ன்பார்ந்த வினவு வாசகர்களுக்கு,

உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியல் களத்தில் வினவு இணையதளம் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

சமூக மாற்றத்தை விரும்பும் வாசகர்களும், ஆதரவாளர்களும் வழங்கும் மாதச் சந்தா மற்றும் நன்கொடையின் மூலமாகவே இத்தனை ஆண்டுகளாக வினவு இயங்கி வருகிறது. மேலும் அரசியல் தோழமையின் அடிப்படையில், புதிய ஜனநாயகம் மாத இதழும், வினவு தளத்தில் பணியாற்றும் பகுதிநேரத் தோழர்களும் வினவு தளத்தின் அவசியமான பொருளாதாரத் தேவைகளுக்கு கணிசமான தொகையை வழங்கி வருகின்றனர். இப்படிப் பலரது ஆதரவின் அடிப்படையில்தான் வினவுதளம் தொடக்கம் முதலே இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 அன்று மருதையன், நாதன் விலகலைத் தொடர்ந்து, வினவு ஆசிரியர் குழுவும் பொறுப்பிலிருந்து விலகியது. அதன் பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் வினவு தளத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக வினவு தளத்தில் பணியாற்றும் பெரும்பான்மைத் தோழர்கள் கூடி விவாதித்து, வினவு தளத்தின் தொடர்பாளராக இருந்த கண்ணையன் இராமதாஸ் (எ) காளியப்பன் அவர்களையே பொறுப்பாசிரியராக நியமித்தோம்.

வினவு தளத்தின் பொறுப்பாசிரியராக காளியப்பன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், வினவு தளத்தில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஒருவரை பதிவுகள் வெளியிடும் பொறுப்பான இடத்தில் இருத்தினார்.

படிக்க :
♦ பு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி
♦ மக்கள் அதிகாரம் செயற்குழு கூட்டம் : உறுப்பினர் தகுதியிலிருந்து த. கணேசன், காளியப்பன் நீக்கம் !

அவரது துணையோடு, கொரோனாவுக்கும் ஏகாதிபத்திய லாபவெறிக்குமிடையிலான உறவு குறித்த சமூக அரசியல் ஆய்வுக் கட்டுரை, மின்வாரிய சட்ட மசோதா – 2020 குறித்த கட்டுரை உள்ளிட்ட பல அரசியல் முக்கியத்துவமிக்க கட்டுரைகளை வெளியிடாமல் முடக்கினார்.

மார்க்சிய லெனினிய அரசியல் பத்திரிகையான புதிய ஜனநாயகம் இதழை மின்னூலாகவும், அதன் கட்டுரைகளை தனித் தனிப் பதிவுகளாகவும் வினவு தளத்தில் பல ஆண்டுகளாக வெளியிட்டு வந்திருக்கிறோம். ஆனால் காளியப்பன் அவர்கள் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றதும், புதிய ஜனநாயகம் மே மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளில் அரசியல் முக்கியத்துவமிக்கப் பல கட்டுரைகளை எந்தவிதக் காரணமும் இன்றி தளத்தில் வெளிவராதவாறு முடக்கினார்.

கடந்த ஜூலை மாத புதிய ஜனநாயகம் இதழின் மின்னூல் வினவு தளத்தில் பதிவாக வெளியிடப்பட்டது. ஆனால் வெளியிட்ட சில நிமிடங்களில் எவ்விதக் காரணமும் கூறாமல் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். அந்த இதழில் வெளிவந்த இரு முக்கிய அரசியல் கட்டுரைகளான அமெரிக்காவின் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டம் குறித்த கட்டுரையையும், இந்திய சீன எல்லை மோதல் குறித்த தலையங்கக் கட்டுரையையும் வெளியிடாமல் தடுத்தார். அந்த இரு கட்டுரைகளும் மின்னூலில் இருப்பதால் புதிய ஜனநாயகம் மின்னூலையும் வெளியிட விடாமல் தடுத்துள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நக்சல்பாரி எழுச்சி நாளின் 53-ம் ஆண்டுக்கான சிறப்புக் கட்டுரை, இ.பொ.க (மா.லெ)-வின் முதல் காங்கிரஸ் நடைபெற்றதன் 50-ம் ஆண்டுக்கான சிறப்புக் கட்டுரை, பு.ஜ.தொ.மு-வின் மே நாள் பிரசுரம் ஆகியவற்றையும் வெளியிடாமல் நிறுத்தி வைத்தார்.

அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான மார்க்சிய – லெனினிய அரசியலை ஜனரஞ்சக ரீதியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே வினவு தளத்தின் நோக்கம். மேற்காணும் மா-லெ அரசியல் கட்டுரைகளை வெளியிடாமல் முடக்கியதன் மூலம் மா-லெ அரசியல் நிலைப்பாட்டிலிருந்து காளியப்பன் அவர்கள் வழுவிச் சென்றுள்ளார்.

மேலும் பல தோழர்கள் எழுதியனுப்பும் கட்டுரைகளையும் வெளியிடாததற்கான காரணத்தையோ, குறைபாட்டையோ கட்டுரையாளர்களுக்குத் தெரிவிப்பதில்லை. இதன் மூலம் பொறுப்பாசியர் என்ற பொறுப்பிலிருந்தும் வழுவியுள்ளார்.

படிக்க :
♦ புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிலிருந்து சுப. தங்கராசு நீக்கம் !
♦ ‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

காளியப்பன் அவர்களின் மேற்கூறிய செயல்பாடுகளின் தாக்கம், வினவு தளத்திற்காக பணியாற்றும் தோழர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களது பங்களிப்பு சுருங்கும் அளவிற்கு இட்டுச் சென்றுள்ளது. முழு நேரமாகப் பணியாற்றிய தோழர்கள், வெறுப்படைந்து பகுதி நேரமாக மாறினர்.

இந்நிலைமைகள் குறித்து வினவு தளத்தில் தற்போது பணியாற்றும் 12 தோழர்களும் விவாதித்தோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்தத் தளத்தின் தொடர்பாளராக அறியப்பட்ட காளியப்பன் அவர்கள், டாஸ்மாக் எதிர்ப்புப் பாடலை வெளியிட்டதற்காக ஜெயா அரசால் வினவு தளத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போது வழக்கை துணிவோடு எதிர்கொண்டு அரசு ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியுள்ளார். அச்சமயத்தில் அவரை உந்தித் தள்ளிய மார்க்சிய லெனினிய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகிச் சென்றதையே அவரது சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன என்ற முடிவுக்கு ஒருமனதாக வந்தடைந்தோம்.

ஜூலை மாதத்திற்குப் பின்னர், பதிவுகள் வெளியிடும் பொறுப்புகள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவரது அரசியல்ரீதியான தலையீடுகளை வினவு தளத்தில் பணியாற்றும் தோழர்கள் அனுமதிப்பதில்லை. எனினும், தற்போதைய அரசியல் புறச் சூழலில், வினவு தளத்தின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராக, கேடான அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் காளியப்பன் அவர்களை இனியும் பொறுப்பாசிரியராகக் கொண்டு செயல்படுவது என்பது அரசியல்ரீதியில் எமது செயல்பாடுகளை முடக்கிக் கொள்வதற்கு சமமானதாகும். ஆகவே, காளியப்பன் அவர்களை பொறுப்பாசிரியர் பொறுப்பில் இருந்து நீக்குவது என ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.

மேலும், வலைப்பூவிலிருந்து (wordpress blog) வினவு இணையதளமாக (site) மாற்றப்பட்ட சமயத்தில், வினவு தளத்தின் சர்வர் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், நன்கொடை பெறுவதற்கும் காளியப்பன் அவர்களின் வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. வினவு தளத்தின் தொடர்பாளராகவும் அவர் செயல்பட்டு வந்தார். அந்த வகையில் தளத்தின் சட்டரீதியான உரிமையாளர் என்ற பொறுப்பும், தளத்திற்கான வங்கிக் கணக்குகளின் உரிமையாளர் என்ற பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. காளியப்பன் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றிருந்த இந்த இடைக்காலத்தில், தம்மை உரிமையாளர் என்று அதிகாரத் தொனியில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலை வினவு தளத்தில் பணியாற்றும் தோழருக்கு அனுப்பியுள்ளார்.

சமூக நோக்கிற்காக செயல்படும் தளத்தில், அதிகாரத்துவப் போக்கையும், உடைமைக் கண்ணோட்டத்தையும், கொடுக்கப்பட்ட பொறுப்பை தவறாக பயன்படுத்தும் போக்கையும் எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. ஆகவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த “தளத்தின் சட்டரீதியான உரிமையாளர்” என்ற பொறுப்பையும், தளத்திற்கான “வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்” என்ற பொறுப்பையும் திரும்பப் பெற்றுக் கொள்வது என்றும் முடிவு செய்துள்ளோம்.

மேற்கூறிய சட்டரீதியான மற்றும் தார்மீகரீதியான பொறுப்புகள் அனைத்தையும், வினவு தளம் பின்பற்றும் அரசியல் நிலைப்பாடுகளை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டுவரும் தோழர் மகாலெட்சுமி அவர்களிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம்.  இனி வினவின் தொடர்பாளராக தோழர் மகாலெட்சுமி செயல்படுவார். அவரது தொடர்பு எண்-7358482113.

தளத்திலிருந்து வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான பொறுப்புகளை தோழர் மகாலெட்சுமியிடம் ஒப்படைக்க ஒத்துழைக்குமாறு காளியப்பன் அவர்களிடம் முறைப்படி கோரியுள்ளோம்.

இந்த பொறுப்பு மாற்றங்களின் நிலைமை குறித்து விரைவில் அறிவிக்கிறோம்.

தோழமையுடன்,

வினவு தோழர்கள்.
தொடர்புக்கு: 7358482113

20 மறுமொழிகள்

  1. இந்த விவரங்கள் நாட்டு மக்களுக்கு அவசியமா?

    பணி ஓய்வுபெற்றவர்களுக்கு பூச்செண்டு வழங்கி அனுப்புங்கள்.

    தயவுசெய்து நாட்டு மக்கள் சந்திக்கும் நெருக்கடி குறித்து செய்தி வெளியிடுங்கள்.

    • நெல்லையப்பன் சார்,
      இந்த விவரங்கள் நாட்டு மக்களுக்கு அவசியம்தான்.

      10 வருடங்களாக வினவு தளம் வாசித்து வரும் சந்தாதாரன் நான். பிப்ரவரிக்குப் பின்னர், கட்டுரைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை உணர்கிறேன். உண்மையில் நான் ‘கொரோனாவும் முதலாளித்துவமும்’ என்ற குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை எதிர்பார்த்து ஏமாந்தேன். இப்போது தெரிகிறது அப்படிப்பட்ட ஒரு கட்டுரை எழுதப்பட்டு பின் தடுக்கப்பட்டிருக்கிறது. (விரைவில் வெளியிட வேண்டுகிறேன்!)

      இது விஜய் டிவி அல்ல. ஏதோ ஒரு ‘திறமையான’ மானேஜரை வைத்து விறுவிறுப்பாக நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டே போக…திடீரென்று ஒரு சீரியலை நிறுத்தவும், புதிதாக சீரியலை ஆரம்பிக்கவும் செய்தால், நாம் சானலை மாற்றிக்கொண்டு போய்விடுவோம். இங்கே அப்படிப் போகமுடியாது & போகக் கூடாது. ஏனென்றால், இது (வினவு) நமது (மக்கள்) சொத்து. அதன் நிர்வாகம் வெளிப்படையாகத்தான் இருக்க வேண்டும். அதனால் இது போன்ற தன்னிலை விளக்க அறிக்கைகள் மிக முக்கியம்.

      “இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும்” “நக்சல்பாரி” போன்ற சுனிதிகுமார் கோஷின் புத்தகங்களைப் படித்துப்பாருங்கள். போலியான கம்யூனிஸ்டு இயக்கங்களை ஆரம்பிப்பதும், இயங்கும் அமைப்களை ஆக்கிரமித்துத் திருடுவதும் பிற்போக்காளர்கள் வழக்கம்.

      ஓட்டம் தொடரட்டும்.

  2. அமைப்பு ரீதியில் இவரோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன். இவர் மீது மிகுந்த மதிப்பு எனக்கு உண்டு. எனது தந்தையை விட உயர்வான இடத்தில் வைத்திருந்தேன். இளகிய மனம் படைத்த தோழர் என்பதையும் அறிவேன். யாராவது இவரை அவதூறாக பேசினாலோ பொங்கி எழுந்து சண்டையிடுவேன். இந்த வயதிலும் தொடர் பயணம், பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பது, போராட்டங்களில் பங்கேற்பது என தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டிருந்தார். இவரை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பேன். இவருக்கு சிறிய உடல்நிலை பிரச்சினை வந்தாலும், ஏதாவது ஆகிவிடுமோ என்று பதறிப் போய் விடுவேன். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இவர் நடந்து கொள்ளும் முறையில் ஏதோ புதிய மாற்றம் இருப்பதை பார்க்க முடிந்தது. பலமுறை லாஜிக் இடித்தது. ஒரு கட்டத்தில் இவர் ஏதோ ஒரு விஷயத்தை செய்துகொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். என்ன செய்கிறார் என்பதை முழுமையாக அறிய முடியவில்லை என்றாலும் மிகப்பெரிய துரோகம் செய்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். அன்றிலிருந்து பல நாட்கள் வரை தூக்கமின்றி நிம்மதி இன்றி மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். என்னுடைய மிகப்பெரிய நம்பிக்கை உடைந்து சில்லு சில்லா விழுந்ததைப் போல் அதிர்ச்சியில் கிடந்தேன். தர்க்கரீதியாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தாலும் வெளியே சொல்ல முடியாமல் தவித்தேன். இவர் மருதையனுடன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும் அதை ஒரு தவறாக நான் பார்க்கவே இல்லை. ஆனால் சந்தேகம் வந்தபிறகு இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது ‌.
    எனக்கு முறையான தகவலும் கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து கிடைக்கவில்லை. மிகத் தாமதமாகவே நடந்தவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள முடிந்தது. என்னுள் எழுந்த அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்தது. அதற்குப் பிறகு நான் செய்ய வேண்டியவை என்ன என்கிற கடமை மட்டும் அதாவது பாட்டாளி வர்க்கத்தின் உயிரான அமைப்பை உயிரை விட்டாவது பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

    அரசுடன் மோதும் போதும், பாஜகவை எதிர்க்கும் போதும் உயிர் போனாலும் பரவாயில்லை என்கிற மனநிலையில் இருந்து தான் எதிர்கொள்வேன். சுட்டுக் கொல்லப்படுவேனோ என்று ஒரு நொடி கூட வருந்தியதில்லை. அதை மகிழ்ச்சியாகவும் எதிர்கொள்ள தயாராகவே இருந்தேன். ஆனால் நம்ப வைத்து கழுத்தறுக்கும் துரோகம் என் இதயத்தை அறுப்பது போல் இருந்தது. இந்த கட்டுரையை படிக்கும்போது இந்த வெளி உலகத்திற்கு சொல்ல வேண்டி என் இதயத்தில் அமிழ்து வைக்கப்பட்ட அத்தனையும் வெளிப்படுவதாக உணர்கிறேன். என்னவென்று தெரியவில்லை இதைப் படித்து முடித்தபிறகு என் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது…

  3. சரியான முடிவு வினவு தோழர்களே!
    இதுப் போன்ற இடையுறு கொடுப்பவரை வைத்துக் கொண்டு செயல்பட முடியாது தான்!
    ஜனநாயக சக்திகள் எழுதி அனுப்பும் கட்டுரைகள கூட பதிவு செய்த வினவில், அந்த அமைப்பின் கட்டூரைகள், பிரசுரிக்க மறுத்துள்ளார் என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது, அதிலும் குறிப்பாக, பதிவு செய்யாமல் இருந்தால் அதற்குரிய காரணம் ஏதும் கூறமால் இருப்பது ” நான் தான் தளத்தின் உரிமையாளர், நான் வைத்தது தான் சட்டம் ” என்ற ஆண்டைத்தனத்துடன் செயல்பட்டுள்ளார் என்பது மிகவும் பேர் அதிர்ச்சியாக உள்ளது!
    பொது வெளியில் அமைப்பு விவரங்களை காட்டிக் கொடுத்த “ஆளும் வர்க்கத்தின் ஏஜன்டஸ்” மருதயைன், நாதன் ஆகியவர்களுக்கும் இவருக்கும் ஏதேனும் தொடர்புண்ட என்பதை ஆசிரியர் வினவுத் தோழர்கள் விளக்க வேண்டும்? ஏனென்றால், பொதுவெளியில் அமைப்பு விவகாரங்களை பேசினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்தது. இந்த இருவர் (மரு, நாத)உங்களின் தளத்திலே, உங்களை பற்றி அவதூறு செய்தது மட்டும் அல்லாமல், புரட்சியை விட்டுப் ஒடிப் போகிறோம் (எதிர்புரட்சியுடன் ஒட்ட போகிறோம்) என்றும் கூறியிருந்தனர் !
    அதன்பின் தளத்திற்கு பொறுப்பேற்ற காளியப்பன் என்ன செய்திருக்க வேண்டும்? குறைந்தபட்சம் ஒரு கண்டன செய்தியையாவது பதிவு செய்திருக்க வேண்டும் அல்லவா! ஆனால் இதை கூட பதிவிடாமல் இருந்தது, என் இந்த சந்தேகத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது!
    (“மக்கள் அதிகாரத்திலிருந்து நீக்கிவிட்டதாக கூறியது பொய், நாங்கள் தான் மக்கள் அதிகாரம் ” என கண்டன பேட்டியும், கண்டன அறிக்கையும் மறுநாளே நீங்கள்(காளியப்பன்) குருப்பாக கொடுத்ததை பார்த்தேன்.. இதே வேகம், நீங்கள் சட்டரீதியாக பொறுப்பாக இருந்த தளத்தில், இப்படி செய்தவர்கள்(மரு,நாத) மீது துளி அளவு கோபமும் இல்லை !)
    இவர் அரசியல் கட்டுரைகளை முடக்கி வைத்த காலத்தில் தான், மருதையன் “இடைவெளி” என்ற வலைத்தளத்தில் அரசியல் கட்டுரைகளை எழுதினார். இதை எல்லாம் சேர்த்துப் பார்த்தால், இதில் , வினவிற்கு எதிராக மிக்பெரிய சதி செய்ய முயன்று இருப்பது போல் தெரிகிறது!
    அவர் பொறுப்பாசிரியாராக இருந்த காலத்தில், அவர் எத்தனை அரசியல் கட்டுரை எழுதினார் என்ற விவரங்களை தெரிந்துக் கொள்ளலாமா ?
    புதிதாக பொறுப்பேற்றுள்ள வினவு தோழர்கள் ” மருதையன், நாதன்” விலகல் பற்றிய முறையான கண்டனத்தை பதிவிட வேண்டும் என்று கருதிகிறேன்.

  4. மார்ச் 29ம் தேதி வினவு ஆசிரியர் குழு கீழ்க்கண்ட செய்திகளை வெளியிட்டது. “””””மேற்கூறிய வண்ணம் வினவு இணையதளத்தையும், தளம் சார்ந்த அனைத்து உடைமைகளையும் வினவு ஆசிரியர் குழுவின் சார்பில் தளத்தின் உரிமையாளர் பொறுப்பில் இருக்கும் தோழர் காளியப்பனிடம் ஒப்படைக்கிறோம்.””””
    இப்போது உரிமையாளார் பொறுப்பையே இவங்க நீக்கிட்டாங்களாம்…..அனேகமாக ”படித்துறைப் பாண்டி” கோஷ்டியாக இருக்கும்போல,,,,,

    • ‘தளத்தின் உரிமையாளர் பொறுப்பில் இருக்கும்’ என்று தானே அப்போதும் குறிப்பிட்டுள்ளனர்.
      ஆக, வினவை பொறுத்தவரை, உரிமையாளர் என்பது அமைப்பால், வினவு தோழர்களால் கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பு, அவ்வளவே.
      அமைப்பின் அரசியலை வெளியே சொல்ல விடாமல் தடுக்கும் நபர், அது குறித்த சுய விமர்சனம் ஏதும் செய்து கொள்ள மறுக்கும் போது, அமைப்பின் பொறுப்புகளில் நீடிக்கும் தகுதியை, அருகதையை தானாகவே இழந்து விடுகிறார்.
      காளியப்பனுக்கும் இது தான் பொருந்தும். எனவே, தனது பெயரில் இருக்கும் சர்வர் உரிமையை முறையாக மாற்றிக் கொடுப்பதே நேர்மையின் அடையாளமாக இருக்கும்.
      அவர் மறுத்தால், எனது உடைமை, நான் இருக்கும் ம.க.இ.க.வின் உடைமை, என்னை நீக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூச்சல் போட்டால் அதை விடக் கேவலம் ஏதுமில்லை.
      திரு.காளியப்பன் அவர்கள் தனது நேர்மையை நிரூபித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.
      காளியப்பன் இப்பொழுது யார் பக்கம்? நேர்மையின் பக்கமா, மருதையன் பக்கமா?

  5. அமைப்பில் என்ன பிரச்சினை நடக்கிறது என்று புரிந்ததுக்கொள்ள முடியாதவர்கள், அல்லது தவறாக புரிந்துக் கொண்டிருப்பவர்கள், இதில் உள்ள இரண்டு கண்ணோட்டங்களை புரிந்து கொள்வது மூலமே சரியாக பரிசீலிக்க முடியும்…

    ##குட்டி முதலாளித்துவ அற்பவாதிகளின் கண்ணோட்டம்##

    //இன்று அமைப்பின் முகமாக அறியப்படும் வினவு தளம், 12 ஆண்டுகளுக்கு முன் ஓரிரு தோழர்களின் சொந்த முயற்சியில் ஒரு வலைப்பூவாக தொடங்கப்பட்டது. இதற்காகப் பணியாற்றிய தோழர்களின் முயற்சியின் வழியே, வினவு ஒரு இணைய தளமாக வளர்ந்தது.

    நாங்கள் அமைப்புக்கு நிதிச்சுமையைக் கூட அளிக்காமல் சுயசார்பாகவும் வாசகர்களைச் சார்ந்துமே இயங்கி வந்திருக்கிறோம். கடந்த 12 ஆண்டுகளில், அமைப்புக்கும் சமூகத்துக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறோம்.// (மருதையன், நாதன் செல்வாக்கில் இருந்த பழைய வினவு ஆசிரியர் குழு விலகல் பதிவு)

    ##கூட்டுத்துவ உழைப்பில் வெளிப்படும் கண்ணோட்டம்##

    //சமூக மாற்றத்தை விரும்பும் வாசகர்களும், ஆதரவாளர்களும் வழங்கும் மாதச் சந்தா மற்றும் நன்கொடையின் மூலமாகவே இத்தனை ஆண்டுகளாக வினவு இயங்கி வருகிறது. மேலும் அரசியல் தோழமையின் அடிப்படையில், புதிய ஜனநாயகம் மாத இதழும், வினவு தளத்தில் பணியாற்றும் பகுதிநேரத் தோழர்களும் வினவு தளத்தின் அவசியமான பொருளாதாரத் தேவைகளுக்கு கணிசமான தொகையை வழங்கி வருகின்றனர். இப்படிப் பலரது ஆதரவின் அடிப்படையில்தான் வினவுதளம் தொடக்கம் முதலே இயங்கி வருகிறது.//
    (இன்றைய வினவு தோழர்களின் பதிவு)

    கூட்டுத்துவ சிந்தனைக்கும், தனிநபவர் வாதத்திற்கும் உள்ள கருத்து மோதலை (வர்க்க மோதலை) புரிந்து கொண்டால்தான் பிரச்சினையின் அடித்தளத்தை கொஞ்சமாவது புரிந்துக் கொள்ள முடியும்.

    • ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் , வர்க்கத்தின் சிந்தனை உள்ளது.

  6. வினவு தளம் எவரின் தனி சொத்துமில்லை. அது ஒரு அமைப்பு மக்களுக்கான உருவாக்கிய ஊடகம். அதை ஒருவர் உரிமையாளர் என்று உரிமை கொண்டாடுவது மிகவும் கேடாதது, இழிவான செயல்.

    உரிமையாளர் என்ற பொருப்பில் இருந்து ஒருவர் அமைப்பின் கட்டுரைகளையும், புதிய ஜனநாயக கட்டுரைகளையும் வெளியிடாமல், செய்வதது என்பது மிகவும் இழிவான செயல்!

    உழைக்கும் மக்களின் இணையக்குரல் என்பதை மாற்றியமைக்க முயற்சிக்கிறார் காளியப்பன்.

  7. திருவாளர் சாரதி அவர்களே! தங்களின் நாவும், இதழும் ஏன் மருதையனை பற்றி பேச மறுக்கிறது!
    எழுப்பிய வினாக்களுக்கு பதில் கூற மறுக்கிறது ! சதி கும்பல் எனும் ஜோதியில் ஐக்கியம் ஆகிவிட்டீரோ !

  8. திருவாளர் மருதையனின் தாங்கிகளே!

    உங்களின் நிரந்திர தலைவரின் சதி-நரித்தனத்தை புரிந்து-அறிந்துக் கொள்ள, தோழர் விளவை ராமசாமியின் இரங்கல் கூட்டத்தில், மிஸ்டர் மரு ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரையை கேளுங்கள்!
    இடைவெளி , புது வகையான கட்சி, வால்பிடிக்கும் போக்கு – நிகழ்ச்சி போக்கு வகைப்பட்ட செ.தந்திரம் , குறிப்பாக “இன்றைய இளம் தலைமுறையினர் அரசியலில் ஆர்வம் காட்டுவாதில்லை” போன்ற இயக்கமறுப்பியல் கண்ணோட்டம்… இத்தியாதி.. இத்தியாதி… என எல்லாம் புலப்படும் !

    தோழர் ராமசாமியின் இரங்கல் நிகழ்ச்சியை “தனது” எதிர்கால திட்டதை அறிமுகப்படுத்த “அழகாக” பயன்படுத்தியுள்ளார்!

    இதை உணராமல், அவர் விரித்த வலையில், சாரி சாரி, அவர் உருவாக்கிய “கருந்துளையில்” விழுந்துவிட்டனர் அவரின் அனுதாபிகள்!

    பரவாயில்லை, இனியாவது சூழ்ச்சியைப் புரிந்துக் கொண்டு உண்மையை தேடுங்கள்!

  9. கண்ணை மூடிக்கொண்டு நடக்க முயற்ச்சிக்கும் தம்ழ், நேர்மை போன்ற நபர்கள் வழக்கமான வழியில் போக முடியுமே தவிர புதிய பார்வை, புதிய சிந்தனைகள் மற்றும் கண்முன் நடக்கும் எதையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியாது. எனவே கண் கட்டை அவிழ்த்து விட்டு அனைத்தையும், அனைவரையும் (உங்களை வழிநடத்துபவர்களையும்) விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்க முயலுங்கள் இங்கு யாரும் கடவுள் இல்லை அனைவரையும் கேள்விக்கும் படுத்துங்கள். உங்களுக்கு கற்பித்ததை அப்படியே வாந்தி எடுக்காமல் உங்கள் சிந்தனைக்கும் வேலை கொடுங்கள் இல்லையேல் நீங்கள் செல்லும் பாதை அதள பாதாளத்தில் உங்களை கொண்டு சேர்க்கும். நீங்கள் எந்த ஜோதியில் மூழ்கி இருந்தாலும் அது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக சிந்திக்கிறதா, பாடுபடுகிறதா இல்லை தனிநபர் சேவை, சொத்து சேர்க்கும் வகையில் சேவை செய்கிறதா என்பதை அவ்வபோது பரிசோதிக்க மறவாதீர்கள்.

    • உங்க உபதேசம்படி தான் செயல்படுகிறன், என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்….
      உங்களின் உபதேசப்படி நீங்கள் நடந்துக் கொண்டால் சிறப்பு!

    • திரு. விழி… வினவுக்கு நீங்க புதுசு போல!!! எப்படா எவனாவது சிக்குவான், “அறிவுரை” சொல்லி தாளிக்கலாம் என காத்திருக்கும் ஆளோ நீங்கள்?

      மார்க்சிய லெனினியம் ஒரு அறிவியல். ஆனால் அது வெறும் அறிவியல் தத்துவம் மட்டுமல்ல பாட்டாளிவர்க்கத்திற்கு சேவை செய்வதும் அதன் பணி. வர்க்கச்சார்பு கொண்டது. ஆகவே பாட்டாளி வர்க்க கட்சியை உள்ளிருந்து துரோகத்தால் அழிக்கப்படுவது, உடனிருந்த ஒருவர் துரோகத்தால் “தோழமை உணர்வையே” படுகொலை செய்தது, இவை ஒருவருக்கு சிறிதளவுக்கூட கலங்க செய்யாது என நினைக்கிறீர்களா? அல்லது அவ்வாறு கலங்குவது தான் பாவச் செயலா?

      ஒருவன் கம்யூனிஸ்டாக வாழ்நாள் முழுக்க இயங்குவதற்கு இரண்டு விசியங்கள் வேண்டும், ஒன்று மா – லெ அறிவியல் பார்வை, இன்னொன்று பாட்டாளி வர்க்க உணர்வு. இதில் எது பிரதானம் என்றால் வர்க்க உணர்வு.

      //கண்ணை மூடிக்கொண்டு நடக்க முயற்ச்சிக்கும் தம்ழ், நேர்மை போன்ற நபர்கள் வழக்கமான வழியில் போக முடியுமே தவிர புதிய பார்வை, புதிய சிந்தனைகள் மற்றும் கண்முன் நடக்கும் எதையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியாது.//

      புதிய பார்வை? புதிய சிந்தனைகள்?

      அற்புதம்! புற்புதம்! பூனைக்குட்டி எட்டி பார்க்க தொடங்கியிருக்கிறது, கொஞ்சம் முழுதாக வெளிவந்தால் விவாதிக்க வசதியாக இருக்கும். அது என்ன “புதிய பார்வை”? “புதிய சிந்தனை” என்பதை விளக்க முடியுமா? உங்களிடம் சவால் விடுகிறேன், அந்த “புதிய பார்வை”, “புதிய சிந்தனை” என்ன என்பதை சொல்லுங்கள் பார்ப்போம்? தைரியம், துணிவு இருந்தால்.

      நீங்கள் பேசுவது 100 ஆண்டுக்கு முந்தைய பழமையான திரிபுவாதிகளின் கருத்து தான்.

      இதை பாருங்கள்…
      ” “காலாவதியாகிவிட்ட வறட்டுச் சூத்திர வகைப்பட்ட” மார்க்ஸியத்தின்பால் “விமர்சனரீதியான” கண்ணோட்டத்தை மேற்கொள்ளும் “புதிய” போக்கின் சாராம்சத்தை பெர்ன்ஷ்டைன் போதுமான அளவுக்கு தெளிவுடன் முன்வைத்தார், அதை மில்லெராண்ட் நிதர்சனப்படுத்தியுள்ளார். (மருதையன் நிதர்சனப்படுத்தியுள்ள, “முன்னணிப்படை” வேண்டாம் “கிரியாயூக்கி” போதும் என்பதை போன்று – இது என்னுடைய கருத்து)

      சமூக ஜனநாயகவாதம் சமுதாயப் புரட்சிக்கான கட்சியாக இருப்பதை விட்டொழித்துச் சமுதாயச் சீர்திருத்தங்களுக்கான ஜனநாயக் கட்சியாக மாறித் தீரவேண்டுமாம். இந்த அரசியல் கோரிக்கையைச் சூழ்ந்தவாறு நல்லிசைவான “புதிய” வாதங்களும் பகுத்தறிவாய்வுகளும் கொண்ட பீரங்கிப்படையை முழுசாக நிறுத்தியிருக்கிறார் பெர்ன்ஷ்டைன்.” (பக்கம் 12. என்ன செய்ய வேண்டும்? லெனின்.)

      உடனே மார்க்சிய லெனினியம் எல்லாம் “புதிய” நிலைமைக்கு ஒத்துவராது, என்று சொல்வீர்கள். பரவாயில்லை உங்களுடைய “புதிய பார்வை”, “புதிய சிந்தனையை” சொல்லுங்கள். ஒரு கை பார்ப்போம்!

      “முழு நேர புரட்சியாளர்களை முதன்மையாக கொண்டதாக ஒரு புரட்சிகர கட்சி இருக்ககூடாது”, “மார்க்சிய லெனினியம் எல்லாம் இன்றைய கால கட்டத்திற்கு ஒத்துவராது”, “பகுதிகளுக்கு தலைமை கட்டுப்பட வேண்டும்”, “சும்மா அமைப்பு முறை அமைப்பு முறை என்று தொங்கக்கூடாது”, “இரகசிய அமைப்பு இருக்கக் கூடாது”, “முழு நேரமாக இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள்”, இன்னும் ஒரு படி முன்னேறி, “வினவு இணையத்தளம் மருதையன், நாதன் ஆகியோரின் கடும் உழைப்பால் உருவாகியது, ஆகவே தார்மீகமாக அவர்களுக்கு தான் சொந்தம், சட்ட ரீதியாக எனக்கு தான் சொந்தம், இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது, நான் “பொறுப்பாசிரியர் மற்றும் உரிமையாளர்” என போட்டுக்கொண்டது தப்பில்லை”. இவை எல்லாம் உங்கள் உற்ற நண்பர் திருவாளர். காளியப்பன் உதிர்த்த தத்துவார்த்த முத்துக்கள். இதற்கான நல்ல பதிலை மார்க்ஸ் கொடுத்திருக்கிறார், அதவே போதும் என நினைக்கிறேன்…

      “ஒரு மனிதன் தன் சொந்த உழைப்பின் பலனை அவனுடைய தனிப்பட்ட சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஒழிக்க விரும்புவதாகப் பழித்துரைக்கப்படுகிறோம். இந்தத் தனிப்பட்ட சொத்துதான் தனிநபர் சுதந்திரம், செயல்பாடு, தற்சார்பு ஆகியவை அனைத்துக்கும் அடிப்படை என்றும் சொல்லப்படுகிறது.

      பாடுபட்டுப் பெற்ற, சுயமாகச் சேர்த்த, சுயமாகச் சம்பாதித்த சொத்து! முதலாளித்துவச் சொத்து வடிவத்துக்கு முன்பிருந்த சொத்து வடிவமான சிறு கைவினைஞர், சிறு விவசாயி ஆகியோரின் சொத்தினையா குறிப்பிடுகிறீர்கள்? அதை ஒழிக்க வேண்டிய தேவை இல்லை. தொழில்துறை வளர்ச்சியானது அதைப் பெருமளவுக்கு ஏற்கெனவே அழித்து விட்டது, இன்றுவரை நாள்தோறும் தொடர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறது.
      அல்லது, நவீன கால முதலாளித்துவத் தனியார் சொத்தினைக் குறிப்பிடுகிறீர்களா?

      ஆனால், கூலியுழைப்பு தொழிலாளிக்கு ஏதேனும் சொத்தினை உருவாக்கியுள்ளதா? துளியும் கிடையாது. ” (கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை -மார்க்ஸ்).

      திரு. விழி! போதுமா இன்னும் வேண்டுமா? உங்களின் “புதிய” பார்வைக்கு, “புதிய சிந்தனைக்கு” காத்திருக்கிறேன், ஏமாற்றிவிடாதீர்கள்!

      • கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் சரியான பகுதியைக் கொடுத்து விளக்கியுள்ளீர்கள்.

        திரு. விழி!
        அது உலகைப்பற்றிய தெளிவைக்கொடுக்கும் ஆழமான & சுருக்கமான அறிக்கை. நீங்கள் (அறிக்கையைப் படிக்கவில்லையென்றால் படித்துப்பார்த்துவிட்டு) அறிக்கையில் எந்தப் பகுதியில் குறை / தவறு உள்ளது என்று எடுத்துச் சொன்னால் எல்லோரும் சிந்திக்கலாம்.

  10. வினவின் தொடர்பாளர் மகாலெட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்…தோழர் தமிழ்…உங்கள் வரிகளை படிக்கும் போது என் விழிகளிலும் ஈரம் கசியத்தான் செய்கிறது…என்ன செய்ய? ஒரு உண்மையான புரட்சிகர கம்யூனிசக்கட்சி எதிர்புரட்சி கும்பலை எதிர்கொள்ளாமல் எப்படி முன்னேறுவது…நாம் இந்த யதார்த்த அரசியல் நிகழ்வை புரிந்துகொண்டு முன்னிலும் வேகமாய் வினையாற்றுவோம்…

    • அவ்வளவு வியாக்கியானம் பேசுனீங்களே திரு.விழி நான் கேட்டதற்கு பதில் எங்கே???

      அறிவுரை எல்லாம் சும்மா பில்டப்பா?

      பேஸ்மட்டம் ரொம்ப வீக்கு போல?

      திரும்ப கமெண்ட் போட்டா “புதிய” பார்வை என்னவென்று சொல்லுங்க!!!

  11. விழி உங்களுக்கு நன்றி… நீங்கள் புதியபார்வை கேட்கப்போய்தான்.. தமிழ் அவர்கள் நிறைய அரசியல் கருத்துக்களை குறிப்பிட்டு விளக்கியுள்ளார்..பயனாக இருந்தது…விழி தமிழை விடாதீர்கள்…அவர் நிறைய பயனான கருத்துக்களை பதிவிடுவது உங்கள் கையில்தான் இருக்கிறது…

  12. விழி.. அனுதினமும் இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் வரும் உலக அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ப நாம் புதிய பார்வையோடும் மற்றும் புதிய சிந்தனையோடும் போராட்டங்களை வடிவமைத்து முன்னேறுவது மிக மிக அவசியம்தான்…ஆனால் அது நாம் முன்வைத்துப் போராடும் புதிய ஜனநாயகப் புரட்சி எனும் அரசியலை அடிப்படையாகக் கொண்டே நடக்கவேண்டும்…நூறு மாடிகள் கொண்ட பெரும் கட்டிடமாயினும் அதைத் தாங்கி நிற்க…”பேஸ்மண்ட் ” எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க