காசாவில் பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல்!

பிப்ரவரி 7 நிலவரப்படி, காசா போரில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது

டந்த 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 99 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 77 பேர் காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் கொல்லப்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்பான ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists – CPJ) தெரிவித்துள்ளது. அந்த 77 பேரில், 72 பத்திரிகையாளர்கள் பாலஸ்தீனியர்கள், மூன்று பத்திரிகையாளர்கள் லெபனானியர்கள் மற்றும் இரண்டு பத்திரிகையாளர்கள் இஸ்ரேலியர்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் 2023 ஆம் ஆண்டு தான் பத்திரிகையாளர்கள் அதிகமாக கொல்லப்பட்ட ஆண்டாக உள்ளது. காசா, இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் பத்திரிகையாளர்கள் உயிரிழக்காமல் இருந்திருந்தால், உலகளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது ஆண்டுக்கு ஆண்டு குறைந்திருக்கும் என்று சி.பி.ஜே தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டில் ஒரு ஆண்டு முழுவதும் இறக்கும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமான பத்திரிகையாளர்கள் காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரினால் முதல் மூன்று மாதங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

பத்திரிகை சுதந்திரத்திற்காக வாதிடும் நியூயார்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் சி.பி.ஜே அமைப்பு, இஸ்ரேலிய படைகளால் காசா பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்துள்ளது. மேலும் காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் திட்டமிட்டே கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அது ஒரு போர்க்குற்றம் என்றும்  அவ்வமைப்பு தனது கருத்தை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 7 நிலவரப்படி, காசா போரில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.


படிக்க: காசா: குழந்தைகளை நரவேட்டையாடும் இரத்தவெறி பிடித்த இஸ்ரேல் | காணொளிகள்


”காஸாவில் இருக்கின்ற பத்திரிகையாளர்கள் போரில் நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகுக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இந்த போரில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் சந்தித்த மாபெரும் இழப்பு இது. பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் இழப்பு பாலஸ்தீனப் பிரதேசங்களில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் நீண்டகாலம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று சி.பி.ஜே அமைப்பின் தலைமை நிர்வாகி ஜோடி கின்ஸ்பெர்க் அல்-ஜசீராவிடம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நான்கு மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்த போரில், இஸ்ரேலின் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் 28,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 67,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏறக்குறைய 85 சதவிகித மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

காசாவில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்துவதற்கு, இஸ்ரேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணை இருப்பதால் இஸ்ரேல் எதையும் கண்டுகொள்வது கூட இல்லை.

காசாவில் நடக்கும் இனப்படுகொலை குறித்தோ, அங்கு பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது குறித்தோ இந்திய ஊடகங்கள் உள்ளிட்ட உலகின் அமெரிக்கா – இஸ்ரேல் ஆதரவு ஊடகங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை. அவை தற்போதுவரை இஸ்ரேலின் இனப்படுகொலை குறித்த செய்திகளை வெளியிடுவதில்லை. முதுகெலும்பு அற்ற அவை இஸ்ரேலை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும் வேலையைத்தான் செய்து வருகின்றன.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க