தனியார்மயம் : கார்ப்பரேட்டுகளுக்காக விரட்டியடிக்கப்படும் சென்னையின் தூய்மைப் பணியாளர்கள் !
சென்னை மாநகராட்சியின் மண்டலம் 8-ல் (அண்ணாநகர்) செனாய் நகர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த எட்டு மாத காலமாக ஈவிரக்கமின்றி வேலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 05/08/2021 தேதியிலிருந்து 08/08/2021 வரை தொடர்ச்சியாக போராடினார்கள். கடந்த எட்டு மாத காலமாகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறார்கள்.
தனியார் காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்து சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 12000 தொழிலாளர்களுக்கும் மாநகராட்சியின் கீழ் பணி நிரந்தரம் செய் அல்லது தொகுப்பூதிய முறையில் பணி நியமனம் செய் என்பது போராடுபவர்களின் கோரிக்கையாக உள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்கள் தனியார்மயமாக்கல் நடவடிக்கையின் கீழ் கார்ப்பரேட்டுகளுக்கு டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி நேரடியாக திடக் கழிவு மேலாண்மையில் இருந்து வெளியேறிவிட்டது.
படிக்க :
♦ திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை
இதுவரை சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (NULM) நேரடியாக மாநகராட்சியின் கீழ் வேலைக்கு எடுக்கப்பட்டார்கள். இதில் ஒன்றிய அரசு 60% நிதியும், மாநில அரசு 40% நிதியும் அளிக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. இதிலும் பணி பாதுகாப்பு என்ற உத்திரவாதம் எதுவும் இல்லை. போராடும் தூய்மைப் பணியாளரிடம் நாம் பேசியதிலிருந்து அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் எந்தவித PF/ESI, பணிக் கொடை ஆகிய பலன்கள் எதுவும் கிடைக்கப் பெற்றவர்களில்லை.
வறுமை ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் இதுவே ஒரு அரசின் திட்டமிடப்பட்ட சுரண்டல் முறைதான். ஆனாலும் பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாக ஏன் அதில் பணிபுரிந்தார்கள் எனில் எப்படியாவது வேலை நிரந்தரமாக்கப்படும் என்ற ஒரே நம்பிக்கையில்தான். புயல், வெள்ளம், மழை, பேரிடர் காலங்கள், சென்னை கடலில் எண்ணெய் கொட்டியபோது என்று இன்றைய உயிரை பறிக்கும் கொரோனா காலகட்டம் வரை எந்நேரமும் சென்னை நகர மனிதர்களின் கழிவுகளை சுத்தம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மாநகராட்சியின் கதவுகளைத் திறந்துவிட்ட ‘தியாகத் தலைவியின்’ கொள்ளைக் கூட்டம் கடந்த ஜனவரியில் ‘வேலை இல்லை வெளியே போ’ என்று எவ்வித முன்னறிவிப்புமின்றி தூய்மைப் பணியாளர்களின் கழுத்தை அறுத்துவிட்டது. அன்றிலிருந்து தொடர்கிறது, இந்த சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களின் உரிமைப் போராட்டம்.
இவ்வாறு தூய்மைப் பணியாளர்களின் வேலை பறித்தெடுப்பின் பின்னணி சென்னை மாநகரின் திடக்கழிவு மேலாண்மையை கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைப்பத்ததில், தனியார்மயமாக்களில் குடி கொண்டிருக்கிறது.
வருடத்திற்கு 447 கோடி மதிப்பீட்டில் எட்டு ஆண்டுகளுக்கு தேனாம்பேட்டை (மண்டலம் 9), கோடம்பாக்கம் (மண்டலம் 10), வளசரவாக்கம் (மண்டலம் 11), ஆலந்தூர் (மண்டலம் 12), அடையாறு (மண்டலம் 13), பெருங்குடி (மண்டலம் 14) மற்றும் சோழிங்கநல்லூர் (மண்டலம் 15) ஆகிய 7 மண்டலங்கள் 86 டிவிசன்களின் (divisions) குப்பை அள்ளும் பணியை மாநகராட்சி கைவிட்டு ஸ்பெயினின் உர்பெசெர் இந்திய நிறுவனமான சுமீட் இணைந்த உர்பெசெர் – சுமீட் (Urbaser – Sumeet) என்னும் பன்னாட்டு கார்ப்பரேட்டிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 1/2020-ல் டெண்டர் அளிக்கப்பட்டு எடப்பாடியால் கோலாகலமாக துவக்கவிழா கொண்டாடப்பட்டது.
அடுத்து ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட ராம்கி என்விரோ என்ஜினியர்ஸ் லிமிடெட் (Ramky Enviro Engineers Ltd) என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு திருவொற்றியூர் (மண்டலம் 1), மணலி (மண்டலம் 2), மாதவரம் (மண்டலம் 3) அம்பத்தூர் (மண்டலம் 7) ஆகிய நான்கு மண்டலங்களை இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ஆட்சி முடியும் தருவாயில் குப்பை அள்ளும் பணியின் டெண்டரை அளித்திருந்தார்.
இதில் கவனிக்கத்தக்கது இந்த ராம்கி நிறுவனம் ஏற்கனவே கையாண்ட அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததாலேயே இந்த மண்டலங்கள் உர்பெசெர் நிறுவனத்திற்கு அளித்திருந்தார்கள். ஆனால், அதற்குத்தான் மீண்டும் வடசென்னையை தாரை வார்த்தது அன்றைய எடப்பாடி அரசு.
இந்த தனியார் ஒப்பந்தமுறை வந்ததிலிருந்தே தூய்மைப் பணியாளர்களின் இன்னல்களும் மேலும் மேலும் மோசமாக அதிகரித்துள்ளது.
உர்பெசெர் – சுமீட் வந்த நேரத்திலேயே அது கையாளும் மண்டலங்களிலிருந்த நிரந்தரத் தொழிலாளர்களை அங்கிருந்து நீக்கி மாநகராட்சி கையாளும் மண்டலம் 4,5,6,8 ஆகியவற்றிற்கு மாற்றியது. இதன் மூலம் ஏற்கனவே இந்த மண்டலத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் சுமார் 5,000 பேர் தெருவுக்கு விரட்டியடிக்கப்பட்டார்கள்.
ஒரு தூய்மைப் பணியாளரின் மகன் இறந்ததற்காக விடுப்பு கேட்டதற்கு கூட இந்த ஒப்பந்த நிறுவனங்கள் தர மறுத்துள்ள கொடுமை அரங்கேறியிருக்கிறது. இதிலிருந்தே அவர்களின் பணிச் சூழலின் நிலையை புரிந்து கொள்ள முடியும். வார விடுமுறை எடுப்பதும் வலுக்கட்டாயமாக நிறுவனங்களால் தடுக்கப்படுகிறது. பணியாட்களை குறைத்து வேலை சுமையை தொழிலாளர் முதுகில் அதிகரித்துள்ளது.
மேலும், NULM திட்டத்தில் ரூ.12,000 வரை சம்பளம் பெற்றவர்கள் தற்போது ரூ.9,000 என்ற குறைந்த சம்பளத்தில் தற்போது வேலை செய்து வருகிறார்கள். அந்த தொகையும் முழுதாக கிடைக்காது; விடுப்பு என்ற பெயரில் சம்பளம் வெட்டப்பட்டு 8,000 அல்லது 7,000 என்றே கிடைக்கும் என்கிறார்கள் தொழிலாளர்கள். மேலும், பல நேரங்களில் பெண்கள் பாலியல் ரீதியிலான தொல்லைகளையும் அனுபவிக்கிறார்கள்.
ராம்கி, உர்பெசெர் – சுமீட்-ல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகமிக சொற்பமே, 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களை ஒருவர் கூட நம்மால் அடையாளம் காண முடியாது. இத்தனை காலம் பணியாற்றிய 50 வயது கொண்டவர்களை வேலையிலிருந்து தூக்கி எறிந்ததன் மூலம் அவர்களை மறைமுகமாக “தேவையற்றவர்களாக” நேரடி பொருளில் கூறுவதானால் “சாக வேண்டியவர்களாக” துரத்தியிருக்கிறது இந்த நிறுவனங்கள். தற்போது இதில் ஒப்பந்த பணிபுரியும் தொழிலாளர்களும், எட்டு ஆண்டுகள் முடிந்த பின்பு அவர்களும் வீதியில் தூக்கி எரியப்படுவார்கள்.
இன்னும் எண்ணற்ற சுரண்டல் கொடுமைகளை தொழிலாளர்கள் பட்டியலிடுகிறார்கள். அவர்களின் துயரக் கதைகள் ஏராளம். தனியார்மயத்தின் மிக மோசமான அறவுணர்ச்சியற்ற பக்கங்கள்தான் இவை. ஆகையால்தான் அவர்கள் காண்டிராக்ட் முறையை ஒழித்துக்கட்டி வேலை நிரந்தரத்தை கோருகிறார்கள்.
எடப்பாடி ஆட்சிக்காலத்தில் கொரோனாவிலும் உயிரை பணயம் வைத்த தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறித்து நடுத் தெருவில் நிறுத்தியபோது அன்றைய எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விடியல் ஆட்சியில் இரண்டே மாதங்களில் பணி இழந்தவர்கள் உட்பட 12,000 தொழிலாளர்களுக்கும் வேலை உறுதி செய்யப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். மேலும், இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூய்மை பணியாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, வேலை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்திருந்தார்.
தேர்தலுக்கு முன்பு திமுக வேலை நிரந்தரம் என்று முழக்கமிட்டு இம்மக்களின் ஓட்டுக்களை தேர்தலில் அறுவடை செய்து கொண்டு தற்போது எடப்பாடி புரிந்த அதே துரோகத்தையே செய்து வருகிறார்கள்.
படிக்க :
♦ அதிகரிக்கும் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பு விகிதம் !
♦ அத்திமரத்தூர் : மயான வசதி கோரிய தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் வெற்றி !
போலிசை வைத்து போராடும் மக்களை அச்சுறுத்துவதும், மேலும் கடந்த 07/08/2021 அன்று “பெயர் முகவரிகளை எழுதித்தா” என தொடர்ந்து அவர்களை மிரட்டியிருக்கிறது அரசு. எடப்பாடி ஆட்சியில் காண்ட்ராக்ட் முறையை எதிர்த்த திமுக இன்று அதே காண்ட்ராக்டில் தூய்மைப் பணியாளர்களை வேலை செய்ய அறிவுறுத்துகிறது.
மேலும், தூய்மைப் பணியாளர்களிடம் பேசியதில் மு.க.ஸ்டாலின் தங்கை கனிமொழியும் (தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்) குப்பை அள்ளுவதில் காண்டிராக்ட் எடுக்கப்போவதாக கூறுகிறார்கள். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.
தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளால் அரசு நிறுவனப் பணிகள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்ப்பதும், அரசு சேவைகளிலிருந்து முற்றாக விலகி கார்ப்பரேட்டுகளுக்கு தளம் அமைத்து கொடுப்பது மட்டுமே அரசின் பணியாக மற்றப்பட்டு வருவதன் விளைவைத்தான் தற்போது நாம் அனுபவித்து வருகிறோம். இதை செவ்வனே செய்து முடிப்பதே மோடி முதல் மு.க.ஸ்டாலின் வரையிலான ஆட்சியாளர்களின் கடமை என்பது ஒவ்வொரு முறையும் நமக்கு நிரூபிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
![]()
தேவா
செய்தி ஆதாரம் : New Indian Express, The Hindu, Businessline









ஆட்சி மாறினாலும் காட்சி மட்டும் மாறுவதில்லை….