தோழர் மாவோ உலக பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக சிந்திப்பதை நிறுத்தி இன்றுடன் 45-ம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முதலாளித்துவ சுரண்டல் உலகின் அனைத்து மூலைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. உலகம் முழுவதும் பொதுவுடைமை இயக்கங்கள் சிதறுண்டு கிடக்கின்றன.
புரட்சியை முன்னெடுத்துச் சென்று முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டி கம்யூனிசத்தை நோக்கி சமூகத்தைக் கொண்டு செல்ல, ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களைத் தாங்களே பரிசீலித்து, தவறுகளை சீர்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்பது பொதுவாக சொல்லப்படும் வாசகமாகிவிட்ட நிலையில், பரிசீலனையை எப்படிச் செய்ய வேண்டும், எப்படி செய்யக் கூடாது என்பதை மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் தோழர் மாவோ.
1930-ம் ஆண்டு எழுதப்பட்ட “புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்” எனும் அவரது படைப்பு ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் படித்து கிரகித்து தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய விஞ்ஞான வழிமுறையாகும். அந்தக் கட்டுரையை இரண்டு பகுதிகளாக இங்கே தருகிறோம்
– வினவு
0O0
புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்
1. பரிசீலனை இல்லையெனில், பேசுவதற்கான உரிமை இல்லை
ஒரு பிரச்சனையை நீங்கள் பரிசீலனை செய்யாவிடில், அதன் மீது பேசுவதற்கான உரிமையை இழக்கிறீர்கள். இது மிகவும் கடுமையானதாக இல்லையா? சிறிதும் கிடையாது. ஒரு பிரச்சனையையும், அதன் இன்றைய அனுபவங்களையும், அதன் கடந்த கால வரலாற்றையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்காவிட்டால், அதன் அத்தியாவசிய அம்சங்களைப் பற்றி நீங்கள் அறியாவிட்டால் அது சந்தேகக்திற்கு இடமின்றி அபத்தமானது.
அபத்தமாகப் பேசுவது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது என்பது அனைவரும் அறிந்ததே. அதைப் பற்றி பேசுவதற்கான உரிமையை உங்களுக்கு மறுப்பது எப்படி அநியாயமானதாகும்? சில தோழர்கள் தங்களது கண்களை மூடிக் கொண்டு, அபத்தமாகப் பேசுகிறார்கள். ஒரு பொதுவுடைமைவாதிக்கு அது அவமானம். ஒரு பொதுவுடைமைவாதி எவ்வாறு தன் கண்களை மூடிக்கொண்டு, அபத்தமாய் பேசமுடியும்?
அது சரிப்படாது! அது சரிப்படாது! நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்! நீங்கள் அபத்தமாய் பேசக்கூடாது!
படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
2. ஒரு பிரச்சனையை பரிசீலனை செய்வது அதனைத் தீர்த்து வைப்பதற்கே !
உங்களால் ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லையா? நல்லது, உடனடியாக அதன் இன்றைய அனுபவங்களையும் அதன் கடந்த கால வரலாற்றையும் பரிசீலனை செய்யுங்கள்! பிரச்சனையை முழுமையாக பரிசீலனை செய்து விட்டால், அதனை எவ்வாறு தீர்ப்பது என்று அறிவீர்கள். முடிவுகள் எப்போதும் பரிசீலனைக்கு பின்பே வரும் – பரிசீலனைக்கு முன்பு வராது.
ஒரு முட்டாள்தான் தனியாகவோ மற்றவர்களுடன் இணைந்தோ பரிசீலனை செய்யாமல், தீர்வு காணவும்” ”ஒரு கருத்தை உருவாக்கவும்’ மூளையைக் கசக்கிக் கொள்வான். பயனுள்ள தீர்வுக்கோ, ஒரு நல்ல கருத்துக்கோ இது இட்டுச் செல்லாது என்று வலியுறுத்திக் கூற வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவன் தவறான முடிவிற்கும், தவறான கருத்திற்கும் வருவான் என்பது நிச்சயம்.
ஆய்வுப் பணிகளைச் செய்யும் தோழர்கள் கொஞ்சம் இல்லை, கொரில்லா தலைவர்களும், புதிதாக வந்திருக்கும் ஊழியர்களும் கூட ஒன்றை மேலோட்டமாகப் பார்த்து விட்டு, அதனைப் பற்றி குறைந்த விவரங்களையே தெரிந்து கொண்டு, ஒரு இடத்திற்கு வந்த உடனேயே அதனைக் கண்டித்து, அதனைக் குறைகூறி அரசியல் பிரகடனங்களை வெளியிடுகின்றனர்.
அத்தகைய அபத்தமான உணர்ச்சிகரமான பேச்சுகள் உண்மையில் வெறுக்கத்தக்கன. இவர்கள் விசயங்களை குழப்புவது நிச்சயம். அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்து, எந்தப் பிரச்சனையையும் தீர்ப்பதற்கான திறனற்றவர்கள் என்று நிரூபித்து விடுவார்கள்.
கடினமான பிரச்சனைகளை சந்திக்கும்போது, தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலர் பிரச்சனைகளைத் தீர்க்க இயலாது பெருமூச்சுவிடுகின்றனர். அவர்கள் பொறுமை இழக்கின்றனர். ”தங்களுக்குத் திறமை இல்லை; இந்த வேலையை செய்ய முடியாது” என்று காரணம் காட்டி, இடமாற்றம் கோருவார்கள். இது கோழைகளின் வார்த்தைகள்.
உங்களது இரு கால்களாலும் இயங்கிக் கொண்டே இருங்கள். தங்கள் பொறுப்பில் இருக்கும் பிரிவினை சுற்றி வாருங்கள். மேலும், கன்ஃபூசியஸ் செய்தது போல ”எல்லாவற்றை பற்றியும் தீர விசாரியுங்கள்”1 அப்போது உங்களது திறமைகள் எவ்வளவுதான் குறைவாக இருந்தாலும், உங்களால் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆய்வுக்காக நீங்கள் வாயிலைக் கடந்து வெளியேறும்போது உங்கள் தலை காலியாக இருக்கலாம். நீங்கள் திரும்பும்போது ஒருபோதும் தலை காலியாக இல்லாமல், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து விவரங்களும் அதில் இருக்கும். இவ்வாறுதான் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.
நீங்கள் வெளியில் சென்றுதான் ஆக வேண்டுமா? அவசியமில்லை. கடினமான பிரச்சனை என்று தாங்கள் கருதுவது பற்றி தல நிலைமைகளை அறியும் பொருட்டும், தற்போது அது என்ன நிலையில் இருக்கிறது என்று அறியும் பொருட்டும், நிலைமைகளை நன்கறிந்த மனிதர்களோடு உண்மையறியும் கூட்டம் கூட்டலாம். பிறகு, உங்களது கடினமான பிரச்சனையை எளிதாகத் தீர்க்கலாம்.
நீண்ட பேறு காலத்தை பரிசீலனையோடும், பிறப்பு நாளை பிரச்சனையைத் தீர்க்கும் நாளோடும் ஒப்பிடலாம். ஒரு பிரச்சனையை பரிசீலனை செய்வது என்பது உண்மையில் அதனைத் தீர்ப்பதற்குத் தான்.
படிக்க :
♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !
♦ லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !
3. புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்
கலாச்சார ரீதியாகப் பின்தங்கியுள்ள சீன உழவர்களின் மனப்போக்கின்படி, ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்துமே சரியானவை. விநோதமாக, விவாதங்களின்போது அது புத்தகத்தில் எங்கு எழுதப்பட்டுள்ளது என்று காட்டுங்கள்” என்று எப்போதும் கேட்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் கூட பலர் இருக்கின்றனர்.
உயர்மட்ட தலைமையின் கட்டளை சரியாக இருப்பதாகக் கூறுவது, ‘அது உயர்மட்ட தலைமையிடமிருந்து வருகிறது’ என்பதற்காக, அல்ல; ஆனால், போராட்டத்தின் அக மற்றும் புறச் சூழலுக்கு அதன் உள்ளடக்கம் ஒத்துப் போவதாக இருப்பதாலேயே அவற்றை ஏற்கிறோம்.
கட்டளைகள் மேலிடத்திலிருந்து வருகின்றன என்பதற்காக அவற்றைப் பற்றி விவாதிக்காமலும், உண்மை நிலையின் பின்னணியில் அவற்றை ஆராயாமலும் சடங்குப்பூர்வமான போக்கில் அவற்றை ஏற்பது மிகவும் தவறு. கட்சியின் நிலைபாடுகளும், உத்திகளும் மக்களிடம் ஆழமாய் ஏன் வேர்விடவில்லை என்பதற்கு, இந்த சடங்குத்தனம் செய்யும் கெடுதலே காரணம்.
மேலிடத்தின் கட்டளையை கண்களை மூடிக் கொண்டு, எந்தக் கருத்து மாறுபாடுமின்றி செயல்படுத்துவது, உண்மையில் அதனை நிறைவேற்றுவதாய் இருக்காது. அது அந்தக் கட்டளையை சாதுர்யமாக எதிர்ப்பதும், கவிழ்ப்பதுமாகும்.
புத்தகத்திலிருந்து மட்டும் சமூக விஞ்ஞானத்தை கற்கும் வழிமுறை அவ்வாறே மிகவும் அபாயகரமானது; அது எதிர்ப்புரட்சியின் பாதைக்கு இட்டுச் செல்லும். சமூக விஞ்ஞானத்தை கற்பதில் புத்தகங்களோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்ட சீன பொதுவுடைமைவாதிகளின் முழுக் குழுவும் எதிர்ப் புரட்சியாளர்களாக மாறிய உண்மையே இதற்குத் தெளிவான நிரூபணமாக இருக்கிறது.
மார்க்சியம் சரியானது என்று நாம் கூறுவது, மார்க்ஸ் ஒரு “தீர்க்கதரிசி” என்பதனால் அல்ல; நமது போராட்டத்திலும், நடைமுறையிலும் அவரது கோட்பாடுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டதால் மட்டுமே அவ்வாறு கூறுகிறோம். நமது போராட்டங்களில் நமக்கு மார்க்சியம் தேவைப்படுகிறது. நாம் அவரது கோட்பாடுகளை ஏற்கும்போது, “”தீர்க்க தரிசனம்” என்ற புதிரான கருத்தோட்டமான சடங்குத்தனம் நமது மனத்தில் ஒருபோதும் நுழைவதில்லை.
மார்க்சிய நூல்களைப் படித்த பலர் ஓடுகாலிகளாக மாறிவிட்ட நிலையில், படிப்பறிவற்ற தொழிலாளிகள் மார்க்சியத்தை நன்கு கிரகித்துக் கொள்வதை நாம் அடிக்கடி காண்கிறோம். நாம் மார்க்சிய நூல்களை நிச்சயம் படிக்க வேண்டும்; ஆனால் இந்தப் படிப்பு நமது தேசத்தின் உண்மையான எதார்த்த நிலைமையோடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நமக்கு புத்தகங்கள் தேவை. ஆனால் உண்மை சூழ்நிலையிலிருந்து விலகி நிற்கும் புத்தக வழிபாட்டை நாம் வெற்றிகொள்ள வேண்டும்.
புத்தக வழிபாட்டை நாம் எப்படி வெற்றி கொள்ள முடியும்? – எதார்த்த நிலையை பரிசீலனை செய்வதுதான் ஒரே வழி.
படிக்க :
♦ கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள் || தோழர் ஸ்டாலின்
♦ நமது பலம், மக்களோடு கலந்திருப்பதே! | தோழர் ஸ்டாலின்
4. எதார்த்த நிலைமையை சரியாக ஆய்வு செய்யாவிடில், வர்க்க சக்திகளை அகநிலையாக மதிப்பீடு செய்வதும் வேலைக்கான அகநிலைவாத வழிகாட்டலும் தோன்றி வலது சந்தர்ப்பவாதமாகவோ இடது சாகசவாதமாகவோ சீரழியும்
இந்த முடிவை நீங்கள் சந்தேகிக்கிறீர்களா? இதனை ஏற்றுக் கொள்ள உண்மைகள் உங்களை நிர்ப்பந்திக்கும். எந்த பரிசீலனையும் செய்யாமல், அரசியல் சூழ்நிலையை மதிப்பீடு செய்யவோ, ஒரு போராட்டத்தை வழிநடத்தவோ முயன்று பாருங்கள், அத்தகைய மதிப்பீடும் வழிகாட்டுதலும் அடிப்படையற்றதாகவும், அகநிலை வாதமாகவும் இருக்கிறதா? இல்லையா? என்பதை காண்பீர்கள். அது சந்தர்ப்பவாதத்திற்கோ, சாகசவாதத்திற்கோ இட்டுச் செல்கிறதா, இல்லையா என்று அறிவீர்கள். நிச்சயமாய் அது அப்படித்தான் இருக்கும். நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கவனமாக திட்டமிடத் தவறியது இதற்குக் காரணம் அல்ல; செம்படை கொரில்லாக் குழுவில் அடிக்கடி நிகழ்வது போல, குறிப்பான சமூகச் சூழ்நிலைகளை கவனமாக ஆய்வு செய்யாமல், திட்டங்களை தீட்டுவதே காரணம்.
லி கியுயி2 வகையான அலுவலர்கள் மனிதர்களை அவர்களது தவறுகளுக்காக தண்டிக்கும்போது பாரபட்சம் காட்டுவதில்லை. விளைவாக, அவர்கள் அநியாயமாக நடத்தப்பட்டு விட்டதாக தவறிழைத்தவர்கள் கருதுகின்றனர்; பல சச்சரவுகள் ஏற்படுகின்றன; தலைவர்கள் அனைத்து கவுரவங்களையும் இழக்கின்றனர். செம்படையில் இது அடிக்கடி நிகழ்வதில்லையா?
நாம் அகநிலைவாதத்தை துடைத்தெறிய வேண்டும். நாம் மக்களை வென்றெடுப்பதிலும், எதிரிகளை வீழ்த்துவதிலும் வெற்றி அடைவதற்கு முன்பாக அனைத்து சந்தர்ப்பவாத, சாகசவாத தவறுகளுக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும். இலட்சியமயத்தை துடைத்தெறிய உள்ள ஒரே வழி, முயற்சிகளை மேற்கொண்டு, உண்மைச் சூழ்நிலையை பரிசீலனை செய்வதே ஆகும்.
(தொடரும்)
பாகம் 2 : பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ
குறிப்புகள் :
1. கன்ஃபூசியஸ்ஸின் இலக்கியத் துணுக்குகள் நூல் III ஐ காண்க. “பாயி : “மூதாதையர்களின் ஆலயத்தில், கன்ஃபூஷியஸ் நுழைந்தபோது, அவர் எல்லாவற்றையும் விசாரித்தார்.
2. வடக்கு ஷங் வம்சத்தின் இறுதி ஆண்டுகளில் (960-1127) நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் பற்றி விவரித்த “சுயி ஹூ சுவான்” (மார்ஸ் பெஸ்ளின் கதாநாயகர்கள்) என்ற பிரபல சீன நாவலின் நாயகன் லி-கியூ ஆவார். அவர் எளிமையானவர்ர்; வெளிப்படையானவர்; விவசாயிகளின் புரட்சி நோக்கத்திற்கு முகவும் விசுவாசமானவர். ஆனால் முரட்டுத்தனமானவர்; சாதுர்யமானவர் அல்ல.
நூல் : மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 6
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
தொடர்புக்கு : 98417 75112