4 ஆண்டுகளில் 330 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்: கொத்தடிமைகளாக உழைக்கும் மக்கள்!

உத்தரப்பிரதேசத்தில் 2017 மற்றும் 2021-க்கு இடையில் இதுபோன்ற 47 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 43 பேரும், டெல்லியில் 42 பேரும் இறந்துள்ளனர். ஹரியானாவில் 36 பேரும், மகாராஷ்டிராவில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.

0

2017 மற்றும் 2021-க்கு இடையில் நாட்டில் யாரும் கையால் துப்புரவு பணியில் ஈடுபடவில்லை, ஆனால் 330 பேர் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது விபத்துக்களில் இறந்துள்ளனர் என்று மத்திய அரசு ஆகஸ்ட் 2 அன்று மக்களவையில் தெரிவித்துள்ளது.

கழிவுநீர்க் குழாய்கள் அல்லது செப்டிக் டேங்க்களில் இருந்து மனித மலத்தை கையால் அகற்றும் நடைமுறை துப்புரவாளர்கள் மறுவாழ்வு சட்டம், 2013-ன்கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது நடைமுறையில்தான் உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி கிரிஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கையால் துடைப்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நாட்டில் கையால் துப்புரவு செய்பவர்கள் ஒப்பந்தம், புலம்பெயர்ந்தோர் மற்றும் சாதாரண தொழிலாளர்களா அல்லது கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்களா, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றிய விவரங்களை சந்திரா கேட்டிருந்தார். 20%-க்கும் மேற்பட்ட கையால் சுத்தம் செய்பவர்கள் வேலை வாய்ப்பு மற்றும் மறுவாழ்வு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கேட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமாக சுத்தம் செய்யும்போது, இறந்த துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை குறித்த மாநில வாரியான தரவுகளை கோரினார்.

“இல்லை ஐயா, 2013-ம் ஆண்டு வேலை வாய்ப்பு மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் பிரிவு 2(1)(g)-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, கையால் துப்புரவு தொழிலில் ஈடுபடும் நபர்கள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை” என்று அதாவாலே பதிலளித்தார். “கையால் துடைப்பது டிசம்பர் 6, 2013 முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியிலிருந்து எந்த நபரும் அல்லது நிறுவனமும் எந்தவொரு நபரையும் கைமுறையாக துப்புரவு பணியில் ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ முடியாது” என்கிறார்.


படிக்க : இரண்டு ஆண்டுகள் சம்பளம் நிலுவை : தூய்மைப் பணியாளர் தற்கொலை !


இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் 58,098 கையால் துப்புரவு செய்பவர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது என்று ஜூலை 26 அன்று அத்வாலே மக்களவையில் தெரிவித்தார். ஜூலை 19 அன்று, 2017 முதல் இந்தியா முழுவதும் 347 துப்புரவுத் தொழிலாளர்கள் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்துள்ளனர் என்று அரசாங்கம் மக்களவையில் தெரிவித்தது.

“தொழில்நுட்ப ரீதியாக, அவர்களை கையால் சுத்தம் செய்பவர்கள் என்று முத்திரை குத்த முடியாது” என்று கர்நாடக சஃபாய் கர்மாச்சாரி கமிஷன் தலைவர் எம்.சிவண்ணா கோட் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். “கையால் துப்புரவு செய்பவர்கள் குறிப்பாக பஞ்சாயத்துகள், நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் நியமிக்கப்பட்டவர்கள்”

ஆகஸ்ட் 2 அன்று, 2017 முதல் 2021 வரை நாட்டில் கைமுறையாக துப்புரவு செய்வதால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று அத்தவாலே கூறினார். எனினும், கடந்த ஐந்து வருடங்களில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்களால் 330 பேர் உயிரிழந்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் 2017 மற்றும் 2021-க்கு இடையில் இதுபோன்ற 47 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 43 பேரும், டெல்லியில் 42 பேரும் இறந்துள்ளனர். ஹரியானாவில் 36 பேரும், மகாராஷ்டிராவில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.

துப்புரவு தொழிலாளர்களை கையால் மனித கழிவுகளை தடுக்க சட்டம் இயற்றப்பட்டது என்று கூறினாலும், மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஸ்வச் பாரத் திட்டத்திற்கு நிதி ஒதிக்கி இருக்கிறேன் என்று சொன்னாலும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கை மலரவில்லை. இன்றளவும் மிகவும் அடிமாட்டு கூலிக்கே கொத்தடிமைகளாக வேலை செய்துவருகிறார்கள். மத்திய அரசு துப்புரவு தொழிலாளர்களின் நலன் மீது அக்கறையற்று உள்ளது என்பதையே இம்மரணங்கள் நமக்கு உணர்த்து செய்தி! மாநில அரசுகளும் துப்புரவு தொழிலாளர்களின் உயிரை பற்றி கவலைக்கொள்ளவில்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்வது மட்டுமே.

உழைக்கும் மக்களை வதைக்கும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசையும், அதன் அடிவருடி அரசுகளையும் மோதி வீழ்த்தாமல் துப்புரவு தொழிலாளர்களுக்கு வாழ்க்கையில்லை!

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க