தூய்மைப் பணி அல்லது மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுகிற பணி சாதி ரீதியிலானது என்றும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுகிற கொடூரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பணி சாதி அடிப்படையிலானது அல்ல என்கிறது ஒன்றிய அரசு.

நடைமுறையில் இந்தப் பணி சாதி அடிப்படையிலானதாகத்தான் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. மன்னர் காலத்திலும், அதன்பிறகும் கூட உயர்சாதியினரின் மலங்களை அள்ளிக் கொட்டுவதற்காகவே தாழ்த்தப்பட்ட மக்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதுதான் இந்திய வரலாறு. நவீனக் கழிப்பிடங்கள் வழக்கமாகிவிட்ட இந்த காலத்தில், தொழிற்சாலைகளிலும், குடியிருப்புகளிலும் அடைத்துக் கொள்ளும் சாக்கடைக் கால்வாய்களிலும், மலக்குழிகளிலும் இறங்கி சுத்தம் செய்கிற பணியைத் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் செய்து கொண்டிருக்கின்றனர். அரசின் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களே. உயர்பதவிகளுக்குப் போட்டிப் போடுகிற உயர்- இடைநிலை சாதியினர் எவரும் இந்தப் பணியைச் செய்ய முன்வருவதில்லை என்பதே சாதியப் படிநிலைக் கொடூரத்தின் சான்று.

அண்மையில் இந்து ஆங்கில இதழில் வெளியான புள்ளிவிவரம், தூய்மைப்பணியாளர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற உண்மையை வெட்டவெளிச்சமாக்குகிறது. இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழலுக்கான தேசிய நடவடிக்கை (National Action for Mechanised Sanitation Ecosystem NAMASTE) என்ற திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 3000 நகராட்சி அமைப்புகளில் உள்ள 38,000 தூய்மைப் பணியாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டமானது ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டமானது தூய்மைப் பணியாளர்களின் இறப்பைத் தடுக்கவும், இயந்திரமயமாக்கல் மூலம் அவர்களது பணியின் அபாயகரத்தைக் குறைக்கவும், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 2023-24 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தூய்மைப்பணியாளர்கள் விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 17 மாநிலங்களில் இத்திட்டத்தின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடும், ஒரிசாவும் தங்களுக்கென தனியாக விவர சேகரிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இத்திட்டப் புள்ளி விவரத்தின்படி, துப்புரவுப் பணியாளர்களில் 68.9 சதவீதத்தினர் ஆதிதிராவிடர்கள், 8.3 சதவீதத்தினர் பட்டியலினப் பழங்குடிகள், 14.7சதவீதத்தினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 8 சதவீதத்தினர் பொதுப்பிரிவினராவர். நாடு முழுவதும் மாநகராட்சி-நகராட்சி-உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலும், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களின் எண்ணிக்கையானது இதைவிட அதிகமாகும். உண்மை நிலை இவ்வாறிருக்க, தூய்மைப்பணி சாதி அடிப்படையிலானது இல்லை என்று சொல்வது வெறும் ஏமாற்று மட்டுமல்ல, சாதிரீதியிலான இந்தப் பணியை ஒழிக்க விரும்பவில்லை என்பதுடன் இணைந்ததுமே.

மூடிமறைக்கப்படும் மலக்குழி மரணங்கள்:

நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பிய நாடுகளில் உலகில் 5வது நாடு, அதுவும் நிலவின் தென்பகுதியில் “மென்தரையிறக்கம்” (soft landing) செய்த நாடு, இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டனையும் பொருளாதார ரீதியாக பின்னுக்குத் தள்ளி உலகப் பொருளாதாரத்தில் 5வது இடம் வகிக்கும் நாடு, உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டக் கூடிய ‘விஷ்வ குரு’ எனப் பெருமைப் பீற்றிக் கொள்ளும் நாட்டில், மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு தொழில்நுட்பம் இல்லை என்பது வெட்கக்கேடானது, தலைகுனிவுக்குரியது.

நாட்டையே டிஜிட்டல்மயமாக்குவது என்ற இலக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. கல்வி-மருத்துவம்-போக்குவரத்து-பணப் பரிவர்த்தனை என அனைத்தும் டிஜிட்டல்மயமாகி வருகிறது. நமது நாட்டில், அதுவும், தமிழகத்தில் சில உணவுக்கடைகளில் ரோபாட்டிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு உணவு பரிமாறப்படுகிறது. இயற்கை வளங்களை ஆராய்வதற்காக செயற்கைக்கோள் தயாரிப்பதற்கும், அனுப்புவதற்கும் பல லட்சம் கோடிகள் செலவு செய்யப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அம்பானி – அதானி கும்பல்களுக்குப் பல லட்சம் கோடிகள் வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்கள் மலக்குழிக்குள் இறங்குவதைத் தடுக்க ஒரு கண்டுபிடிப்புகூட செய்யப்படவில்லை, அதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதில் கிள்ளிக் கொடுத்திருந்தால் கூட இயந்திரமயமாக்கலை நோக்கி ஒரு அடியாவது எடுத்து வைத்திருக்கலாம். ஆனால், ‘சுதந்திர’மடைந்துவிட்டதாக சொல்லப்படும் இந்த 75 ஆண்டுகளில் இன்னும் மனிதர்கள் மலக்குழிக்குள் இறங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர், இறந்து கொண்டுதான் இருக்கின்றனர்.


படிக்க: விட்னஸ் (Witness): திரை விமர்சனம் (Movie Review) | தோழர் அமிர்தா | வீடியோ


2019 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில், நாடு முழுவதும் 377 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதுவும் 2022-இல் நடைபெற்ற மலக்குழி மரணங்களில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. களநிலவரம் இவ்வாறிருக்க 2023 ஆம் ஆண்டில் மலக்குழி மரணங்கள் நிகழவேயில்லை என்று சாதிக்கிறது ஒன்றிய அரசு. இந்த அதிசயம் பாசிச மோடி அரசில் ‘சாத்தியமே’.

2017-க்கு முன்பு வரை மலம் அள்ளுபவர்களை பணியமர்த்தத் தடை மற்றும் அவர்களது மறுவாழ்விற்கான சட்டம் 2013-இன் கீழ் மலக்குழி மரணங்கள் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தால் தனியாகப் பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் 2017-க்குப் பிறகு, இம்முறை கைவிடப்பட்டதோடு, மலக்குழி மரணங்களை ஏற்கெனவே உள்ள இதர சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுவருகிறது. மலக்குழி மரணங்கள் நடைபெறவில்லை என்று ஒன்றிய அரசு கூறுவதன் இரகசியம் இதுவே. நாடுமுழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்பதற்காக புள்ளியியல் நிலைக்குழுவைக் கலைத்தவர்களல்லவா மோடி-ஷா கும்பல்.

மலக்குழியில் இறங்குவதே கொடுமை, தூய்மைப்பணியின் போது மலக்குழியில் மரணித்தவர்களுக்காவது உரிய இழப்பீடு உரிய காலத்தில் வழங்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. மாநகராட்சி-நகராட்சி-உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தனியார் நிறுவனங்களிலும்-தனிநபர்களாலோ பணியமர்த்தப்படும் பல தொழிலாளர்களின் மரணங்கள் இழப்பீட்டு விதிமுறைக்குள் வருவதே இல்லை என்பது யதார்த்த உண்மை.

அரசு அல்லது நகராட்சியால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் பணியின்போது இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்ற உண்மை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டிருக்கிறது. யதார்த்த நிலையோ தூய்மைப் பணி தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்துக் கொள்கின்றனர். இந்த ஒப்பந்தப் பணியாளர்கள் மலக்குழிகளை சுத்தம் செய்யும் பணியின் போது இறந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது. தொழிலாளர்களை அபாயகரமான பணியில் இறக்கவிட்டு, அவர்களின் இறப்பிற்கு அரசு பொறுப்பேற்காது என்றால் அரசே ஒரு கார்ப்பரேட் முதலாளி போலல்லவா இருக்கிறது.

2018 ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்திருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே, சமூக செயல்பாட்டாளர்களின் தலையீட்டால் இழப்பீடு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களின் உழைப்பும், மரணமும் அரசால் கழிவுகளாக்கப்பட்டிருக்கிறது என்றே பொருளாகிறது.

மலக்குழிக்குள்ளே இருத்தும் மறுவாழ்வுத் திட்டம்

இந்தியாவில் கையால் மலம் அள்ளுவது 1993 ஆம் ஆண்டிலேயே தடைசெய்யப்பட்டிருந்தாலும் இந்தக் கொடுமை 2005 வரை இந்தியாவின் பல பகுதிகளில் அரங்கேறிக் கொண்டுதான் இருந்தது; சில இடங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் பல ஆண்டுக்கால போராட்டங்களால் மலம் அள்ள நிர்ப்பந்திப்பது 2013 இல் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் மலம் அள்ளுபவர்களை பணியமர்த்தத் தடை மற்றும் அவர்களது மறுவாழ்விற்கான சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் மலம் அள்ளுபவர்கள் யார் என்று வரையறுத்தது. இதன்படி, மனிதமனத்தை கையால் சுத்தப்படுத்துவது, எடுத்துச் செல்வது, அப்புறப்படுத்துவது அல்லது கையாள்வது, சுகாதாரமற்ற கழிப்பறை அல்லது திறந்த வடிகால் அல்லது, சுகாதாரமற்ற கழிவறைகளிலிருந்து மனித மலம் வெளியேற்றப்படும் குழியில், அல்லது ரயில் பாதை அல்லது அத்தகைய இடங்களில் பணியாற்றுபவர்களே மலம் அள்ளுவோராவர். இதில் சாக்கடை அல்லது செப்டிக் டேங்க் எனும் மலக்குழி சேர்க்கப்படவில்லை.

சாக்கடை அல்லது செப்டிக் டேங்கை பாதுகாப்புக் கருவி, இதர சுத்தப்படுத்தும் கருவிகள் மற்றும் எந்தவித பாதுகாப்பு நடைமுறையின்றி சுத்தம் செய்தால் அது மனிதர்களால் சுத்தப்படுத்துவது என்று வரையறுத்துள்ளது இச்சட்டத்தின் பிரிவு 2ஈ. இச்சட்ட வரையறையின்படி, மலக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மலம் அள்ளுவோர் கிடையாது.


படிக்க: என் பெயரும் ராமன் தான்! || கவிதை


2023-இல் உச்ச நீதிமன்றம் அபாயகரமான மலக்குழிகளைச் சுத்தம் செய்வது குறித்து ஒரு ‘மனிதநேயமிக்க’த் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. “பாதுகாப்புக் கருவி மற்றும் சுத்தப்படுத்தும் கருவிகளுடன் மனிதர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மலக்குழி சுத்தம் செய்கிற பணி அனுமதிக்கத்தக்கதே.

அபாயகரமான தூய்மைப் பணி செய்பவரும் மற்றும் கையால் மலம் அள்ளுபவரும் மனித மலத்தைக் கையாள்கின்றனர் என்றாலும், இந்த சட்டம் அபாயகரமான தூய்மைப் பணிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கிறது; மற்றும் அத்தொழிலாளர்களின் மறுவாழ்விற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளை இது வழங்காது”, என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஆகவே 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும் தூய்மைப்பணியாளர்களுக்கு அநீதி இழைத்துள்ளன.

மேலும், ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் 2023-24 ஆம் ஆண்டு அறிக்கையில்,191 சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் தொழிலாளர்களுக்கு சுய தொழில் திட்டங்களுக்காக மூலதன மானியமாக ரூ.2.26 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக இந்து ஆங்கில நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் 413 தூய்மைப்பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ரூ10.6 கோடி ரூபாயை மூலதன மானியமாக சுகாதாரம் சார்ந்த திட்டங்களுக்காக (Sanitation -related projects) பெற்றுள்ளனர் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி எடுத்துக் கொண்டாலும், நபர் ஒருவருக்குக் கிட்டத்தட்ட 2.5 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தத் தொகையைக் கொண்டு அவர்கள் வேறு ஏதேனும் தொழில் முதலீடு செய்திருக்க முடியும். ஆனால் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையைக் கொண்டு அதே தூய்மையைப் பணியைத்தான் செய்ய வேண்டும் என்பதுதான் விதி. தூய்மைப்பணியாளர்களின் மறுவாழ்வுத் திட்டம் என்ற பெயரில் வங்கிகளில் 15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. அவ்வாறு கடனுதவி பெறும் தூய்மைப்பணியாளர் Vacuum Loader, Garbage Disposal Vehicles, Suction Machine and Pay & Use Toilet for doing sewerage/cleaning work mechanically & other sanitation related income generating activities etc ஈடுபடலாம் என்கிறது ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தூய்மைப்பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம். அதாவது, இத்திட்டம் கூறுவது தூய்மைப் பணிக்கு இயந்திரங்கள் வந்தாலும் அப்பணியைத் தாழ்த்தப்பட்டவர்களே செய்யவேண்டும் என்ற பார்ப்பனிய மனுநீதியே! எனவே, இந்த பார்ப்பனிய சாதியக் கட்டமைப்பையும், அதைக் காப்பாற்றுகிற இந்த அரசுக் கட்டமைப்பையும் ஒழிக்கப் போராடுவதே தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஒரே தீர்வு.


அப்பு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க