விவாதங்களுக்குப் பதில் உரை

பாகம் – 3

6 லெனின் நம்மை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க மட்டுமல்ல, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் கூட போதித்தார். இதன் பொருள் என்ன?

இதன் பொருள், தலைவர்களாகிய நாம் நமது தலைகளை வீங்கவைத்துக் கொள்ளக்கூடாது. நாம் மத்தியக்குழுவின் அல்லது மக்கள் அரசுப்பணி அமைச்சகத்தின் உறுப்பினர்களாக உள்ளதால், நாம் முறையாக வழிகாட்டுவதற்கான எல்லா அறிவையும் பெற்று விட்டோம் என்று கருதக்கூடாது. நமது தரவரிசை மட்டுமே அறிவை யும், அனுபவத்தையும் கொடுத்து விடுவதில்லை. பட்டங்களும் இன்னும் குறைவாகவே அறிவை அளிக்கிறது.

இதன் பொருள், நமது அனுபவங்கள் மட்டுமே, தலைவர்களின் அனுபவங்கள் மட்டுமே முறையாக வழி நடத்துவதற்கு நமக்குப் போதுமானதல்ல. எனவே, இதைத்தொடர்ந்து மக்களின் அனுபவங்களை, கட்சி உறுப்பினர்களின் அனுபவங்களை உழைக்கும் வர்க்கத்தின் அனுபவங்களை, நமது அனுபவங்களோடும், தலைவர்களின் அனுபவங்களோடும் பின்னிணைப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

இதன் பொருள், ஒரு கணம்கூட நாம் மக்களுடனான நமது தொடர்புகளைத் தளர்த்திக்கொள்ளக்கூடாது என்பதாகும்.

மேலும் இறுதியாக, இதன் பொருள் நாம் கட்டாயம் கவனத்துடன் பெரும்திரளான மக்களின் குரல்களை, கட்சி அணியினர், உறுப்பினர்களின் குரல்களை, ‘சிறியவர்கள்’ என்று அழைக்கப்படுபவர்களின் குரல்களை, உழைக்கும் மக்களின் குரல்களைக் கேட்க வேண்டும்.

முறையாக வழி நடத்துவது என்றால் என்ன?

இதன் பொருள், அலுவலகத்தில் அமர்ந்து கொள்வதையும், செயற்குறிப்புரைகளை வழங்குவதையும் எக்காரணம் கொண்டும் குறிக்காது.

முறையாக வழிகாட்டுவது என்றால்:

முதலாவதாக, ஒரு பிரச்சினைக்கு ஒரு முறையான தீர்வைக் கண்டறிவது; ஆனால், பெரும் திரளானவர்களின் அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒரு முறையான தீர்வை கண்டறிவது சாத்தியமல்ல. ஏனெனில், பெரும் திரளானவர்கள்தான் நமது தலைமை எடுக்கும் முடிவுகளுடைய விளைவுகளை, அவர்கள்தான் சுமக்கிறார்கள்;

இரண்டாவதாக, சரியான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதை ஏற்பாடு செய்வது பெரும் திரளானவர்களின் நேரடி உதவியின்றிச் செய்துவிட முடியாது.

மூன்றாவதாக, இந்தத் தீர்வை முழுமையாக நிறைவேற்றியதை சரிபார்க்கும் ஏற்பாட்டைச் செய்வது, பெரும் திரளானவர்களின் நேரடி உதவியின்றி செய்து விட முடியாது.

தலைவர்களாகிய நாம் விசயங்களையும், நிகழ்வுகளையும் மக்களையும் ஒரு பக்கம் இருந்து மட்டும் பார்க்கிறோம்; அதாவது மேலிருந்து மட்டுமே என்று நான் கூறுகிறேன். இதன் விளைவாக நமது கண்ணோட்டத்தின் களம் அதிகமான அல்லது குறைவான வரம்புக்கு உட்பட்டது. அதற்கு மாறாக, பெரும் திரளானவர்கள் விசயங்களையும், நிகழ்வுகளையும், மக்களையும் வேறு பக்கத்திலிருந்து, அதாவது கீழிருந்து பார்க்கிறார்கள் என்று நான் கூறுவேன். இதன் விளைவாக அவர்களது கண்ணோட்டத்தின் களம்கூட சில குறிப்பிட்ட அளவுக்கு வரம்புக்கு உட்பட்டது. ஒரு பிரச்சினைக்கு முறையான தீர்வைக் கண்டறிய இந்த இரண்டு அனுபவங்களும் இணைக்கப்பட வேண்டும். அதன்பிறகு மட்டும்தான் தலைமையானது சரியானதாக அமையும்.

இதன்பொருள் என்னவென்றால், பெரும் திரளானவர்களுக்குக் கற்பிப்பது மட்டுமல்ல, பெரும் திரளானவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதும் ஆகும்.

லெனினினுடைய ஆய்வுரையின் சரியான தன்மையை விளக்கிக் கூற இரண்டு எடுத்துக்காட்டுகள்:

இது பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. மத்தியக்குழுவின் உறுப்பினர்களாகிய நாம், டோனெட்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள சூழ்நிலைகளை மேம்படுத்தும் பிரச்சினை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். கனரகத் தொழில்துறையின் மக்கள் அரசுப்பணி அமைச்சகம் முன்மொழிந்த நடவடிக்கைகள் வெளிப்படையாகவே திருப்தியற்றவைகளாக இருந்தன. மூன்று முறை நாம் அந்த முன்மொழிவுகளை கனரகத் தொழில்துறையின் மக்கள் அரசுப்பணி அமைச்சகத்துக்குத் திருப்பி அனுப்பினோம். மூன்று முறையும் வெவ்வேறு முன்மொழிவுகளை கனரகத் தொழில்துறையின் மக்கள் அரசுப்பணி அமைச்சகத்திலிருந்து நாம் பெற்றோம். ஆனால், அதற்குப் பிறகும் கூட அவற்றை திருப்திகரமானது என்று நம்மால் கருத முடியவில்லை. இறுதியாக நாம் டோனெட்ஸ் பள்ளத்தாக்கிலிருந்து பல தொழிலாளர்களையும், கீழ்நிலை வர்த்தகம் மற்றும் தொழிற்சங்க அலுவலர்களையும் அழைக்க முடிவு செய்தோம்.

இந்தத் தோழர்களோடு நாம் மூன்று நாட்கள் விசயங்களைப் பற்றி விவாதித்தோம். மேலும் மத்தியக்குழுவின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் இந்த சாதாரண தொழிலாளர்களால், இந்த ‘சிறிய மனிதர்’களால் மட்டுமே சரியான தீர்வை நமக்கு ஆலோசனையாகக் கூற முடிந்தது என்பதை ஒப்புக்கொண்டோம். டோனெட்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள  நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய மத்தியக்குழு மற்றும் மக்கள் அரசுப்பணி அமைச்சகத்தின் முடிவுகளை நீங்கள் நினைவில் கொண்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. நல்லது. மத்தியக்குழு மற்றும் மக்கள் அரசுப்பணி அமைச்சகத்தின் இந்த முடிவை சரியான மற்றும் குறிப்பிடத்தக்க ஒன்று எனவும், அது அணிகளிலிருந்த சாதாரண மக்களால் நமக்கு ஆலோசனையாக தரப்பட்டது எனவும் நமது அனைத்துத் தோழர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

இன்னொரு எடுத்துக்காட்டு. தோழர் நிகோலஸ்யென்கோவின் பிரச்சினையை நான் மனதில் கொண்டுள்ளேன். நிகோலஸ்யென்கோ யார்? அவர் கட்சியின் ஓர் அடிமட்ட உறுப்பினர். அந்தப்பெண் ஒரு சாதாரணமான ஒரு ‘சிறிய நபர்’. கீவ்-ல் (கீவ் – உக்ரெய்ன் தலைநகர்) உள்ள கட்சி அமைப்பில் எல்லாமுமே நன்றாக இல்லை என்பதற்கான சமிக்ஞைகளை ஓர் ஆண்டு முழுவதும் கொடுத்துக் கொண்டிருந்தார்; அந்தப் பெண் குடும்ப உணர்வை, தொழிலாளர்களிடம் பண்பற்ற குட்டி முதலாளித்துவ அணுகுமுறையை, சுயவிமர்சனம் ஒடுக்கப்படுவதை, டிராட்ஸ்கிய சீர்குலைவாளர்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததை அம்பலப்படுத்தினார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து ‘கேடு விளைக்கும் பூச்சி’ என புறந்தள்ளப்பட்டார். இறுதியாக அந்தப் பெண் தரும் தொல்லையில் இருந்து மீள, அவர்கள் அந்தப் பெண்ணை கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள். கீவ் அமைப்போ அல்லது உக்ரெய்ன் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவோ உண்மையை வெளிச்சத் துக்குக் கொண்டுவர அந்தப் பெண்ணுக்கு உதவவில்லை. கட்சி மத்தியக்குழுவின் தலையீடு மட்டுமே அந்த சிக்கலை அவிழ்க்க உதவியது.

மேலும் அந்தப் பிரச்சினை புலனாய்வு செய்யப்பட்ட பின் என்ன வெளிப்பட்டது? நிகோலஸ்யென்கோ சரியானவர் என்றும், கீவ் அமைப்பு தவறானது என்றும் வெளிப்பட்டது. இதுதான் துல்லியமாகத் தெரியவந்தது. ஆனாலும், நிகொலஸ்யென்கோ என்பவர் யார்? உண்மையில் அந்தப் பெண் மத்தியக் குழுவின் உறுப்பினர் அல்ல, அவர் ஒரு மக்கள் அரசுப்பணி அமைச்சர் அல்ல; அவர் கீவ் வட்டார அமைப்பின் செயலாளர் அல்ல; அவர் கட்சி மையத்தின் செயலாளரும் கூட அல்ல. அவர் கட்சியின் அடிமட்ட உறுப்பினர் மட்டுமே.

நீங்கள் காண்பதுபோல, சில நேரங்களில் சாதாரண மக்கள், சில உயர் நிறுவனங்களைவிட உண்மைக்கு மிக அருகில் தாம் இருப்பதை நிரூபிக்கிறார்கள்.

என்னால் இது போன்ற நூற்றுக்கணக்கான உதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும். இவ்வாறு, நீங்களே பாருங்கள், நமது அனுபவங்கள் மட்டுமே, தலைவர்களின் அனுபவங்கள் மட்டுமே நமது இலட்சியத்துக்கான தலைமைப் பண்புக்குப் போதுமானவை அல்ல. முறையாக வழி நடத்துவதற்குப் போதுமானதல்ல. முறையாக வழி நடத்துவதற்காக தலைவர்களின் அனுபவங்கள் கட்சி உறுப் பினர்களின் அனுபவங்களோடு, உழைக்கும் வர்க்கத்தின் அனுபவங்க ளோடு, உழைப்போரின் அனுபவங்களோடு, ‘சிறிய மனிதர்கள்’ என்று அழைக்கப்படுவோரின் அனுபவங்களோடு சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால் இதைச் செய்வதற்கு எப்போது சாத்தியப்படும்?

எப்போது தலைவர்கள் பெரும்திரளான மக்களோடு மிகவும் நெருக்கமாக இணைக்கப்படுகிறார்களோ, எப்போது அவர்கள் கட்சி உறுப்பினர்களோடு, உழைக்கும் வர்க்கத்தோடு விவசாயிகளோடு, உழைக்கும் அறிவுத்துறையினரோடு மிகவும் நெருக்கமாக இணைக்கப்படுகிறார்களோ அப்போது மட்டும்தான் இதைச் செயல்படுத்துவது சாத்தியமாகும்.

பெரும்திரள் மக்களுடனான தொடர்பு, இந்தத் தொடர்பை பலப்படுத்துதல், பெரும்திரளான மக்களின் குரல்களைக் கேட்கும் தயார்நிலை – இங்குதான் போல்ஷ்விக் தலைமையின் பலமும், வெல்லற்கரிய தன்மையும் படிந்திருக்கின்றன.

எவ்வளவு நீண்டகாலம் போல்ஷ்விக்குகள் பரந்த, பெரும் திரளான மக்களுடன் தங்கள் தொடர்புகளை வைத்திருக்கிறார்களோ, அவ்வளவு காலமும் அவர்கள் வெல்லற்கரியவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் ஒரு விதியாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதற்குமாறாக, எவ்வளவு சீக்கிரம் போல்ஷ்விக்குகள் மக்களிடமிருந்து தங்களைத் துண்டித்துக்கொள்கிறார்களோ, அவர்களது தொடர்புகளை இழந்துவிடுகிறார்களோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் அதிகார வர்க்கத் துருவால் மூடப்பட்டு அவர்கள் தங்களது எல்லா வலிமைகளையும் இழந்து வெறும் கேலிக்கூத்தாகிவிடுவார்கள்.

கிரேக்கப் புராணத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு கதாநாயகனாக அண்டாயெஸ் இருந்தான். அந்தப் பழங்கதை இவ்வாறு செல்கிறது: அண்டாயெஸ் கடல்களின் கடவுளான போஸெய்டன் மற்றும் பூமியின் தேவதையான கயீயாவின் மகன். அண்டாயெஸ் தன்னைப் பெற்றெடுத்த, பாலூட்டிய, வளர்த்தெடுத்த தனது தாயிடம் குறிப்பிடத்தக்க வகையில் இணைந்திருந்தவன். இந்த அண்டாயெஸ் வென்றடக்காத நாயகன் எவனும் இல்லை. அவன் வெல்லப்பட முடியாத நாயகனாகக் கருதப்பட்டான். அவனது வலிமை எங்கு படிந்திருந்தது? தனது பகைவனுக்கு எதிரான சண்டையில் ஒவ்வொரு முறையும் அவன் கடுமையாக அழுத்தப்படும்போது அவன், பூமியை, தன்னைப் பெற்றெடுத்துப் பாலூட்டிய தாயைத் தொட்டான். அது அவனுக்குப் புதிய சக்தியை அளித்தது.

ஆனால் அவனிடம் காயம்படத்தக்க ஒரு குறிப்பிட்ட இடம் இருந்தது. ஏதோ ஒரு வகையில் பூமியிலிருந்து பிரிக்கப்பட்டுவிடக் கூடிய ஆபத்து இருந்தது. அவனது பகைவர்கள் இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் ஒரு பகைவன் இந்த பலவீனமான குறிப்பிட்ட இடத்தை அனுகூலமாக எடுத்துக் கொண்டு தோன்றினான், அண்டாயெஸ்ஸை வென்றடக்கினான். அவன்தான் ஹெர்குலஸ். எவ்வாறு ஹெர்குலஸ் அண்டாயெஸ்ஸை வென்றடக்கினான்? ஹெர்குலஸ் அண்டா யெஸ்ஸை பூமிக்கு மேலே தூக்கினான். அவனை தற்காலிகமாக பூமியிலிருந்து நீக்கினான், அவன் பூமியைத்தொடுவதிலிருந்து தடுத்தான், அவனைக் குரல்வளையை நெரித்துக் கொன்றான்.

படிக்க :
♦ சீர்குலைவுவாதிகளோடு தொடர்புடையவர்களைக் கையாளுவது எப்படி ? || தோழர் ஸ்டாலின்
♦ வினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் !

போல்ஷ்விக்குகள் கிரேக்கப் புராணக்கதையின் கதாநாயகன் அண்டாயெஸ் -ஐ நினைவுபடுத்துகிறார்கள் என்று நான் கருதுகிறேன். அவர்கள் அண்டாயெஸ் -ஐப் போலவே வலிமை மிக்கவர்கள். ஏனென்றால் தங்களைப் பெற்றெடுத்த, தங்களுக்குப் பாலூட்டிய, தங்களை வளர்த்தெடுத்த தாயுடன், அதாவது பெரும்திரளான மக்களுடன் தங்கள் தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு காலம் தங்கள் தாயுடன் – அதாவது மக்களுடன் தொடர்புகளை அவர்கள் கொண்டிருக்கிறார்களோ அவ்வளவு காலமும் தாங்கள் வெல்லற்கரியவர்களாக விளங்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் பெற்றுள்ளார்கள்.

இதுதான் போல்ஷ்விக் தலைமையின் வெல்லற்கரிய தன்மையின் திறவுகோல்.

(தொடரும்)

நூல் : ஜே.வி.ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் – தொகுதி -14
கிடைக்குமிடம் :
அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
தொடர்புக்கு : 98417 75112

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க