“திராவிட மண்” என பெருமை பேசும் தமிழ்நாட்டில்தான் இன்றும் பட்டியல்சாதி மக்கள் செருப்பு அணியாமல் ஊர் வீதியில் நடக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு நடைமுறையாகவும் எழுதப்படாத சட்டமாகவும் இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில்தான் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது.
கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்துவரும் பட்டியல்சாதி அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த திரு. முருகானந்தம் கொத்தனார் வேலை செய்து வருகிறார். 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் குடும்ப நிலப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையின்போது, தன் பக்கத்தில் இருக்கும் நியாயத்தைப் பேசியதால் ஊர்த் தலைவர் சக்திவேல் நாயக்கர் என்ற ஆதிக்கச் சாதி வெறியனால் சாதி இழிவு சொற்களால் அவமதித்துத் தாக்கப்பட்டார்.
“ஏண்டா, சக்கிலி நீ இப்படி செலவு பன்னிட்டு காசு கொடுன்னு கேப்ப, உனக்கு காசு கொடுக்கனுமாடா?” என்ற சாதிய இழிவுச் சொற்களால் முருகனந்தத்தை அவமதித்துப் பேசி, அவரின் குரல்வளையைப் பிடித்து நெறித்து, கன்னத்தில் அறைந்து சக்திவேல் நாயக்கர் தாக்கியுள்ளான். கழுத்தை நெறிக்கும்போது வலியின் பிடியிலிருந்த முருகானந்தம் சக்திவேல் நாயக்கரின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி, இழுத்து கீழேத் தள்ளியுள்ளார்.
மேலும், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சக்திவேல் நாயக்கர் பட்டியல்சாதி அருந்ததியர் சமூகத்தின் மீதுள்ள சாதிய காழ்ப்புணர்ச்சி வெறியாலும், முருகானந்தத்தின் மீதுள்ள தனிப்பட்ட நிலப்பிரச்சினையாலும், தன் மகனை ஆயுதங்களுடன் அழைத்துவந்து முருகானந்தத்தை தாக்கியுள்ளான்.
உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகானந்தத்திற்கு பல சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்ததால் இச்சம்பவம் பட்டியல்சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இன்றும், முருகானந்தத்திற்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த திரு. கனகராஜ் இந்த வழக்கை முன்னெடுத்து நடத்தி வருகிறார். முருகானந்தத்தின் நிலப் பிரச்சினையை விசாரிக்கும் போது, அந்த கிராமத்தில் நடைபெற்று அரங்கேறிவரும் பல அதிர்ச்சியூட்டும் சாதிய அடிப்படையிலான வன்முறைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
ஊருக்குள் பட்டியல்சாதி சமூக மக்கள் கால்களில் செருப்பு அணிந்து செல்லக் கூடாது; டீக்கடையில் டீ குடிக்கக் கூடாது, அப்படியே குடித்தாலும் தேங்காய் கொட்டான்குச்சியைத்தான் பயன்படுத்த வேண்டும்; பைக்கில் போகும்போது ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிரே வந்தால் பைக்கிலிருந்து இறங்கி அவர்கள் சென்ற பிறகுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல வேண்டும் என தீண்டாமையையும் சாதிய அடக்குமுறையையும் தாழ்த்தப்பட்ட மக்கள் நாள்தோறும் சந்தித்து வருகின்றனர்.
படிக்க: நெல்லையில் தொடரும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள்: மக்கள் அதிகாரம் கள ஆய்வு
ஊருக்குள் வேலைக்குச் செல்லும்போது பட்டியல்சாதி மக்களை அவமதித்து தீண்டாமை மற்றும் சாதிவெறியில் மக்களை ஒடுக்குவது; சாதியின் பெயரைச் சொல்லி தகாத கெட்ட வார்த்தைகளால் அவர்களைத் தாக்கிப் பேசுவது; பட்டியல்சாதி மக்கள் கோயில்களுக்குள் சென்று வழிபடாமல், கோயிலின் வெளியே நின்று வழிபடுவது போன்ற சாதிய பாகுபாடுகள் இன்றளவும் கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
முழுக்கைச் சட்டை அணியக் கூடாது, நேர்த்தியான உடை உடுத்தக் கூடாது போன்ற நினைத்துப் பார்க்க முடியாத தீண்டாமைக் கொடுமைகளை இன்றளவும் நம் மக்கள் எதிர்கொள்கின்றனர்.
திரு. கனகராஜின் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி) தொடர் முயற்சியால் இந்தக் கிராமத்தின் தீண்டாமை பிரச்சினை தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பட்டியல்சாதி மக்கள் பொதுப்பாதையில் செருப்பு அணிந்து நடந்து, ராஜ் காளியம்மன் கோயிலில் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்நிகழ்வு பல தேசிய செய்தி ஊடகங்கள் வழியே வெளியானதன் விளைவாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் தலையிட்டு, முருகானந்தத்தை சந்தித்து கிராமத்தை ஆய்வு செய்து பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், அதன் பிறகு ஒரு மாதம் கழித்து அக்கோயிலுக்கு தலித் மக்கள் உள்ளே வந்ததால் தீட்டு என்று ஆதிக்கச் சாதியினர் பூஜை செய்துள்ளனர். அதிலிருந்து இன்றளவும் கோயில்கள் மற்றும் பொதுப் பாதையில் பட்டியல்சாதி மக்கள் தனியாகப் போக இயலாத இழிவான சூழலே நிலவுகிறது.
சட்டரீதியாக எந்தவொரு தடையும் இல்லையென்றாலும் நிலமற்ற பட்டியல்சாதி மக்கள் பொருளாதார ரீதியாக ஊரிலிருக்கும் ஆதிக்கச் சாதியினரை நம்பி இருப்பதால் சாதிய அடிப்படையிலான வன்முறைகள் கிராமங்களில் தொடர்கின்றன என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், முருகானந்தம் இதற்கு விதிவிலக்காக சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
“திராவிட மண், பெரியார் மண்” என்ற பெருமிதங்கள் மட்டும் போதாது. சாதி ஒழிப்பிற்கான போராட்டத்தில் சாதியத்தை எதிர்க்கும் அனைவரும் இணைய வேண்டும்.
நன்றி: டி.டபுள்யூ நியூஸ்
செங்கொடி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram