ந்தியா போன்ற சாதிய சமூகத்தில், நவீன தொழிற்துறையில் ஆணாதிக்கமும் சாதியும் மூலதனமும் ஒன்றிணைந்து பெண்களின் மீது செலுத்தும் ஆதிக்கம் மிக நுட்பமானதாக இருக்கிறது. பெண்களின் விடுதலை குறித்துப் பேசும் பலரும், உழைக்கும் பெண்கள் மீதான ஆணாதிக்க சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டலைப் பற்றிப் பேசுவதில்லை.

கடந்த ஜனவரி 1-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் நாச்சி அப்பேரல்ஸ் என்னும் ஜவுளி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இளம் பெண் செயஸ்ரீ என்பவர் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், அதே தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்த தங்கதுரை, செயஸ்ரீக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும் சம்பவம் நடந்த அன்று தங்கராஜும் அவரது உறுவினர் ஜெகநாதனும் சேர்ந்து செயஸ்ரீயை கொலை செய்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், இந்த செய்தி எந்த ஒரு தேசிய ஊடகங்களிலும் பேசப்படவில்லை.

படிக்க :
♦ உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு

செயஸ்ரீ கொல்லப்பட்டதை சாதாரண கொலையாக மட்டும் கடந்து போகமுடியாது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்வுகள் பெண்கள் அதிகமாக வேலை செய்யும் ஜவுளி தொழிற்சாலைகளில் அடிக்கடி நடக்கக்கூடியதாக இருக்கிறது.

பெண்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்கும், இந்த ஆலைகளின் நிர்வாகங்கள், பெண்களின் பாதுகாப்புக்கு எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை. செயஸ்ரீ படுகொலையிலும் அதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்கிறது நாச்சி அப்பேரல்ஸ் நிறுவனம்.

சர்வதேச அளவிலான ஏற்றுமதிக்காக உள்ளூர் பெண்களின், குறிப்பாக கிராமப்புற பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. ஆனால் அந்தப் பெண்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

செயஸ்ரீ படுகொலை தொடர்பாக, தமிழ்நாடு ஜவுளி மற்றும் பொதுத் தொழிலாளர்கள் சங்கம், ஆசிய ஊதிய கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சேர்ந்து சமர்பித்த உண்மையறியும் குழுவின் அறிக்கையில், செயஸ்ரீ தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலித் சமூகத்தை சேர்ந்த செயஸ்ரீ, நாச்சி அப்பேரல்ஸில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து வேலை செய்து வருகிறார். முதுகலை படிப்பு படித்து வந்த செயஸ்ரீ தனது படிப்பு செலவுக்காக இரவு நேர சிஃப்டில் (4.30pm – 1am) பணியாற்றிவந்தார்.

தனது வேலைப் பொறுப்பாளரான தங்கதுரை மீது வேலை நிமித்தமாக புகார் கொடுத்ததில் இருந்து தொடர்ந்து செயஸ்ரீயை சாதிய ரீதியில் சாடியும், பாலியல் துன்புறுத்தல் செய்தும் மிரட்டியுள்ளார் தங்கதுரை.

இது பற்றி ஆலையில் பணிபுரியும், பெயர் கூற விரும்பாத நபர்கள் சிலர் ஒருமித்த குரலில் சொல்வது, “தலித் பெண் என்பதால்தான் செயஸ்ரீ கொலை செய்யப்பட்டிருக்கிறார்” என்பதுதான். தங்கதுரை தங்களையுமே சாதியரீதியில் இழிவுபடுத்துவார் என்பதையும் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

1980-ள் வரை தலித் மக்கள் ஜவுளி ஆலைகளில் வேலைசெய்ய அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் துப்புரவு பணிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சர்வதேச அளவில் ஏற்றுமதிக்கான தேவை அதிகமான போது, தலித் மக்களை குறைந்த கூலிக்கு வேலையில் சேர்த்துகொண்டனர். ஆனால், நிர்வாகம், மேற்பார்வை போன்ற பணிகளுக்கு ஆதிக்க சாதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மறுகாலனியாக்கத்தின் தாக்கத்தால் விவசாய பொய்த்துப் போன நிலையில் மதுரை, தேனி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலரும் குறிப்பாக நிலமற்ற தலித்துகள் திண்டுக்கல், திருப்பூர் போன்ற ஜவுளித்துறை நகரங்களை நோக்கி அடிமாட்டுக் கூலிக்குப் பணிபுரிய அனுப்பப்பட்டனர்.

ஜவுளித்துறை நிறுவனங்களில் ஆட்களைச் சேர்த்து விடுவதையே தொழிலாகச் செய்து வரும் தரகு நிறுவனங்களும், தரகர்களும் பெண்களின் பெற்றோரிடம் துவக்கத்திலேயே, உங்கள் மகள் ஓடிப்போனால் ஆலை நிர்வாகம் பொறுப்பல்ல” என்று ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.

படிக்க :
♦ CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !
♦ நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

உற்பத்தியின் உலகமயமாக்கல், பெருமளவில் பெண்களை ஆலைக்கு குறிப்பாக ஜவுளி ஆலைகளுக்கு மலிவு விலை தொழிலாளர்களாக இழுத்துவந்திருக்கிறது. ஜவுளி ஆலைகளில் பெருமளவில் பெண்கள் வேலை செய்தாலும், நிர்வாகம், மேற்பார்வை போன்ற பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே அமர்த்தப்படுகிறார்கள்.

இப்படி அழைத்து வரப்படும் பெண்கள் அடிமாட்டுக் கூலிக்குப் பணியமர்த்தப்படுகிறார்கள். காரணம், எவ்வளவு வேலைகளைக் கொடுத்தாலும் செய்துவிடுகிறார்கள் என்பதோடு, அடிக்கடி விடுமுறை எடுப்பது என்பது போன்ற தொல்லை கிடையாது என்பதுதான்.

உழைப்புச் சுரண்டல் ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் சாதியரீதியான ஏற்றத்தாழ்வு மிகவும் உக்கிரமாகவும் இங்கு நிலவுகிறது. சூப்பர்வைசர்களை எதிர்த்துப் பேசினாலோ, பாலியல் வக்கிரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலோ, சாதிய ரீதியான வசைபாடுகளும் தொடர்ந்து சொல்ல முடியாத அளவிற்கு பாலியல் துன்புறுத்தல்களும்தான் தண்டனை.

இந்த தொடர்ச்சியான துன்புறுத்தலில் மனமுடைந்து அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் இழப்பீடு கொடுத்து முடித்துவிடுகிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளில் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே, 62 ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் 90% பேர் தலித் அல்லது புலம்பெயர் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Fabric of Slavery” என்று கடந்த 2016 ஆண்டு வெளிவந்த அறிக்கை, 2,286 பெண் தொழிலாளர்களை நேர்காணல் செய்தது. இந்த அறிக்கை தயார் செயவதற்காக, பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பங்கேற்ற Focus Group Discussion என்னும் விவாதக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில், “பெண் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யுமிடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி புகார் செய்வதே இல்லை. அவர்களுடன் வேலை செய்யும் பெண்களிடம் மட்டுமே சொல்கிறார்கள்” என்பது தெரியவந்தது.

இந்த ஆய்வுக்கு மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்ட 743 ஆலைகளில், 64 ஆலைகளில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பத்திரிகை செய்திகள் வெளிவந்திருக்கின். 743 ஆலைகளில் வெரும் 10 ஆலைகளில் மட்டுமே முறையான தொழிற்சங்கங்கள் இருக்கின். அதாவது 94% ஆலைகளில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் எந்த அமைப்புகளும் இல்லை என்பதே நிதர்சனம்.

சொல்லிக்கொள்ளப்படும் நவீனமயமான உலகம் என்பது அதன் சமூக பிற்போக்குதனங்களை சூழலுக்கு ஏற்றாற்போல தகவமைத்து எடுத்துக்கொள்கிறது. தொழிற்சாலைகளில் இன்னும் சாதி உக்கிரமாகவே இருக்கிறது. அது குறிப்பாக தலித் பெண்களை வேட்டையாடுவதாக இருக்கிறது.

சர்வதேச நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ் பெண்கள் எப்படி வெவ்வேறு நிலைகளில் ஒடுக்கப்படுவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்தியாவின் ஜவுளித்துறை உழைப்புச் சந்தை ஒரு சான்று. பெண்களை பணியிடங்களில் நடக்கும் இத்தகைய சாதிய, பாலியல்ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றுதிரட்டி போராடுவதற்கான அமைப்புகள் இல்லை.

முதலாளித்துவம் பேசும் பெண் விடுதலை என்பது முழுக்க முழுக்க நுகர்வுக் கலாச்சாரத்தில் பெண்களை மூழ்கச் செய்வதற்கு இடையூறாக இருக்கும் சமூகக் கலாச்சார தடைகளை உடைப்பதைப் பற்றியதாகவே இருக்கிறதே ஒழிய, மலிவான கூலிக்கும் பாலியல் வன்முறைக்கும் பலியாகும் பெண்களுக்கான விடுதலை குறித்துப் பேசுவதாக இல்லை.

பெண் விடுதலை, பெண்ணியம் என்று பொதுவாக பேசும்போது, உழைக்கும் பெண்களின் மீதான மூலதனத்தின் ஆதிக்கம் பற்றி யாரும் பேசுவதில்லை. அதனாலே, இது வெரும் மகளிர் தினமல்ல, சர்வதேச உழைக்கும் மகளிர் தினமென்று திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படி மூலதனத்தின் உழைப்புக் கொட்டடிகளில் வதைக்கப்படும் போது பெண்களுக்கான விடுதலை பற்றி பேசாமல் இருக்கும் எந்த பெண்ணியமும் உயிரற்றதே.


ராஜேஷ்
செய்தி ஆதாரம் : Caravan magazine

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க