தனியார்மய அரசாணைகளை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தினக்கூலி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களையும், உள்ளாட்சி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடிய தொழிலாளர்கள் முழக்கம் எழுப்பினர்.

துப்புரவு மற்றும் இதர பணிகளை தனியார்மயமாக்கும் அரசாணைகளை ரத்து செய்யக் கோரி, ஆகஸ்ட் 27 அன்று சென்னை எழும்பூரில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர்.

“மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளில் நிரந்தரத் துப்புரவுப் பணி மற்றும் இதர பணிகளைத் தனியார்மயமாக்க 152, 139, 115, 10 ஆகிய நான்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்; 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களையும் தேர்தல் கால வாக்குறுதிப்படி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசாணை (2டி) 162-இன் படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்துப் பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலி வழங்கக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும்; விலைவாசி உயர்வுக்கேற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படியுடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் அதன் விதிகள் 2023 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும்; முன்களப் பணியாளர்களுக்கு அறிவித்த 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளனம் இந்த போராட்டத்தை நடத்தியது.


படிக்க: திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வெற்றி!


இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தினக்கூலி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களையும், உள்ளாட்சி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

சம்மேளனத் தலைவர் கே.ஆர். கணேசன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகள் இயக்குநர் ஆகியோரை சந்தித்தும், சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கே.ஆர்.கணேசன், “மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர தூய்மைப் பணி உள்பட இதர பணிகளில் பணிபுரியும் ஊழியர்களைத் தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, தனியார் மயமாக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும் அரசாணையை அமலாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

அதற்கேற்ப பஞ்சப்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியின் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

துப்புரவுப் பணிகளை தனியார்மயமாக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறியவற்றைக் கூட அது நிறைவேற்றவில்லை. சமூக நீதி அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு, தொழிலாளர்களை வஞ்சிக்காமல் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க