வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எச்.எம்.இ எனப்படும்  சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனம், கோரோனா பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் நிகழ்ந்துள்ள பலி எண்ணிக்கை குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் லான்செண்ட் எனப்படும் மருத்துவம் மற்றும் அது சார்ந்த தகவலை வெளியிடும் பத்திரிகையில் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, 191 நாடுகளில் 18.2 மில்லியன் மக்கள் கொரோனா பேரிடர் காலத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால், உலகம் முழுவதும் 5.94 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவே அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்தில் அதிகமான உயிர்பலி எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது. அமெரிக்காவில் 1.13 மில்லியன் மக்கள் கடந்த 24 மாதத்தில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவிக்கிறது. ஆனால், இந்த கால கட்டத்தில் கிட்டதட்ட அரசு கணக்கீட்டை விட 1.14 மடங்கு அதிகமாக இறப்பு நிகழ்ந்துள்ளதாக இந்த நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
படிக்க :
இலங்கை : கொரோனா பிணவறைகளின் துயரக் கதைகள் | நதீஷா அத்துகோரல | ரிஷான்
உபி : கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜனை நிறுத்தி பலி கொடுத்த மருத்துவமனை
இந்த ஆய்வுக்குழு  இந்தியாவில், இறப்புகளை மதிப்பிடுவதற்கு சிவில் பதிவு முறையுடன் (CRS) தொடங்கியது. 2018-19 ஆண்டில் இந்தியாவில் சி.ஆர்.எஸ் எண்ணிக்கையை வைத்து 2020-21 ஆண்டில் உள்ள மக்கள் தொகையை கணக்கிட்டது. அவ்வாறு கணக்கிடுகையில் மொத்த மக்கள் தொகையில் 4.07 மில்லியன் எண்ணிக்கை வேறுபாடு இருந்திருக்கிறது. இந்த வேறுபாடு, கூடுதல் மரணங்களைக் குறிப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கொரோனா மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இம்மரணங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உத்தரகாண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இறப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு 200 பேருக்குமேல் என்ற அளவில் இருந்துள்ளது. இது 50 நாடுகளில் ஏற்பட்ட கொரோனா உயிர்பலிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமானது.
அதேபோல், அருணாச்சலப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, சிக்கிம், இராஜஸ்தான், குஜராத், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் உயிர்ப் பலி 1 லட்சம் பேருக்கு 120.6 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளது. இது உலக சராசரி இறப்பு விகிதத்தைவிட குறைவானதே ஆகும். இந்தியாவில் அதிகபட்ச மரணங்கள் நிகழ்ந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 6 இலட்சம் மக்கள் இறந்துள்ளனர். 3 இலட்சம் மக்கள் இறந்துள்ள பீகார் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகாரப்பூர்வமாக இறந்த மக்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 42 ஆயிரம் பேர். ஆனால், அங்கு எதார்த்தத்தில் 6 லட்சத்து 16 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுபோல் உத்தரப்பிரதேசத்தில் 22 ஆயிரத்து 900 பேர் இறந்துள்ளதாக அம்மாநில அரசு கூறுகிறது. ஆனால், அங்கு 5 இலட்சத்து 17 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டில் 36 ஆயிரத்து 800 பேர் இறந்துள்ளதாக மாநில அரசின் அதிகாரப்பூர்வ தகவலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 2 இலட்சத்து 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக இந்த நிறுவனம் கூறுகிறது.
மொத்தத்தில் காவிகளின் ஆட்சியின்கீழ், மோடியின் புதிய இந்தியாவின் இலட்சணத்தையும், கார்ப்பரேட்டுகளின் நேரடி ஆட்சியின்கீழ் உள்ள அமெரிக்காவின் இலட்சணத்தையும் அப்பட்டமாக அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது கோவிட்-19.

வினோதன்
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க