பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை ஆதரித்து நிற்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு விதித்த அதே தடையை, இஸ்‌ரேலுக்கு விதிக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மறுப்பதானது, அதன் அமெரிக்கா – இஸ்‌ரேல் சார்புத்தன்மையையும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்‌ரேலின் இனப்படுகொலையை அது ஆதரித்து நிற்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

லிம்பிக் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அந்த அமைப்பின் விதிமுறைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்க வேண்டும். அதேபோல் ஒரு நாட்டில் போர் நடைபெறுகிறது என்றால் அந்த நாட்டில் உள்ள ஒலிம்பிக் அணியினர் பாதுகாப்பாக போட்டியில் பங்கேற்கும் வகையில் ஒலிம்பிக் போட்டி துவங்குவதற்கு 7 நாட்கள் முன்பிருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு 7 நாட்கள் வரை போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.

ரஷ்யா தொடர்ந்து ஒலிம்பிக் ஒப்பந்தத்தை மீறுகிறது என்று கூறி  சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இருந்தும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்ட விளையாட்டு வீரர்கள் தங்களது அரசாங்கத்தின் முடிவுகளுக்காக தண்டிக்கப்படக்கூடாது என்பதால் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக்குழு, ரஷ்ய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனிப்பட்ட முறையில் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவர்கள் ரஷ்ய நாடாக அங்கீகரிக்கப்படமாட்டார்கள். அணிவகுப்பில் ரஷ்ய தேசிய கொடியை ஏந்திச் செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதேபோன்ற தடை பெலாரஸ் நாட்டிற்கும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், போரைத் தீவிரமாக ஆதரிக்கும் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட தகுதியற்றவர்கள். போரை ஆதரிக்கும் அல்லது போர் நடத்தும் நாடுகளை ஆதரிக்கும் எவர் ஒருவரும் போட்டியை பார்வையிடக் கூட அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களை இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேலுக்கு மட்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஒரு நியாயம், இஸ்ரேலுக்கு ஒரு நியாயமா என்று விளையாட்டு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்,  இஸ்ரேலிய அணியில்  போர் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக அந்நாட்டின் ஜூடோ வீரர் பீட்டர் பால்ட்சிக்  வெளிப்படையாக போரை ஆதரிக்கிறார். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதலை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சர்வதேச அளவில் எதிர்ப்பு வந்த பின்னர்தான் அதை நீக்கினார்.


படிக்க: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் “அகதிகள் அணி”


முன்னதாக பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு (ஐ.ஓ.சி) இது குறித்து கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தது. அதில் “போர்நிறுத்தத்தை மீறியதுடன், சுமார் 400 பாலஸ்தீனிய விளையாட்டு வீரர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது. பாலஸ்தீன வீரர்களின் பயிற்சி கூடாரம் மற்றும் வசதிகளை தகர்த்துள்ளது. மேலும், இதுவரை காஸாவில் வசித்து வந்த சுமார் 40,000 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்துள்ளனர். எனவே, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு இஸ்ரேல் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி குறிப்பிட்டிருந்தது. ஆனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.

அதேபோல், பிரான்ஸ் இடதுசாரி எம்.பி தாமஸ் போர்ட்டஸ், “பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் வர தேவையில்லை” என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். “உக்ரைன் – ரஷ்யா போரை முன்னிட்டு, அந்நாடுகளின் (ரஷ்யா & பெலாரஸ்) விளையாட்டு வீரர்கள் தங்கள் தேசிய கொடியின் கீழ் போட்டியிடும் உரிமையைப் பறித்ததைப் போலவே இஸ்ரேலிய வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்” என்று சில இடதுசாரி பிரெஞ்சு அரசியல்வாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதையும் நிராகரித்து விட்டது.

ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு விதித்த அதே தடையை, இஸ்‌ரேலுக்கு விதிக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மறுப்பதானது, அதன் அமெரிக்கா – இஸ்‌ரேல் சார்புத்தன்மையையும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்‌ரேலின் இனப்படுகொலையை அது ஆதரித்து நிற்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க