கழிவு நீர்த் தொட்டிகளில் பலிகொடுக்கப்படும் பட்டியல் சாதி மக்கள்

2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

ந்தியாவில் சாக்கடை மாற்றும் செப்டிக் டேங்க் எனப்படும் கழிவு நீர்த் தொட்டி (sewer and septic tank workers – SSW) சுத்தம் செய்யும் பணியாளர்களில் 67 சதவிகிதம் பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் சமூகநீதி அதிகாரமளித்தல் அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துடன் இணைந்து கழிவு நீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு பணிகள் கையால் மேற்கொள்ளப்படுவதைத் தடை செய்வதற்கும், தொழிலாளர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் விதமாகவும்  சுகாதார  அமைப்புகள் இயந்திரமாக்கப்படுவதற்கான தேசிய நடவடிக்கையாக “நமஸ்தே” திட்டத்தை 2023 ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் செவ்வாயன்று (டிசம்பர் 17 அன்று) நாடாளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் எம். பி குல்தீப் இந்தோராவின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ”நமஸ்தே திட்டத்தின் கீழ் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேலை செய்கின்ற கிளினிக் தொழிலாளர்களில் (SSW) 57,758 பேரின் சுயவிவரங்கள் கணக்கிடப்பட்டு 54,754 பேரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. அத்தொழிலாளர்களில் 37,060 (67%) பேர் பட்டியல் சாதிகளை (SC) சேர்ந்தவர்கள்,  8,587 (15.73%) பேர் பிற்படுத்தப்பட்ட சாதிகளை (OBC) சேர்ந்தவர்கள், 4,536 (8.31%) பேர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 4,391 (8.5% ) பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்” என்கிற தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணிகளில் 67 சதவிகிதத்தினர் பட்டியல் சாதியினராக இருப்பது சாதிய அடிப்படையிலானது அல்ல, தொழில் சார்ந்தது என்று சாதி ரீதியாக அம்மக்கள் ஒடுக்கப்படுவதை மறைத்து அயோக்கியத்தனமாகப் பேசியுள்ளார்.


படிக்க: துப்புரவுப் பணியில் பதிலி முறை: சாதியத் தீண்டாமைக்குள் இருத்தப்படும் வால்மீகி சமூக மக்கள்


தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் நமஸ்தே திட்டத்தின் கீழ் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் விவரங்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக அரசாங்க தரவுகளே தெரிவிக்கின்ற நிலையில் கணக்கில் வராமல் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாதி அடிப்படையில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என்பதே இதன் மூலம் தெரியவருகிறது.

ஒன்றிய அரசு கையால் மனித கழிவுகளை அகற்றுவதைத் தடுத்து இயந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற நமஸ்தே திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறினாலும் அது வெறும் திட்டமாக மட்டுமே இருக்கின்றது. மனித கழிவுகளை அகற்றுவதற்கான இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படாததின் காரணமாக இன்று வரை மலக்குழி மரணங்களும் பாதாளச் சாக்கடையைப் பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்வதும் தொடர்கிறது. இதனால் தொடர் மரணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

குறிப்பாக 2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் சாதிய அடிப்படையில் துப்புரவு பணிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வால்மீகி சமூக மக்கள் ‘உயர்’ சாதியினர் மற்றும் ஆதிக்க சாதியினருக்குப் பதிலாக பதிலி (Proxy) முறையில் மிகக் குறைந்த ஊதியத்திற்குத் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படுவது குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியானது.

இந்த செய்தியோடு தொடர்புப்படுத்திப் பார்க்கும் போது கழிவு நீர்த் தொட்டி (எஸ்.எஸ்.டபிள்யு) சுத்தம் செய்யும் பணியாளர்களில் 67 சதவிகிதம் பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ள தகவல் குறை மதிப்பீடு என்பது திண்ணம்.

சாதி அடிப்படையிலான குலத்தொழிலில் மக்களை இருத்த விஸ்வகர்மா போன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பாசிச மோடி அரசு துப்புரவுப் பணியிலிருந்து பட்டியல் சாதி மக்களை எப்படி மீட்டெடுக்கும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க