தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள் : என்ன செய்யப் போகிறது அரசு ?
போலீசுத்துறையின் ‘சிறப்பை’ப் பற்றியும், ‘சமூக நீதி’ பற்றியும் பேசிவரும் மு.க.ஸ்டாலின், அதே போலீசுத்துறை சாதிய வன்கொடுமைகளுக்கும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் துணைபோவது பற்றி ஏனோ மூச்சுக்கூட விடுவதில்லை.
ஜெய்பீம் திரைப்படம், இருளர் பழங்குடியின மக்களின் அவல நிலையையும் அவர்கள் வாழ்வினைச் சூறையாடும் அதிகார வர்க்கத்தின் கோர முகத்தினையும் திரைகிழித்துக் காட்டியது. இருபத்தைந்தாண்டுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவமே நம்மை உலுக்கி எடுத்திருக்கிறது என்றால்? அதே சாதி வெறியுடனும், அதிகார வர்க்கத்தின் துணையுடனும் இன்றளவும் நடந்தேறிவரும் சாதியப் படுகொலைகளை நம் மனசாட்சி உலுக்கியுள்ளதா?
ஏனோ ஜெய் பீமை கொண்டாடித் தீர்த்த ஊடகங்களும் சமூக வலைதளங்களும் அதற்கு சற்றும் குறைவில்லாமல் இக்காலகட்டத்தில் நடந்தேறிய சாதியக் கொடுமைமைகளுக்கு எதிராக பெரும் சீற்றம் ஏதுமின்றி கடந்து சென்றுள்ளன.
கடந்த வாரத்தில் (நவம்பர் 14, 2021) சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தட்டாப்பட்ட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மோகன்ராஜ் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த ‘குற்றத்திற்காக’ ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இந்த மரணத்தை தற்கொலை என்று போலீசுதரப்பு கூறி வருகையில் மரணமடைந்த மோகன்ராஜின் சகோதரி இதனை படுகொலை என்று கூறியிருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், சித்ரா என்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த நவம்பர் 11-ம் தேதியன்று ஊரைவிட்டு வெளியேறி நவம்பர் 12-ம் தேதி மதுரையில் மோகன்ராஜும் சித்ராவும் பதிவுத் திருமணம் செய்ட்கின்றனர். தம்பதியர் இருவரும் மறுநாள் சங்ககிரி திரும்பி, சங்ககிரி மகளிர் காவல்நிலையத்தில் திருமண வாழ்வில் தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.
அங்கிருந்த போலீசார், சித்ராவின் பெற்றோர் தாராமங்கலம் போலீசில் அளித்த புகாரைக் காரணம் காட்டி இருவரையும் தாராமங்கலம் போலீசு நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் மோகன்ராஜை சாதியரீதியாக இழிவுபடுத்தி நீதிமன்றத்தில் சித்ராவை ஆஜர்படுத்தி தம்பதியினரை பிரித்து அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வீட்டிற்க் வந்த மோகன்ராஜ், சிறிது நேரத்தில் வெளியே கிளம்பிச் சென்றுள்ளார். அதன் பின்னர் வெகுநேரம் ஆகியும் திரும்பாததால், மோகன்ராஜைத் தேடிச் சென்ற உறவினர்கள், அவரை ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகத்தான் பார்த்தனர்.
18-வயதுக்கு மேலான இருவரும் திருமணம் செய்தபின்னரும், அவர்களைப் பிரித்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மணமகனின் மரணத்திற்குக் காரணமாக இருந்த தாராமங்கலம் போலீசு அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக மரணத்திற்கு யார் காரணம் என்று விசாரித்து அவர்களைக் கைது செய்வதாகக் கூறியிருக்கிறது போலீசு. கொலைக்கு அடிப்படைக் காரணமாக இருந்த போலீசே குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்வது கேலிக்கூத்து.
நவம்பர் முதல்வாரத்தில், கன்னியாகுரி மாவட்டம் தோவாளைப் புதூர் கிராமம் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரும் வெள்ளாளர் சமுகத்தைச் சேர்ந்த தங்க நீலா என்பவரும் எட்டாண்டுகளாக காதலித்து வந்தனர். ஆதிக்கச் சாதியான பெண் வீட்டில் சுரேஷ் குமாரிடம் “நீ கீழ் சாதியைச் சேர்ந்தவன் உனக்கும் எங்களுக்கும் ஒத்துவராது மீறி எங்கள் வீட்டுப் பெண்ணிடம் பேசினால் உன்னைக் கொன்றுவிடுவோம்” என மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தங்க நீலாவுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கு சுரேஷ் குமார் இடையூறாக இருப்பார் எனப் போலிசில் பொய் புகார் கொடுத்து சுரேஷ்குமாரை போலீசை கைது செய்ய வைத்தனர். சம்பவத்தன்று போலீசு நிலையத்திற்குச் சென்ற சுரேஷ்குமார், வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால், அவரைத் தேடி உறவினர்கள் சென்றபோது, காட்டுப்புதூர் பகுதியில் சுரேஷ் குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவர் இறந்துவிட்டார் என மருவத்துமனை கூறியது.
தன்னைவிட உயர்சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக ஆதிக்கச் சாதிவெறியர்களால் வாயில் விஷம் ஊற்றப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் சுரேஷ்குமார். அவரது உடலில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்திருக்கின்றன. தற்கொலை செய்பவருக்கு எப்படி தாக்கியது போன்ற காயங்கள் ஏற்படும் என, சுரேஷ்குமாரின் இறப்புக்கு உரிய நீதி கேட்டு, உடலை வாங்க மாட்டோம் எனப் பலரும் போராடியிருக்கின்ற்னர். அந்தப் பெண்ணுக்கு வேறொரு இடத்தில் திருமண ஏற்பாடு செய்வதை தாங்கிக்கொள்ள முடியாமல்தான் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் என்று தமது கட்டுக்கதையை திரும்பத் திரும்ப கூறிவருகிறது போலீசு. போராடியவர்களையும் மிரட்டியிருக்கிறது போலீசு.
ஒரு மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம், கிழக்கு ராஜபாளையம், வீரகனூரைச் சேர்ந்த முத்துவேல் என்ற முடித்திருத்தும் தொழிலாளி பட்டியலினச் சமூகத்தாருக்கு முடித்திருத்தம் செய்தார் என்பதற்காக ஆதிக்கச் சாதியினர்கள் (உடையார்) “எங்களைவிட கீழானவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அதே கத்தியைக் கொண்டு எங்களுக்கு வெட்டக்கூடாது அப்படிச் செய்தால் உன்னைக் கொன்றுவிடுவோம்” என மிரட்டியுள்ளனர்.
இந்தச் சாதியாதிக்கத்திற்கு எதிராக “எனக்கு எல்லோரும் ஒன்றுதான் இரண்டு பேருக்கும் ஒடும் இரத்தமும் ஒன்றுதான்” என்று முத்துவேல் கூறியுள்ளார். இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதியினரைச் சேர்ந்த மணி, பெரியசாமி, மாணிக்கராஜா ஆகியோர் இரவு பத்து மணிக்கு முத்துவேலை அவரின் வீட்டிலிருந்து கூட்டிப்போய் முகத்தில் ஆசிட் ஊற்றியும், பின்மண்டையில் அடித்தும் கொலைசெய்து உடலை அருகிலுள்ள குளத்தில் வீசிவிட்டார்கள். இதையறிந்த முத்துவேலின் பெற்றோர்கள் என் மகனை உடையார் சாதியைச் சேர்ந்தவர்கள் கொலைசெய்துவிட்டனர் என்று போலிசில் புகார் அளித்தனர்.
என் மகனின் சாவுக்கு நீதி கிடைக்காமல் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என ஒரு மாதத்திற்கும் மேலாக முத்துவேலின் பெற்றோரும், உறவினர்களும் போராடினார்கள்.
ஆனால் போலிசோ இக்கொலையைப் பற்றி பேசாமல், முத்துவேலின் பெற்றோர்களின் அனுமதி இல்லாமலேயே அவரது உடலை அவசர அவசரமாக போஸ்ட்மார்ட்டம் செய்துவிட்டு பிரச்சனை ஏதும் செய்யாமல் உங்கள் மகனின் உடலை வாங்கிச் செல்லுங்கள் என்று போலிஸ்த்துறை தனது சாதிய நஞ்சைக் கக்கியுள்ளது.
மேலும் அவர்கள் உடையார் சாதியைச் சேர்ந்தவர்கள் ஒன்றும் பண்ண முடியாது என்றும், உங்களுக்குப் போதுமான அளவு பணம் வாங்கித் தருகிறோம். உடலை வாங்கிச் செல்லுங்கள் என இந்தப் பச்சைப் படுகொலையில் டீலிங் பேசியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட, மேலும் இரண்டு சாதிய ஆதிக்க நடவடிக்கைகள் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளன.
முதலாவது, சேலம் மாவட்டம் தலைவாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பூவரசன் என்பவர் முடித்திருத்தக் கடைக்குச் சென்றபோது உங்களுக்குலாம் நாங்க முடிவெட்ட மாட்டோம் உங்க காலனித் தெருவுல போய் வெட்டிக்க என்று அந்த கடையில் வேலை பார்ப்பவரும், அந்த இடத்தின் உரிமையாளரான ஒரு பெண்ணும் தகராறு செய்தார்கள். “நீ CM கிட்டயே போய் சொல்லு எங்களை ஓன்றும் பன்னமுடியாது” எனச் சாதித் திமிருடனும், பூவரசனின் சாதிப்பெயரைச் சொல்லி தரக் குறைவாகவும் திட்டினர். இக்காணொளி சமுக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட பின்னர், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது, நாம் அனைவரும் அறிந்ததே.
இரண்டாவதாக, சேலம் மாவட்டம் ஓமலூரில் ஊரின் முனையில் தங்கள் கட்சி கொடியினை நடுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டபோது, தலித்துகள் ஊரின் நடுவில் கொடியை நடுவதா? என ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் உங்கள் கொடியினை நடக்கூடாது என்று சாதிய ஆணவத்துடன் தகராறு செய்த நிகழ்வு. போலீசும் அங்கு வந்து விசிக கொடிக்கம்பத்தை நடவிடாமல் தடுத்து அவர்களை விரட்டியடித்தது. இதுவும் சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் அறிந்த நிகழ்வே.
இது எல்லாம் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் சேலம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டுமே நடந்த சாதிய வன்கொடுமைகள் ஆகும். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எ.ஸ்பி-யாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீஅபிநவ் என்பவர் சாதிய கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நடவடிக்கை எடுக்காமல் ஆதிக்கச் சாதியினரின் பக்கம் நின்றுகொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை சாதிய வன்மத்துடன் வஞ்சித்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு நாளும் பட்டியலிட்டுச் சொல்லுமளவிற்கு வகைவகையான சாதிய கொடுமைகள் அரங்கேறுகின்றன. தமிழகம் முழுவதும் தினம் தினம் நடக்கக்கூடிய சாதியப் படுகொலைகளுக்கும், சாதியாணவத் திமிருக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சாதியாதிக்க வெறியர்களுடன் கைக்கோர்த்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராடும்போது அடித்து விரட்டி ஒவ்வொரு இடத்திலும் தன் சாதியப் பற்றை பல்லிளித்துக் காட்டுகிறது போலிஸ் துறை.
சாதிய வெறியும் அதிகார வெறியும் எப்படி ஒன்றோடு ஒன்று பிணைந்து சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரையும் வர்க்கரீதியாக கீழ்நிலையில் இருப்பவர்களையும் ஒடுக்குகின்றன என்பதையே மோகன்ராஜ் படுகொலை முதல் சுரேஷ்குமார் படுகொலை வரை அனைத்தும் நிரூபிக்கின்றன.
போலீசுத்துறையின் ‘சிறப்பை’ப் பற்றியும், ‘சமூக நீதி’ பற்றியும் பேசிவரும் மு.க.ஸ்டாலின், அதே போலீசுத்துறை சாதிய வன்கொடுமைகளுக்கும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் துணைபோவது பற்றி ஏனோ மூச்சுக்கூட விடுவதில்லை.
‘சமூகநீதி’ பேசும் திமுக, ஆதிக்கச்சாதிகளின் ஓட்டுக்காக இச்சாதிய கொடுமைகளுக்கு எதிராக எதையும் செய்யாது என்பதைத்தான் காலங்காலமாக பார்த்து வருகிறோம். அதிகார வர்க்கமும் சாதி ஆதிக்க வெறியர்களும் ஒன்று சேர்ந்து நடத்தும் இந்த வெறியாட்டத்திற்கு எதிராக திமுக-வை நம்பி எந்தப் பலனும் இல்லை.
சாதி வெறியர்கள், அதிகார வர்க்கம் ஆகியவற்றின் கூட்டிற்கு எதிராக ஒவ்வொரு நிகழ்விலும் வீதியில் இறங்கி போராடும்போது மட்டுமே நமக்கான தீர்வு கிடைக்கும்.
//ஏனோ ஜெய் பீமை கொண்டாடித் தீர்த்த ஊடகங்களும் சமூக வலைதளங்களும் அதற்கு சற்றும் குறைவில்லாமல் இக்காலகட்டத்தில் நடந்தேறிய சாதியக் கொடுமைமைகளுக்கு எதிராக பெரும் சீற்றம் ஏதுமின்றி கடந்து சென்றுள்ளன.//
“ஏனோ” என்று ஏன் கூற வேண்டும். ஜெய் பீமை “ஊடகங்களும் சமூக வலைதளங்களும்” “கொண்டாடித் தீர்த்த”தற்கான காரணமும், சாதிய கொடுமைகளுக்கு எதிராக சீற்றம் கொள்ளாததற்கான காரணத்தையும் ‘புரியாத புதிர்’ போல் இக்கட்டுரை அணுகியது தவறு என்று கருதுகிறேன்.
வினவும் புரட்சிகர அமைப்புகளும் என்ன செய்ய போகின்றன
//ஏனோ ஜெய் பீமை கொண்டாடித் தீர்த்த ஊடகங்களும் சமூக வலைதளங்களும் அதற்கு சற்றும் குறைவில்லாமல் இக்காலகட்டத்தில் நடந்தேறிய சாதியக் கொடுமைமைகளுக்கு எதிராக பெரும் சீற்றம் ஏதுமின்றி கடந்து சென்றுள்ளன.//
“ஏனோ” என்று ஏன் கூற வேண்டும். ஜெய் பீமை “ஊடகங்களும் சமூக வலைதளங்களும்” “கொண்டாடித் தீர்த்த”தற்கான காரணமும், சாதிய கொடுமைகளுக்கு எதிராக சீற்றம் கொள்ளாததற்கான காரணத்தையும் ‘புரியாத புதிர்’ போல் இக்கட்டுரை அணுகியது தவறு என்று கருதுகிறேன்.