விண்ணை முட்டும் அளவிற்கு அறிவியல் வளர்ந்திருந்தாலும் உடைந்த துடைப்பம், கிழிந்த கையுறைகள், அறுந்த காலனிகள் அங்கும் இங்கும் ஒட்டுப் போட்ட நீல ஆரஞ்சு நிற ஆடைகளுடன், தினம்தோரும் குப்பைத் தொட்டி அருகேயும், சாலைகளிலும் தெருக்களிலும் நாம் கையுறை அணிந்து அள்ள முடியாத, கண்களால் கூடப் பார்க்க விரும்பாத குப்பைக் கழிவுகளை அவர்கள் வெறும் கைகளால் அள்ளிக் கொண்டிருப்பார்கள்.
இவர்களை நாம் சாலையில் நடக்கும் போதும் அல்லது பேருந்தில் பயணம் செய்யும் போதும் நம் அருகே வருவதற்கோ அல்லது அமருவதற்கோ அனுமதிப்பது இல்லை. சிலர் அவர்களின் மீது ‘அய்யோ பாவம்’ என அனுதாபமாகப் பார்ப்பதும், சிலர் அவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து மனதளவில் கோபம் கொள்வதும் உண்டு.
படிக்க :
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !
♦ நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !
இருந்தாலும் இவர்களை நாம் கடந்து செல்லும்போது மூக்கை மூடிக் கொள்வது வழக்கம். மாறாக நாம் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் சுத்தத்திற்குப் பின் இருக்கும் இந்த மக்களின் துயரமான வாழ்வை கொஞ்சம் கண் திறந்துப் பார்க்கவும் காதுக் கொடுத்து கேட்கவும் இவர்களின் நியாமானக் கோரிக்கைகளை அழுத்தமாகப் பதிவு செய்யவும் முனைகிறது இந்த கட்டுரை.
பெரும்பாலும் இவர்கள் யாரும் அடுக்கு மாடி குடியிருப்புகளிலோ அல்லது நகரத்தின் சுத்தமானப் பகுதியிலோ வாழ்பவர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் கால்வாய்க்கு அருகே இருக்கும் குடிசைப் பகுதிகளில் வாழும் உழைக்கும் மக்கள்.
10 ஆண்டுகளாக மீன்பிடித்தொழில் செய்து வந்த சிலரும் கூட இப்போது குப்பை அள்ளுகிறார்கள். சிலபேர் தங்களுக்குத் தகுந்த வேலை கிடைக்காததால் இந்த வேலையைச் செய்கிறார்கள். இதைவிட்டால் வீட்டு வேலை, ஹோட்டலில் பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளுக்கு இங்கு வாழும் மக்கள் செல்வார்கள்.
தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்பவர்கள் தினந்தோறும 3 பகுதியாக வேலையை பிரிந்து செய்கிறார்கள். காலை 6 முதல் 2 மணிவரை ஒரு பகுதி, 2 முதல் 10 மணிவரை இரண்டாம் பகுதி, 10 முதல் 6 மணிவரை மூன்றாம் பகுதி என இடைவெளி விடாமல் வேலை செய்கிறார்கள்.
இவர்களுக்கு இந்த வேலை நிரந்தரம் கிடையாது. ஒப்பந்தம் முறையில்தான் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இவர்களின் அதிகபட்ச ஒப்பந்த காலம் 8 ஆண்டுகள்தான். இடையில் தன் நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்டாலோ அல்லது தன் உரிமையை பற்றிப் பேசினாலோ அறிவிப்பு ஏதும் இல்லாமல் வேலையை விட்டு தூக்கி எறியப் படுவார்கள்.
எந்த அடிப்படை மருத்துவ வசதியும் இவர்களுக்கு கிடையாது. குப்பைகளை அள்ளும் போதும், குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை கால்களால் மிதிக்கும் போதும் கண்ணாடி இருந்து கை, கால்களை கிழித்தாலும் முதல் உதவி பெட்டிக் கூடக் கொடுக்கப் படுவதில்லை.
இவர்களை நேரில் சந்தித்து பேசும் போது, தங்களின் துயரங்களைச் சொல்கிறார்கள்.
“எங்களுக்கு வண்டி கொடுக்கப்பட்ட போது, வேலை சுமை குறையும் என்று நினைத்தோம் ஆனால், இபொழுது வேலை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது. முன்பு குப்பை இருந்தால்தான் சுத்தம் செய்யப் போவோம். ஆனால், இப்போது குப்பைகளை தேடிச் செல்ல வேண்டும். தினமும் சராசரியக இவ்வளவு குப்பைகளை ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயம். (காய்கறி குப்பை என்றால் 65 கி, Plastic குப்பைகள் என்றால் 30 கி, உணவு பண்டங்கள் என்றால் 10 கிலோ)”
“அதைச் சரியாக ஒப்படைக்க வில்லையென்றால் நாங்கள் முழுநாள் வேலை செய்தாலும் அரைநாள் என்றுதான் பதிவு செய்வார்கள். கொரோனா ஊரடங்கு என்றால் அன்று கட்டாயம் வேலைக்கு வரவேண்டும் உடம்பு வலி என்று விடுப்பு கேட்டால் கூட தரமாட்டார்கள்.”
“காய்கறி குப்பைகளை சில உரம் தயாரிக்க கம்பெனிக்கு விற்று காசுப் பெறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு ஒருரூபாய் சம்பளம் கூட்டி தருவதில்லை.”
“எங்களுடைய மாதச் சம்பளம் ரூ.11,500. அதில், ESI மற்றும் PF பிடித்தம்போக ரூ.10,500 தான் எங்கள் கைக்கு வருகிறது அதிலும் பஸ் செலவு சாப்பாடு செலவு என பாதி பணம் செலவாகி விடும்.”
“கொரோனா காலங்களில் பஸ் வசதிக் கூட செய்து தரவில்லை. சில நாட்கள் 4 கிலோ மீட்டர் வரை நடந்தே வேலைக்கு வந்திருக்கிறோம். காலை 6 மணிக்கு வேலையில் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் எப்படி சாப்பாடு செய்துக் கொண்டு வரமுடியும். இவர்கள் தண்ணீர் கேட்டாலே தருவதில்லை சாப்பாடு எப்படி தருவார்கள் வேறு வழி இல்லாமல் அம்மா உணவகத்தில்தான் சாப்பிட வேண்டும். அங்கும் சில நேரங்களில் சிலருக்குதான் உணவு இருக்கும் மீதி இருப்பவர்கள் இரவு வீட்டிற்கு போய்தான் சாப்பிட வேண்டும்.”
“2 மாதத்திற்கு ஒரு முறைதான் முகக்கவசம் அல்லது கையுறை தருகிறார்கள் அதுவரை கிழிந்ததை தான் பயன்படுத்த வேண்டும். கிழிந்ததைக் கொடுத்தால்தான் புதிய முகக்கவசமும் கையுறையும் தருவார்கள். கொரோனா நேரத்தில் பயன்படுத்திய மருத்துவ கழிவுகளை வெறும் கைகளால்தான் நாங்கள் அள்ளி குப்பைத் தொட்டியில் போடுகிறோம்.”
“நாங்கள் இப்படி குப்பைகளை அள்ளுவதால் நோய் வரும் என்பதற்காக எங்களுக்கு 6 மாதம் ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். ஆனால், அதைக்கூட இவர்கள் போடுவதில்லை.”
“கடைகளுக்குக் குப்பைகள் எடுக்கச் சென்றால் கடை அருகேக் கூட விடுவதில்லை கொஞ்சம் தொலைவில் குப்பைகளைக் கொட்டி எடுத்துச் செல்லச் சொல்கிறார்கள். வீடுகளில் குப்பை எடுக்கச் சென்றால் குப்பைத் தொட்டியில் கூட குப்பைகளைப் போட மாட்டார்கள். மேலும், குப்பைகளை யாரும் பிரித்து வைக்க மாட்டார்கள் நாங்கள் அந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை எனப் பிரிக்க வேண்டும். நீண்ட நாட்களான குப்பைகளில் புழு வரத் தொடங்கி விடும். அதையும் வெறும் கைகளில்தான் அள்ளுகிறோம். எங்களுக்கு கை கழுவக் கூட தண்ணீர் தர மாட்டார்கள். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாலே ஏதே கீழ் தரமான மனிதரைப் போல அருவருப்பாக பார்ப்பார்கள்” என்றெல்லாம் தங்களின் வாழ்க்கைத் துயரை விவரிக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
“குப்பை எடுக்க போகும் இடங்களில் வயது முதிர்ந்தவராக இருந்தாலும் “ஏய் குப்பை” “குப்ப காரரே” என்றுதான் அழைப்பார்கள். அதிலும் ஒருவர் “நேற்று குப்பை எடுக்க சென்ற வீட்டில் ஒரு அம்மா மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிகிறார்” என்றார்.
இப்படி இவர்களை ஒதுக்குவது, தீண்டத்தகாதவர்களாக நடத்துவது பெரும்பாலும் அப்பார்ட்மெண்ட் பகுதிகளில்தான் தீவிரமாக நடக்கிறதாம்.
இதில் தூய்மைப் பணி செய்யும் பெண்கள் ஆண்களை காட்டிலும் கடுமையான பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை பெண்களை சந்தித்தபோது அறிய முடிகிறது.
பெண் தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்கையில்…
“ஆடைகள் மாற்றுவதற்குக் கூட இடமில்லை. பொது வெளியில் தான் ஆடைகள் மாற்றி கொள்கிறோம். கழிப்பறை வசதி கூட செய்து தரவில்லை கடற்கரை அருகே வேலை செய்யும் போது கடற்கரை சுடு மணல் மீதுதான் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கிறோம். தெருக்கள் சுத்தம் செய்ய போகும் போது சில வீடுகளில் கழிப்பறைப் பயன்படுத்திக் கொள்ள சொல்வார்கள் சில வீடுகளில் அதுக்குக் கூட அனுமதிப்பதில்லை.”
“மாதவிடாய் காலங்களில் கூட விடுமுறை அளிப்பதில்லை அந்த வலியோடு வேலைக்குக் கட்டாயமாக வர வேண்டும். மாதவிடாய் நேரங்களில் பேண்ட் அணிந்து வேலை செய்வது மிகக் கஸ்டமாக இருக்கிறது புடவை அணிந்துக் கொள்கிறோம் என்று சென்னால் கூட கண்டுக் கொள்வதே இல்லை. எங்களின் அடிப்படை தேவையான நாப்கின் கூட தருவதில்லை.”
“துடைப்பம் கூட எங்கள் கை காசு போட்டுதான் வாங்கி வேலை செய்கிறோம். இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் நடந்தே குப்பைகளை சுத்தம் செய்கிறோம். சோர்வில் சிறிது நேரம் உட்கார்ந்தால் கூட கேள்வி கேட்பார்கள், துளியும் மதிப்பது இல்லை.” என்கிறார்கள்.
அதில் ஒரு பெண் “வெயிலில் நீண்ட தூரம் நடந்தே குப்பைகளை எடுப்பதால் கால்கள் அதிகமாக வலிக்கிறது இரவில் வலி தாங்காமல் பல நாட்கள் அழுது இருக்கிறேன்” என்றார்.
ஆண்களை காட்டிலும் பெண்கள் இப்படி உடல் சார்ந்த பல்வேறுப் பிரச்சனைகளை தினந்தோறும் சந்திக்கிறார்கள். ஆனாலும், ஆண்களை விட பெண்களுக்கு சம்பளம் ரூ.1,000 குறைவு.
இவர்களின் இத்தகையப் பிரச்சனைகளுக்காவும் கோரிக்கைக்காகவும் (வேலை நிரந்தரம், பாதுகாப்பு உபகரணங்கள், பெண்களுக்கான அடிப்படை வசதி, முறையாக ஊதியம் தருவது, மருத்துவ வசதி (முதலுதவி உபகரணங்கள்) போன்றவையே…) நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். ஆனால், எந்த பலனும் இல்லை.
படிக்க :
♦ கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ
♦ கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்
இந்த சமூகத்தால் குறிப்பாக மேட்டுக்குடியினரால் புறக்கணிக்கபடுவது தீண்டப்படாதோராக சமூகத்தால் ஒதுக்கப்படுவது ஒரு பக்கம் என்றால் இந்தக் கார்ப்பரேட் நல அரசோ “துப்புரவுப் பணியாளர்கள்” என்ற பெயரை “தூய்மைப் பணியாளர்கள்” என மாற்றியதைத் தவிர இவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. மாறாக அடிப்படை மருத்துவ வசதிக் கூட செய்துதராமல் இவர்களை சாகடிக்கிறது.
ஓரளவிற்கு முன்னேறிய தமிழகத்திலே இந்த நிலை என்றால், வடமாநிலங்களில் யோசித்து பாருங்கள். மேடைக்கு மேடை தூய்மை இந்தியா என்று கத்தும் இந்த மோடி அரசோ, மாடுகளுக்கு செய்து தரும் வசதிகள் கூட மனிதனுக்கு செய்து தர மறுக்கிறது. ஆம்! ’வல்லரசு’ இந்தியாவில் தீண்டாமை சுவர் எழுப்பிய காவி கூட்டம்தானே இவர்கள்.
அகிலன்
அவர்களுடன் நேரில் உரையாடிய அனுபவத்தை தருகிறது இந்தக் கட்டுரை. வினவு தொடர்ச்சியாக இதுபோன்ற அனுபவ கட்டுரைகளை கொண்டுவர வேண்டும் என்பது எனது விருப்பம்