மைதிப்படை திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடிய ராஜராஜசோழன்  குளத்தில் குளித்துவிட்டு வெளியேவந்து தன்னுடைய ஜட்டியை கழட்டி போடுவார். அந்த ஜட்டியை துவைப்பதற்கு ஒரு போட்டியும் சண்டையும் நடக்கும். அதற்கு தன்னுடன் போட்டியிட்டு வந்த நபரிடம் மணிவண்ணன்” இத்தன நாளா நான் இருக்கேன் நீ என்னடா இப்ப வந்த ஆளு” என்பார்.

***

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. அது ஒரு முற்போக்கான விஷயம் என்பதும் வரவேற்கத்தக்கதும்தான். ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கைக்காக பல ஆண்டுகள் பல்வேறு அமைப்பினரும் தொடர்ச்சியாக போராடி வந்திருக்கிறார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய நக்சல்பாரி அமைப்புகள் அவற்றில் முதன்மையானவை. எமது அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவும், பெரியாரிய மற்றும் ஜனநாயக அமைப்புகள் கொடுத்த ஆதரவும் அறிஞர் பெருமக்கள் கொடுத்த ஆதரவும் சொல்லில் அடக்க முடியாது. குறிப்பாக மூத்த வழக்குரைஞர்கள் எத்தனையோ பேர் வழக்கு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உதவி செய்திருக்கிறார்கள்.

சாதி தீண்டாமை, மொழித் தீண்டாமை கெதிராக திருச்சி தில்லை கருவறை நுழைவுப் போராட்டம் முதல் எண்ணிலடங்கா போராட்டங்கள் நடைபெற்றன.

தில்லை தீட்சிதர் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பல தோழர்களின் மண்டை உடைபட்டன. பல தோழர்கள் போலீசு தடியடியால் பாதிக்கப்பட்டனர். பல நாட்கள் சிறைப்படுத்தப்பட்டனர். தொடர் போராட்டத்தின் விளைவாக வேறுவழியின்றி அன்றைய கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஆறுமுகசாமியை தமிழில் பாடுவதற்கு அனுமதி அளித்தது. இந்த வரலாறெல்லாம் இனி வேகமாக அழிக்கப்படும். மாறாக திமுக அரசு தானாகவே முன்வந்து ஆறுமுகசாமியை தில்லைக் கோயிலில் பாட அனுமதி அளித்ததாக மாற்றப்படலாம்.

படிக்க : சேலம் : மல்லி குந்தம் பகுதி பாமக-வின் சாதிவெறியால் ஒடுக்கப்படும் ஆசிரியர் !

பேருந்துகளிலும் ரயில்களிலும் தெருக்களிலும் சாதி தீண்டாமைக்கு எதிராகவும் மொழி தீண்டாமைக்கு எதிராகவும் பேசிப்பேசி தொண்டையில் ரத்தம் கசியும் அளவுக்கு தங்கள் உணர்வை வெளிப்படுத்தியவர்கள் ஏராளம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காக எத்தனை மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் பெரியாரிய – ஜனநாயக – புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்டிருக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் காரணம் திமுக என்பதைப்போல அறிக்கை வெளியிடுவதற்கும் கூட்டம் நடத்துவதற்கும் பெரிய துணிச்சல் இருக்கத்தான் வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டத்தையும் திமுகவின் காலடியில் வைத்து யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

***

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் நியமனம் செல்லும். ஆனால் ஆகம விதிப்படி இருக்கக்கூடிய கோயில்களில் தமிழ்நாடு அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தெரிவிப்பதற்கு முன்னோட்டமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கோயில்கள் ஆகம விதிப்படி இருக்கின்றன என்பதை கண்டறிய ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவில் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரையும் நியமித்தது உயர்நீதிமன்றம். இதற்கு எதிராக திமுக சார்பில் எவ்வித அறிக்கையும் வெளியாகவில்லை.

புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் இந்த தீர்ப்பை உச்சிமுகர்ந்து வரவேற்ற நிலையில், உண்மையைப் பார்த்தால் இந்தத் தீர்ப்பு இந்து அறநிலைத்துறையின் பணியை கேள்விக்குள்ளாக்குவதுடன் இனி தமிழன் மீதும் தமிழ் மொழியின் மீதும் நடத்தப்படும் தீண்டாமை சட்டபூர்வமாக்கப்படும் என்ற ஒரு இழிவான நிலையை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது.

எது நடந்தாலும் அதை திமுக அரசின் வெற்றியாகவே காட்டும் கி.வீரமணி உள்ளிட்டோர் ஒருபுறம் இருக்கிறார்கள். தமிழன் மீதும் தமிழினத்தின் மீதும் நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வேடிக்கை பார்த்துக்கொண்டு வாயை மூடி அமைதியாக இருந்தது தமிழ் நாட்டை ஆளக்கூடிய திமுகவின் அரசு.

இதற்கெதிராக தனிச்சட்டம் இயற்றுவதன் மூலம் பார்ப்பனியத்துக்கு எதிரான போரில் தானும் இருக்கிறேன் என்று காட்டுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.  அந்தத் தனிச் சட்டத்திற்கு வழக்கம்போல ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என்றால் அதை வைத்து தமிழ்நாடு மக்களிடம் மாபெரும் பிரச்சாரத்தை கொண்டு சென்று இந்தக் கோயில் தீண்டாமைக்கு எதிராக மாபெரும் எழுச்சியை உருவாக்கவும் முடியும்.

5 வருடம் ஆட்சி நடத்துவதே மிகப் பெரிய போராக இருக்கக்கூடிய இந்த சூழலில் மு.க.ஸ்டாலின் அதற்கு தயாராக இல்லை.

இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளில் அரசு பார்ப்பனியத்திற்கு எதிராக தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற உண்மை சுடும் வேளையில் இதுவரை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட எதிராக பேசத் தொடங்கினார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மானம் காற்றிலே பறக்கக் கூடாது என்றெண்ணி புதியதாக புத்தம் புதியதாக பலர் ஓடி வருகிறார்கள். அதில் நேற்று வரை புரட்சி கீதம் பாடி விட்டு திமுகவுடன் கூட்டணி கட்டுவதே புரட்சிகரப் பணி என்றும் அதற்காக செயல்படுவதே செயல்தந்திரம் என்றும் செயல்படுவோரின் பணி மிக முக்கியமானது.

அதிகாரத்தில் இருப்பவர்களின் உள்ளாடையை துவைக்க போட்டி போடுவது எப்போதும் நடக்கின்ற கலைதான். ஆனால் அந்த உள்ளாடையை துவைப்பதற்கு போட்டியாக வந்த நபரை பலிகொடுக்க எண்ணுவது என்பதுதான் மிக முக்கியமான விவகாரம்.

உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தோற்பதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும்தான் என்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். மு.க.ஸ்டாலினுக்கு சொல்லாமல் இதுவெல்லாம் நடந்ததுபோல ஒரு கதையாக நமக்கு சித்தரித்து படம் காட்டுகிறார். தனிப்பட்ட நபர்கள் தங்களுடைய சுயலாபத்துக்காக ஒட்டுமொத்த நிகழ் காலத்தையே திரிக்கிறார்கள்.இதற்கு எடுத்துக்காட்டு வாஞ்சிநாதன்.

பாசிசத்தை வீழ்த்தும் மு.க.ஸ்டாலின் மீது எந்த ஒரு தூசு பட்டாலும் ஓடோடி துடைப்பதற்கு பல பேர் இருந்தாலும் இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறார் அவர். மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் இது நடந்தது என்று சொல்வதன்மூலம் அவரை காப்பாற்ற வேண்டும் .அப்படி என்றால் யாரையாவது பலி கொடுக்க வேண்டும். திமுக ஜெயிக்க வேண்டுமென்று காவடி தூக்கிய முன்னாள் புரட்சியாளர்களுக்கு எல்லாம் சேகர் பாபுவின் செயல்பாடுகள் மிகுந்த எரிச்சலை தருகின்றன.

ஆவடியில் பசுமடம் கட்டுவது என்ற பெயரில் பசுவின் ஆசனவாய்க்கு தீபம் காட்டிய சேகர் பாபுவால் மானம் கெட்டுப் போனார்கள். மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

அதிலேயே முக்கியமானவர் மருதையன். ஒரு புரட்சிகர அமைப்பிலேயே 30 ஆண்டுகளுக்குமேல் இருந்த தன்னுடைய அனைத்து அனுபவங்களையும் திறமையையும் திமுகவுக்கு சொம்படிப்பதையே இலக்காகக் கொண்டு அதன்மூலம் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அவர் லட்சியம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அப்பட்டமாக திமுக அரசின் அராஜக நடவடிக்கைகளை எதிர்க்காமல், ஆதரவாக இருந்தார்.

மு.க.ஸ்டாலினின் புகழைக் காப்பாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே அவருடைய ரத்தநாளம் எல்லாம் ஊறிப்போய் இருக்கிற ஒரே சிந்தனை. கலைஞர் கருணாநிதியின் பூதவுடலை பார்ப்பதற்காக  துடித்ததை அவர் மட்டுமல்ல பலரும் அறிவர்.  எவ்வளவோ முயன்றும் மருதையனால் அருகில் சென்று பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அப்போது அவர் ஒரு புரட்சிகர அமைப்பிலேயே ஒரு தலைவராக இருந்தார். ஆனால் இப்போது திமுகவுக்கு சொம்படிக்கும் நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

ராமசுப்புவுக்குப் பிறகு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் முன்னாள் செயலாளர், தோழர் இடதுசாரி சிந்தனையாளர், சமூக செயற்பாட்டாளர் என்று பல்வேறு பெயர்களில் புதியது புதியதாக அறிமுகம் ஆகிக் கொண்டிருக்கும் மருதையன்.

தற்போது அவர் எடுத்து இருக்கிற ஒரு முக்கியமான வீழ்த்தப்பட வேண்டிய இலக்கு சேகர்பாபு. அவரை வீழ்த்திவிட்டு அந்த இடத்தில் யாரை வைக்க முடியும்?  ஏன் அவரே கூட அதற்கு விருப்பப்படலாம். அவருடைய ஸ்டாலின் மனது வைத்தால் எல்லாம் நடக்கும். ஆனால் அவர் மனது வைக்க வேண்டுமே?

***

திமுக கட்சியிலேயே பாரம்பரியமாக இருப்பவர்களுக்கு எந்த பதவியும் இல்லாமல் போய்விட்டது. அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் எல்லா பதவிகளையும் அதிகப்படியாக அனுபவித்து வருகின்ற காலம் இது. இது பலருக்கு எரிச்சலைத் தந்தாலும்,  மு.க.ஸ்டாலினுக்கு தன்னுடைய சொல்பேச்சு கேட்டு நடக்கின்ற நபர்கள்தான் தேவை.

அவர்கள்தான் தனக்கு நம்பிக்கையானவர்கள். அவர்களைத்தான் அவர் ஆட்சியின் பொறுப்பிலே அமர்த்தி இருக்கிறார்.

சேகர்பாபு போன்று எவ்விதமான திராவிட பண்பாடும்’ அடிப்படையும் இல்லாதவர்கள் எல்லாம் பதவி சுகத்தை காண்கிறார்களே! ஐயகோ எங்களுக்கும் பொறுக்கித் தின்ன ஏதாவது கொடுங்கள் இந்த ஏங்கிக் கிடக்கும் கூட்டத்திற்கு தலைமை கொடுக்க யாருமில்லை. அவ்வாறு யாராவது தலைமை தாங்க முயன்றால் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் திமுகவில் பதவி சுகம் காணாமல் பாதிக்கப்பட்டு போய் கிடக்கும் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க மருதையனும் வாஞ்சிநாதனும் கிளம்பியிருக்கிறார்கள்.

இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பான் என்பது போல, திமுகவை ஆதரிப்பதில் தொடங்கிய பயணம் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி இது. இந்த ஆட்சியிலே திராவிட ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு பேசுவோரும் உண்டு. பசுமாட்டின் ஆசனவாய்க்கு சூடம் காட்டுவோரும் உண்டு.

நாங்கள் இந்துக்களுக்கான ஆட்சி என்று மார்தட்டுவதன் மூலமாகத்தான் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதுதான் இப்போதைய ஆட்சி நீடித்து இருப்பதற்கான  வழிமுறை.

இப்படியெல்லாம் ஒரு வழிமுறையும் இல்லாததுபோல, ஏதோ மு.க.ஸ்டாலினுக்கு திராவிட ஆட்சியை நடத்திக் காட்ட வேண்டுமென்று விருப்பம் இருப்பது போலவும், அப்படிப்பட்ட ஸ்டாலினுக்கு தெரியாமல் சேகர்பாபுவும் தலைமை வழக்குரைஞரும் சதி செய்துவிட்டார்கள் என்று  அறிக்கையை இவர்கள் கொடுக்கிறார்கள் என்றால் இவர்களின் துணிச்சலையும் தைரியத்தையும் கண்டிப்பாக நாம் பாராட்டத்தான் வேண்டும்.

ஒட்டுமொத்தமாக இந்த அரசு கட்டமைப்பு காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலிடம் சிக்கி அதற்கேற்ற ஒரு பாசிச ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சூழலில் திமுக போன்ற கட்சிகள் தங்களுடைய கொள்கையை கைவிட்டு அப்பட்டமான பிழைப்புவாத செயல்களையே மேற்கொண்டு வருகின்றன. இதை அம்பலப்படுத்தி செயல்பட வேண்டிய நேரத்தில் இப்படிப்பட்ட பிழைப்புவாத கட்சிகளுக்கு சோப்பு போட்டுக்கொண்டு புரட்சி பணியைத் தொடரலாம் என்ற மருதையனின் சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படும் ராஜு – காளியப்பன் – வாஞ்சிநாதன் ஆகியோரின் அமைப்புகள் செயல்படுவதை பாருங்கள்.

சமீபத்திய கள்ளக்குறிச்சி விஷயம் வரை எங்கேயும் திமுக அரசை கொஞ்சமும் விமர்சனம் செய்யாமல் ஒரு புரட்சிகர’ அமைப்பை நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய அணிகளும் அதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதுவே மிகப்பெரிய சாதனை தானே.

கள்ளக்குறிச்சியில் போலீஸ் நடத்திய நர வேட்டைக்கு காரணம் அந்த மாவட்ட போலீசும் மாவட்ட நிர்வாகமும்தான். அதற்கும் திமுக அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இப்படியெல்லாம் சமூகத்தில் பேசிக்கொண்டு தெரிவதற்கு அவர்களுக்கு இருந்த துணிச்சல்தான் அடுத்த கட்டமாக சேகர்பாபுவை எப்படி தூக்குவது என்பதில் போய் முடிந்திருக்கிறது.

உண்மையைப் பேசினால், விமர்சனம் செய்தால் ஐக்கியம் முன்னணி ஆட்சியில் பங்கு கிடைக்காமல் போய்விடுமே என்ற ஏக்கம் இவர்களுடைய முகத்தில் எப்போதும் குடி கொண்டே இருக்கிறது. அதுதான் டாஸ்மாக் முதல் கள்ளக்குறிச்சி வரை அனைத்து பிரச்சினைகளிலும் இவர்களின் நிலைப்பாடாக அமைந்திருக்கிறது.

***

சந்தர்ப்பவாதிக்கு தத்துவம் மட்டுமல்ல; சுயமரியாதை சூடு சொரணையும் இல்லை என்பது எப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

திமுகவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிரிந்து போனவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள், துரத்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலினை காப்பாற்ற வேண்டும் என்பதல்ல. மு.க.ஸ்டாலினின் இருப்பைத்தக்க வைப்பதன் மூலம் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

படிக்க : அர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் ?

அதற்காக திமுகவிலேயே பதவி கிடைக்காத ஒரு கூட்டத்துக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்கிறார்கள். இது ஒரு முயற்சிதான். சேகர்பாபுவுக்கு இப்படிப்பட்ட பல்வேறு இடங்களிலிருந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஒருவேளை அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டால் அதன் மூலம் தி.மு.க.வில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று பகற்கனவு காண்கிறார்கள். இப்படிப்பட்ட பல்வேறு பார்ப்பன நரித் தந்திரங்கள் மூலம்  திமுகவை ஒரு உண்மையான பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

காங்கிரசுக்கு உள்ளே இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட முயன்றதுபோல இன்னும் தீராத பயணம்.

கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறதென அப்துல் கலாமே சொல்லிவிட்டார். ஆனால் பலியாவதற்கு சேகர்பாபுவும் பலி கொடுப்பதற்கு திமுக தலைமையும் தயாராக இருக்கிறதா? கனவுதானே காணப்போகிறோம் காசா? பணமா?

ஐக்கிய முன்னணி என்றால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாக பலம் பெற்று பாசிச சக்திகளை வீழ்த்த ஆளும் வர்க்க கட்சியோடு கூட்டணி அமைப்பது மட்டுமல்ல. அந்த ஆளும் வர்க்க கட்சியில் இருக்கிற கூடிய எல்லா பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து அதை காப்பாற்றுவதும்தான் என்ற ஒரு புதிய விளக்கம் கூட கொடுக்கப்படலாம். கேட்பதற்கு நாலு பேர் இருக்கும்பொழுது சொல்வதற்கு அவர்கள் ஒருபோதும் கூச்சப்பட போவதுமில்லை, தங்கள் பயணத்தை நிறுத்த போவதுமில்லை.

ஆம், இங்கேயும் சில நட்சத்திரங்கள் நகர்கின்றன.


தமிழ்

3 மறுமொழிகள்

  1. கட்டுரை அருமை.

    இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்கத் துணை போகும் திமுகவின் திராவிட மாடல் அரசியலையும், அதற்கு முட்டு கொடுத்து தாங்கிப் பிடிக்கும் திராவிடப் ‘புரட்சி’யாளர்களையும் அம்பலப்படுத்துகிறது கட்டுரை.

  2. ஒரு சிறப்பான விமர்சனம்.புலி தன் இரையைக் பிடிப்பது போல.தொடரட்டும்.வெல்வோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க