நெல்லையில் தொடரும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள்:
மக்கள் அதிகாரம் கள ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் என்கிற 17 வயது மாணவர் பாலிடெக்னிக் படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் நான்காம் தேதி வீட்டின் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது மோதுவது போல் சென்ற வாகனத்தில் இருந்தவர்களை பார்த்து ‘ஓரமா போங்க’ எனக் கூறியுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய மூன்று பேர் “இப்ப என்னல செய்யணும் உனக்கு” என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். குடிபோதையில் இருந்த அவர்களை ஊர்க்காரர்கள் தடுத்துள்ளனர். இதனையடுத்து “இரண்டு மணி நேரத்தில் உன்னை வெட்டுறேன் பார்” என்று சொல்லிவிட்டு காரில் வந்த கும்பல் கிளம்பி சென்றுள்ளது.
சொன்னது போல் இரண்டு மணி நேரம் கழித்து மாலை சுமார் 5 மணியளவில் 9 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாளுடன் மூன்று பைக்குகளில் வந்துள்ளது. வந்த வேகத்தில் மனோஜ் வீட்டின் தகரக் கதவை அரிவாளால் வெட்டி உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தனியாக இருந்த மனோஜின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளது. அரிவாளால் இரண்டு கால்களிலும் வெட்டியுள்ளது. கத்தியை வைத்து தலையில் கொத்தியுள்ளது. இதில் கீழே விழுந்த மனோஜை இறந்துவிட்டார் என கருதி வெளியில் வந்து கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளது.
மனோஜின் கதறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டுக்காரர் மனோஜை தன் வீட்டுக்கு அழைத்து வரும்போது, அதை பார்த்த அந்த வெறிபிடித்த கும்பல் மீண்டும் வந்து பக்கத்து வீட்டிலும் புகுந்து மனோஜை வெட்டிக் கொல்ல முயற்சித்திருக்கிறது. இதனால் பக்கத்து வீட்டு கதவும் ஜன்னலும் அரிவாளால் வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர் மனோஜை காப்பாற்றவில்லை என்றால் மனோஜை இந்த கஞ்சா போதை, சாதிவெறி கும்பல் வெட்டி சாய்த்திருக்கும். இன்று அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் என்பதே உண்மை.
ஏன் இந்த கொடூரமான கொலைவெறி?
மனோஜ் தேவேந்திரகுல வேளாளர் பிரிவை சேர்ந்தவர். மனோஜை வெட்டிய ஒன்பது பேரும் தேவர் சாதி பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பக்கத்து ஊரான திருமலைக்கொழுந்துபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒன்பது பேருமே 17 வயதிலிருந்து 20 மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இதில் ஒருவர் மாணவர். இவர்கள் அனைவருமே கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி இந்த சாதிவெறி தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைடுத்து, நடந்த சம்பவம் குறித்து மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக கள ஆய்வு மேற்கொண்டோம். முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோஜை சென்று சந்தித்தோம். இரண்டு கால்களிலும் கட்டுப் போடப்பட்டு தலையில் தையலுடன் மனோஜ் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாம் கேட்டபோது தலை இன்னும் வலித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். அவரால் நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியவில்லை. இப்படி அமர்ந்திருந்தால் தலையில் வலி கூடுதலாக ஏற்படுவதாக கூறினார். தனக்கு நேர்ந்த இந்த கொடூரத்திலிருந்து அவர் இன்னும் மீளவில்லை.
அதன்பின் சம்பவம் நடந்த மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள மனோஜின் வீட்டிற்கு சென்றோம். மனோஜின் அப்பா கொத்தனார் வேலைக்கு செல்பவராகவும் அம்மா ஓட்டலில் பாத்திரம் தேய்ப்பவராகவும் உள்ளனர். இரண்டு பேரும் அதில் வரும் கூலியை கொண்டுதான் குடும்பத்தை நடத்துகின்றனர். சாதாரண ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். வேறு எந்த பின்புலமும் இவர்களுக்கு இல்லை.
மேலும், தேவேந்திரகுல வேளாளர், தேவர், நாடார் ஆகிய மூன்று பிரிவுகளையும் பெரும்பான்மையாக கொண்ட மாவட்டம் திருநெல்வேலி. இதேபோல்தான் மேலப்பாட்டம் மற்றும் திருமலை கொழுந்துபுரம் கிராமமும் இந்த சாதிகளை பெரும்பான்மையாக உள்ளடக்கியதாகவே உள்ளது.
ஊருக்கு அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன் இருந்தும் இந்த குற்றங்களை தடுக்க முடியவில்லை. மேலும் மனோஜ் வெட்டப்பட்டு பல மணி நேரங்கள் கழித்தும் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து குற்றவாளிகளை போலீஸ் கைது செய்யவில்லை. இதனால் மேலப்பாட்டம் கிராம மக்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் செய்த பின்பு எஸ்.பி. நேரடியாக வந்து சமாதானம் பேசி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றவாளிகளில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மூன்று பேரை தேடிக் கொண்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இதே ஆதிக்கச் சாதியினரை தலித் மக்களில் யாரேனும் ஒருவர் வெட்டியிருந்தால் ஊரில் ஒருவர்கூட இருந்திருக்க முடியாது. ஆண்கள் அனைவரையும் போலீஸ் பிடித்துச் சென்றிருக்கும் என ஊர் மக்கள் நம்மிடம் கூறினர்.
இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறாங்க?
இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறாங்க என்று சொல்பவர்களுக்கு கள ஆய்வு சேகரிக்க சென்றபோது கிடைத்த சில அனுபவங்களே சான்று.
திருமலைகொழுந்துபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டிற்கு செல்ல ஊர் முனையிலிருந்த ஊர்க்காரர் ஒருவரிடம் வழி கேட்டபோது, இது தேவர் தெரு அடுத்ததாக நாடார் தெரு அடுத்ததாக எஸ்.சி. தெரு இருப்பதாக ‘விளக்கமாக’ நமக்கு வழி சொன்னார். மேலும் ஊரில் இருந்த மற்றொரு பெரியவரிடம் சம்பவத்தைப் பற்றி விசாரித்தபோது, “எஸ்.சி. பயலுகதான் சேட்டை செய்றாங்க. இப்ப நீங்க வண்டியில போறீங்க, உங்கள ஏதாச்சும் பேசினா உங்களுக்கு கோவம் வரும் இல்ல. அதே மாதிரி அவனும் பேசி இருக்கான். இந்தப் பயலுக அருவாள எடுத்து வெட்டிருக்காங்க” என்று இயல்பாக சாதிவெறி ஊறிய வார்த்தைகளில் நமக்கு பதில் கூறினார்.
இதற்கு முன்பு மேலப்பாட்டம் வரை சென்று கொண்டிருந்த பேருந்து தற்போது அதையும் தாண்டி திருமலைகொழுந்துபுரம் வரை சென்று முதலில் அங்குள்ளவர்களை ஏற்றிக்கொண்டு வருகிறது. இதில் அங்கேயே இருக்கைகள் முழுவதும் நிரம்பிய பின் மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் ஏறும்போது உட்கார இடமில்லாமல் நின்று கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படி நின்று கொண்டிருக்கும் போது மேலே கைபடுகிறது, கால்படுகிறது, மேலே உரசுகிறது பின்னால் போ என்று சாதி தீண்டாமையை மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தும் இடமாக, அன்றாடம் ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமையை அனுபவிக்கும் இடமாக இந்த பேருந்து பயணம் உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள். ஓரமா போங்க என்று சொன்னாலே வெட்டுவேன் என்றால் சமத்துவம் குறித்து பேசினால் தடம் தெரியாமல் அழித்துவிடுவோம் என்பதுதான் மனோஜ் மீதான கொலைவெறி தாக்குதலில் இவர்கள் சொல்ல வரும் செய்தி.
அனைவரும் சாதிவெறியர்களா?
ஆனால் இரு பிரிவு உழைக்கும் மக்களுமே சாதிய வேறுபாடுகளை துறந்து தங்களுக்குள் இணக்கமாக வாழ்வதற்கே முயற்சி செய்கிறார்கள். நிலத்தில் இரு பிரிவு உழைக்கும் மக்களும் ஒன்றாக இணைந்து விவசாய வேலைகள் செய்வதை நாம் களத்திற்கு சென்றபோது நேரடியாகவே பார்க்க முடிந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு பிரிவினரும் மாறி மாறி வெட்டிக் கொண்ட சம்பவத்திற்குப் பின் இரு ஊர் பெரியவர்களும் இணைந்து சமாதானம் பேசி இரண்டு ஊரையும் அமைதிபடுத்தியுள்ளனர். சாதி சங்கங்களுக்கு, சாதி தலைவர்களுக்கு இடம் அளிக்காமல் தங்களுக்குள்ளேயே இந்த சமாதான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளனர். தேவர் சாதியை சேர்ந்த திருமலை கொழுந்துபுரம் கிராமத்தில் நாம் சென்று பேசியபோது, “பெரியவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை இந்த கிராமத்துக்கும் அந்த கிராமத்துக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இது போன்ற ஒரு சில பேரால்தான் இந்தப் பிரச்சினை வருகிறது” என்று இரு ஊர் மக்களும் கூறினார்கள்.
அதே சமயம் பாதிக்கப்பட்ட மனோஜ் ஊரை சேர்ந்த இளைஞர்கள் யாரும் சம்பவத்தை காரணமாக வைத்து வேறு எந்த தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என மனோஜின் பகுதியை சேர்ந்த பெரியவர்கள் இளைஞர்களை அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இரு ஊரைச் சேர்ந்த ஊர் மக்களுக்கும் ஒரு சமாதான கூட்டம் நடத்தவும் ஊர்ப் பெரியவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தேவர் சாதியைச் சேர்ந்த சில இளைஞர்களிடம் சம்பவம் குறித்து பேசினோம். இத்தாக்குதலுக்கு சாதிவெறிதான் முதன்மையான காரணம் என்று தாங்கள் சாந்திருக்கும் சாதியையே விமர்சனம் செய்தனர். திருவிழாவில் சாதி தலைவர்களின் படங்களை போட்டு பேனர் வைப்பது, குருபூஜை கொண்டாடுவது போன்றவைகள் இளம் பருவ வயதினரின் மனதில் சாதி வெறியை விதைக்கிறது என்பதை அந்த இளைஞர்கள் ஆழமாக கூறினர்.
மேலும், வெட்டுப்பட்ட மனோஜை பற்றி கூறும்போது, “அந்தப் பையன் மிகவும் நல்ல பையன், அமைதியானவன், எங்கள் ஊரில் அவனுக்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். இங்கு வருவான், எங்களுக்கும் அவன் நண்பன்தான். படிப்பை பாதியில் நிறுத்தியபோதும் கூட தானே முன்வந்து தன் சொந்த முயற்சியுடன் படிப்பை தொடர்கிறான்” என்று சாதி கடந்து ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு பக்கபலமாக ஆதிக்கச் சாதி என்று சொல்லக்கூடிய தேவர் சாதி இளைஞர்கள் பேசினர்.
இதுதான் இந்த சமூகம் அடுத்த கட்டத்திற்கு போவதற்கான பாதை. இம்மண்ணில் சாதியை ஒழிப்பதற்கான நம்பிக்கை அளிக்கக் கூடிய பாதையை இந்த இளைஞர்கள் இதன் வழியாக நமக்கு காட்டுகிறார்கள். ஊருக்குள் சாதி தலைவர்களின் போஸ்டர்களை காண முடிந்தது. மேலும் தேர்தல் நேரத்தில் வரைந்த பா.ஜ.க. சின்னமான தாமரையையும் காண முடிந்தது. இந்த இரண்டும் கைகோர்த்துக் கொண்டு இந்த பகுதியில் இளைஞர்கள் மத்தியில் சாதிவெறியை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும், இளைஞர்கள் சாராயம் பற்றிச் சொல்லும் போது எப்போதுமே டாஸ்மாக்கில் பிளாக்கில் காசு கொடுத்து தடையில்லாமல் சரக்கு வாங்கிக் கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்கள் மத்தியிலேயே கஞ்சா சரளமாக புழங்குகிறது. சில மாணவர்கள் அந்த கஞ்சாவை பெரியவர்களுக்கும் கைமாற்றுகின்றனர் என்று கூறினர்.
தீர்வு என்ன?
ஊருக்கு அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. ஆனால் குற்றங்களை தடுக்க முடியவில்லை. பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழங்குகிறது. டாஸ்மாக்கில் மது ஆறாக ஓடுகிறது. அன்றாடம் பயணிக்கும் பேருந்தில் சாதி தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. இவை எதையும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. ஆதிக்கச் சாதி தலைவர்களுடனும் சங்கங்களுடனும் கைகோர்த்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இந்துத்துவா கும்பல் சாதி வெறியை இம்மண்ணில் தூண்டி விடுகிறது. களத்தில் இந்த சாதி வெறியை நிகழ்த்துவதற்கு கஞ்சா, மது போதைகள் உந்துதலாக இருக்கிறது.
எனவே, கஞ்சா, மது போதையை தடுக்க வேண்டும், டாஸ்மாக்கை மூட வேண்டும், ஆதிக்கச் சாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இந்துத்துவாகும்பல்களை இம்மண்ணிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும். இந்த பாதையில் ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து பயணித்தால் மட்டுமே சாதி ரீதியான தாக்குதல்கள், படுகொலைகளில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் அல்ல, இந்த கொடூர செயல்களுக்கு கருவியாக பலியாகிக் கொண்டிருக்கும் ஆதிக்கச் சாதிவெறி மனநிலை கொண்ட இளைஞர்களையும் நாம் பாதுகாக்க முடியும்.
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்,
9385353605.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram