சென்னை துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொழிலாளர்கள் (ஒப்பந்த தொழிலாளர்கள்) 16.05.2022 அன்று தொடங்கி மூன்றாவது நாளாக 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் CMWSSB-ன் பட்டினப்பாக்கம் தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இத்தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் சென்ற பலரையும் போலீசு தடுத்துள்ளது. சிலரை தாக்கி கைது செய்தும் உள்ளது. இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கின்றது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போராட்டங்களில் ஓடோடிப்போய் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு முதல்வரான பின்னர், தனது போலீசுத்துறை மூலம் போராட்டங்களுக்கு ஆதரவு தருவோரை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறார்.
டெண்டர் விட்டு ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்துவதை எதிர்த்து பல ஆண்டுகளாக வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை நிரந்தரம் கோரி 3 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். பல தொழிலாளர்கள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஒப்பந்த தொழிலாளர்களாகவே இறுதிவரை வாழ்ந்து மடிகின்றனர்.
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை, இவர்கள் ஒரு நாள் கழிவு நீரை அகற்றவில்லையென்றால் சென்னை நாறிவிடும். ஆனால், இத்தொழிலாளர்களின் வாழ்க்கையோ கொடும் துயரில். இத்தொழிலாளர்களுக்கு ஊதியமாக அதிகப்பட்சம் மாதம் ரூ.19,000 வழங்கப்படுகின்றது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அதிகபட்சமாக ரூ.25,000 வரை பெறுகிறார்கள். இப்படி ஒரு தொழிலாளிக்கு ரூ.6000 என பல இலட்சங்களை கொள்ளையடிக்கிறார்கள்.
இந்த அநியாயத்துக்கு எதிராக தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சட்டப்படியான கோரிக்கைகளை வலியுறுத்தி CMWSSB நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய தொழிலாளர்களை மிரட்டும் தொனியில் அணுகியுள்ளது. இது கடுமையான கண்டனத்திற்குரியது. தொழிலாளர்கள் தரப்பில் ஏற்கனவே பலமுறை அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், மனு கொடுத்து மனு கொடுத்து ஓய்ந்து போய், போராட்டத்தில் இறங்கி உள்ள தொழிலாளர்களை புதிதாக மனு அளிக்குமாறு அதிகாரிகள் நிர்பந்தித்து வருக்கின்றனர்.
தொழிலாளர்களோ தொழிற்தகராறு சட்டம், 1947, பிரிவு 18(1)-ன் கீழ் அவர்களின் கோரிக்கையை இருதரப்பு ஒப்பந்தமாக கையொப்பமிட வலியுறுத்தி வருகிறார்கள். தொழிலாளர்கள் தங்களை சட்டப்படி தொழிலாளர்களாக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால், அரசோ தொழிலாளர்களை சட்டப்படி தொழிலாளர்களாக கருத முடியாதென்று இருக்கிறது. ஆகவே, இது ஏதோவெறும் கூலி உயர்வு தொடர்புடைய பிரச்சினை மட்டுமன்று, தொழிலாளி தன்னை சட்டப்படி தொழிலாளியாக அறிவிக்க வேண்டும் என்பதற்கான போராட்டம். ஆனால், தனியார்மய – தாராளமய – உலகமய நடவடிக்கைகளோ தொழிலாளியை தொழிலாளி என்ற தன்மையிலிருந்து ஒழித்துக்கட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றது.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி நிரந்தரம் செய்ய கோரி போராடும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. தொடர்ந்து ஒரு தொழிலாளி 480 நாட்கள் வேலை செய்தால் அவரை நிரந்தரமாக்க வேண்டும் என்கிறது தொழிலாளர் சட்டம். ஆனால், தான் வகுத்த சட்டத்தைக் கூட அரசு துறைகளே மதிக்காமல், தொழிலாளர்களை வஞ்சிக்கும் வேலைகளை செய்து வருகிறது. தொழிலாளர்களின் நியாமான கோரிக்கையை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது.
நமக்காகத்தான் அவர்கள் உழைக்கிறார்கள். ஏதோ கழிவிரக்கத்தின் அடிப்படையில் அல்ல; தொழிலாளிகளின் உரிமைக்காக அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியதும் அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
தோழமையுடன், தோழர்அமிர்தா,
மாநிலப்பொருளாளர், மக்கள்அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை. 99623 66321.