திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வெற்றி!

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை, தென்காசி நகராட்சிகளில் துப்புரவு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் நெல்லை தொழிலாளர்களின்‌ ஒற்றுமையான போராட்டம் தான் அவர்களை வெற்றி பெற வைத்துள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில்  வேலை செய்யும் மாரி போன்ற தூய்மை பணியாளர்களுக்கு தினசரி வாழ்க்கை காலை 5 மணிக்கே தொடங்கி விடுகிறது. 6 மணி முதல் 12 மணி வரை துப்புரவு பணிகளை செய்ய வேண்டும். அவர் காலை உணவு சாப்பிடுவதில்லை. அதற்கான நேரம் அவரைப் போன்ற பணியாளர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்பதில்லை. மதிய உணவு முடித்த பிறகு 3 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வேலை இருக்கும். மழைக் காலம் என்றாலோ, அரசியல்வாதிகள் யாராவது அந்த நகரத்திற்கு பொதுக் கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்தாலோ அவர்களின் பணி இரவு 10 மணி வரை நீளும்.

இத்தனை கடினமான உடல் உழைப்பையும், சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் அவர்களுக்கு அரசு நிர்ணயித்த தினசரி ஊதியமான ரூபாய் 751 என்பது தரப்படுவதில்லை. அவர்களுக்கு கிடைப்பதோ வெறும் 480 ரூபாய் மட்டுமே. இதைக் கொண்டு தான் வாடகை, உணவு, மருத்துவம் போன்ற‌ அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். பண்டிகை காலங்களில் போனஸ் கிடையாது. துப்புரவு செய்யும் தெருக்களில் உள்ள வீட்டுக்காரர்கள்  தான் பண்டிகையின் போது சிறிது பணம் கொடுப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்களைப் போல் பண்டிகை கால விடுமுறை கிடையாது.

ஆனால் இந்த குறைந்தபட்ச வேலையும் கூட ஒப்பந்த அடிப்படையில் ஆக்கப்படும்போது அது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகிறது. CITU சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர். மோகன் தலைமையில் தொழிலாளர்களின் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் சுய உதவிக் குழுக்கள் மூலமாக மொத்தம்  753 தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பலர் கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்பவர்கள். ஆனாலும் பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கண்டு கொள்வதில்லை.

இந்த சுய உதவிக் குழு தூய்மை பணியாளர்களின் போராட்டம் 2004 சுனாமி பேரழிவின் காலத்தில் இருந்து தொடங்குகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலை செய்வதற்காக இவர்கள் முதலில் அனுப்பப்பட்டனர். அப்போது இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு வெறும் 30 ரூபாய் தான் கூலியாக வழங்கப்பட்டிருக்கிறது. பணி நிரந்தரம் செய்யப்படுவதாக கூறப்பட்ட எந்த வாக்குறுதிகளும் காப்பாற்றப்படவில்லை.

பின்னர், தங்களுக்குள் குழுவாக இயங்கும் சுய உதவிக் குழு என்ற முறை கொண்டுவரப்பட்டது. வெகுகாலப் போராட்டத்திற்கு பிறகு  நாள் ஒன்றுக்கு 436 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, அக்டோபர் மாதம் முதல் 480 வழங்கப்படுகிறது.


படிக்க: சென்னை துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !


இதற்கிடையில், மாநிலம் முழுவதும் துப்புரவு பணிகளை ஒப்பந்தத்திற்கு விடுவது என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநகராட்சிகளும், நகராட்சிகளும் துப்புரவு பணிகளை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கியது. இந்த நிறுவனங்கள் தாங்களே இந்த பணிகளை செய்வதில்லை. இவை வேறு நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தங்கள் விடுகின்றன. இப்படி துணை ஒப்பந்ததாரர்களின் கீழ் வேலை செய்யும் ஒரு தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு வெறும் 325 ரூபாய் தான் கூலியாக வழங்கப்படுகிறது.

மேலும், இதுவரை ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட தூய்மை பணியை எந்த நிறுவனமும் சரிவரை செய்தது இல்லை என்ற புகார்கள் பல மாநகராட்சிகளில் உண்டு. கோவை மாநகராட்சியில், குறிப்பிட்ட அளவு குப்பை கிடைக்கவில்லை என்றால் வேறு இடங்களுக்குச் சென்று சேகரிக்க சொல்லி ஒப்பந்த நிறுவனம் தொழிலாளர்களை மிக இழிவான முறையில் நடத்துகிறது.  இலக்கு நிர்ணயித்து செய்யக்கூடிய வேலை இதுவல்ல என்ற பொதுப் புரிதல் கூட இல்லாத லாபவெறி கொண்டு இயங்கி வருகின்றன ஒப்பந்த நிறுவனங்கள்.

திருநெல்வேலி மாநகராட்சியில் துப்புரவு பணிகளை செய்யும் ஒப்பந்தத்தை ராம் அன்ட் கோ என்ற நிறுவனம் பெற்றுள்ளது. ராம் அன்ட் கோ என்ற தனியார் நிறுவனம் தான் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாநகராட்சிகளில் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தொழிலாளர்களே இல்லை.

ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்களுக்கு சேவை கட்டணம், மேன் பவர் கமிசன் (Man Power Commission) என்று  மாநகராட்சி தரப்பிலே வழங்கப்படுகிறது. இருப்பினும் தொழிலாளர்களுக்கு கூலியை குறைத்துக்கொடுப்பதன் மூலமாக மட்டுமே ஒப்பந்த நிறுவனம் மாதம் ரூபாய் 52 லட்சம் சுருட்டுகிறது. இதில் 20 லட்சத்தை அதிகாரிகள் முதல் கடைநிலை மேஸ்திரி வரை லஞ்சம் கொடுக்க செலவழித்தாலும், ஒப்பந்த நிறுவனத்திற்கு தொழிலாளர்களின் கூலி வெட்டு மூலமாக மட்டுமே 32 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தமயமாக்கலால் தங்களது வாழ்வாதாரம் மேலும் மோசமாகும் என்பதை உணர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில், ஒப்பந்தமயமாக்கம் செய்யப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு நயவஞ்சகமாக தொழிலாளர்களை மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்க முற்பட்டனர் அதிகாரிகள்.


படிக்க: தூய்மை பணியாளர்களை சுரண்டும் கிரிஸ்டல் நிறுவனமும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகமும்!


அன்று இருந்த மாநகராட்சி ஆணையர் சுய உதவி குழுவின் தலைவர்கள், செயலாளர்களை அழைத்து  ராம் அன்ட் கோ ஒப்பந்ததாரரைப் பக்கதில் வைத்துக்கொண்டே  ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்ய சம்மதம் என்று பத்திரத்தில் கையெழுத்திட நிர்ப்பந்தித்துள்ளார்.  சில நாட்கள் சென்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். கையெழுத்து போடவில்லை என்றால் வேலை இல்லை என்றும் மிரட்டியுள்ளார். அடுத்த நாள் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற தொழிலாளர்களை,  இன்ஸ்பெக்டரும் மேஸ்திரியும் மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து சங்கம் மூன்று நாட்களாக தொடர்ந்து வேலை நிறுத்தம், காத்திருப்பு போராட்டம் ஆகியவற்றை நடத்தியது. அமைதியாகப் போராடிய தொழிலாளர்களையும் சங்க நிர்வாகிகளையும் போலீசு கைது செய்தது. தோழர். மோகன் அவர்களுக்கு கையில் காயம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் போலீசு வாகனத்தை மறித்தனர். இதில் பெண்கள் உட்பட 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர். ஆனால் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர்.

மறுநாள், அக்டோபர் 17 ஆம் தேதி திருநெல்வேலி, மாநகராட்சி துப்புரவு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்வதை எதிர்த்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள், CITU சங்கத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் தோழர். மோகன் தலைமையில் போராட்டம் நடத்தினர். இதனால், நெல்லை மாநகராட்சியில் சுய உதவிக் குழுக்களின் மூலமாக வேலை செய்யும் தூய்மை பணியாளர்களே இந்த பணியில் தொடர்வார்கள் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த வெற்றி தற்காலிமானது தான். இருப்பினும், இது தொழிலாளர்களின் ஒற்றுமையான, அமைப்பாக்கப்பட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இதை ஏன் தற்காலிகமான வெற்றி என்று குறிப்பிடுகிறோம்? தூய்மை பணியை முழுவதும்  ஒப்பந்தத்திற்கு விடுவது  அரசாங்கத்தின் கொள்கை முடிவு. தூய்மை பணியை மட்டுமல்ல பொருளாதாரத்தின் அனைத்து தொழிற்துறைகளிலும், சேவைத்துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை கொண்டு வருவது என்பது தான் நவதாராளவாத கொள்கை. திமுக மட்டுமல்ல இந்தியாவில் ஆளும் கட்சியாக  இருக்கும் அனைத்து கட்சிகளும் இந்த நவதாராளவாத கொள்கையை ஏற்றுக் கொள்கின்றன.

பணிகளை ஒப்பந்தத்திற்கு விடும் போக்கைக் கண்டித்து பல நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அவை யாவும் இந்த அரசின் கொள்கை முடிவை திரும்ப பெறவைக்க போதுமானது அல்ல. ஒப்பந்தமயமாக்கலை எதிர்த்த இந்த உள்ளூராட்சி நிறுவனங்களின் தீர்மானங்கள் அனைத்தையும் குப்பையில் வீசிவிட்டு இந்த ஒப்பந்தமய கொள்கையை அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக, திருமுருகன்பூண்டி நகராட்சியில் பணிகளை ஒப்பந்தத்திற்கு விடுவது பற்றிய  தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அரசின் கொள்கை முடிவை மீண்டும் தீர்மானமாக முன்மொழிந்தால் நிறைவேற்றி தான் ஆக வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் நிலை!

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை, தென்காசி நகராட்சிகளில் துப்புரவு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் நெல்லை தொழிலாளர்களின்‌ ஒற்றுமையான போராட்டம் தான் அவர்களை வெற்றி பெற வைத்துள்ளது.  இந்த போராட்டத்திற்காக அவர்கள் கடுமையாக பழிவாங்கப்பட்டனர். மேலும்,  ஆளும் வர்க்கம் ஒப்பந்த தொழிலாளர்கள், சுய உதவிக் குழு தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள் என பிரித்து சதி செய்கிறது.

இந்த நவதாராளவாத காலகட்டத்தில்,  தொழிற்சங்கங்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே பெரும் சவாலாக உள்ளது. ஏனெனில், இந்த பொருளாதார கட்டமைப்பு,  லாப நோக்கத்திற்காக தொழிலாளர்களிடையே நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சிப் பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள் என பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவை தொழிலாளர்களை ஒரு பொதுக்குடையின் கீழ் அமைப்பாக்குவதை மிகுந்த சிரமமானதாக ஆக்குகின்றன. மேலும், சாதி, மத அடிப்படையிலான அடையாள அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வெகுவாக பரவிவிட்ட இந்திய சூழலில் இந்த பிரச்சினை இன்னும் சிக்கலானதாக ஆகிறது. இதற்கு மத்தியில், ஒரு மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் கம்யூனிஸ்ட் கொடியின் கீழ் அமைப்பாக திரண்டு பெற்ற ஒரு தற்காலிக வெற்றி நமக்கு படிப்பினைகளையும் பெரும் நம்பிக்கையையும் கொடுக்கிறது.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க