத இனவெறி இஸ்ரேல் அரசின் பாலஸ்தீனத்தின் மீதான போரால் 31,490-க்கும் மேற்பட்டோர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; 73,439-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த காசா மக்களையும் இன அழிப்பு செய்து காசா பகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்காவின் துணைகொண்டு இன அழிப்புப் போரைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல் அரசு.

நன்றி: அல் ஜசீரா


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க