காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா

யசான் மட்டும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. வடக்கு காசாவில் உடல் நீரிழப்பு (dehydration) மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 16 குழந்தைகள் இறந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் நடத்திய இன அழிப்புப் போரின் காரணமாக ஏற்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக்குறைபாட்டால் பத்து வயதான யசான் கஃபர்னா (Yazan Kafarna) மார்ச் 4 ஆம் தேதியன்று உயிரிழந்துள்ளார்.

யசானுக்கு பிறப்பிலிருந்தே பெருமூளை வாத நோய் இருந்துவந்துள்ளது. மேலும் அவருக்கு உணவு விழுங்குவது மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினையும் இருந்தது. இதனால் அவர் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் எளிமையாக விழுங்கும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
யசான் கஃபர்னாவின் உடல்நிலை இவ்வாறு இருக்க, யசானின் குடும்பம் வாழ்ந்த பைட் ஹனூன் பகுதி உள்ளிட்ட வடக்கு காசா பகுதிகளில் இஸ்ரேல் அரசு மின்சாரம், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை நிறுத்தியது.

இதனால், யசான் கஃபர்னா குடும்பத்தினர் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு இடத்திற்குச் செல்லத் தொடங்கினர். இதனால் யசான் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பசியுடனே இருந்தனர். இஸ்ரேல் ராணுவம் காசா மக்களை ரஃபா நகரை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியது. இம்மாதிரியான தொடர்ச்சியான இடப்பெயர்ச்சியினால் யசானுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்காமல், யசானின் உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.


படிக்க: காசா: குழந்தைகளை நரவேட்டையாடும் இரத்தவெறி பிடித்த இஸ்ரேல் | காணொளிகள்


யசானின் தந்தை மருத்துவமனைகளுக்குச் சென்று யசானின் உடல் நிலையை சரிசெய்ய தீவிர முயற்சி செய்தார். ஆனால் அங்கிருந்த பல மருத்துவமனைகள் இஸ்ரேலின் திட்டமிட்ட குண்டுவீச்சின் விளைவாக ஏற்கெனவே இடிபட்டுக் கிடந்தன. போருக்கு முன்பு காசா பகுதியில் கிட்டத்தட்ட 35 மருத்துவமனைகள் இருந்தன. ஆனால் தற்போது 5 மருத்துவமனைகள் தட்டுத் தடுமாறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவையும் கூட முதன்மை சிகிச்சையை மட்டுமே வழங்கும் நிலையில் தான் இருக்கின்றன.

இதனால் யசானுக்கு தேவையான மருந்துகளும் சிகிச்சையும் கிடைக்கவில்லை. இதனால் மிகவும் உடல் மெலிந்து போயிருந்த யசான் மார்ச் 4 ஆம் தேதி இறந்துவிட்டார்.

யசான் மட்டும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படவில்லை. வடக்கு காசாவில் உடல் நீரிழப்பு (dehydration) மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 16 குழந்தைகள் இறந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யசான் இறப்பதற்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்பு மற்றும் பட்டினி தான் காரணம் என்பதை உணவு ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் மர்வான் சலேம் (Dr. Marwan Salem) தெளிவுபடுத்தியுள்ளார்.


படிக்க: காசாவில் பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல்!


யசான் இறந்த பிறகு சமூக ஊடகங்களில் #YazanKafarna, #AirDropFoodToGaza, #Justice4Palestine, #CeasefireNOW, #FreeGaza, H2O4GAZA போன்ற பல ஹேஷ்டேக்குகள் X- தளத்தில் முன்னணியில் இருந்தன.

ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகள் 1000 லாரிகளில் உணவு மற்றும் மருந்துகளை பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பியுள்ளன. ஆனால் காசாவைச் சுற்றியுள்ள ரஃபா, கரேம் அபு சலேம் மற்றும் பைட் ஹனூன் ஆகிய இடங்களில் இருக்கின்ற இஸ்ரேலிய இராணுவம் இந்த “மனித நேய” உதவிகளை தடுத்தபடி இருக்கிறது.

உலகில் பட்டினியால் வாடும் 5 பேரில் 4 பேர் காசாவில் இருப்பதாகவும், அந்த 4 பேரில் ஒருவர் கடுமையான பசியில் இருப்பதாகவும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் (UNRWA) கூறியுள்ளது. பாலஸ்தீன மக்கள் நீண்ட காலமாக, கடுமையான பட்டினியை அனுபவித்து வருவதாக உலகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இந்த பட்டினி நிலையானது பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமானவர்களிடையே தீவிர நோய்களை ஏற்படுத்தி அதிக எண்ணிக்கையிலான இறப்புக்கு வழிவகுக்கும்.

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கு எதிரான சர்வதேச அளவிலான வீரியமான மக்கள் போராட்டங்கள் மட்டுமே யசானை கொன்ற யூத இனவெறி இஸ்ரேலிய அரசால் நிகழ்த்தப்படும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரும்.

செய்தி ஆதாரம்: Countercurrents


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க