பாகம் 1 : புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ
பாகம் 2
5. வர்க்க சக்திகள் பற்றி சரியான மதிப்பீட்டிற்கு வருவதும், மேலும் போராட்டத்திற்கான சரியான உத்திகளை வகுப்பதுமே சமூக மற்றும் பொருளாதார பரிசீலனையின் நோக்கம்
மூக மற்றும் பொருளாதார நிலைமைகளை ஏன் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு கீழ்க்கண்டதுதான். நமது பதில், அனைத்து சமூக வர்க்கங்களே, நமது பரிசீலனையின் நோக்கங்கள் பிளவுபட்ட சமூகம் பற்றி அல்ல.
அண்மைக் காலமாக, செம்படையின் நான்காவது படையில் இருக்கும் தோழர்கள் தீவிர ஆய்வுப் பணிக்கு3 பொதுவான கவனம் செலுத்தி வருகின்றனர்; ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் தவறானவை. ஒரு மளிகைக் கடைக்காரரின் கணக்கு வழக்கு போன்று அவர்களது விசாரணையின் விளைவு அற்பமாக அமைகிறது, அல்லது மலை உச்சியிலிருந்து மக்கள் தொகை மிகுந்த ஒரு மாநகரத்தைக் காணும் தொலைவுப் பார்வை போல் இருக்கிறது, அல்லது நகரத்திற்கு வரும் நாட்டுப்புறத்தான் கேட்கும் விநோதக் கதைகள் போல் இருக்கின்றன. இது போன்ற பரிசீலனைகளால் சிறிதும் பயனில்லை; அவை நமது முக்கிய நோக்கத்தை நிறைவேற்றா. பல்வேறு சமூக வர்க்கங்களின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி அறிவதுதான் நமது முக்கிய நோக்கம்.
நமது பரிசீலனையின் முடிவு ஒவ்வொரு வர்க்கத்தின் தற்போதைய சூழ்நிலையை படம் பிடிப்பதாகவும் அவற்றின் வளர்ச்சியின் ஏற்ற இறக்கங்களை சித்தரிப்பதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, விவசாயத் துறையின் உள்ளடக்கம் பற்றி நாம் பரிசீலனை செய்யும்போது, குத்தகை உறவை ஒட்டி வகைப்படுத்தப்பட்டுள்ள உடைமைக்கார விவசாயிகள், அரை உடைமைக்கார விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் ஆகியோரின் எண்ணிக்கையை மட்டும் அறிந்தால் போதாது; வர்க்கத்தின் அடிப்படையிலும், பொருளாதார படிநிலையின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்ட பணக்கார விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் மற்றும் ஏழை விவசாயிகளின் எண்ணிக்கையையும் அறிய வேண்டும்.
படிக்க :
ஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
வணிகர்களின் உள்ளடக்கம் பற்றி பரிசீலனை செய்யும்போது, தானியம், துணி, மூலிகைகள் என்று ஒவ்வொரு வணிகத்திலும் ஈடுபடுவோர் பற்றி மற்றும் அறிந்தால் போதாது; குறிப்பாக சிறு வணிகர்கள், நடுத்தர வணிகர்கள் மற்றும் பெரும் வணிகர்களின் எண்ணிக்கையை அறிய வேண்டும். ஒவ்வொரு வணிகத்தின் நிலையை மட்டும் பரிசீலனை செய்தால் போதாது; குறிப்பாக அவற்றுக்குள் நிலவும் வர்க்க உறவு முறையையும் பரிசீலனை செய்ய வேண்டும். வெவ்வேறு வர்த்தகங்களுக்கிடையே உள்ள உறவுமுறையை மட்டும் ஆய்வு செய்தால் போதாது; குறிப்பாக வெவ்வேறு வர்க்கங்களிடையே நிலவும் உறவு நிலையையும் பரிசீலனை செய்ய வேண்டும்.
வேறுபட்ட சமூக வர்க்கங்களைப் பகுத்தாய்வு செய்வதே நமது தீவிர ஆய்வின் முதன்மையான வழிமுறையாக இருக்க வேண்டும். வர்க்க சக்திகளின் சரியான மதிப்பீட்டிற்கு வரும் பொருட்டு, வர்க்கங்களுக்கிடையேயான உறவு நிலையைப் புரிந்து கொள்வதே நமது பரிசீலனையின் இறுதி நோக்கமாக இருக்க வேண்டும். பிறகு, புரட்சிகர போராட்டத்தில் முக்கிய சக்தி எது, நமது கூட்டாளிகளாக வென்றெடுக்கப்பட வேண்டிய வர்க்கம் எது, தூக்கியெறியப்பட வேண்டிய வர்க்கம் எது என்று விவரித்து சரியான வியூகம் வகுக்க வேண்டும். இதுதான் நமது ஒரே முக்கிய நோக்கமாகும்.
பரிசீலனை தேவைப்படும் சமூக வர்க்கங்கள் எவை? அவையாவன :
தொழிற்துறை பாட்டாளிகள், கைவினைத் தொழிலாளர்கள், பண்ணைத் தொழிலாளிகள், ஏழை விவசாயிகள், நகரத்து ஏழைகள், உதிரிப் பாட்டாளிகள், தேர்ந்த கைவினைஞர்கள், சிறு வணிகர்கள், நடுத்தர விவசாயிகள், பணக்கார விவசாயிகள், நிலச்சுவான்தார்கள் வணிக முதலாளிகள், தொழிற்துறை முதலாளிகள்.
நமது பரிசீலனையில் இந்த வர்க்கங்கள் அல்லது சமூக படி நிலைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும். நாம் பணியாற்றும் தளங்களில் தொழிற் துறை பாட்டாளிகள், தொழிற்துறை முதலாளிகள் மட்டுமே இடம்பெறவில்லை; மற்ற வர்க்கத்தினரையும் தொடர்ந்து நமது பணிகளுக்கிடையே சந்தித்து வருகறோம். இந்த அனைத்து வர்க்கங்கள் மற்றும் அதன் சக படிநிலைகள் தொடர்பானவைதான் நமது போராட்ட உத்திகள்.
நகரங்களைப் புறக்கணித்து கிராமப்புறப் பணிகளுக்குத் தேவைக்கு அதிகமான அழுத்தம் அளித்தது நமது கடந்த கால பாரிசீலனையின் கடுமையான குறைபாடாகும். அதனால் பல தோழர்கள் நகர ஏழைகள் மற்றும் வணிக முதலாளிகள் பற்றி நமது உத்திகள் பற்றி மேலெழுந்தவாரியாகவும், தெளிவின்றியும் அறிந்துள்ளனர். மலைகளை விட்டு இறங்கி சமவெளிக்கு நாம் வருவதற்குப் போராட்டத்தின் வளர்ச்சி உதவியுள்ளது.4 உடல் ரீதியாக நாம் மலையிலிருந்து இறங்கியிருப்பினும், மனதளவில் நாம் இன்னும் மலையின் மீதே இருக்கிறோம். நாம் நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறம் இரண்டையுமே புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிடில், புரட்சிகர போராட்டத்திற்குத் தேவையானவற்றை தருவதற்கு நம்மால் இயலாமல் போகும்.
0-0-0
6. சீனத் தோழர்கள் சீனாவின் நிலைமைகளைப் புரிந்து கொள்வதிலிருந்தே சீன புரட்சிகர போராட்டத்தின் வெற்றி சார்ந்துள்ளது.
ஜனநாயக கட்டம் மூலம் பொதுவுடைமையை அடைவதே நமது போராட்டத்தின் நோக்கமாகும். நிலஉடைமை வர்க்கம், ஏகாதிபத்தியம் மற்றும் கோமின்டாங் ஆட்சியாளர்களை தூக்கி யெறியும் பொருட்டு உழைக்கும் வர்க்கத்தினரை வென்றெடுத்து, உழவர் பெருந்திரளையும், நகர்ப்புற ஏழைகளையும் எழுச்சியுறச் செய்யும் ஜனநாயகப் புரட்சியை முழுமையடையச் செய்வதே இந்தக் கடமையின் முதல் அடியாகும். இந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் அடுத்த அடியாக சோசலிசப் புரட்சி தொடர்ந்து நடத்தப்படும். இந்த மகத்தான புரட்சிகர கடமையை நிறைவேற்றுவது எளிதானதோ, எளிமையானதோ இல்லை. பாட்டாளி வர்க்க கட்சியின் சரியான மற்றும் உறுதியான உத்திகளை சார்ந்தே இப்புரட்சிகர கடமை வெற்றிபெறும்.
போராட்டத்தின் உத்திகள் தவறானதாகவோ, உறுதியற்றதாகவோ, தடுமாற்றம் உடையதாகவோ இருந்தால், புரட்சி நிச்சயம் தற்காலிகத் தோல்வியை சந்திக்கும். முதலாளித்துவக் கட்சிகளும் தங்களது போராட்ட உத்திகளை அடிக் கடி தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். உழைக்கும் வர்க்கத்தை தவறாக வழி நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடமிருந்து விலக வைக்க சீர்திருத்த திட்டங்களை எப்படிப் பரப்புவது என்றும், ஏழை உழவர்களின் எழுச்சிகளை நசுக்கி பணக்கார விவசாயிகளை எப்படிப் பிடிப்பது என்றும், புரட்சிகர போராட்டங்களை அடக்க ஆயுகம் தரித்த குற்றவாளிக் கும்பல்களை எப்படி திரட்டுவது என்றும் பரிசீலித்துக் கொண்டு வருகிறார்கள்.
வர்க்கப் போராட்டம் தீவிரமாக அதிகரித்து, நெருக்கமான வட்டாரங்களில் நடக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அவற்றின் வெற்றிக்குத் தங்களது சொந்தக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான, உறுதியான உத்திகளையே முழுவதுமாக பாட் டாளி வர்க்கம் சார்ந்திருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான, பின்வாங்காத போராட்ட உத்திகளை அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சிலரால் எந்தச் சூழ்நிலையிலும் உருவாக்க முடியாது. அவை மக்கள் பெருந்திரள் போராட்டங்களிடையே அதாவது உண்மையான அனுபவத்தின் மூலம் உருவாகின்றன. எனவே, நாம் எப்போதும் சமூக நிலைமைகளை ஆய்வு செய்து, எதார்த்தமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
வளைந்து கொடுக்காத, பழமைவாத, சடங்குப் பூர்வமான, ஆதாரமின்றி நம்பிக்கைவாதிகளாக இருக்கும் தோழர்கள், தற்போதைய போராட்ட உத்தி சரியானது என்றும், கட்சியின் ஆறாவது தேசிய காங்கிரசின் ஆவணங்களின் புத்தகம்5 நிலைத்த வெற்றியை உத்தரவாதப்படுத்தும் என்றும், நிரூபித்து நிறுவப்பட்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமே நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்றும் எண்ணுகின்றனர். இந்த எண்ணங்கள் முற்றிலும் தவறானவை.
படிக்க :
விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள் || தோழர் லெனின்
எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
கம்யூனிஸ்ட்டுகள் போராட்டங்கள் மூலம் சாதகமான புதிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்தோடு எந்த விதத்திலும் ஒத்துப் போகாததாக இருக்கிறது; அவை முழுவதும் பழமைவாத வழிமுறையை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அவற்றை முழுமையாக கைவிடாவிடில், இந்த வழிமுறை புரட்சிக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தும்; இது தோழர்களுக்கே பெருங்கேடு விளைவிக்கும். நிலைமைகள் தற்போது இருப்பது போலவே இருப்பதில் திருப்தி கொண்டுள்ள, எதனையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முயலாத, ஆதாரமின்றி நம்பிக்கை கொண்டுள்ளவர்களாக, சில தோழர்கள் செம்படையில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை.
இதுதான் பாட்டாளி வர்க்கத் தன்மைஎன்ற பொய்யை அவர்கள் பரப்புகிறார்கள். அவர்கள் ஒரு அடிகூட நகராது, பரிசீலனை செய்ய மக்களிடம் செல்லாது, முழுமையாக உண்டு, தங்கள் அலுவலகத்திலேயே சிறுதுயில் கொண்டு, நாள் முழுவதும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் எப்போது வாயைத் திறந்தாலும், அவர்களது வெற்றுரைகள் மக்களை சோர்வடையச் செய்கின்றன. இந்தத் தோழர்களைத் தட்டியெழுப்ப, நமது குரல்களை உயர்த்தி, அவர்களிடம் கூச்சலிட வேண்டும்:
* தாமதமின்றி உங்களுடைய பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர்!
* முற்போக்கான போர் குணம் வாய்ந்த கம்யூனிச கருத்துக்களின் மூலம் அவற்றை மாற்றுவீர்!
* போராட்டத்தில் ஈடுபடுவீர்!
* மக்களிடையே சென்று, உண்மைகளை பரிசீலனை செய்வீர் !
(தொடரும்)
குறிப்புகள் :
3. பரிசீலனையை மாசே – துங் எப்போதும் அதிக அழுத்தத்துடன் வலியுறுத்தினார். சமூகப் பரிசீலனையை மிக முக்கியமான கடமைப் பணியாகவும் தலைமைப் பணிக்கான கொள்கைகளை விவரிப்பதற்கான அடிப்படையாகவும் கருதினார். தோழர் மாசே-துங்கின் முன்முயற்சியால் செம்படையின் நான்காவது படையில் பரிசீலனைப் பணி படிப்படியாக வளர்க்கப்பட்டது. பணியின் வழக்கமான பகுதியாக சமூகப் பரிசீலனை இருக்க வேண்டும் என்று வரையறுத்திருந்தார். பெருந்திரள் போராட்டங்களின் நிலைமை, பிற்போக்கானவர்களின் நிலைமை, மக்களின் பொருளாதார வாழ்வு மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் சொந்தமாக இருந்த நிலங்களின் அளவு ஆகிய இனங்கள் அடங்கிய விரிவான படிவங்களை செம்படையின் அரசியல் துறை தயாரித்திருந்தது. செம்படை சென்ற இடத்திலெல்லாம், அந்தப் பகுதியின் வர்க்கச் சூழ்நிலைகளைப் பற்றி முதலில் நன்கு தெரிந்து கொண்டது. பிறகு பெருந்திரள் மக்களின் தேவைக்கு ஏற்ற முழக்கங்களை உருவாக்கியது.
4. இங்கே “மலைகள்” என்பது கியாங்சி மற்றும் ஹூனான் மாகாணங்களின் எல்லைப் பகுதியில் இருந்த சிங்காங் மலைப் பகுதியாகும்; ”சமவெளி” என்பது தெற்கு கியாங்சி மற்றும் மேற்கு ஃபியுகியன் பகுதிகளில் இருப்பதை குறிப்பதாகும். இரு மிகப்பெரிய புரட்சித் தளங்களை அமைக்கும் பொருட்டு, ஜனவரி 1929-ல் சிங்காங் மலையிலிருந்து தெற்கு கியாங்சி மேற்கு ஃபியுகியன் பகுதிகளுக்கு தோழர் மா சே – துங் செம்படையின் நான்காவது அணியின் பிரதானப் படையை அழைத்துச் சென்றார்.
5. ஜூலை 1928-ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது காங்கிரசில்,
அரசியல் தீர்மானங்கள், உழவர்களின் பிரச்சனை குறித்த தீர்மானங்கள், நிலப் பிரச்சனைகள், அரசியல் அதிகாரத்தை நிறுவுதல், மற்றும் ஏனைய பொருட்கள் பற்றிய தீர்மானங்களை உள்ளடக்கியது “ஆவணங்களின் புத்தகம்” ஆகும். செம்படையில் இருந்த கட்சி அமைப்புகளுக்கும், கட்சியின் தள அமைப்புகளுக்கும் விநியோகிக்கும் பொருட்டு இந்தத் தீர்மானங்களை புத்தக வடிவில் செம்படையின் நான்காவது அணியின் முன்னணிக் குழு 1929-ம் ஆண்டு துவக்கத்தில் வெளியிட்டது.
நூல் : மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 6
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
தொடர்புக்கு : 98417 75112

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க