காசா குழந்தைகளுக்கு அழக்கூட உடம்பில் தெம்பில்லை!

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போர் தொடரும் பட்சத்தில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போதைவிட மேலும் அதிகரிக்கும். எனவே, 160 நாட்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்துவரும் இன அழிப்புப் போருக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

டந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு, அப்பாவி காசா மக்கள் மீது இன அழிப்புப் போரை மூர்க்கத்தனமாக நடத்திக்கொண்டிருக்கிறது. இப்போரில் இதுவரை 31,645 பாலஸ்தீன மக்கள் கொடூரமான முறையில் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்கிறது காசா சுகாதார அமைச்சகம். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளே ஆவர். குறிப்பாக, 13,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த இனஅழிப்புப் போரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உயிரிழந்த பல குழந்தைகளின் உடல்கள் இன்றுவரை முழுமையாக மீட்கப்படவில்லை. இதன் காரணமாக, உயிரிழந்த குழந்தைகளின் உண்மையாக எண்ணிக்கை காசா சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாகவே இருக்கும்.

மேலும், யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு பட்டினி மற்றும் பஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துவருகிறது. உலகின் பல நாடுகளில் நடக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தாலும் பல நாட்டு அரசுகளின் அழுத்தத்தாலும்தான் மிக சொற்ப அளவிலான உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை காசாவிற்குள் அனுப்பப்படுகின்றன. எனவே, காசாவில் நிலவும் உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் பெரும்பாலான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் தருவாயில் உள்ளனர்.

படிக்க : காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு!

மார்ச் மாதம் 17-ஆம் தேதி, யுனிசெஃப் (UNICEF) நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் இதுகுறித்து பேசுகையில், “கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் வார்டுகளில் இருந்தேன். முழு வார்டும் முற்றிலும் அமைதியாக இருக்கிறது. ஏனென்றால் குழந்தைகளுக்கு அழும் தெம்பு கூட இல்லை” என்று சி.பி.எஸ். செய்தி ஊடகத்திடம் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

யுனிசெஃப் நிறுவனத்தால் வடக்கு காசா பகுதியில் உள்ள குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஊட்டச்சத்து பரிசோதனையில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூவரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஜனவரி மாதத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 15.6 சதவிகிதமாக இருந்த நிலையில், அது மார்ச் மாதத்தில் 31 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலையும் யுனிசெஃப் நிறுவனம் தன்னுடைய இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும், சமீபத்திய வாரங்களில் காசாவின் வடக்கு பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு (Dehydration) காரணமாக 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே 13 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் 4.5 சதவிகித குழந்தைகள் உள்ளனர்.

காசாவின் நடுப்பகுதியில் உள்ள கான் யூனிஸ் மருத்துவமனையில் முதன்முறையாக நடத்தப்பட்ட ஊட்டச்சத்து பரிசோதனையில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 28 சதவிகிதம் பேர், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 சதவிகித குழந்தைகள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரஃபா எல்லையில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஜனவரி மாதத்தில் 5 சதவிகிதமாக இருந்த நிலையில் பிப்ரவரி இறுதிக்குள் 10 சதவிகிதமாக இரட்டிப்பாகியுள்ளனர். அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 சதவிகித குழந்தைகள் உள்ளனர்.

படிக்க : காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு

இவ்வாறு, உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு இஸ்ரேல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதால் காசா முழுவதும் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறக்கும் தருவாயிலும் உள்ளனர். இத்தகைய கொடிய போருக்கு எதிராக பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வந்த போதிலும், பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தாலும் காசா பகுதியை முழுமையாக கைப்பற்றும் வரை போரை தொடர்வதில் பாசிச இஸ்ரேல் அரசு உறுதியாகவே உள்ளது.

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போர் தொடரும் பட்சத்தில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போதைவிட மேலும் அதிகரிக்கும். எனவே, 160 நாட்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்துவரும் இன அழிப்புப் போருக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். போரை நிறுத்த இஸ்ரேலையும் அமெரிக்காவையும் நிர்பந்திக்கும் வகையில் பலமான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.

நன்றி – அல் ஜசீரா.
சந்திரன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க