ஒருவேளை உணவுக்குக் கையேந்தும் நிலைக்குச் செல்ல தயாராகிறோமா ? – பாகம் 2

பாகம் 1: விரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள்: பின்னணி என்ன?

லகளாவிய அளவில் நடைபெறும் நில கையகப்படுத்துதல் பன்னாட்டு கார்ப்பரேட்களின் லாப நோக்கத்தை முன்வைத்தே நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உணவு சங்கிலியையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதன் மூலம் நீண்டகால லாபத்தை அறுவடை செய்ய முடியுமென்று நினைக்கிறார்கள் கார்ப்பரேட்கள்.

இன்று உலகளவில் எண்ணெய் வித்துகள், உணவு தானியங்கள் வர்த்தகத்தில் வெறும் நான்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஏகபோகமாக ஆதிக்கம் செய்கிறது. அவை, Archer-Daniels-Midland, Burge, Cargill, Louis Dreyfus ஆகியவைதான். இவற்றை ABCD நிறுவனங்கள் என்றும் சொல்வார்கள்.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் இனிமேலும் விவசாய நிலங்களுக்கு தூரமாக இருக்கப்போவதில்லை. விவசாயிகளின் விளைச்சலை வெறுமனே சந்தைப்படுத்தும் நிறுவனங்களாக இல்லாமல், இனி ஒட்டுமொத்த விவசாயத்தையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வருவதுதான் இவர்களின் இலக்கு. இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களை மையமாகக் கொண்டு ஒட்டுமொத்த விவசாய உற்பத்திப் பண்டங்களும் இணைக்கப்பட உள்ளன.

படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : உலக வங்கியின் ஆணைப்படி தண்ணீர் தனியார்மயம்
நூல் அறிமுகம் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்

நிலத்தின் மீதான சொத்துரிமை, விவசாய இடுபொருட்கள், விவசாயம் சார்ந்த அறிவியல் அறிவுரைகள், காப்பீடு, ஒப்பந்த விவசாயம், கொள்முதல், சேமிப்பு, பதப்படுத்துதல், போக்குவரத்து, சில்லறை விற்பனை, இவையனைத்திற்கும் தேவையாக உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும் கட்டுமானப் பொறுப்பு என பல்வேறு வகைகளில் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியையும் கைபற்றிக் கொள்வதுதான் இவர்கள் இலக்கு.

இன்றைய காலத்தின் முக்கியமான குணாம்சங்களில் ஒன்று, ஒழுங்கமைப்பட்ட சில்லறை விற்பனை சந்தை (Organised Retail Market). இதுபோன்ற ஒழுங்கமைப்பட்ட கார்ப்பரேட் சில்லறை விற்பனை முதலைகள் ஒரு நாட்டின் மேட்டுக்குடி மக்களின் உணவு சந்தையை குறிவைத்து இதை முன்னெடுத்தார்கள். ஆனால், தற்போது பெரும்பான்மையான மக்களையும் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைக்குள் கொண்டு வருவதை இலக்காக வைத்து செயல்படுகிறார்கள்.

இந்தியாவில் Reliance, சிறு நகரங்களில் கூட தங்களின் சங்கிலித் தொடர் விற்பனைக் கூடங்களை நிறுவியிருக்கிறார்கள். இதன் மூலம் உயர்நடுத்தர வர்க்கத்தை மட்டுமின்றி மக்கள் தொகையில் கணிசமாக இருக்கும் கீழ்நடுத்தர வர்க்கத்தையும் தங்களது சங்கிலித் தொடர் விற்பனைக் கூடங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

2008-ஆம் ஆண்டின் உலக வளர்ச்சி அறிக்கையின்படி, பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன், பூக்கள் போன்றவைதான் வளரும் நாடுகள் செய்யும் ஏற்றுமதியில் 47 சதவீதமாக இருக்கிறது. வளரும் நாடுகள் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதை, “உலக பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான ஒழுங்கமைப்பு” கண்டிக்கிறது. வளரும் நாடுகள் தங்கள் உணவு தானிய தேவையை இறக்குமதியின் மூலமாகவே பூர்த்தி செய்ய வேண்டுமென்று நிர்பந்திக்கிறது.

இப்படி, உணவு தானிய உற்பத்தியை மையமாகக் கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தை, ஏற்றுமதி சார்ந்த விவசாயமாக மாற்ற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்தை கணக்கில் கொண்டு இந்தியாவில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் பார்க்கப்பட வேண்டும்.

2021 செப்டம்பர் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் (UN), உணவு பற்றிய மாநாடை Food Systems Summit என்னும் பெயரில் நடத்த விருக்கிறது. அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் 2030-ஆம் ஆண்டுக்கான இலக்கான “நிலையான விவசாயம்” என்பதற்கு முக்கியத்தும் கொடுக்கப்படவுள்ளது. இந்த நோக்கத்திற்கு ஒத்திசைவது போலவும், கடந்த 12 ஆண்டுகளாக உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) நிர்பந்தித்து வரும் விவசாய சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில்தான் இந்தியாவின் வேளாண் சட்டத் திருத்தங்கள் அமைந்திருக்கிறது.

இந்த விவசாய சீர்திருத்தங்களை செயல்படுத்தும் விதமாக New Vision for Agriculture India Business Council என்ற அமைப்பு சர்வதேச ரீதியில் வேலை செய்து வந்துள்ளது. இதில் உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் அதானி குழுமமும் அடங்கும்.

Klaus Schwab என்னும் உலகப் பொருளாதார மன்ற குழுவின் இயக்குனர்களில் அம்பானியும் ஒருவர். இப்படி உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்கள் திட்டமிட்டுள்ள வகையில் விவசாயத்தையும், ஒட்டுமொத்த உணவு உற்பத்தி வலைப்பின்னலையும் தங்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொள்வதற்காகதான் இந்த சீர்த்திருத்த சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

தற்போது இந்திய அரசு அமல்படுத்தியிருக்கும் வேளாண் சட்டங்களால்,

  • வேளாண் உற்பத்தி சந்தை குழுவின் (Agricultural Produce Market Committee) மண்டிகளை மூடுவதன் மூலம், உணவு தானியத்தில் அரசு கொள்முதல் பெருமளவில் வீழ்ச்சியடையும். உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்க முடியாமல் போகும். இதனால், அவர்கள் உணவு தானிய உற்பத்தியில் இருந்து வெளியேறுவார்கள்.
  • இதனால், இந்தியாவின் உணவு தானிய தேவைக்காக பன்னாட்டு கார்ப்பரேட்களிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையேற்படும். இவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து வைத்து விலையை உயர்த்தி லாபம் ஈட்டுவதை உறுதிபடுத்தும் விதமாக, உணவு பொருட்களை பதுக்குவதை, அதிக விலைக்கு விற்பதை தடைசெய்யும் “அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை” திருத்தியிருக்கிறார்கள்.
  • உணவு தானிய உற்பத்தி சிதைந்துபோனதால், விவசாயிகள் ஏற்றுமதி சார்ந்த பணப்பயிர்கள், காய்கறி, பழங்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டிய நிலையேற்படும். இந்த வகையில் ஏற்றுமதிக்கான பணப்பயிர்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் முன் அனுபவமில்லாத விவசாயிகளை ஒப்பந்த விவசாயத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகள்  சுரண்ட அனுமதி வழங்கும் விதமாக ஒப்பந்த விவசாயச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
  • கார்ப்பரேட்டுகளின் கைகளில் விவசாயமும், உணவு தானியக் கொள்முதலும் சென்றால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயருவதோடு, பணம் உள்ளவன் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலை உண்டாகும்.

இந்தச் சட்டங்களின் பின்னணியில் உள்ள கார்ப்பரேட் நலனைப் பார்க்கலாம். விவசாயம் கார்ப்பரேட்டுகளுக்கு நல்ல வருவாய் அளிக்கக் கூடிய துறை. ஏனெனில் நாம் இருசக்கர வாகனத்தில் போகாமலோ, வங்கியைப் பயன்படுத்தாமலோ கூட வாழ்ந்துவிடலாம். ஆனால் உணவின்றி உயிர்வாழ முடியாது.

“விவசாயம் என்பது மிகக்குறைந்த வருமானம் தரக்கூடிய தொழில் என்ற நிலை சமீபத்திய ஆண்டுகளில் மாறியுள்ளது. விவசாயம், உணவுத்துறை ஆகியவை நீண்டகால வளர்ச்சியளிக்கக் கூடிய துறையாக பார்க்கப்படுகிறது”, என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்குவதில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் நிலங்களை வாங்குகிறார்கள். ஒரு தனிநபர் என்ற வரையறையில் பார்க்கும் போது, அமெரிக்காவிலேயே அதிகமான விவசாய நிலங்களுக்கு சொந்தக்காராக இருப்பவர் பில் கேட்ஸ் (Bill Gates) தான் என்றால் நம்ப முடிகிறதா ?

சில்லறை விற்பனை சந்தையை கார்ப்பரேட்கள் கைபற்றிக் கொள்வதால், உற்பத்தி பொருட்களின் தரத்தை கார்ப்பரேட்கள்தான் தீர்மானிப்பார்கள். கார்ப்பரேட்கள் நிர்ணயிக்கும் தரத்திலான உற்பத்தியை செய்ய விதை, பாசனவசதி, சேமிப்பு கிடங்கு என நிறைய வசதிகள் தேவைப்படும். இது இயல்பிலே சிறு, குறு விவசாயிகளை விவசாயத்தில் இருந்தே விரட்டியடிக்கும். இப்போது, அவர்களின் நிலங்களை குறைவான விலைக்கு கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக் கொள்வது எளிதாக இருக்கும்.

இந்தியாவில் விவசாயம் ஏற்கனவே மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. விவசாயத்தின் மூலம் வரும் வருமானம், விவசாயிகளின் அடிப்படை நுகர்வுக்கே போதுமானதாக இல்லை; தேசிய மாதிரி கணக்கெடுப்பு (2012-2013)-ன் படி, ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூபாய் 6,400 மட்டுமே. ஒரு குடும்பத்திற்கு நான்கு நபர்கள் என்று எடுத்துக் கொண்டாலும், ஒரு நபரின் சராசரி மாத வருமானம், ரூபாய் 1,600 மட்டுமே. 2016-2017-ஆண்டு கணக்கெடுப்பின்படி, 53 சதவீத விவசாய குடும்பங்கள் கடன்பட்டிருக்கிறார்கள். இதுவுமே ஒரு குறைமதிப்பீடுதான் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

விவசாயிகளின் நிலை இப்படியிருக்கையில், இந்த மூன்று வேளாண் சட்டங்களும் அமலுக்கு வந்தால், விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு வெளிவேறும்படி நிர்பந்திக்கப்படுவார்கள். கார்ப்பரேட் பிடியில் ஒட்டுமொத்த உணவுப் பொருள் உற்பத்தியும் செல்கையில் பசியும் பட்டினியும் மீண்டும் தலைவிரித்தாடும்

படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

♦ வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

உள்ளூர் முதல் உலக அளவிலான கார்ப்பரேட் எஜமானர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டுதான் இந்த வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்ற பாஜக-வின் ஆணவ பேச்சுக்குப் பின்னால் இந்த பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தரகு கார்ப்பரேட்டுகளின் நலன் ஒழிந்துள்ளது. இந்தக் கார்ப்பரேட் கும்பலை புறக்கணித்து அடி பணியச் செய்வதுதான் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறச் செய்ய முடியும்.


ராஜேஷ்

உதவிய கட்டுரைகள்:
♦ The Indian Farmers are Right : Their Land is at Stake (Part 1)
♦ The Indian Farmers are Right : Their Land is at Stake (Part 2)
♦ The WEF Agenda behind modi farm reform

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க