சிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட அரசாங்க வேலைவாய்ப்பு தரவு ஆய்வு முடிவுகளில் இந்தியாவில் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2011 – 12-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களில் 25%-ஆக இருந்த பெண்களின் வேலை வாய்ப்பு தற்போது 18% ஆக குறைந்துள்ளது. மேலும், நகர்ப்புறங்களில் பணிக்கு செல்லும் பெண்களின் விகிதம் 15%-ல் இருந்து 14% ஆகவும் குறைந்துள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் மாத சம்பள வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2004-ம் ஆண்டு 36.6%-ஆக இருந்ததை விட 2017-ம் ஆண்டில் 52.1%-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் சுயதொழில் அல்லது முறைசாரா வேலைகளில் அவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

Women Workers 1
மாதிரிப் படம்

கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வேலைவாய்ப்பின்றி உள்ளபோதிலும், அதில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக சமீபத்தில் அரசாங்கத்தால் வெளிடப்பட்ட “குறிப்பான காலத்திற்கான தொழிலாளர் கணக்கெடுப்பு – 2017 – 2018” உறுதிபடுத்துகிறது.

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக, தேசிய வேலைவாய்ப்பு தரவுகள் அம்பலமான நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த மே 31 அன்றுதான் அதிகாரப்பூர்வ தொழிலாளர் ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

பணியில் பெண்கள்

1993-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கிராமப்புற பெண்களில் கிட்டத்தட்ட 33% பேர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர். கடந்த 2011-12-ம் நிதியாண்டில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் வேலைவாய்ப்பு வேலையின்மை கணக்கெடுப்பு கடைசியாக நடத்தப்பட்டபோது, இது எட்டு சதவீத புள்ளிகள் குறைந்து சுமார் 25% ஆகவும், நகர்ப்புற பெண்களின் விகிதம் ஒரு சதவீதம் குறைந்து 15% ஆகவும் இருந்தது.

2017-18-ல் நடத்தப்பட்ட தொழிலாளர் கணக்கெடுப்பு மதிப்பீடுகள் இந்த நிலை இன்னும் மோசமாகி உள்ளதை தெளிவுபடுத்தியது. இந்த ஆய்வில், கிராமப்புற பெண்களின் பங்களிப்பு 18% ஆகவும், நகர்ப்புற பெண்களின் பங்களிப்பு 14% ஆகவும் குறைந்துள்ளது.

படிக்க:
சூரிய ஒளி மின்சாரம் : மக்கள் வாழ்வாதாரத்தையும் சூழலியலையும் அழிக்கும் அரசு !
♦ தற்கொலை தேசமா நம் இந்தியா ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

வீழ்ச்சியடைந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கணவரின் வருமான அதிகரிப்பு பெண்கள் பணிக்கு செல்வதை குறைக்கும் காரணியாக உள்ளதென்றும், பெண்களின் வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற பொறுப்புகள் அவர்களை பணிக்கு செல்வதில் இருந்து கட்டுப்படுத்துகின்றன என்றும் இருவேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை, உயர்கல்வியைத் தொடர்வதற்காக பெண்கள் பணிக்கு செல்வதில்லை என தெரிவிக்கின்றது. 2015-ம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையில், பெண்களுக்கு தகுதியான, சிறந்த வேலைகள் இல்லாததே அவர்களை பணிக்கு செல்வதிலிருந்து தடுப்பதாக வாதிடுகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இருப்பினும், கல்வியறிவு பெற்ற பெண்கள் நகரங்களில் சிறந்த வேலைகளைக் கோருகிறார்கள் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. நகர்ப்புறங்களில் சில பெண்கள் முறைசார்ந்த வேலைகளில் அதிகளவில் பணியாற்றுகின்றனர்.

2004-ம் ஆண்டில் நகர்ப்புறங்களில் முறையான சம்பளம் பெறும் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 35.6%-லிருந்து 2017-ம் ஆண்டு வாக்கில், 52.1% ஆக உயர்ந்திருக்கிறது. ஆகவே, சுயதொழில் புரிவோர் அல்லது முறைசாரா தொழிலாளர்களைக் காட்டிலும் வழக்கமான முறையான ஊதியத் தொழிலாளர்களில் தொழிலாளர் பெண்களின் பங்கு அதிகரித்திருப்பதை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை, சுட்டிக்காட்டுகிறது.

2004 மற்றும் 2017 -க்கு இடையில் நகர்ப்புறங்களில் சுயதொழிலில் ஈடுபடும் பெண்களின் பங்கு 47.7%-ல் இருந்து 34.7%-ஆக குறைந்தது. அதே காலகட்டத்தில், நிரந்தரமற்ற தொழிலாளர்களாக பணிபுரியும் பெண்களின் பங்கும் 16.7%-ல் இருந்து 13.1%-ஆக குறைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் கிராமப்புறங்களிலும் முறையான, ஊதியப் பிரிவில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்தும், நிரந்தரமற்ற பணியாளராக மற்றும் சுயதொழில் வேலைகளில் சரிவும் ஏற்பட்டது. இது வரவேற்கத்தக்க வளர்ச்சியாக இருந்தபோதிலும், முறையான, சம்பள வேலைகளில் பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

Women Workers
மாதிரிப் படம்

வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மதிப்பிடுவதற்கு, ஒட்டுமொத்த உழைப்பாளர்களின் எண்ணிக்கையில் உள்ள ஆண்கள் அல்லது பெண்களின் விகிதத்தால், குறிப்பான வேலைவாய்ப்பு வகையில் அந்த பாலினத்தின் பங்கு வகுக்கப்படுகிறது. இதன்படி, சம்பளத் தொழிலாளர்களாக பெண்களின் பங்களிப்பு காலப்போக்கில் அதிகரித்திருந்தாலும், அவர்கள் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதில்லை. மேலும், பெண்கள் வேலை செய்யும் போது, அவர்கள் சுயதொழில் செய்பவர்களாகவோ அல்லது கூலித் தொழிலாளர்களாகவோ பணியாற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

சுயதொழில் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த தரவை அறிய ஒரு முக்கியமான கேள்வியை ”குறிப்பான காலத்திற்கான தொழிலாளர் கணக்கெடுப்பு” முன்வைத்தது. இந்தியாவில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் சுயதொழில் செய்வதால், இது முந்தைய ஆய்வுகள் கவனிக்காத ஒரு முக்கியமான விசயமாகும். வருமானம் குறித்த இந்த தரவு இப்போது வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்களும் பெண்களும் எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வழிவகை செய்கிறது.

படிக்க:
ஐசிஐசிஐ சந்தா கோச்சார் : முன்னுதாரணமான பெண் ஊழல் முதலாளி – விசாரணையில் அம்பலம் !
♦ இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !

முறைசார்ந்த, ஊதியப் பிரிவில் கிராமப்புறங்களில் பணிபுரியும் ஆண்கள், பெண்களை விட ரூ 4,594.50 அதிகமாகவும், நகர்ப்புறங்களில் ரூ.3,429.75 அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அதாவது, ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூ.100-க்கும் பெண்கள் கிராமப்புறங்களில் ரூ.70-ம், நகர்ப்புறங்களில் ரூ.80-ம் மட்டுமே வருமானமாகப் பெறுகிறார்கள் என்பது தெரியவருகிறது.

தொழிலாளர் கணக்கெடுப்பில் வேலை நேரம் குறித்த கேள்வியும் கேட்கப்பட்டது. இதன்படி, கிராமப்புறங்களில் ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதத்திற்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும், நகர்ப்புற குடியேற்றங்களில், சுயதொழில் மற்றும் முறைசார்ந்த வேலைகளில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஆண்களை விட அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்தப்படுவதாக தெரியவருகின்றது.

சுயதொழில் செய்யும் ஆண்கள் பெண்களை விட வாரத்திற்கு 12 மணிநேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். தினக்கூலி வேலைகளில், ஆண்கள் ஒரு வாரத்தில் பெண்களை விட ஏழு மணி நேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். இருப்பினும், பெண்களின் ஊதியம் பெறாத வேலை நேரத்தை துல்லியமாக கணக்கிடப்பட முடியாததால் இதைக் கொண்டு பெண்கள் குறைவான மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்பதாக இது குறிக்கவில்லை.

வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பெண்களின் ஊதியமற்ற உழைப்பை புரிந்துகொண்ட பிறகு, வேலை செய்யும் மணிநேரங்களின் தரவை சிறப்பாகப் பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் தொழிலாளர்களின் மீதான உழைப்புச் சுரண்டல் இந்தியா முழுவதும் இருந்துவரும் வேளையில், பெண்கள் ஊதியமில்லா உழைப்பிலும் (குடும்ப பராமரிப்பு வேலைகள்) குறைவான ஊதிய வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு மேலதிகமாகச் சுரண்டப்படுகிறார்கள். இந்தியா போன்ற பார்ப்பனிய ஆணாதிக்கச் சமூகத்தில், இங்கு சுரண்டல் இன்னும் தீவிரமாக இருக்கிறது.


சுருக்கப்பட்ட தமிழாக்கம்:  எல்லாளன்
கட்டுரையாளர் : ஜானகி ஷிபு மற்றும் ரோசா ஆப்ரஹாம்
நன்றி : ஸ்க்ரால் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க