திமுக அரசே வேலைகொடு !
சென்னை அண்ணா நகர் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் !

சென்னை அண்ணா நகர் மண்டலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கடந்த இரண்டு நாட்களாக மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் என்.யூ.எல்.எம். (National Urban Livelihoods Mission (NULM)) என்ற திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த சுமார் 12,000 தூய்மைப் பணியாளர்களை, கடந்த ஜனவரி 2021-ல் எந்தவித முன்னறிவுப்புமின்றி தீடீரென வெளியே தள்ளியது எடப்பாடி அரசு. சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, புயல், வெள்ளம், மழை, கொரோனா பேரிடர் என இக்கட்டான காலகட்டங்களில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து நகரைத் தூய்மைப்படுத்திய அவர்களை “உங்களை யாரென்றே தெரியாது” என்று கூறி விரட்டியடித்தது. ஒருபுறம் “துப்புரவுப் பணியாளர்கள்” என்பதை “தூய்மைப் பணியாளர்” என்று பெயரிட்டு அவர்களை ‘கெளரவித்த’ எடப்பாடி அரசு, மறுபுறம் ஈவிரக்கமின்றி 12,000 பேரின் குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்தியது.

இவர்களில் பெரும்பாலோர் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், குடும்ப ஆதரவு இல்லாதவர்கள் என மிகவும் அடித்தட்டுப் பிரிவினரே ஆவர். சுமார் 8 மாதங்களாக வேலை இல்லாததாலும், கொரோனா காரணமாக வேறு எந்த வேலையும் கிடைக்காததாலும் வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல், வாங்கிய கடனைக் கட்ட முடியாமல், குடும்ப செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அவர்கள் பரிதவித்து வருகின்றனர். போராடும் ஒவ்வொருவருக்குப் பின்னும் ஒரு துயரக்கதை இருக்கிறது.

படிக்க :
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை
♦ நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !

ஒரு வயதான பெண்ணிடம் பேசும்போது, “நான் கடந்த 16 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். 6 ஆண்டுகளாக, மாநகராட்சியிலும் 10 ஆண்டுகள் என்.யூ.எல்.எம் திட்டத்தின் கீழும் வேலை செய்து வந்தேன். ஆனால், டிசம்பர் 2020-ல் என்னை திடீரென வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள். என்னால் வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. ஊரடங்கால் வேறெந்த வேலையும் கிடைப்பதில்லை. இந்த வேலை கிடைக்கவில்லையெனில், நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை. இக்கட்டான காலங்களில் எங்களைப் பயன்படுத்திவிட்டு, இப்போது எங்களைக் கறிவேப்பிலை போலத் தூக்கியெறிந்து விட்டனர்” என்கிறார்.

இன்னொருவர் பேசும்போது, “இத்தனை ஆண்டுகாலமாக இந்த வேலையே செய்து பழக்கப்பட்டு விட்டோம். நாங்கள் படித்தவர்களல்ல, தற்போது எங்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது. இதைவிட்டால் எங்களுக்கு வாழ வழி கிடையாது” என்கிறார்.

இப்படி வயதானவர்கள், நடுத்தர வயதினர் மட்டுமன்றி, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வரை வேலையிழந்த அனைவரும் இந்த வேலையை நம்பியே தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள். இந்த வேலை நிரந்தரமாகும் என்று நம்பி 30 வயது வரை திருமணம் செய்யாமல் இருப்பவர்களும் இதில் உள்ளனர். தற்போது 8 மாதங்களாக, அவர்களின் குடும்பமே நடுத் தெருவில் நிற்கின்றது.

சென்னை முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இவர்களின் வேலைப் பறிப்பும் நடந்துள்ளது. இவர்கள் வேலையை விட்டு விரட்டியடிக்கப்பட்ட பின்னர், அதாவது, பிப்ரவரி 2021-இல், ராம்கி என்விரோ எஞ்சினியர்ஸ் லிமிடட் (REEL) என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடம் சென்னையின் நான்கு மண்டலங்களை 7 ஆண்டுகளுக்கு திடக் கழிவு மேலாண்மைக்காக ஒப்பந்தம் செய்தது அப்போதைய எடப்பாடி அரசு. மேலும், உர்பேசர் சும்மீட் (urbaser summeet) என்ற கார்ப்பரேட் நிறுவனமும் அதற்குப் பின்னர்தான் திடக்கழிவு மேலாண்மையில் புகுந்தது.

என்.யூ.எல்.எம். என்ற திட்டத்தின் கீழிருந்த இவர்களின் வேலையைப் பறித்துவிட்டு, இத்தகைய தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் காண்டிராக்ட் முறையில் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியது அப்போதைய எடப்பாடி அரசு. அப்போதே சிலர் தங்கள் குடும்ப சூழ்நிலைமையைத் தாக்குப்பிடிக்க முடியாமல், வேறுவழியின்றி கான்ட்ராக்ட் வேலைக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும் பெரும்பாலோர், என்.யூ.எல்.எம் என்ற மாநகரட்சியின் கீழ்தான் நாங்கள் பணிபுரிவோம், அதுதான் எங்களுக்கு உத்திரவாதமானது என்று அப்போது இதற்கெதிரானப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இப்போது சுகாரத்துறை அமைச்சராக இருக்கும் மா. சுப்பிரமணியன், அப்போது இவர்களோடு சென்று ரிப்பன் மாளிகையில் மனுக் கொடுத்ததோடு, இவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் முழங்கினார். மேலும், அப்போது எதிர்க்கட்சித் தலைவாராக இருந்த ஸ்டாலின், இவர்களை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பிற்கு காத்திராமல் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாநகராட்சிக்குக் கடிதம் கொடுத்தார்.

மேலும், தேர்தல் பிரச்சாரங்களின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் இவர்களுக்கு வேலை தருவதோடு, பணி நிரந்தரமும் செய்து தருவோம் என்று வாக்குறுதியளித்தது திமுக. திமுக-வின் இந்த வாக்குறுதியை நம்பி இவர்களில் மிகப் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினர், உறவினர் உள்ளிட்ட பலரிடமும் பேசி திமுக-வுக்கு ஓட்டுப் போடுமாறு கூறியுள்ளனர்.

ஆனால், “ஆட்சிக்கு வந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் தங்களைக் கண்டுகொள்ளவில்லை, பலமுறை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். முன்பு எங்களை வீட்டுக்குள் அழைத்து டீ கொடுத்து பேசியவர் இன்று எங்களைப் பார்க்க கூட மறுக்கிறார். முதல்வர் ஸ்டாலினின் வீட்டுக்குச் சென்றால் ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே எங்களை விரட்டியடிக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்துவிட்டோம். நாங்கள் ஏறாத அலுவலகம் கிடையாது, சந்திக்காத அதிகாரிகள் கிடையாது. எந்த பலனும் இல்லை. 8 மாதங்களாக வேலையில்லாமல், நாங்கள் வாழ வழியற்று நிற்கிறோம்” என்று கூறி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற அறிவிப்பின் கீழ் இங்குள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஸ்டாலின் அப்போது கொடுத்தார். (கீழ்காணும் காணொலியில் 06:35 – 06:45 வரை)

ஆனால், அந்த அறிவிப்புகள் எல்லாம் தற்போது குப்பையில்தான் கிடக்கின்றன. நிலைமையோ இப்படியிருக்க, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” திட்டத்தில் எல்லா விசயங்களும் சரிசெய்யப்பட்டு வருவதாக ஊடகங்கள் வாய்கூசாமல் புளுகுகின்றன.

மேலும், இப்போது “நீங்கள் காண்டிராக்டிலேயே வேலை செய்யுங்கள்” என்று திமுக, குறிப்பாக, சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினும் அமைச்சர் மா.சுப்பிரமணியமும் கூறியதாக இத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். எடப்பாடி ஆட்சிக் காலத்தில், கழிவு மேலாண்மைக்காக கார்ப்பரேட்டுகளுடன் போட்ட ஒப்பந்தங்கள் அப்படியேதான் தொடர்கின்றன என்பது ஒருபுறமிருக்க, எடப்பாடி அரசு சொன்னதைப் போலவே திமுகவும் “காண்டிராக்டிலேயே வேலை செய்யுங்கள்” என்று கூறுகிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.

வேலை தருவதோடு, பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியெல்லாம் வாக்குப் பொறுக்குவதற்காக அன்றி வேறில்லை என்பதைத் தெளிவாக நமக்கு இச்சம்பவம் அம்பலப்படுத்துகிறது. எந்த ஆட்சிமாற்றம் வந்தால் தங்களின் வாழ்க்கையில் மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்தார்களோ, இன்று அவர்கள் ஏமாற்றப்பட்டு நடுத் தெருவில் நிறுத்தப்பட்டிருகின்றனர். வாக்குறுதி கொடுத்தவர்களோ, “தனியாரிடம் போங்கள்” என்று விரட்டுகிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்வதில் ஓட்டுக் கட்சிகளிடையே கொள்கை வேறுபாடில்லை என்பதை சமீபத்திய சம்பவங்கள் ஒவ்வொன்றும் அம்பலப்படுத்தி வருகிறது.

இவையொருபுறமிருக்க, போராடும் மக்களை நேரில் கூடச் சந்திக்காமல், அதிகாரிகளையும் காவல்துறையையும் விட்டு மிரட்டுகிறது திமுக அரசு. போராட்டக்களத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரி பேசுகையில் “எனக்கு இந்த விவரமே தெரியாது” என்கிறார். ஆனால், 8 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை இவர்கள் நடத்தி வந்ததையும் குறிப்பாக ரிப்பன் பில்டிங் மாளிகை அருகே சாலையை மறித்து போராடியதையும் தமிழகமே அறியும். இன்னொரு காவல்துறை அதிகாரி பேசுகையில், “சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், உங்கள் மேல் எப்.ஐ.ஆர். விழுந்தால் பிறகு வேலையே கிடைக்காது” என மிரட்டுகிறார்.

This slideshow requires JavaScript.

அவர்களது கோரிக்கையெல்லாம் “எங்களை மீண்டும் என்.யூ.எல்.எம். திட்டத்தின் கீழ் பணி அமர்த்த வேன்டும். எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்பதுதான். கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் திமுக, இதைச் செய்யப் போவதில்லை. ஏனெனில் எந்தக் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும், தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வேலை. அரசு நேரடிப் பணி முறையை ஒழித்து அனைத்தையும் தனியார் சேவைத்துறையாக மாற்றுவ்துதான் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளின் அடிப்படை.

அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை, மக்களின் துயரமெல்லாம் வாக்கு இயந்திரம் வரை மட்டுமே. ஆட்சியில் அமர்ந்த பிறகு, அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதுதான் அவர்களது நிரந்தரத் தொழில்.  மழை, புயல், பேரிடர் என எல்லாக் காலங்களிலும் தங்கள் உயிரையும் தங்கள் குடும்பத்தின் உயிரையும் பணயம் வைத்து நம்மையெல்லாம் காப்பாற்றியவர்களை நாமும் நடுத் தெருவில் விடப்போகிறோமா என்று நாம்தான் சிந்திக்க வேண்டும்.

வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க