சேலம் : மல்லி குந்தம் பகுதி பாமக-வின் சாதிவெறியால் ஒடுக்கப்படும் ஆசிரியர் !
“கட்டடம் மட்டும்தான் அரசாங்கத்துடையது, உள்ளே இருப்பதெல்லாம் எங்களுடையது” என்று நேரடியாகவே சாதி ஆணவத்தோடு பேசுகிறார் அங்கு வந்திருந்த பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகன் செந்தில் என்பவர்.
சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிப்பகுதி மல்லி குந்தம். இப்பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாக வன்னியனூர், பள்ளக்காடு ஆகிய இடங்களில் பெரும்பான்மையாக வன்னியர்களும், அதற்கு அடுத்தபடியாக பட்டியல் சமூக மக்களும், குறிப்பிட்ட அளவில் மற்ற இடைநிலை சாதியினரும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பட்டியல் சமூகத்தில் இருந்து பலரும் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, அரசுத்துறைகளில் பொறுப்பு வகிப்பவர்களாக, ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
மல்லிகுந்தம் பஞ்சாயத்திற்குட்பட்டு வன்னியனூர், பள்ளக்காடு ஆகிய பகுதிகள் உள்ளன. மல்லிகுந்தத்திற்கு அருகிலுள்ள பஞ்சாயத்து பள்ளிப்பட்டி பகுதியாகும். இப்பஞ்சாயத்திற்குட்பட்டு நரியனூர் என்ற கிராமப் பகுதி உள்ளது. விவசாயப் பகுதியான இக்கிராமங்களில் ஆகப்பெரும்பான்மையாக வன்னிய சாதியைச் சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நிலங்களுக்கு விவசாயக் கூலி வேலைகளுக்கு பட்டியல் சமூக மக்கள் செல்கின்றனர்.
மேற்கண்ட சில ஊர்களில் இடைநிலைப்பள்ளிகள் இருந்தாலும், பெரும்பாலும் வன்னியனூரில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளியிலேயே வன்னிய சாதியைச் சார்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். வன்னியனூர் பள்ளியில் 95%-க்கும் மேலானவர்களாக வன்னிய சாதி மாணவர்களின் எண்ணிக்கை உள்ளது.
இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுவது என்னவெனில், வன்னியனூரைத் தவிர மற்ற ஊர்களில் குறிப்பாக பள்ளக்காட்டில் குறிப்பிட்ட அளவில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளிப்பட்டியில் உள்ள பள்ளியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குறிப்பிட்ட அளவில் படிக்கின்றனர். இதனால் அங்கு சேர்ப்பதை வன்னிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் தவிர்த்து விடுகின்றனர் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற மனிதத்தன்மைக்கு விரோதமான வேலைகளை முன்னெடுப்பதில் இப்பகுதியில் உள்ள பாமக-வைச் சேர்ந்த நபர்கள் முன்நிற்கின்றனர் என்று கூறுகின்றனர். இதற்கு வன்னியனூர் பள்ளியின் தலைமையாசிரியர் சிவகுமார் உடந்தையாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில்தான் 2019-ல் வன்னியனூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு மல்லிகுந்தம் ஆதி திராவிடர் பகுதியைச் சார்ந்த ஆசிரியர் இரவீந்திரநாத் பணிமாற்றலாகி வருகிறார். இவர் அறிவியல் பாடத்திற்கு ஆசிரியராக இருக்கிறார். வன்னியனூர் பள்ளியில் கணிதப் பாடத்திற்கு ஆசிரியர் இல்லாத நிலையில் மாணவர் நலன் கருதி கூடுதலாக கணிதப்பாடம் பயிற்றுவித்து வந்துள்ளார். வன்னியனூர் பள்ளியில் பணிக்கு வந்தபிறகு இவரது பயிற்சியில் அப்பள்ளி மாணவிகள் தனித்திறன் சார்ந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுவதற்கும் முன்முயற்சி எடுத்துள்ளார். அதேபோல் N.M.S (National Merit Scholarship) தேர்வில் மாணவி ஒருவர் தேர்வாகியுள்ளார்.
இப்படி பொதுநோக்கத்தில் ஆசிரியர் இரவீந்திரநாத் செயல்பட்டு வந்தாலும், அவர் அங்கு பணிக்கு வந்ததில் இருந்தே சாதிவெறியர்கள் குறிப்பாக பாமக-வைச் சார்ந்த சில நபர்கள் தொடர்ச்சியாக ஆசிரியர் இரவீந்திரநாத் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வந்துள்ளனர். ”சாதிபெயர் சொன்னார், ஊர்பெயர் சொன்னார், குழந்தைகளிடம் தேவையின்றி பேசி வருகிறார்” என பள்ளித் தலைமையாசிரியரிடம் பாமக நபர்கள் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுவதும், தலைமையாசிரியர் ஆசிரியர் இரவீந்திரநாத்திடம் கேட்பதும் என்பது தொடர்ந்து நடக்கிறது. தன்மீதான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து தலைமையாசியரிடம் தொடர்ந்து போராடி வந்துள்ளார் ஆசிரியர் இரவீந்திரநாத்.
தொடர்ந்து அப்பகுதி பாமக-வைச் சார்ந்த சாதிவெறியர்கள் குற்றச்சாட்டுகளை கூறிவந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார். விசாரணை செய்வதற்கு அப்பள்ளியின் பெண் ஆசிரியர்கள் குழுவொன்றை அமைத்துள்ளார். பெண் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். அதில், ஆசிரியர் இரவீந்திரநாத் தவறாக எதுவும் பேசவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அவர் மீது கூறப்பட்டது பொய்க்குற்றச்சாட்டு என்பதும் அம்பலமாகியுள்ளது. விசாரணையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பல்வேறு சாதிகளைச் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு சமீபத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் வன்னியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆசிரியர் இரவீந்திரநாத்தை அப்பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கின்றனர். தலைமையாசிரியரும் சேர்ந்துதான் தேர்ந்தெடுக்கிறார். இதை உடனே அங்கிருந்த கருப்புச்செட்டி என்ற நபர் எதிர்க்கிறார். வன்னிய சாதியைச் சார்ந்தவரைத்தான் ஆசிரியர் பிரதிநிதியாக போட வேண்டும் என்று கூறுகிறார். அவரைத் தொடர்ந்து சில பெற்றோர்களும் எதிர்க்கின்றனர். இதனால் அத்தோடு குழு கூட்டம் முடிக்கப்பட்டது.
இந்த கருப்புச் செட்டி என்பவர்தான் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை ஒருங்கிணைக்கிறார்.
பள்ளி மேலாண்மைக் குழுவில் அனைத்து சாதியைச் சார்ந்த பெற்றோர்களுக்கும் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு குறிப்பிட்ட ஒரு சாதியைச் சார்ந்த பெற்றோர்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் வழங்குவது என்பது தொடர்ந்து நடந்து வருவதாக கூறுகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வன்னியனூர் அரசு நடுநிலைப் பள்ளிக் கூடத்தில் படிக்கும் சில பெண் மாணவிகளை தனியாக அழைத்துச் சென்று கருப்புச் செட்டி பேசியுள்ளார். அப்போது “அறிவியல் சார் எப்படியெல்லாம் திட்டுகிறார், பேசுகிறார் என்று வெளியில் சொல்ல வேண்டும்”என்று அம்மாணவிகளிடம் கூறியுள்ளார். இதைப் பார்த்த தனியார் பள்ளி ஆசிரியர் (இவர் இரவீந்திரநாத்தின் நண்பர், வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்) கருப்புச் செட்டியை கண்டித்துள்ளார். அப்போது தலைமையாசிரியர்தான் இவ்வாறு செய்யச் சொன்னார் என்று கருப்புச் செட்டி கூறியுள்ளார்.
இதேபோல், வார்டு கவுன்சிலராக உள்ள சிவகுமார் என்பவரும் ஆண்டிக்கவுண்டனூரை சார்ந்த பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் இரவீந்திரநாத்தைப் பற்றி அவதூறாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர் இதுபற்றி தலைமையாசிரியரிடம் இரவீந்திரநாத் கேட்டபோது, தலைமையாசிரியர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
“பள்ளியின் எல்லா நிகழ்வுகளிலும் கருப்புச் செட்டியும், சிவகுமாரும் பங்கெடுக்கிறார்கள், எனவே நீங்களே இருவரிடமும் கேளுங்கள்”என்று தலைமையாசிரியரிடம் இரவீந்திரநாத் கூறியுள்ளார்.
தலைமையாசிரியர் கருப்புச் செட்டியிடம் போன் செய்து கேட்டபோது, “பேசியது உண்மைதான், ஆனால் தலைமையாசிரியர் கேட்கச் சொன்னார் என்று கூறவில்லை”என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
ஆனால், இன்னொரு பக்கம் சில மாதங்களுக்கு முன்பாகவே ”இரவீந்திரநாத்தை Transfer(பணியிடமாற்றம்) செய்வதற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்துவிட்டதாக” தலைமையாசிரியர் கூறியதாக தலைமையாசிரியரின் நண்பர் ஒருவர் பேசியதை இரவீந்திரநாத்தின் நண்பர்கள் காதுபட கேட்டுள்ளனர்.
இச்சூழ்நிலையில் ஜூனில் பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. வன்னியனூர் பள்ளி தொடங்கியதில் இருந்து இதுவரை பட்டியல் சமூக மாணவர்கள் அங்கு படிக்க முன்வராமல் இருந்துள்ளனர். இந்த வருடம்தான் இருவர் சேர்க்கைக்காக வருகிறார்கள். அவ்வாறு வந்த இரு மாணவர்களிடமும் தலைமையாசிரியர் சிவக்குமார் “மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அட்மிசன் போடக்கூடாது என வட்டாரக் கல்வி அலுவலர் கூறியுள்ளார்”என்று கூறி பள்ளியில் சேர்க்க மறுத்துள்ளார்.
உண்மையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயில வந்தால் மாற்றுச் சான்றிதழை காரணம்காட்டி சேர்க்கையை மறுக்கக் கூடாது. வயதுக்கு ஏற்றாற்போல் அனுமதிக்க வேண்டும் என்று விதிகள் சொல்கின்றன. ஆனால், தலைமையாசிரியரின் நடைமுறையோ பார்ப்பனிய வருணாசிரம சட்டத்தை அமல்படுத்துகிறது.
இந்த விசயம் ஆசிரியர் இரவீந்திரநாத் கவனத்துக்கு வந்தவுடன் தலைமையாசிரியரிடம் கேட்டுள்ளார். அப்போது வட்டாரக் கல்வி அலுவலர் சேர்க்கை தொடர்பாக அனுப்பியதாக ஒரு செய்தியை இரவீந்திரநாத்துக்கு தலைமையாசிரியர் அனுப்பியுள்ளார். அதன்பின்பு வட்டாரக் கல்வி அலுவலரிடம் இரவீந்திரநாத் தொடர்பு கொண்டு “மாணவர் சேர்க்கைக்கு மாற்றுச் சான்றிதழ் கேட்டு கட்டாயப்படுத்தலாமா?” என்று கேட்டுள்ளார். ”அவ்வாறு கட்டாயப்படுத்தக் கூடாது”என்று வட்டாரக் கல்வி அலுவலர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டு பட்டியல் சமூக மாணவர்களையும் வன்னியனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்க்கக் கோரி தலைமையாசிரியிடம் வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்ட பின்பே அட்மிசன் போடப்பட்டது.
அதற்குப் பிறகு காசிநாதன் என்பவர் தலைமையாசிரியரை வந்து சந்திக்கிறார். இவர் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலும், பள்ளி மேலாண்மைக் குழுவிலும் இருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, “காலனியில் இருந்து ஆசிரியரை அனுமதிப்பதே பெரிய விசயம், மாணவர்களையும் வேறு சேர்க்கிறார்”என்று ஆசிரியர் இரவீந்திரநாத்தின் மீது சாதி ரீதியாக வெறுப்பு விதைக்கப்படுகிறது. இப்பிரச்சாரம் பிரதானமாக கருப்புச் செட்டி, காசிநாதன், வார்டு கவுன்சிலர் சிவகுமார் ஆகிய நபர்களால் முன்னின்று நடத்தப்படுகிறது.
அதேபோல், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவராக இருந்த வேலாயுதம் என்பவரும் குடிபோதையில் ஆசிரியர் இரவீந்திரநாத்தை மாணவர் சேர்க்கை குறித்த விசயத்துக்காக பேச வேண்டும் என்று வருகிறார். அவரை தலைமையாசிரியர் திருப்பி அனுப்புகிறார்.
இந்நிலையில் ஜூன் 16 அன்று 8-ம் வகுப்பு பாடம் எடுக்கும்போது, வகுப்பை தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொண்ட ஒரு மாணவனை லேசாகத் தலையில் தட்டி, ”அவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது”என்று ஆசிரியர் இரவீந்திரநாத் கண்டிக்கிறார்.
அடுத்தநாள் பெற்றோர்கள் 40 பேர் வரை பள்ளிக்கு வருகின்றனர். சம்பந்தப்பட்ட மாணவனை கூட்டிச் செல்கிறார்கள். வெளியில் போவதற்கு முன் தலைமையாசிரியரை பார்த்துப் பேசிவிட்டு செல்கிறார்கள். பள்ளி வாயிலுக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். பத்திரிகை நிருபர்கள் 10 பேர் வருகிறார்கள். உதவி ஆய்வாளர்கள் 3 பேர், பெண் போலீசு 3 பேர், ஆண் போலீசு 3 பேர் வந்து நிற்கிறார்கள். ”கைது செய்! கைது செய்! ஆசிரியர் இரவீந்திரநாத்தை கைது செய்!” என்று வந்திருந்த பெற்றோர்கள் முழக்கமிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாணவனின் அம்மா “ஆசிரியர் இரவீந்திரநாத் அடித்ததில் தன் பையனுக்கு காது, மூக்கு, மார்பு ஆகிய பகுதிகளில் இரத்தம் வந்ததாக”பேட்டி கொடுக்கிறார்.
ஆசிரியர் இரவீந்திரநாத்தின் சாதியைச் சொல்லி அசிங்கமாகத் திட்டியும், அவரின் பாட்டி பெயரை கூறி “இவ பேரனெல்லாம் பள்ளிக்கூடம் வரலாமா”என்று மனிதத்தன்மை இல்லாமல் சாதியக் குரூரத்தோடு ஆர்ப்பாட்டத்தில் இருந்தவர்கள் பேசியுள்ளனர்.
ஆசிரியர் இரவீந்திரநாத் தலைமையாசிரியரிடம் சென்று, “சிசிடிவி ஆய்வு மேற்கொள்ளுங்கள், வகுப்பு குழந்தைகளிடம் விசாரணை மேற்கொள்ளுங்கள், அதில் தவறு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுங்கள்”என்று கூறுகிறார். ஆனால் தலைமையாசிரியர் அதைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. மேலும், ஆசிரியர் இரவீந்திரநாத் பெண் பிள்ளைகளை ஆபாசமாகப் பேசினார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டையும் தலைமையாசிரியர் மறுத்துப் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
அங்கு ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து தலைமையாசிரியர் “உங்களால்தான் பள்ளி முன்னேறியுள்ளது, உங்கள் சமூகத்திற்கான பள்ளி”என்று சாதிய கூறியுள்ளார். இது வீடியோ ஆதாரமாக உள்ளது.
“கட்டடம் மட்டும்தான் அரசாங்கத்துடையது, உள்ளே இருப்பதெல்லாம் எங்களுடையது” என்று நேரடியாகவே சாதி ஆணவத்தோடு பேசுகிறார் அங்கு வந்திருந்த பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகன் செந்தில் என்பவர்.
கல்வித்துறை அலுவலரும் வராமல், ஆசிரியர் இரவீந்திரநாத்திடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் மேச்சேரி டி.எஸ்.பி விஜயகுமார் அங்கு வந்து “ஆசிரியர் இரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுப்பதாக”கூறுகிறார். ஆனால், அவரை சாதி வன்மத்தோடு இழிவாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இதெல்லாம் எந்த சட்டத்தில் வருகிறது என்று தெரியவில்லை.
போலீசு ஆசிரியர் இரவீந்திரநாத்தை வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. ஆசிரியர் இரவீந்திரநாத்திடம் என்ன நடந்தது என்று எழுதச் சொல்லி கேட்கிறார்கள். எழுதுவதற்குள்ளேயே விருதாசம்பட்டிக்கு அவரை மாற்றல் செய்வதாக ஆணை வருகிறது. சாதிவெறியர்களுக்கு ஆதரவாக அரசு நிர்வாகம் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்று. ஆனால், அந்த ஆணையை இரவீந்திரநாத் வாங்க மறுக்கிறார்.
மாற்றல் ஆணையைப் பெற்றுக் கொள்வது என்பது தன்மீதான பொய்யான குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதற்கு சமமாகிவிடும் என்று உணர்ந்து வேறுவழியின்றி மருத்துவ விடுப்பு எடுக்கிறார்.
7 நாட்களுக்குப் பிறகு பள்ளியில் சி.சி.டிவி ஆய்வு மேற்கொள்கிறார்கள். அதில் இரவீந்திரநாத்தால் அடித்து காது, மூக்கு, நெஞ்சில் இரத்தம் வந்ததாக சொல்லப்பட்ட மாணவன் குறிப்பிட்ட அந்த நேரத்தில் இயல்பாக இருப்பது தெரிய வருகிறது.
ஆசிரியர் இரவீந்திரநாத் மீது பா.ம.க சாதிவெறியர்கள் இவ்வளவு வன்மம் காட்டுவதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. பஞ்சாயத்து விசயங்களில், கிராம சபைக் கூட்டங்களில் தனது பகுதி மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கிறார். விடாப்பிடியாக போராடுகிறார் என்பதுதான் அது.
கிராம அளவில் தனிநபர் வாழ்க்கைத் தர குறியீட்டை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அரசாணை நிலை எண்: 23-ன் படி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II-ன் அடிப்படையில் ஊராட்சிகளில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் 30% ஒதுக்க வேண்டும் என்பது விதி.
இந்த திட்டத்தின் அடிப்படையில் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் ரூ.77 இலட்சத்தில் ரூ.23 இலட்சத்தை மல்லி குந்தம் பட்டியல் இன மக்களின் பகுதி வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் ஊராட்சி நிர்வாகம் ஏமாற்றுவதை எதிர்த்து ஆசிரியர் இரவீந்திரநாத் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அளிக்கிறார். இதனால் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைக் காரணமாக வைத்து தங்களது தவறை மறைத்துக் கொண்டு இரவீந்திரநாத்துக்கு எதிராக வன்னிய சாதி உழைக்கும் மக்களை திருப்பிவிடும் வேலையை ஊராட்சி நிர்வாகத்தில் இருக்கும் பா.ம.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மல்லி குந்தத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் 8-வது வார்டு பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்படாமல் இருப்பதை நேரில் பார்க்கும்போது உணர முடிகிறது.
இந்தப் பிரச்சினையில் ஆசிரியர் இரவீந்திரநாத்துக்கு ஆதரவாக ஜூன் 27 அன்று தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்களும், ஜனநாயக சக்திகளும் அறிவித்திருந்தனர். போலீசு அனுமதி மறுத்த நிலையில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஆசிரியர் இரவீந்திரநாத்தின் பக்கம் நியாயம் இருப்பது வெளிப்படையாக தெரிந்தாலும், சாதிய வன்மத்தோடு அவர் ஒடுக்கப்படுவதை உணர்ந்தாலும் போலீசுத்துறையோ, கல்வி அதிகாரிகளோ அவர் பக்கம் நின்று பா.ம.க சாதிவெறியர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. அந்த அளவுக்கு சாதிவெறியர்களுக்கு அடிபணிந்து போவதாகவே அதிகார வர்க்கத்தின் செயல்பாடு உள்ளது. பா.ம.க-வைச் சார்ந்த குறிப்பிட்ட சில நபர்களும், வேறு சிலரும் இன்னமும் இரவீந்திரநாத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
என்னதான் பா.ம.க சாதிவெறியைத் தூண்டி குளிர்காய நினைத்தாலும், வன்னிய சாதியைச் சார்ந்த இரவீந்திரநாத்தின் நண்பர்கள், ஜனநாயக சக்திகள் அவர் தரப்பு நியாயத்தை உணர்கின்றனர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் செய்கின்றனர்.
தன்மீதான நியாயத்தை உணர்த்தவும், தலைமையாசிரியர் மற்றும் பா.ம.க-வைச் சார்ந்த சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்வித்துறை அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் என்று அலைந்து கொண்டிருக்கிறார் ஆசிரியர் இரவீந்திரநாத். மாணவர்களுக்கு அறிவைப் புகட்ட வேண்டிய நேரத்தை தன்மீதான பொய்யான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக ஒதுக்க வேண்டிய அவலம். அப்பகுதி ஜனநாயக சக்திகளின், மக்களின் உதவியுடன் தொடர்ந்து போராடுகிறார். அவரின் கோபம் வன்னிய சாதி உழைக்கும் மக்கள் மீதல்ல. சாதிவெறியைத் தூண்டும் நபர்கள் மீதே. அதே பள்ளியில் தடையின்றி பணிபுரிய காலம் அனுமதித்தால் சமூகத்திற்கு சிறந்த மாணவர்களை உருவாக்க இன்னும் கூடுதலாக போராடுவார். ஆனால், உண்மையை வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது என்பதே யதார்த்தம்.
நியாயம் கிடைக்கும் என்று ஒடுக்கப்படும், உழைக்கும் மக்கள் நம்பும் இடங்களோ இறுகிப்போய் கிடக்கின்றன. என்னவாயினும் போராடித்தானே ஆக வேண்டும். ஏனென்றால் இது அவருக்கான போராட்டம் மட்டுமல்ல…
பா.ம.க உள்ளிட்ட சாதிவெறிக் கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காக தங்களை பயன்படுத்தி வருவதை பெரும்பாலான வன்னிய சாதி உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனென்றால் அன்றாட வாழ்க்கையின் யதார்த்தம் அவர்களை சுட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு எந்தவகையிலும் சாதிவெறியர்கள் துணைநிற்க மாட்டார்கள் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகிறார்கள்.
பா.ம.க உள்ளிட்ட சாதிவெறிக் கட்சிகள் அந்தந்த சாதி மக்களாலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும். தடை செய்யப்பட வேண்டும் என்பதே சாதியக் கொடுமைகளை முடிவுக்குக கொண்டு வருவதற்கான தொடக்கப் படிக்கல்லாகும்.
கட்டுரை ஆழமான விவரங்களோடு உள்ளது. ஆனால் விவரங்களை சாரமாக்க;கடைசியில்.புல்லட் பாயிண்டுகளாக்கி மைய கருத்துக்கு வாசகனை உள்ளிழுக்க முயல வேண்டும்.