பிரிஹான்மும்பை மாநகராட்சியின் திண்மக்கழிவு மேலாண்மைத் துறை ஊழியர் ஒருவர் தான் பணி செய்தமைக்கு இரண்டு ஆண்டுகளாக சம்பளம் தராததால் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அத்துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
27 வயதான ரமேஷ் பர்மர், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரும் இளைய சகோதரர் கல்பேஷ் ஜோகேஸ்வரி-ம் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள ஜனதா காலனியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
பர்மர் கொரோனா தொற்று காலத்தில் இரண்டு ஆண்டுகள் சஃபாய் கமாகராக (துப்புரவுத் தொழிலாளியாக) பணி புரிந்ததற்காக ஒரு நாள் சம்பளம் கூட பெறவில்லை என்று கடந்த டிசம்பர் 23-ம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். பர்மரின் சம்பளத் தொகையை தருவதில் அலட்சியம் காட்டியதாக பி.எம்.சி-யின் ஒரு நிர்வாக அதிகாரி, ஒரு தலைமை எழுத்தர் மற்றும் மற்றொரு எழுத்தர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
படிக்க :
தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !
திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
பர்மரின் தந்தை ஜகதீஷ் பர்மர், ​​திண்மக்கழிவு மேலாண்மைத் துறையில் சுமார் 30 ஆண்டுகள் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரிந்தார். கடந்த 2019 செப்டம்பர் 4-ம் தேதியன்று தனது 54-வது வயதில் கோரேகானில் வெள்ள மேலாண்மை தொடர்பான பணியில் ஈடுபட்டிருக்கும்போது இறந்துவிட்டார். அவர் பணியில் இருந்தபோது இறந்ததால் பி.எம்.சி விதிகளின் படி, ரமேஷ் பர்மருக்கு தந்தையின் வேலை வழங்கப்பட்டது.
பர்மர் ஓர் பகுதியளவு மாற்றுத் திறனாளி. ஆரம்பத்தில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்த பர்மர், தனது கைகளை கொண்டு தூய்மை செய்யும் பணிகளை செய்ய முடியாத காரணத்தினால் அலுவலக வேலைக்கு மாற்றப்பட்டார். கொரோனா காலத்தில் உள்ளூர் ரயில் சேவைகள் மூடப்பட்டபோது பர்மர் தன் அலுவலகத்திற்கு 5 கி.மீட்டர் நடந்து செல்வார் என்று அவரது சகோதரி கூறினார்.
பர்மருக்கு மாதச் சம்பளம் மற்றும் தன் தந்தையின் வருங்கால வைப்பு நிதி ஆகியவை வழங்கப்படவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்ட இறுதி நாள் வரை தனக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டு அதிகாரிகளிடம் போராடியுள்ளார். மேலும், துறையின் உயர் அதிகாரிகளால் பர்மர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது மரணத்தைத் தொடர்ந்து கன்சர்வேன்சி ஊழியர்கள் சம்பள நிலுவைக்காகப் போராட்டம் நடத்தினர்.
பர்மர் சம்பளம் பணத்தை தராமல் இழுத்தடித்ததில் சம்பந்தப்பட்ட, நிர்வாக அதிகாரி அனிதா நாயக், எழுத்தர் பங்கஜ் கில்லாரே மற்றும் தலைமை எழுத்தர் சமிரா மஞ்ச்ரேக்கர் ஆகியோர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ரமேஷ் பர்மாரின் குடும்ப உறுப்பினர்கள். ( புகைப்படம் : அமித் சக்ரவர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)
பர்மரின் மூத்த சகோதரி ஷீத்தல் “எங்கள் தந்தையின் சேவை நிதி இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரமேஷ் எங்கள் தந்தையின் சேவை நிதிக்கான விவரங்களை புதுப்பிக்கும்படி கேட்கும்போதெல்லாம் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காமல் பர்மரை அலைக்கழித்துள்ளனர். எந்த முயற்சிகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்பது சமீபத்தில் அவருக்கு தெரியவந்தது.” என்றார்.
உறவினர் மகேந்திரா “பலமுறை அவர் அலுவலகத்தில் தனது தந்தையின் வருங்கால வைப்பு நிதி நிலுவையை தருமாறு அதிகாரிகளிடம் கேட்டார்” என்றார்.
உழைக்கும் வர்க்கத்தினரின் உழைப்பை அரசு அதிகாரிகள் சுரண்டுவது என்பது காலம் காலமாக நடத்து கொண்டிருக்கிறது. மாநகராட்சிக்கு கீழ் தூய்மைப் பணி செய்யும் எத்தனையோ தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகத் தான் அரசு அதிகாரிகளின் கீழ் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து முன்களப் பணியாளர்களாக வேலை செய்தார்கள். அவர்களில் பலர் கொரோனா தாக்குதலில் இறந்துள்ளார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ரமேஷ் பர்மரின் இரண்டு ஆண்டுகால சம்பளத் தொகையையும், அவரது தந்தையின் வைப்பு நிதியையும் திருப்பி தராமல் திருடியதோடு பர்மரை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துன்புறுத்திருக்கிறது அதிகார வர்க்கம். துப்புரவுத் துறை மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் தொழிலாளர்களை துச்சமாக மதிக்கும் போக்கு ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் இரத்தத்தில் ஊறியுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக சங்கமாக திரண்டுப் போராடுவது மட்டுமே, இத்தகைய மரணங்களைத் தவிர்த்து  சுயமரியாதை மிக்க வாழ்வையும் வேலை நிலைமைகளையும் தரும் !

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க