மிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்கள், அதன் பா.ஜ.க சார்பு ஆகியவற்றின் மீதான மக்களின் வெறுப்பால் வெற்றி பெற்றுள்ள தி.மு.க தன்னை ஒரு சாதி மறுப்பு, திராவிட பெரியாரிய வழிவந்த இயக்கமாகவும் சமூகநீதியை கொண்டு வரும் முற்போக்கு கட்சியாகவும் காட்டிக்கொள்கிறது.

அதற்காக ஒருபக்கம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம், பாடப் புத்தகங்களில் உள்ள சமூகத் தலைவர்களின் பெயரின் பின்னாலுள்ள சாதிய பெயர்களை நீக்கியது, பெரியார் நினைவு சமத்துவபுரம் கொண்டு வந்தது போன்ற முற்போக்கு சீர்திருத்த செயல்களை செய்கிறது.

அதேபோல தமிழ் நாட்டில் தற்போதுள்ள நிதி நெருக்கடியையும் கடன் சுமையையும் வெளிப்படுத்திய நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையினை வெளியிட்டதுடன் அரசு விழாக்களில் ஆடம்பர விளம்பரங்கள் மற்றும் பரிசுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறி அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

ஆனால், மறுபுறம் என்ன நடக்கிறது?

படிக்க :

திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !

‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !

சமீபத்தில் தி.மு.க-வில் வெற்றிபெற்றவர்களை அவர்கள் சார்ந்த சாதிய அமைப்புகள் நாளிதழ்களில் தொடர்ந்து விளம்பரமாகவும் சுவரொட்டி வாயிலாகவும் கொண்டாடி வருகின்றனர். தி.மு.க-வில் வெற்றிபெற்றுள்ள நாடார் சமுதாய எம்.எல்.ஏ-க்களையும், நாடார் சமுதாயத்தை சார்ந்த மந்திரிகளையும் வாழ்த்தியும் அதற்கு காரணமான முதல்வர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை வாழ்த்தியும் சமீபத்தில் நாடார் சமுதாய அமைப்புகள் தென் மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.எஸ் விஜயனை வாழ்த்தி தேவேந்திரகுலவேளாளர் சாதி அமைப்புகள் தினகரன் நாளிதழில் தொடர்ந்து விளம்பரம் செய்து வருகின்றன.

இதே போன்று ரெட்டியார் சமூக வெற்றி வேட்பாளர்களை வாழ்த்தியும் முதலியார் சமூக வெற்றி வேட்பாளர்களை வாழ்த்தியும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்வேறு சாதிய அமைப்புகளும் விளம்பரப்படுத்தி வருகின்றன.

தி.மு.க-வின் இரண்டாம் மட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் தங்களை ஒரு சாதியவாதியாகவே காட்டிக்கொண்டு பல சாதி சங்க கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

அனைத்து பிரிவு மக்களாலும் தேர்வு செய்யப்பட்ட, அனைத்து பிரிவு மக்களுக்காக சேவை செய்ய பணிக்கப்பட்ட இந்த மக்கள் பிரதிநிதிகளை, சாதிரீதியாக பிரித்து அவர்களை அந்தந்த சாதிக்கானவர்களாக உருவாக்கம் செய்து ஆண்ட சாதி பெரிமை கொள்ளும் ஆதிக்க சாதியினரின் இதுபோன்ற செயல்களை தி.மு.க தலைமை கண்டித்து தடுப்பதற்கு பதிலாக ஓட்டரசியலுக்காக திட்டமிட்டு அங்கீகரித்து வளர்த்து வருகிறது.

This slideshow requires JavaScript.

இது என்ன விதமான முற்போக்கு செயல்? இப்படி செய்வதன் மூலம் என்ன மாற்றம் நிகழும் என்பது தி.மு.க தலைமைக்கு தெரியாதா? எனில் தி.மு.க-வின் நோக்கம் என்ன?

வரலாற்றில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்டத்தில் சாதி மதங்களை கடந்து அர்ப்பணிப்புடன் போராடிய பல தலைவர்களை கொண்ட தமிழகம் இன்று சாதி ரீதியாக பிளவுபட்டுப்போய் சாதிய மோதல்களுக்கு பெயர் பெற்ற மண்ணாக கேவலப்பட்டுப் போயுள்ளது.

அதை விடக் கொடுமையானது என்னவெனில், வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்த மண்ணைக் காக்கப் போராடியவர்களான ஒண்டிவீரன், ஊமைத்துரை, பூலித்தேவன், சுந்தரலிங்கம், வ.உ.சிதம்பரனார், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என அனைவரையும் சாதியரீதியாக அடையாளப்படுத்தியே கொண்டாடப்படும் அளவிற்கு தமிழகம் சீரழிந்துவிட்டது.

சமீபத்தில் ஒண்டிவீரன் 250-வது நினைவு தினத்தில் அவரது மணிமண்டபத்தில் மாலையிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை, ஒண்டிவீரனுக்கு டெல்லியில் சிலை வைக்க வேண்டும் என்றும், சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆதிக்க சாதியினர் முதல் ஒடுக்கப்பட்ட சாதியினர் வரையில் அனைவரையும் சாதியரீதியாக முனைவாக்கம் செய்து அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது பாஜக. அந்த வகையில் தான் வட இந்தியாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. தற்போது தமிழகத்திலும் அந்த வேலையச் செய்து வருகிறது.

சமூகநீதி பேசும் திமுக, இதற்கு எதிராக மக்களை உழைக்கும் வர்க்கம் என்ற வகையில் அணிதிரட்டாது என்பது உறுதி. ஆனால் குறைந்தபட்சம், அது பேசும் திராவிட அரசியலை முன் வைத்து மக்கள் சமூகத்திற்கு இடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவர முயற்சிப்பதை விட்டுவிட்டு, சாதியரீதியாக பிரிந்து கிடக்கும் மக்களை அப்படியே இருக்கச் செய்ய வைக்கிறது.

தேர்தல் ஆதாயத்திற்காக சாதிய அமைப்புத் தலைவர்களை அண்டிப் பிழைத்துக் கொண்டு, சாதிய பிரிவினைகளை வளர்ப்பதற்கு உதவுகிறது திமுக. இது எல்லா வகைகளிலும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் அடித்தளத்தில் வளர்வதற்கு மட்டுமே பயனளிக்குமே ஒழிய, சமூக நீதி சிந்தனையை எக்காலமும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப் போவதில்லை.

அனைத்து பிரிவு மக்களையும் ஒட்ட சுரண்டி ஒடுக்கி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை பற்றிய புரிதலின்றி அதற்கு எதிராக போராடும் உணர்வின்றி சாதிரீதியாக பிரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆண்ட பரம்பரை பெருமைபேசி அடித்துக் கொண்டு சாகிறார்கள், மக்கள். தமது பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும், கார்ப்பரேட் கும்பலின் சுரண்டலை மூடி மறைக்கவும் இத்தகைய சாதிய பிளவுகளை பயன்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். இந்த அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலை அங்கீகரித்து ஆட்சியில் வைத்திருக்கிறது ஆளும் வர்க்கம்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின் இந்த பாசிச செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே இங்கு சாதிய அடையாள அரசியல் சக்திகள் ஊட்டி வளர்க்கப்படுகின்றன.

படிக்க :

திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்

இப்படி சாதிய அமைப்புகளை அங்கீகரிப்பது, பாசிச கும்பலின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் என்பது தெரிந்தும் அதனை செய்து வருகிறது திமுக.

“எல்லா ஓட்டு கட்சிகளும் சாதியை ஆதரிப்பது போல்தான் திமுக-வும் செய்கிறது என்கிறபோது திமுக-வை மட்டும் ஏன் குறைசொல்லுகிறீர்கள்” என்று பாசிசத்தை தடுத்து முறியடிக்கக் கூடிய மாற்று சக்தியாக தி.மு.க-வை முன்னிறுத்தும் சில அறிவுஜீவிகள் கூறுகின்றனர். பாசிசம் பற்றியோ, ஐக்கியம் பற்றியோ அடிப்படைப் புரிதலற்றதனத்தின் வெளிப்பாடு இது.

ஐக்கியம் எனும் பெயரில் நட்பு சக்திகளின் பிற்போக்குத்தனத்தையும் கண்டும் காணாமல் நழுவிச் செல்வது பாசிசத்திற்கே வலுச் சேர்க்கும் என்பதை காண மறந்து திமுக போன்ற ’வலுவான’ கட்சிகளிடம் ஐக்கியம் எனும் பெயரில்  சரணடைந்து விடுகின்றனர்.

திமுகவின் மேலோட்டமான சாதிய எதிர்ப்பு, சமூக நீதி தொடர்பான சில நடவடிக்கைகள் சாதிய முனைவாக்கத்தையும் அதன் மூலமான பாசிச வளர்ச்சியையும் மட்டுப்படுத்தப் போதுமானவை அல்ல. அடித்தளத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் என்ன செய்ய விரும்புகிறதோ, அதே செயலைத்தான் தி.மு.க-வும் அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது மக்களின் சாதியரீதியான முனைவாக்கத்தை அங்கீகரித்து வளர்த்துவிடுகிறது. அது பிற்போக்குக் கும்பலான பாசிச கும்பலுக்கே வலுச் சேர்க்குமே அன்றி பாசிசத்தை ஒருபோதும் முறியடிக்கப் போவதில்லை !

வினவு செய்திப் பிரிவு
மனோகரன்

2 மறுமொழிகள்

 1. அவர்கள் ஓட்டரசியல் நடத்த வேண்டிய கட்டாயம. உண்டு….
  வாக்குகளை வாங்கியதால்தான் இன்று அரசு அமைத்திருக்கிறார்கள்….
  அரசின் செயல்பாடுகளில் சமூக நீதி இரிக்கிறதா என்றி பாருங்கள்….
  உட்கட்சி விவகாரத்தை பேசி வட டிப்பொழுது கழிக்வும் கூட்டத்தில் சேரவேண்டாம்….
  அதேபோல அந்த கட்சியை எப்படி நடத்துவதி என்று அவர்களுக்கு தெரியும்…
  உங்வளது சமூக அக்கறைநை சமுதாயத்தை கெடுப்பவனிடம் காட்டலாமே…
  தி மு க கரான் சாதிப்பெயர் போடடுவதை விட ஆயிரம் மடங்கு மோசமான செயல்கள் வேறு இடங்களில் நடக்கிறது… அதைப்ஙற்றி பேசுங்கள்….

  • தமிழக ‘முற்போக்கு’ சக்திகளை சப்புக் கொட்டவைத்து துதிபாட வைக்கவே தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினர் அர்ச்சர் திட்டம். பாட நூல்களில் சாதிப் பெயர் நீக்கம்…. இத்தியாதி.. இத்தியாதி..

   இந்துத்துவ நச்சுப் பாம்புகளை தமிழகத்தில் வளர்த்துவிட சேவா பாரதிக்கு சேவை, பாரத மாதாவுக்கு பஜனை, தன் வழிபாட்டு உரிமைக்காக போராடிய ஜார்ஜ் பொன்னையா கைது, அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை புகுத்த தன்னார்வலர்கள் திட்டம், தற்போது பார்ப்பனிய ஆதிக்கத்தை பாதுக்காக்கும் சாதி வெறியர்களிடம் சல்லாபம்.
   இதுதான் தி.மு.க. !

   இதெல்லாம் உட்கட்சி விவகாரமா படுதோ..

   உம் கருத்துப் படியே இதெல்லாம் உட்கட்சி விவகாரமா இருந்துட்டு போட்டும்.
   உட்கட்சியிலேயே சமூக நீதி இல்லாதவன். அரசியலில் மட்டும் எப்படி சமூக நீதியை நிலை நாட்ட முடியும்.

   தி.மு.க. வெளிய காட்டுகிற சமூக நீதி சமாச்சாரமெல்லாம் உம்மைப் போல உள்ள – சோ கால்டு முற்போக்காளர்கள் – சிலரை கவர்வதற்குத்தான்.
   ஏனெனில் //அவர்கள் ஓட்டரசியல் நடத்த வேண்டிய கட்டாயம் உண்டு//

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க