இந்தியாவின் பெண் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடும் விகிதம் 16.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் விகிதம் 16.1-ஆக குறைந்துள்ளது. இந்த செய்தி கொரோனா பேரிடர் காலத்தின் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய அபாயகர சித்திரத்தைக் காட்டுகிறது.
இந்தியாவில் பெரும்பாலான பெண்கள், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழிற்சாலைகளில் தான் வேலை செய்து வருகிறார்கள்.
உலக வங்கியின் மதிப்பீட்டின் படி, உலகிலேயே மிகக் குறைவான பெண் தொழிலாளர்கள் விகிதம் கொண்ட நாடுகளின் இந்தியாவும் ஒன்றாகும். இங்கு 2005-ம் ஆண்டில் 26 சதவீதத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் இருந்த நிலையில் 2019-ம் ஆண்டில் 20.3 சதவீதமாக குறைந்துள்ளது.
படிக்க :
♦ வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !
♦ ஆம்பூர் ஷூ தொழிற்சாலை பெண் தொழிலாளர் போராட்டம்
ஆகஸ்டு 2-ம் தேதியன்று காட்டப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தின் கண்காணிப்பு மையத்தின் தரவுகள், இந்தியாவின் ஜூலை மாத வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தின் 9.17 சதவீதத்தில் இருந்து 6.95 சதவீதத்திற்கு குறைந்துள்ளதாக பதிவு செய்துள்ளது.
“கடந்த காலத்தில் இந்திய பெண்கள் என்ன சமூக மற்றும் பொருளாதார வருவாய்களை அடைந்திருந்தாலும், அது கொரோனா பெரும்தொற்று காலத்தில் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டது” என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் கூறியுள்ளார்.
இப்படி பெண் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கள் கொரோனா இரண்டாம் அலையில் இன்னும் மோசமான நிலையை அடைந்திருந்தது. இதில் பெரும்பான்மையானவர்கள் முறைசாரா துறையில் வேலை செய்வதால் வேலை இழப்பை துள்ளியமாக மதிப்பிடுவது கடினம்.
எனினும் நாட்டின் பல்வேறு சிறு வணிகம் மற்றும் சிறுத்தொழில் நிறுவனங்கள் சென்ற ஆண்டில் அதிகப்படியான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் அதிகமாக வேலை இழப்பை சந்தித்தவர்கள் பெண் தொழிலாளர்கள்தான். கிட்டத்தட்ட 60 சதவீதம் பெண்கள் வேலை இழந்துள்ளார்கள் என ஒரு லட்சம் சிறு தொழில் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஏ) கூறுகிறது.
அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் நிரந்தர வேலைவாய்ப்பு மையத்தின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டின் மார்ச் முதல் டிசம்பர் வரை வேலை இழந்த 47 சதவீதம் பெண் தொழிலாளர்கள் – இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்குவதற்கு முன்பே – நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்டர்கள் குறைந்து, உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததை தொடர்ந்து தங்கள் பணியாளர்களை பதியாக குறைத்துவிட்டதாக, ஆடை, வாகன உதிரிபாகங்கள் மற்றும் உணவு பேக்கேஜிங் தயாரிப்பாளர்களான ஓக்லா தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (Okhla Factory Owners Association) முதலாளிகள் கூறியுள்ளார்கள்.
பல பெண்கள் வேலை இழப்பின் காரணமாக தங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு என கருதி மன மற்றும் உடல் ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்கிறது ராய்ட்டர்ஸ் இணையதளம்.
கொரோனா பேரிடர் பலநாடுகளின் பொருளாதார நெருக்கடியை அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறு குறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெருவாரியாக இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண் தொழிலாளர்கள் முதன்மையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
பெண் தொழிலாளர்களின் வேலை உத்திரவாதத்தை அரசு உறுதிபடுத்தாத வரை பெண்களுக்கு ஏற்படும் வேலை பற்றிய கவலைகள், இன்னல்கள், மனநலம் மற்றும் உடல்நல பாதிப்புக்கள், பொருளாதார சிக்கல்கள் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்.