காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு!

பட்டினியை முடிவுக்கு கொண்டுவரவும், பஞ்சத்தின் அனைத்து அபாயத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான உதவிப் பொருட்கள் தடையின்றி நுழைவதற்கும் விநியோகிப்பதற்கும் இஸ்ரேலின் தடையை நீக்கவும் உலக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

பாலஸ்தீன மக்களின் மீதான இனப்படுகொலையை 167 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனத்தின் காசா மக்கள் மீது தற்போது பட்டினிப் போரை தொடுத்துள்ளது. “காசாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு பொருட்களை வழங்க மறுத்து பட்டினியில் போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல்” என ஐ.நா. மனித உரிமைகள் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க் கூறுகையில், “காசாவிற்குள் அடிப்படையான உதவிகள் நுழைவதற்கு இஸ்ரேல் அரசு தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்து வருவதும், அது தொடர்ந்து போர் விதிமுறைகளை மதிக்காமல் மக்கள்விரோத போக்கை கடைப்பிடிப்பதும், பட்டினியை ஒரு போர் முறையாக பயன்படுத்துவதுமாக இருக்கிறது, இது ஒரு போர்க்குற்றமாகும்” என கூறியுள்ளார். மேலும், காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

படிக்க : காசா இனப்படுகொலையின் அடையாளமாக மாறிய யசான் கஃபர்னா

வோல்கர் டர்க்கின் அறிக்கை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் கேட்டதற்கு, “அதை நாங்கள் கவனிக்கவோ அல்லது நேரில் பார்க்கவோ இல்லை” என பதிலளித்தது.  இந்த மறுப்பு காசா மக்கள் மீதான இஸ்ரேலின் பட்டினி போரை ஆதரிப்பது என்பதை தாண்டி வேறென்னவாக இருக்க முடியும்?

பட்டினி குறியீட்டை வெளியிடும் அமைப்பான சர்வதேச ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு (IPC) கூட்டமைப்பு மூலம் மார்ச் 19 அன்று காசா நிலையை பற்றி வெளியிட்ட அறிக்கையில் “பஞ்சம் நெருங்கிவிட்டது” எனவும்  ”இறப்புகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது” எனவும் வெளியிட்டுள்ளது. ஐ.பி.சி. (IPC) மதிப்பீட்டின் படி, காசாவில் 1.1 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையால் பட்டினியில் இறப்பை எதிர் நோக்கி இருந்து வருவதாகவும், இது ஒரு பேரழிவு நோக்கி செல்லும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், “ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு அமைப்பால் இதுவரை பதிவு செய்யப்பட்டதில், இது மிகப்பெரிய அளவிலான பட்டினி பேரழிவை எதிர்கொள்ளும் எண்ணிக்கையாகும்” என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ தெரிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவான குழந்தைகளே ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 12.4 முதல் 16.5 சதவிகிதம் வரை குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. காசாவில் உள்ள ஒவ்வொருவரும் உணவு பற்றாக்குறையுடன் வாழ்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா பகுதி தற்போது உணவுப் பற்றாக்குறையுடன் “அவசர காலக்கட்டத்தில்” இருப்பதாகவும், வடக்கு காசா பகுதி ஒரு சில மாதங்களுக்குள் பஞ்சத்திற்கு தள்ளப்படும் எனவும் அறிக்கை கூறுகிறது. பாசிச இஸ்ரேல் அரசு, ஒருபுறம் காசா மக்களை பல வழிகளில் பட்டினிக்கு தள்ளுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் அமைப்புகளையும் தடுத்து நிறுத்தி மேலும் மேலும் காசா மக்களை பட்டினிக்குள் தள்ளுகிறது.

மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் வடக்கு காசாவிற்கான உதவிப் பணிகளில் ஈடுபட்டவர்களை இஸ்ரேல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். உதவிப் பணிகளுக்கு ஈடுபடுவதற்குச் சென்ற,  24 குழுக்களில் 11 குழுக்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. மீதமுள்ள குழுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன.

ஏற்கெனவே வடக்கு காசாவில் உள்ள மக்கள் உணவு கிடைக்காமல் பறவைகள், விதைகள், விலங்குகளின் தீவனம், காட்டு புல் ஆகியவற்றை சாப்பிட்டு வருகின்றனர். குழந்தைகள் அதை தேடித்தேடி அள்ளி செல்லும் வீடியோக்கள் மனதை உலுக்குகின்றன. இந்நிலையில்தான் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியை அதிகரிக்காவிட்டால் வடக்கு காசாவில் 3,00,000 மக்களை பஞ்சம் தாக்கும் என அறிக்கைகள் கூறுகிறது. கூடியவிரைவில் காசாவில் ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் இறக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, பிறந்தக் குழந்தைகள் மிகக் குறைந்த எடையில் பிறக்கின்றன மற்றும் பட்டினியால் மரணத்தின் விளிம்பில் குழந்தைகள் இருக்கின்றன என உலக சுகாதர அமைப்பின் செய்தி தொடர்பாளர் “மார்கரெட் ஹாரிஸ் ” கூறுகிறார்.

தற்போது இஸ்ரேல் அரசானது முதலுதவிப் பணியாளர்களை கொன்றொழிப்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. அல்ஜசீராவின் சமீபத்திய தகவலின்படி, 23 முதலுதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உணவு விநியோகத் தொழிலாளர் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல் என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனோடு மட்டுமல்லாமல் அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதலை நடத்தி காசா மக்கள் பலரையும் கொன்று வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

இந்நிலையில், இரஃபா எல்லையிலுள்ள மக்கள் மீது தரைவழி தாக்குதல் நடத்தப்  போவதாக இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலின் போர் விவகாரத்துறை அமைச்சர் ரான் டெர்மர் கூறுகையில் “ரஃபா மீது தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தாலும், அதனை மீறி அந்த நகரின் மீது படையெடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்” என கூறியிருக்கிறார். காசாவில் போரை தொடர்ந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ரஃபா எல்லையில்தான் தஞ்சமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தாலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி தொடர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது.

படிக்க : காசா: உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவரும் பாசிச இஸ்ரேல் அரசு

காசாவில் கடந்த 167 நாட்களாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 31,988 பேர் உயிரிழந்துள்ளனர். 74,188 பேர் காயமடைந்துள்ளனர். இந்த இனஅழிப்பை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு சதிநடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டியுள்ளது. ஜோபைடனும், நெதன்யாகுவும் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும். பட்டினியை முடிவுக்கு கொண்டுவரவும், பஞ்சத்தின் அனைத்து அபாயத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான உதவிப் பொருட்கள் தடையின்றி நுழைவதற்கும் விநியோகிப்பதற்கும் இஸ்ரேலின் தடையை நீக்கவும் உலக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

செய்தி ஆதாரம் : Countercurrents

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க