வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு விலையில்லை; வருமானமில்லை; உண்ண உணவும், குடிக்க தண்ணீருமில்லாமல் ஏழை, மத்திய விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வு அஸ்தமித்துக் கொண்டுள்ளது. மொத்த சமூகத்திற்கு உணவு படைக்கும் உழவர் பெருமக்களின் பட்டினிச் சாவுகள் தற்கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இரண்டாம் உலக யுத்தத்தின் போதும், கொடுமையான வங்க பஞ்சத்தின்போதும் ஒரு கிராமப்புற மனிதனுக்கு கிடைத்த ஒரு நாள் சராசரி உணவு அளவைவிடவும், நடப்பு ஆண்டுகளில் குறைவான உணவு கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய விடுதலைக்குப் பின் கடந்த 10 ஆண்டுகளில்தான் முதன்முறையாக உணவுப் பொருள் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது சாதாரண விஷயமல்ல…

தேசத்தின் இத்தகைய நிலைக்கு என்ன காரணம் என  விளக்கம் கேட்டால், ‘வானம் பொய்த்து, வரலாறு காணாத வறட்சி தாண்டவமாடுகிறது’ என மத்திய மாநில ஆட்சியாளர்கள் வாய்க்கூசாமல் சரடுவிடுகின்றனர். மொத்த நெருக்கடியும் வறட்சியால்தான் என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர். ஆனால், வறட்சிக்கு முந்தைய ஆண்டுகளிலும் இதே நிலைதான் நீடித்தது என்பதை முழுமையாக மறந்துவிடுகிறார்கள் அல்லது மறைத்துவிடுகிறார்கள்.

உலகமயம், தாராளமயம் என்பதே நமது ஆட்சியாளர்களின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. உலக வங்கியும், உலக வர்த்தக நிறுவனமும் எழுதித் தயாரித்த இக்கொள்கைகளையே மத்திய அரசும் தமிழக அரசும் போட்டி போட்டுக்கொண்டு அமுலாக்குகின்றன…

கடந்த 10-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அமுலாக்கப்படும் இக்கொள்கைகளின் மோசமான விளைவுகளே இந்திய கிராமப்புற மக்கள் அனுபவிக்கும் வேதனைகளாகும். அடுத்தடுத்து வந்துள்ள வறட்சி இவ்வேதனைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்பதே உண்மை… (நூலின் முன்னுரையிலிருந்து…)

இந்தக் கொள்கையின் பிரதான அம்சங்கள் என்ன?

1. இடுபொருட்கள் விலையிலோ, விளைபொருட்கள் விலையிலோ அரசு தலையிடாது.
2. விவசாயத்துறையில் நீர்ப்பாசனம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு அரசு மூலதனம் படிப்படியாகக் குறைக்கப்படும்.
3. மின்சாரம், விதைகள், உரம், பூச்சி மருந்து ஆகிய எந்தப் பொருளுக்கும் அரசு மானியங்கள் அடியோடு ஒழிக்கப்படும் அல்லது பெருமளவு வெட்டப்படும்.
4. வெளிநாட்டுப் பொருட்களின் தங்கு தடையற்ற இறக்குமதி அனுமதிக்கப்படும்.

மத்திய பி.ஜே.பி. அரசு 2000-ம் ஆண்டிலும் 2001-ம் ஆண்டிலும், மொத்தம் 1429 பொருட்கள் எந்தத் தடையுமின்றி இறக்குமதி செய்யலாம் என்று சட்டம் இயற்றியது. இதில் 854 பொருட்கள் விவசாயம் சார்ந்த பொருட்கள். உலக வங்கி மற்றும் உலக வர்த்தக நிறுவன நிபந்தனைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. இதில் விஷேசம் என்னவென்றால் 2004-ம் ஆண்டுக்குள் இந்தத் தடைநீக்கம் அமலாக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால், முன்கூட்டியே அமலாக்கி, தனது எஜமான விசுவாசத்தைக் காட்டி கொண்டது, மத்திய அரசு. இதன் விளைவு என்ன?… (நூலிலிருந்து பக்.12)

படிக்க :
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?

சுருங்கச் சொன்னால், சோறு, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து ஆகிய அத்தியாவசியத் தேவை, எதுவாய் இருந்தாலும், அதனை அளிக்கும் பொறுப்பு அரசுக்கு இல்லை. அனைத்தையும் சந்தையே தீர்மானிக்கும். அந்த சந்தையின் விதிகளை உலகில் கொழுத்த நாடான அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானிக்கும் என்பதுதான், உலகமயத்தின் உண்மையான பொருள்…

உலகமயமாக்கலின் நிபந்தனை அடிப்படையில் இந்திய அரசு, அத்தியாவசிய தேவைகள் உற்பத்தி மற்றும் விநியோகத்திலிருந்து சிறுக சிறுக சுழன்று கொண்டு வருகிறது என்று விவரங்கள் தெரிவிக்கின்றன…

இதே நிலைதான் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கென கொடுக்கப்பட்டு வந்த கடன் விசயத்திலும் தொடர்கிறது. அரசு வங்கிகள், மற்றும் கூட்டுறவு ஸ்தாபனங்கள் மூலம் இன்று விவசாயிகளின் கடன்களில் 25 சதமானமே அளிக்கப்படுகிறது. மீதம் 75 சதமானக் கடன் விவசாயிகள் தனியாரிடம், மற்றும் தனியார் நிறுவனங்களில்தான் பெறுகிறார்கள். இந்த கந்துவட்டிக் கடன்களுக்கு வசூலிக்கப்படும் பயங்கரமான வட்டி, சமீபத்தில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் என்கிறது. ஆந்திர விவசாயிகள் தற்கொலை பற்றி பரிசீலித்த ஆய்வறிக்கைகள். இந்த அரசுக் கடனும் கிராமப்புறத்தில் வலுத்தவர்களுக்கே பெரும்பாலும் கிடைக்கிறது என்பதும், ஏழை விவசாயிகளுக்கு  பெயரளவுக்கே கிடைக்கிறது என்கிற உண்மையும் கவனிக்கத்தக்கது…

மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளின் காரணமாக அதிகம் பாதிக்கப்படும் பகுதி விவசாயத் தொழிலாளர்கள் ஆகும். தலித், ஆதிவாசி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்துவரும் இந்தத் தொழிலாளர்களின் நிலை இன்று வாழ்வின் விளிம்பிற்கே சென்றுவிட்டது என்பது உண்மை. நிலம் மற்றும் ரேஷன் பிரச்சினைகளில் இவர்கள் எப்படி கடும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்று பார்த்தோம் தவறான கொள்கைகளின் விளைவாக விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது…

குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை; குந்துவதற்கு ஒழுகாத குடிசையில்லை; வியாதிக்கு மருந்தில்லை; குழந்தைகளுக்கு கல்வி இல்லை; என அனைத்து வகைகளிலும் நிராகரிக்கப்பட்ட இவர்களின் பலர் சாதீய ஒடுக்குமுறைக் கொடுமைகளிலும் தாக்கப்பட்டு, நிற்கும் கொடுமை கண்டு கொந்தளிக்காதவர்கள் மனிதர்களே இல்லை… (நூலிலிருந்து பக்.29-30)

நூல் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்
ஆசிரியர் : கே. வரதராஜன்

வெளியீடு : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,
தமிழ்நாடு மாநிலக் குழுவுடன் இணைந்து பாரதி புத்தகாலயம்,
2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 600 015.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : info@tamizhbooks.com

பக்கங்கள்: 32
விலை: ரூ 5.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க