துப்புரவுப் பணியில் பதிலி முறை: சாதியத் தீண்டாமைக்குள் இருத்தப்படும் வால்மீகி சமூக மக்கள்

“எனக்கு அரசு வேலை கிடைத்திருந்தால் மாதம் 20.000 ரூபாய் சம்பளத்துடன் மருத்துவ காப்பீடும் பெற்றுக்கொண்டு வாழ்ந்திருப்பேன். ஆனால் பதிலி முறையில் 30 ஆண்டுகள் வேலை பார்த்தும் மாதம் 5.000 ரூபாய் சம்பளம் மட்டுமே (உயர்சாதியினரால்) வழங்கப்படுகிறது”

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வால்மீகி சமூகத்தினரை ‘உயர்’சாதி மற்றும் ‘இடைநிலை’ சாதியினர் பதிலி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தும் கொடூரம் குறித்து “தி பிரிண்ட்” வலைத்தளம் “இந்தியாவின் மாபெரும் துப்புரவு ஊழல்” (The Great Indian Sanitation Scam) என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில அரசு துப்புரவு பணிகளில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. இட ஒதுக்கீட்டின் மூலம் ‘உயர்’சாதியினர், ‘இடைநிலை’ சாதியினர் துப்புரவு பணிகளில் அரசு வேலையில் இணையத் தொடங்கினர்.

ஆனால், அவர்கள் ஒருபோதும் துப்புரவுப் பணியில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்குப் பதிலாக வால்மீகி மக்களைப் பதிலி (Proxy) முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த பதிலி முறை “பத்லி” (badly), “2 by 2”, “ஏவஜ்” (ewaj) என்றும் அழைக்கப்படுகிறது.

பதிலி முறையிலான வேலையில் மாதந்தோறும் அரசிடமிருந்து ஊதியத்தையும் அரசு வேலைகளில் கிடைக்கும் மற்ற பலன்களையும் உயர்சாதியினர் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் துப்புரவு பணியில் வால்மீகி சமூகத்தினரை ஈடுபடுத்திவிட்டு அவர்களுக்கு மாதம் வெறும் 3.000 – 5,000 ரூபாய் என்ற சொற்ப காசை மட்டும் கொடுத்து விடுகின்றனர்.


படிக்க: “டீசண்ட் டிரஸ் போட்டா அந்த சாதிக்குப் பிடிக்காது”: சாதித் தீண்டாமை தலைவிரித்தாடும் கொண்டவநாயக்கன்பட்டி


பதிலிகளாக உள்ள வால்மீகி சமூகத்தினர் காலை 7 மணிக்கே வேலைக்கு வந்துவிட வேண்டும். ஆனால் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் 10 மணிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டு மற்ற வேலைகளுக்குச் சென்று விடுவார்கள். இது ஒரு இயல்பான நடைமுறையாக அங்கு பின்பற்றப்படுகிறது.

பதிலி முறையிலான வேலை குறித்து புஷ்பா தேவி என்ற வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் கூறுகையில், “எனக்கு அரசு வேலை கிடைத்திருந்தால் மாதம் 20.000 ரூபாய் சம்பளத்துடன் மருத்துவ காப்பீடும் பெற்றுக்கொண்டு வாழ்ந்திருப்பேன். ஆனால் பதிலி முறையில் 30 ஆண்டுகள் வேலை பார்த்தும் மாதம் 5.000 ரூபாய் சம்பளம் மட்டுமே (உயர்சாதியினரால்) வழங்கப்படுகிறது” என்று தனது அவல நிலை குறித்துத் தெரிவித்தார்.

மேலும் “இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு எனது இரு மகன்களையும் படிக்க வைக்க முடியாததால் இரண்டு பேருமே பதிலி முறையில் துப்புரவு வேலையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் தற்போது நகராட்சி குப்பை லாரியின் டிரைவர்களாக வேலை பார்த்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

புஷ்பாவைப் போன்று அவரது வீட்டின் அருகே உள்ளவர்களில் பலர் துப்புரவுப் பணியில் பதிலிகளாக வேலை செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு என்ற சம்பளத்திற்குப் பலர் வேலை செய்கின்றனர். 32 வயதான பூஜா 5 வருடமாக பதிலியாக வேலைப் பார்த்தும் மாதம் 3.000 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுவதாகத் தெரிவித்தார்.


படிக்க: ஊதிய குறைப்பு, பாலியல் துன்புறுத்தல்: டெல்லி அரசு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்!


கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள வால்மீகி தொழிலாளர்கள் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களின் அரசு வேலையைப் பறித்துக் கொள்வதால் அரசு வேலைகளில் தங்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் குறித்துப் பேசிய ஜோத்பூர் நகராட்சி ஆணையர் சுபமங்களா வால்மீகிகளின் பிரச்சனைகள் பற்றி தனக்கும் தெரியும் என்றும் இம்முறையிலான வேலை ராஜஸ்தானில் மட்டும் இருப்பதல்ல என்றும் கூறினார். மேலும், “துப்புரவுப் பணியில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதைக் கண்டறிய ஜோத்பூர் சவுத் முனிசிபல் கார்ப்பரேசன் (Municipal Corporation Jodhpur South App) என்கிற செயலியை உருவாக்கி அதன் மூலம் துப்புரவு வேலையில் சேர்ந்த நபர் வேலை செய்கிறாரா என்பதை எங்கள் குழு கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

பின்னர், “நகராட்சியில் ஆயிரக்கணக்கான பேர் துப்புரவு வேலை செய்வதால் அவர்களில் பதிலி தொழிலாளர்களை நியமித்தவர்களைக் கண்டுபிடிப்பது கடினம்” என்று உயர்சாதியைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றும் விதமாகப் பேசினார்.

மேலும், பதிலி வேலை பிரச்சனை பற்றி தனக்குத் தெரிந்த போதும் யாரும் தன்னிடம் புகார் தெரிவிக்கவில்லை என்று பாதிக்கப்படும் மக்கள் மீது குற்றம் சுமத்தும் வண்ணம் பேசினார்.

இந்த பதிலி முறை ராஜஸ்தானில் மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பின்பற்றப்படுவது குறித்து “தி பிரிண்ட்” தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த முறை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படுவதாகவும் கூறியுள்ளது.

இந்த பதிலி முறை துப்புரவுப் பணியில் பின்பற்றப்படுவதானது வால்மீகி சமூக மக்களைத் துப்புரவு தொழிலிலேயே இருத்த வைப்பதற்கான நடவடிக்கையாகும். இது தீண்டாமையை நிலைநிறுத்தும் நடவடிக்கையாகும். இந்த சட்டவிரோதமான பதிலி முறை பின்பற்றப்படுவதை அறிந்திருந்தும் அதிகார வர்க்கம் அதைத் தொடர்ந்து அனுமதித்து வருகிறது.

செய்தி ஆதாரம்: தி பிரிண்ட்


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க