12.12.2024

நெல்லை : பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் தனியார்மயத்தை புகுத்தும் திமுக கார்ப்பரேட் மாடல் அரசு!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லை மட்டுமல்லாமல் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

தென் தமிழகத்தில் முக்கியமான மருத்துவமனையாக கருதப்படும் இம்மருத்துவமனையில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி கட்டண உள்நோயாளிகள் பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார்.

ஏற்கெனவே கலைஞர் காப்பீட்டு திட்டம், அம்மா காப்பீட்டு திட்டம் போன்ற காப்பீட்டு திட்டங்களின் கீழ் மக்கள் பணம் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் “இன்னுயிர் காப்போம் – நம்மை காப்போம் 48” திட்டம் மக்கள் பணத்தை நேரடியாகவே தனியார் மருத்துவமனைகளுக்கு தாரை வார்க்கிறது. உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்ற அனைத்து பணிகளும் திமுக, அதிமுக என கட்சி பேதமின்றி இரண்டு ஆட்சி காலத்திலும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் போதாது என்று திமுக அரசு தற்போது அரசு மருத்துவமனைகளில் கட்டண உள்நோயாளிகள் பிரிவை அனுமதித்து அரசு மருத்துவமனையில் தனியார்மயத்தை புகுத்துகிறது. மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள் கையூட்டு பெற்றால் குற்றம். அதையே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்கள் பணத்தை கட்டணம் என்ற பெயரில் பறித்தால் சேவை.

இந்த அடிப்படையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சுமார் 1.10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டண உள்நோயாளிகள் பிரிவில் 18 முதல் 23 தனி அறைகள் உள்ளது. இதில் சோபா, தொலைக்காட்சி, கட்டில், ஏசி, கழிப்பறைகள் போன்ற பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஒரு நாளைக்கு ஒரு நபர் தங்கி இருந்தால் ரூ.1000, இரண்டு பேருக்கு ரூ.1500, நான்கு பேருக்கு ரூ.2000 என்று கட்டண விபரங்களை வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம். தனியார் மருத்துவமனைகளைப் போலவே பணம் படைத்தவர்களாக இருந்தால் தரமான சிகிச்சை மற்றும் பிற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்று ஒரு அரசே கூறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, மதுரை, தேனி, சேலம் ஆகிய மருத்துவமனைகளில் கடந்த சில வருடங்களாகவே இந்த கட்டண உள் நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது.

சுருக்கமாக சொன்னால் இந்த கட்டணப் பிரிவு என்பது அரசு மருத்துவமனைகளில் வெளிப்படையாக ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதே நிதர்சனம்.

குறைவான கட்டணத்தில் தரமான சிகிச்சை என்று விளம்பரப்படுத்தி உள்நோயாளிகள் கட்டண பிரிவை திறக்கும் அரசு, வரும்காலத்தில் கட்டணத்தை உயர்த்துவதுடன் இதை விரிவுபடுத்தி, இன்னும் சிறப்பான சிகிச்சை எனும் பெயரில் தனியார்மயதத்தின் கைகளில் முழுமையாக ஒப்படைக்கும்.

மத்தியில் பாசிச மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் திமுக அரசு தனியார்மயத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறது

இந்தியாவில் 1990களில் தனியார்மய- தாராளமய- உலகமயமாக்கல் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவை துறைகள் மனித விழுமியங்கள் அற்ற வெறுமனே கொள்ளை அடிக்கும் துறைகளாக மாற்றப்பட்டு வருகிறது. அதேவேளையில் பாசிசத்தை எதிர்ப்பதாக கூறி வரும் திமுகவும் கார்ப்பரேட் நலனில் இருந்து பின் வாங்காமல் தனது வர்க்க பாசத்தை வெளிப்படுத்தி மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் இத்தகைய நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.


தகவல்
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்,
9385353605.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க