சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ளது வடகுமரை கிராமம். சேலத்திலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சார்வாய் என்ற ஊரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இக்கிராமம்.
விவசாயம் செழிப்பாக இருக்கும் இந்தப் பகுதியில் காணப்படும் பச்சை போர்த்திய வயல்வெளிகளை நம்மால் ஏனோ ரசிக்க முடியவில்லை. அதற்கு இந்திய கிராமங்களில் வயல்வெளிகளின் அழகுக்கு முன்னால் சீழ்பிடித்துப்போய் நாறும் சாதியின் குரூரத்தை முதலில் நாம் கடந்தாக வேண்டும். அதற்கு வடகுமரை கிராமமும் விதிவிலக்கல்ல.
ஊரின் முகப்புப் பகுதியில் ஆதிக்கசாதிகளும் (நாடார், கோனார், பிள்ளை, பண்டாரம், உடையார்) உள்பகுதியில் தலித் மக்களும் வசித்து வருகின்றனர். ஆதிக்க சாதிகள் 400 குடும்பங்கள் வரையிலும், தலித் மக்கள் 200 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். ஆதிக்கசாதிகளைப் பொறுத்தவரை விவசாயம், வியாபாரம், லாரி என்ற வகையில் சற்று பொருளாதார வலிமையுள்ளவர்களாக உள்ளனர்.
தலித் மக்கள் குறிப்பிட்ட அளவு நிலங்கள் வைத்துள்ளனர். விவசாயக் கூலிகளாகவும் வேலை செய்து வருகின்றனர். இந்த தலைமுறை இளைஞர்கள் பெரும்பாலும் படித்துவிட்டு போட்டித்தேர்வுகளில் வென்று அரசு வேலைகளிலும், பெருநகரங்களில் தனியார் வேலைகளுக்கும் செல்கின்றனர். ஊரில் பள்ளி சிறார்களுக்கு அறம் பயிலகம் என்ற பெயரில் படித்த இளைஞர்களை ஒருங்கிணைத்து பாடம் சொல்லிக் கொடுத்தும் வந்துள்ளனர்.
இக்கிராமத்தின் ஆதிக்கசாதிகள் வசிக்கும் பகுதியில் உள்ளது காளஹஸ்தீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில்கள். 80 வருடங்களுக்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்ட இக்கோயில்களில் காலங்காலமாக ஆதிக்கசாதிகளே வழிபாடு நடத்தியும், நிர்வாகம் செய்தும் வருகின்றனர். இக்கோயில்களில் தலித் மக்களுக்கு அனுமதியில்லை. ஆதிக்கசாதிகள் கட்டி வழிபட்டு வரும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத ’நமது சுதந்திர, நாகரிக தேசத்தின்’ எல்லா கிராமப்புறங்களில் உள்ள கோயில்களிலும் இந்தத் தீண்டாமை இயல்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது நாம் அறிந்த அவலமான உண்மை.
படிக்க :
குறிஞ்சாங்குளம் படுகொலை : சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு !
வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி !
ஆனால் 1974-லேயே வடகுமரையில் உள்ள இரண்டு கோயில்களும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இந்த விபரம் தலித் மக்களுக்கு தெரியவில்லை. அப்போதே அரசு இதை ஏன் தெரியப்படுத்தவில்லை என்ற முக்கியமான கேள்வி நமக்கு தொக்கி நிற்கிறது. தலித் மக்கள் தங்களது திருமண நிகழ்வுகளை ஆரக்கள்ளூர், தேவியாக்குறிச்சி, வீரகனூர் போன்ற வெளிப்பகுதியில் உள்ள சிவன் கோயில்களுக்கு சென்றுதான் நடத்தி வந்துள்ளனர்.
பல மாதங்களுக்கு முன்பு தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சாதியத்தின் குரூரத்தை அறியாத சிறுமிகள் காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து ஆதிக்கசாதியைச் சார்ந்த நபர்கள் ’பறைச்சியெல்லாம் இங்கு வரக்கூடாது’ என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். ’இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க?’ என்று மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டு பேசும் ’அறிவாளிகள்’ இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
பார்ப்பன ஆதிக்கத்தையும், பார்ப்பனர்களால் தமிழகக் கோயில்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தீண்டாமையும் எந்த பாதிப்பையும், இழிவையும் சூத்திர ஆதிக்க சாதியினருக்கு ஏற்படுத்துவதில்லை. தலித் மக்கள் எனும்போது அவர்களிடத்தில் தங்கள் சாதி ஆதிக்கத்தை நிறுவிக் கொள்ள முனைகின்றனர். நடந்த சம்பவத்தை அறம் பயிலகத்தில் இளைஞர்களிடம் சிறுமிகள் கூறியுள்ளனர்.
அதன்பிறகு இதுகுறித்து ஆத்தூரில் வெள்ளப்பிள்ளையார் கோயிலில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் இக்கோயில்களைப் பற்றி இளைஞர்கள் விசாரித்த போதுதான் 1974-லேயே இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட விசயம் தெரிய வந்துள்ளது.
உடனடியாக 19.08.2021 அன்று ஊர்ப்பெரியவர்களும், இளைஞர்களும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட காளகஸ்தீஸ்வரர் ஆலயம் மற்றும் வரதராஜ பெருமாள் ஆலயங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடவும், திருமணம் போன்ற சுபநிகழ்வுகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கக் கோரி தலைவாசல் போலீசு நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அப்போது பகுதியில் இருந்து வந்த இளைஞர்களின் பெயர், வயது, அப்பா பெயர் உள்ளிட்ட விவரங்களை மறைமுகமாக மிரட்டும் வகையில் போலீசு வாங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அன்புச்செழியன் தலைமையில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் (20.08.2021) கலந்து கொண்ட ஆதிக்கசாதி தரப்பினர் தலித் மக்களின் கோரிக்கையை ஒத்துக்கொள்வதாகவும், தங்கள் ஊரில் மக்களிடம் பேசி அவர்களையும் ஏற்றுக்கொள்ளச் செய்ய ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் வட்டாட்சியர் அனுமதித்துள்ளார்.
இப்படிப் பேசிச் சென்றுவிட்டு அடுத்த நாள் (21.8.21) ஆதிக்கசாதியினர் தரப்பு ஆட்கள் தங்களது கடைகள் அனைத்தையும் அடைத்து தலித் மக்களின் அன்றாட தேவைகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதன் மூலம் சாதிய அடக்குமுறையை அரங்கேற்றியுள்ளனர்.
மேலும், தலித் மக்களின் நிலங்களுக்கு செல்லும் பாதையை, மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் பாதையை குழிவெட்டியும், வேலி போட்டும் மறித்து அடக்குமுறையை ஏவியுள்ளனர். அரசு தரப்பில் வேலியை அகற்ற வந்த JCB-யை வரவிடாமல் தடுத்துள்ளனர். இவ்வளவு தூரம் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டவர்கள் மீது அதிகார வர்க்கமோ கடைசி வரை மென்மையானப் போக்கைத்தான் கடைப்பிடித்துள்ளது.
இது குறித்து PCR வழக்கு பதிவு செய்யக்கோரி ஆகஸ்டு 27 அன்று தலித் மக்கள் புகார் கொடுத்தும் போலீசு CSR மட்டுமே போட்டுள்ளது. FIR பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட தலித் மக்கள் ஏதேனும் நடவடிக்கையில் இறங்கினால் கேள்விகளை அடுக்கி நிலைகுலைய வைக்கும் அதிகார வர்க்கம், அடக்குமுறையை ஏவும் தரப்பை கண்டு கொள்வதில்லை என்பதே நடைமுறை உண்மையாக உள்ளது. அதன் பிறகும் வட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளில் ஆதிக்கசாதி தரப்பினர் கலந்து கொள்ளாமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.
செப்டம்பர் 21, 2021 அன்று நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தலித் மக்கள் முறையாக கலந்து கொண்டுள்ளனர். ஆதிக்கசாதி தரப்பில் யாரும் வரவில்லை. அன்று மாலை 6 மணி வரை காத்திருந்து விட்டு தலித் மக்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
அதன்பிறகு ஆர்டிஓ தலைமையில் நடத்தப்பட்ட மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளிலும் இதேபோல ஆதிக்கசாதியினர் தரப்பு காலம் தாழ்த்தி உரிய ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிக்கும் வேலையை செய்து வந்துள்ளது.
போராட்டம் நடத்தாமல் இப்பிரச்சினை அடுத்தக் கட்டத்திற்கு நகராது என்பதை உணர்ந்த தலித் மக்கள் சுவரொட்டிகள் மூலம் கோவில் நுழைவு போராட்ட அறிவிப்பை வெளியிடுகின்றனர். அதன்பிறகுதான் அரசு தரப்பு செயல்பாடுகளில் இறங்குகிறது.
அதன்பிறகு மீண்டும் ஆர்டிஓ அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு தலித் மக்கள் அழைக்கப்படுகின்றனர். ஆர்டிஓ சா.சரண்யா மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி ஆகிய இருவரும் ஆலய நுழைவுக்கு தலித் மக்களின் சட்டப்பூர்வமான உரிமையைக் குறிப்பிட்டு அனுமதிக் கடிதம் அளிக்கின்றனர். டிசம்பர் 15, 2021-ல் தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்யலாம் எனவும், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் அளித்துள்ள கடிதத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து டிசம்பர் 14 அன்று வடகுமரை கிராமத்தில் போலீசு குவிக்கப்படுகிறது.
இந்து அறநிலையத்துறையின் சார்பில் பெயர்ப்பலகை நட வந்ததை ஆதிக்கசாதியினர் தரப்பு தடுத்து நிறுத்தியுள்ளது. இவ்விசயத்தை முன்வைத்து கலவர சூழ்நிலையை உருவாக்க ஆதிக்கசாதி தரப்பு நபர்கள் தயாராகவே இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட தலித் மக்களின் உரிமையை சட்டப்படி நிலைநாட்டும் வேலையை செய்ய வேண்டிய போலீசுத்துறையும், இந்து அறநிலையத்துறையும் ஆதிக்கசாதி தரப்பினரிடம் சமரசமாகவே நடந்து கொண்டுள்ளனர்.
டிசம்பர் 15, 2021 அன்று காலை 9 மணிக்கு கோவில் நுழைவுக்கு அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசுத்துறையும் கோயிலில் உள்ள பொருட்களை சரிபார்க்கிறோம் என்று கூறி மதியம் 2 மணி வரை மக்களை இழுத்தடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தலித் மக்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றி கயிறு போட்டு மக்களை மிரட்டும் வகையில் போலீசுத்துறை குவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபினவ், டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் ஊருக்குள் வந்துள்ளனர்.
ஆதிக்க சாதியினர் தரப்பில் தங்களுக்கு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில் இருக்கும் விசயம் தெரியாது என கூறியுள்ளனர். கோயில் இருக்கும் நிலம் தங்களுடையது என்று காரணம் கூறி உயர்நீதிமன்றத்தில் STATUS CO போட்டுள்ளார்கள் எனவும் தற்போது யாரும் கோயிலுக்குள் நுழையக் கூடாது எனவும் எஸ்பி ஸ்ரீஅபினவ் தலித் மக்களிடம் கூறியுள்ளார்.
இதில் முக்கிய விசயம் என்னவென்றால், கோயில் கட்டுவதற்கான நன்கொடையை அனைத்து தரப்பினரிடமும் (தலித் மக்கள் உட்பட) பெற்றுத்தான் கட்டப்பட்டது என்ற உண்மையை ஆதிக்கசாதி தரப்பினரே ஒத்துக் கொண்டுள்ளார்கள் என்பதுதான். இது வழக்கு தொடர்பான ஆவணத்திலும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட போலீசுத்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், வருவாய் கோட்டாட்சியர் சின்னப்பொண்ணு, தெரியாமல் செய்துவிட்டார்” என்று கூறியுள்ளார். டிசம்பர் 14, 2021 வரை ஆதிக்கசாதி தரப்பு எந்த ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் போகாத நிலையில், டிசம்பர் 15, 2021 அன்று STATUS CO போட்டுள்ளார்கள் என்றால் அதிகாரவர்க்கத்தின் துணையில்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது. மேலும் தற்போதைய வட்டாட்சியர் சுமதி தங்களை நம்ப வைத்து துரோகம் செய்து விட்டதாக மக்கள் கருதுகின்றனர்.
அதேசமயம் வழக்கு தள்ளுபடியாகும் என்று தலித் மக்களிடம் சேலம் போலீசுத்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் அப்போதைக்கு பிரச்சினையை ஆறப்போடும் நோக்கில் பேசியுள்ளார். ஆனால், உண்மையில் நடப்பது என்னவென்றால் ஆதிக்கசாதி தரப்பு வழக்கு விசயத்திலும் முறையாக ஆஜராகாமல் இழுத்தடிக்கும் வேலையை செய்து வருவதாகத்தான் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தலித் பெண்கள் ஆதிக்கசாதியினர் பகுதிக்கு செல்லும்போது ஆபாசமாகப் பேசுவதும் நடந்துள்ளது. இவை எதற்கும் போலீசுத்துறையிடம் நடவடிக்கை இல்லை.
இன்னொரு பக்கம் முனைப்பாக வழக்கை நடத்த வேண்டிய இந்து அறநிலையத்துறையோ பாதிக்கப்பட்ட மக்களிடம் வழக்கின் நிலை என்ன என்பது குறித்து கூட முறையாகத் தெரிவிக்கவில்லை என்கின்றனர். வழக்கின் நிலை குறித்து Online-லும் எந்த தகவலும் இல்லை என்று கூறுகின்றனர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் முறையிட்டும் முறையான விபரம் ஏதும் இல்லை.
ஊர்ப் பெரியவர்கள் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு-விடம் நேரில் முறையிட்டுள்ளனர். திராவிட மாடல் அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதுவரையிலும் கூட இந்து அறநிலையத்துறையின் பெயர்ப்பலகை கோயிலுக்கு முன் வைக்க முடியவில்லை என்றால் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாதியவாதிகளின் ஆட்சியா?
இந்தப் பிரச்சினையில் விசிக, திவிக உள்ளிட்ட இயக்கங்கள்தான் பாதிக்கப்பட்ட மக்களோடு துணை நிற்கின்றன. தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் களத்தில் இறங்கவில்லை. தலித் மக்களின் உரிமையைக் காக்க போராடினால், ஆதிக்கசாதிகளின் ஓட்டுவங்கியில் அடிவிழும் என்ற ’நியாயம்’ தடுக்கின்றது போலும்.
பாதிக்கப்பட்ட மக்களோ இப்பிரச்சினையில் அதிகார வர்க்கத்தின், ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளைக் கண்டு மனம் வெதும்புகின்றனர். தாழ்த்தப்பட்டவன் என்பதால் தான் அரசு ஒதுக்குகிறது என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது. அதிகார வர்க்கத்தில் உள்ள ஒரு சில தனிநபர்கள் தங்களுடைய கோரிக்கையின் நியாயத்தை உணர்வதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் தலித் மக்களின் மீதான போலீசின் கடுமையான அணுகுமுறை, பிரச்சினையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பேசாமல் போலீசை விட்டு பேசுவது, 11 துறைகளுக்கு இப்பிரச்சினை தொடர்பாக மனு அளித்தும், பலமுறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும், போராடியும் தங்களை அதிகாரிகள் அலையத்தான் விடுகிறார்கள் என்பது சலிப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
படிக்க :
சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !
தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள் : என்ன செய்யப் போகிறது அரசு ?
இருப்பினும் அம்மக்கள் தங்களது சுயமரியாதைக்கான போராட்டத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை, போராடாமல் எக்காலத்திலும் தீர்வு கிடைக்காது என்பதுதான் அவர்களோடு பேசியதில் இருந்து நாம் உணர்ந்த உண்மை.
இந்தியா ’சுதந்திரமடைந்து’ 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ’குடியரசாகி’ 72 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னும் ஒரு சிற்றூருக்குள்ளேயே சுதந்திரமற்ற, உரிமையற்ற, சுயமரியாதையற்ற நிலையில்தான் பல இடங்களில் தலித் மக்களின் வாழ்நிலை நாடு முழுக்க உள்ளது. பொதுக் கோவில்களுக்குள் நுழைய முடியாமல் வடகுமரை போன்று நூற்றுக்கணக்கான போராட்டங்கள் பல பகுதிகளிலும் நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட போராட்டங்களின் ஊடாகத்தான் சில உரிமைகளாவது நிலைநாட்டப்பட்டுள்ளன. இருப்பினும் சாதிய வன்கொடுமைகளும், ஆணவப் படுகொலைகளும், தீண்டாமைக் கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. அதிகார வர்க்கமோ ஆதிக்க சக்திகளுக்கு துணை போகிறது. அல்லது ஆதிக்க சக்திகளாகவே சிந்திக்கிறது. இதற்கு வெண்மணிப்படுகொலை, திவ்யா – இளவரசன், சங்கர் – கௌசல்யா என வரலாற்றில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன.
வடகுமரை உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளும் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். பார்ப்பனிய சாதி ஆதிக்க அரசுக்கட்டமைப்பை தகர்த்தெறியாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவில்லை என்பதுதான் அது.
புரட்சிகர ஜனநாயக சக்திகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றுபடுவது மட்டுமல்ல, பார்ப்பனிய சாதி ஆதிக்க அரசுக்கட்டமைப்பானது ஆதிக்க சாதிகளில் உள்ள உழைக்கும் பிரிவினரையும் கடுமையாக ஒடுக்குகிறது, ஒடுக்கும் என்பதை உணர்த்தி ஆதிக்க சாதிகளில் உள்ள உழைக்கும் மக்களையும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு அணிதிரட்டுவதன் மூலமாகத்தான் நிரந்தரமான தீர்வை நோக்கி நாம் நகர முடியும்.
வடகுமரை தலித் மக்களின் சுயமரியாதைக்கான போராட்டத்தை அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஆதரிப்போம்!
சமத்துவம் ஒன்றும் கானல் நீரல்ல!
வினவு செய்தியாளர்
சேலம் மாவட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க