விவசாயத்துறை நெருக்கடியைப் பற்றிப் பேசும்போது, பேசுபவர்கள் அனைவருக்கும் அந்தப் பொருள் குறித்து கருத்தொற்றுமை நிலவுவதாக எண்ணிக் கொள்கிறோம். அது உண்மையல்ல. விவசாயத்துறை நெருக்கடியைத் தீர்ப்பதாக கூறிக்கொள்ளும் ஆளும் வர்க்க திட்டங்கள் அனைத்துமே விவசாயப் பிரச்சினை வேறு, அதில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் பிரச்சினை வேறு என்று இரண்டையும் பிரித்து விடுகின்றன.
எனவே, அவர்கள் முன்வைக்கின்ற தீர்வுகள், எதிர்காலத்தில் விவசாயத் துறையை விழுங்க இருப்பவர்களுடைய லாபத்தையும் உற்பத்தியையும் அதிகரிப்பது என்ற கண்ணோட்டத்திலேயே அமைந்திருக்கின்றன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று மோடி கூறுவது இந்தப் பொருளில்தான். தற்போது விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையையும் உற்பத்தித் திறனையும் உயர்த்துவது பற்றி மோடி பேசவில்லை.
உண்மையைச் சொல்வதென்றால், ஆட்சியாளர்கள் தாங்கள் கொண்டுவர விரும்பும் மாற்றத்துக்கு மிகப்பெரிய இடையூறே விவசாயிகள்தான் என்று கருதுகிறார்கள். விவசாயம் என்ற பெருங்கடலில், கொள்ளை லாபம் தரக்கூடிய சில தீவுகளை பன்னாட்டு மூலதனத்தின் பங்கேற்புடன் உருவாக்குவதுதான் அவர்கள் திட்டம். இதற்கு வெளியே இருக்கின்ற ஆகப் பெரும்பான்மையான இந்த நாட்டின் விவசாயிகள், வேலை தேடி நாடோடிகளாக அலைந்து மெல்ல மக்கி மடியட்டும் என்பதுதான் அவர்களது திட்டம். எனவேதான், ஆளும் வர்க்கத்தின் இந்த திட்டம் விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றது.

விவசாயிகளையோ, தொழிலாளர்களையோ ஆளும் வர்க்கம் எப்படிப் பார்க்கிறது? அரசாங்கமோ அல்லது சந்தையோ அளிக்கின்ற தூண்டுதலுக்கேற்ப உழைத்து, தங்களுக்கு லாபத்தை ஈட்டித் தருவதுதான் அவர்களது பிறவிக்கடன் என்று பார்க்கிறது. ஆனால் விவசாயிகள் ஜடங்கள் அல்ல, அவர்கள் சமூக மனிதர்கள். அவர்களுடைய அறிவும் அனுபவமும் அளப்பரியது. இருப்பினும் நடப்பில் உள்ள சமூக உறவுகள் அவர்களது முழு ஆற்றலையும் வெளிக்கொணர முடியாமல் தடுக்கிறது.
எனவே, விவசாயிகள் பிரச்சினை தொடர்பான கேள்விகளை பரிசீலிக்கும்போது, அவற்றை தற்போது நிலவும் சூழலை வைத்து மட்டும் பார்க்கக்கூடாது. அதனை ஒரு நிகழ்ச்சிப்போக்காக பார்ப்பதுடன், பொருளாதாரத்தின் மற்ற துறைகளுடன் இணைத்தும் அதனைப் பார்க்க வேண்டும். விவசாயிகளை எந்த ஜீபூம்பா வேலையாலும் பணக்காரர்களாக்க முடியாது. நாட்டின் மொத்தப் பொருளாதார வளர்ச்சியில் விவசாயிகளையும் ஊக்கமான பங்கேற்பாளர்களாக்குவதுதான் நமது நோக்கமாக இருக்க முடியும்.
2012−13ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அளிக்கும் புள்ளி விவரத்தின்படி, மொத்த வேலைவாய்ப்பில் விவசாய வேலைவாயப்பின் பங்கு 52%. தேசிய அளவில் தமது உழைப்பின் மூலம் ஒரு தொழிலாளி உருவாக்கும் சராசரி மதிப்பில் 29 விழுக்காட்டைத்தான் ஒரு விவசாயியின் உழைப்பு உருவாக்குகிறது. அதே நேரத்தில் நிதித்துறை, காப்பீடு, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் பணியாற்றுவோர் உருவாக்கும் சராசரி மதிப்பு, ஒரு விவசாயத் தொழிலாளி உருவாக்கும் மதிப்பைப்போல 25 மடங்கு அதிகம்.
அதே போல தொழிலாளர்களின் 85% அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாதவர்கள். இவர்கள் தமது உழைப்பின் மூலம் உருவாக்கும் மதிப்பு என்பது அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பில் 5.1% அதாவது விவசாயத்திலிருந்து வெளியேறி அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத தொழிலாளிகளாக மாறுபவர்களுடைய வாழ்க்கை எந்த விதத்திலும் மேம்படுவதில்லை என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரம் காட்டுகிறது. இன்னொரு முனையில், மிகவும் குறைவான பேர்களுக்கே வேலை வாய்ப்பளிக்கும் நிதித்துறை போன்ற ஒட்டுண்ணித் துறைகள், தேசிய வருமானத்தின் பெரும்பங்கை விழுங்குகின்றன.
வளர்ச்சி என்ற பெயரில் அழிவு
உற்பத்தியை அதிகப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். அல்லது ஒரு தொழிலாளியின் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலமும் உற்பத்தியை அதிகரிக்கலாம். உற்பத்தியை அதிகரிக்க எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது என்ற பார்வையில் உள்ள வேறுபாடுதான், வளர்ச்சி பற்றிய இரண்டு முரண்பட்ட கண்ணோட்டங்களுக்கு காரணமாகிறது. ஒரு குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் யார் ஆதாயமடைகிறார்கள் என்பதுதான் எந்த வளர்ச்சிப் பாதை என்பதைத் தீர்மானிக்கிறது.
இந்திய ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தின்படி விவசாயமும் அமைப்பு ரீதியில் இல்லாத தொழில்களும் உற்பத்தித் திறன் குறைந்த தொழில்கள். இவற்றின் உற்பத்திக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலேயே இவற்றில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அவ்வாறு அவர்களை வெளியேற்றினால் மட்டும்தான், போடப்பட்டிருக்கும் முதலீட்டிற்கு கிடைக்கின்ற லாபத்தை அதிகரிக்க முடியும்.
முதலீட்டின் மீதான லாபத்தை அதிகரிப்பது என்பதன் பொருள், கார்ப்பரேட் திட்டங்களுக்காக நிலத்தை கட்டாயமாக கையகப்படுத்துதல், நிலத்தைக் குவித்து பண்ணைகளை உருவாக்குதல், விவசாயம் சார்ந்த வணிகங்களில் கார்ப்பரேட்டுகளை நுழைத்தல், சிறு தொழில்களை அழித்தல், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைத்தல் – என்பவைதான்.

விவசாயம் மற்றும் சிறு தொழில்களிலிருந்து வெளியேற்றப்படுவோருக்கு மற்ற துறைகளில் தானாகவே வேலை கிடைத்துவிடும் என்பதுதான் சுதந்திர சந்தையின் விதி என்பது தான் ஆளும் வர்க்க பொருளாதார வல்லுநர்களின் கருத்து. ஆனால் தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த விதி வேலை செய்யவில்லையே, ஏன் என்று கேட்டால், தொழிலாளர் நல சட்டங்கள், நில உச்ச வரம்பு சட்டம், சிறு தொழில்களுக்குப் பாதுகாப்பு என்பன போன்ற சுதந்திர சந்தைக் கோட்பாட்டுக்கு எதிரான சட்டங்களை அகற்றி விட்டால், முழு வேலைவாய்ப்பு உடனே பெருகும் என்கிறார்கள்.
‘‘ஒரு அளவுக்கு மேல் விவசாயத்தால் வேலைவாய்ப்பு வழங்க முடியாது. எனவே மக்கள்தொகையை விவசாயத்திலிருந்து வெளியேற்றி, விவசாயம் சாராத தொழில்களுக்கு அனுப்புவது மிகமிக அவசியம்’’ என்று கூறுகிறது நிதி ஆயோக்−இன் வல்லுநர் குழு அறிக்கை (மார்ச், 2016).
‘‘இந்தியாவில் எண்ணற்ற சிறு நிறுவனங்கள் தொடர்ந்து சிறு நிறுவனங்களாகவே நீடிக்கின்றன. அவை கவுரமாக செத்துப்போவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. சிறிய விவசாய நிலங்கள் போதிய வருவாய் தருவதில்லை. அவற்றை (கார்ப்பரேட் பண்ணைகளுக்கு) குத்தகைக்கு விடவும் (சட்டம்) அனுமதிப்பதில்லை. விவசாயத்துக்கு மென்மேலும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. நகரமயமாக்கத்தை தடுக்கும் பொருட்டு கிராமங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கிறது’’ என்று கூறும் மைய அரசின் 2012−13 பொருளாதார ஆய்வறிக்கை, இதற்கான மாற்றையும் முன்வைக்கிறது.
‘‘விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பெரும் பண்ணைகளை உருவாக்கி மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் புகுத்த வேண்டும். தோட்டத்தொழில், பால் பண்ணைகள், இறைச்சித் தொழில் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம்தான் விவசாயத்துறையை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்’’ என்கிறது.
நிலச்சீர்திருத்தம் என்ற சொல்லின் பொருள், பெரு நிலக்கிழார்களின் நிலத்தை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு மறு பங்கீடு செய்வது என்பதுதான் வரலாறு.அப்படித்தான் நாம் அறிந்திருக்கிறோம். கார்ப்பரேட்டுகளுக்காக நிலம் கையகப்படுத்துவது, சிறு விவசாயிகள் தமது நிலத்தை கார்ப்பரேட் பண்ணைகளுக்கு குத்தகைக்குவிட வகைசெய்வது என்பன போன்ற தனது ஆலோசனைகளுக்கு நிலச்சீர்திருத்தம் என்று தலைப்பிட்டிருக்கிறது இந்த அறிக்கை.
விவசாயத்திலிருந்து வெளியேற்றப்படும் விவசாயிகளுக்கு தொழில்துறை வேலை வாய்ப்பளித்துவிடும் என்பதாக இந்த அறிக்கைகள் தீட்டும் சித்திரம் உண்மைக்குப் புறம்பானது. ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு இன்றைய கணக்கின்படி ஒரு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றால், 1980−இல் இதே தொகைக்கு 4.5 வேலைவாய்ப்புகள் உருவானது என்பதே புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை. தொழிலாளிகள் அதிகம் தேவைப்படுகின்ற ஆடைத்தயாரிப்பு, காலணி, சோப்பு தயாரிப்பு போன்ற தொழில்களிலும்கூட முன்னிலும் அதிகமாக எந்திரமயமாக்கம்தான் நிகழ்ந்திருக்கிறது.
அதனால்தான் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் அமைப்புரீதியான உற்பத்தித் துறைகள் சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தே வருகிறது. தொழிலாளர் சட்டங்கள் ஆலை அதிபர்களுக்கு சாதகமான முறையில் தளர்த்தப்பட்ட பின்னரும், தொழிலாளர்களின் ஊதியம் குறைந்த பின்னரும், அவர்களை வெளியேற்றுவது எளிதாக்கப்பட்ட பின்னரும், ஆலை முதலாளிகள் தொழிலாளர்களைக் காட்டிலும் எந்திரங்களையே நாடுகின்றனர்.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன என்ற போதிலும், இரண்டு காரணங்கள் முக்கியமானவை. தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தை தொடர்ந்து எந்திரங்கள் போன்ற மூலதனப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுவிட்டதால், அவை ஒப்பீட்டளவில் மலிவாகிவிட்டன. இரண்டாவதாக, தனியார்மய கொள்கைகளின் விளைவாக சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதால், வாங்கும் சக்தியுள்ள பிரிவினரே தொழில்துறையின் நுகர்வோராகின்றனர். அந்த மேட்டுக்குடி வர்க்கமோ மேற்குலக நுகர்பொருள் சந்தை எதை நாடுகிறதோ, அதையே பின்பற்றுகிறது.மேற்குலகில் செல்வாக்கு செலுத்தும் பிராண்டுகளையே வழிபடுகிறது.
எனவே, கிராமப்புறத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு தொழில்துறை வேலைவாய்ப்பளிக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறைகளில் பரவத் தொடங்கியிருக்கும் தானியங்கிமயமாதல், இந்தியாவுக்கும் வரும் என்பதால் தொழில்துறை வேலைவாய்ப்பு நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.
மாற்று அணுகுமுறை
விவசாயிகள்பால் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை என்பது, அவர்களை சடப்பொருளாக கருதுகிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அவர்களை விவசாயத்திலிருந்து தூக்கி வீசுகிறது. மாறாக, நமது அணுகுமுறையோ விவசாயிகளை முன்முயற்சியுள்ள குடிமக்களாக, மாற்றத்தின் தூதர்களாகப் பார்க்கிறது. இந்த அணுகுமுறையின் அடிப்படைகள் இரண்டு. முதலாவதாக, அரசின் உதவியுடன் சிறு உற்பத்தியாளர்களாக இருக்கும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி அவர்களது உற்பத்தி திறனை உயர்த்த வேண்டும்.
சிறு விவசாயிகளை ஒரு ஒருங்கிணைந்த அரசியல் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் மெல்ல மெல்ல தொழில்துறை உற்பத்தியை நோக்கி கொண்டுவர வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, தனியே திட்டம் போடும் ஆளும் வர்க்கத்தின் அணுகுமுறைக்கு மாறாக இந்த அணுகுமுறை உற்பத்தியையும் விநியோகத்தையும் ஒருங்கிணைந்த முறையில் அணுகுகிறது.
விவசாயத்தை முன்னேற்றுவதற்கு அதி நவீன எந்திரங்களும் முதலீடும் வெளியிலிருந்து வரும் என்று காத்திருப்பதற்கு பதிலாக, அரைகுறை வேலைவாய்ப்புடன் அவதிப்படும் கோடிக்கணக்கான மக்களை நீர் மேலாண்மை, பாசனம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தி விவசாயத்துறையை முன்னேற்ற முடியும்.
பயனற்றுக் கிடக்கும் மிகப்பெரிய அளவு உழைப்பாளர் சக்தி உண்மையில் அரைகுறை வேலைவாய்ப்பின் காரணமாக மிகப்பெரும் உழைப்பு சக்தி பயனற்று வீணாகிக் கொண்டிருக்கிறது.
இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள நாம் சில சொற்றொடர்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முழுமையாக வேலைவாய்ப்பு பெற்றிருப்பவர்களை நாம் உழைப்பாளர்கள் (workforce) என்று குறிப்பிடுகிறோம். இவர்களுடைய எண்ணிக்கையுடன் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையையும் கூட்டினால் கிடைப்பது நாட்டின் மொத்த உழைப்பு சக்தி.

வேலை கிடைக்காது என்பதால் வேலை தேடுவதைக் கைவிட்டவர்கள் ஏராளம். தனியார்மயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1991−2011 காலகட்டத்தில் 16.7 கோடிப்பேர் புதிதாக வேலைவாய்ப்பு சந்தைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களில் 9 கோடிப்பேருக்கு கிடைத்திருப்பது பகுதி நேர வேலைவாய்ப்பு. அதாவது, ஆண்டில் பாதி நாட்கள் வேலை இல்லாதவர்கள். இவர்களன்றி மிகமிக குறைந்த வருவாய்க்கு சின்னஞ்சிறு தொழில்களில் வேலை செய்வோர் உள்ளனர். இதனை போக்கிடமற்ற வேலைவாய்ப்பு என்று நாம் கூறலாம்.
மொத்தத்தில் கடல் போன்ற இந்த உழைப்பு சக்தியை விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில், மேம்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட உழைப்பில் ஈடுபடுத்த முடியும். இவர்களுக்கெல்லாம் பெரிய தொழில்நிறுவனங்கள் ஒருபோதும் வேலை தரப்போவதில்லை. இவர்களை விவசாயத்திலும், உள்நாட்டு சந்தைத் தேவைக்கு பொருள்களை உற்பத்தி செய்கின்ற கிராமப்புற சிறு தொழில் நிறுவனங்களிலும் ஈடுபடுத்த முடியும். இத்தகைய தொழில்களைத் தொடங்குவதற்கு அந்நிய மூலதனமோ, இறக்குமதி தொழில் நுட்பமோ தேவையில்லை.
உண்மையான தடை யார்?
மேலே கூறியிருப்பவையெல்லாம் புதிய கருத்துகள் அல்ல. ஐந்தாண்டு திட்டங்களின் தொடக்க காலத்தில் முன்வைக்கப்பட்டவைதான். அவை ஏன் நடக்கவில்லை என்றால், மேற்சொன்ன வளர்ச்சிப் பாதையை விவசாயத்திலும் தொழில்துறையிலும் தற்போது நிலவுகின்ற உடைமை உறவுகள் தடுக்கின்றன.
விவசாயத்திலிருந்து கிடைக்க வேண்டிய உபரியை பெரு நிலவுடைமையாளர்களும், கந்து வட்டி − கமிசன் மண்டிக்காரர்களும், அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் பல்வேறு வழிகளில் உறிஞ்சி எடுத்து உற்பத்தி சாராத ஊதாரித்தனங்களில் அழிக்கிறார்கள். அவர்களுடைய நலனுக்கு இந்த வளர்ச்சிப்பாதை எதிரானது என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல.
ஆளும் வர்க்கங்கள் முன்வைக்கும் வளர்ச்சிப் பாதையைப் பரிசீலித்துப் பார்ப்போம். இன்றைய புள்ளிவிவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வெறும் 17% மட்டுமே. (விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றி கார்ப்பரேட் மயமாக்குவதன் மூலம் தங்களது லாபத்தை அதிகரித்துக் கொள்வதுதான் அவர்களது நோக்கமேயன்றி, மொ.உ.உற்பத்தியில் விவசாயத்தின் பங்கை அதிகரிப்பது அல்ல.) அவ்வாறு அதிகரிப்பது ஆளும் வர்க்கத்தின் திட்டத்திலேயே இல்லை.
உழைப்பு சக்தியை மையப்படுத்துகின்ற வேலைவாய்ப்பையும் உழைப்பின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கின்ற நமது பார்வையிலிருந்து இதனைப் பார்க்கும்போது, வேறு முடிவுக்கு நாம் வருகிறோம். இந்தப் பார்வையின்படி நாட்டின் 50% உழைப்பாளர்களுக்கு வேலை கொடுக்கின்ற விவசாயம் நமக்கு முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த துறையாகிவிடுகிறது.
அதேபோல தொழில்துறையை எடுத்துக் கொண்டால், அதில் 85% வேலைவாய்ப்பை வழங்குகின்ற சிறு தொழில்கள் நம் பார்வையில் முக்கியத்துவம் பெறுகின்றன. உழைப்புச் சக்தியை இந்தத் துறைகளில் முழுமையாக ஈடுபடுத்துவதன் மூலம் கிடைக்கின்ற உபரியை, இவர்களை உறிஞ்சிக் கொழுக்கும் ஒட்டுண்ணி வர்க்கங்களுக்கு செல்லவிடாமல் தடுக்க வேண்டும்.

ஆனால், சமூக பொருளாதார ஆதிக்கத்தில் இருக்கும் சுரண்டும் வர்க்கங்கள், ஏழை விவசாய வர்க்கத்தினரின் சுயேச்சையான கூட்டு முயற்சிகள் அனைத்தையும் நசுக்குவார்கள். எனவே இந்த ஒட்டுண்ணி வர்க்கங்களின் ஆதிக்கத்தைத் தூக்கியெறிய, பரந்துபட்ட விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டியமைக்கும் பணியின் வழியாகத்தான், உற்பத்தி துறையில் விவசாயிகளிடையேயான கூட்டுறவையும் உருவாக்குவதும் சாத்தியம்.
தொழில்துறையைப் பொருத்தமட்டில், நிலவுகின்ற அரசமைப்பில் சிறு உற்பத்தியாளர்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை. பெரும்பான்மை மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததால், இவர்களுக்கு சந்தை இல்லை, விநியோக வலைப்பின்னல், வங்கிக்கடன் உள்ளிட்ட எதுவும் இல்லை. மேட்டுக்குடி வர்க்கத்தினரின் சந்தையை பெரு வணிக நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்கின்றன.
இவர்களுடன் போட்டி போடவேண்டுமானால், தமது தொழிலாளர்களை கசக்கிப் பிழிவதைத் தவிர சிறு தொழில்களுக்கு வேறு வழி இருப்பதில்லை. பலர் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் பணி செய்து கொடுத்தே காலம் தள்ளுகின்றனர். (வேறொரு வகையில் பார்த்தால், பெரும் தொழில் நிறுவனங்கள் தவிர்க்கமுடியாதவை அல்ல என்பதற்கு இது ஒரு சான்று.) தொழில் உற்பத்தி துறையில் 85% பேருக்கு வேலைவாய்ப்பளிப்பவை சிறு தொழில்கள்தான்.
ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்கோ வெறும் 22%. சிறு தொழில்கள் வளர வேண்டுமானால், அவற்றின் சந்தையான விவசாயப் பொருளாதாரம் மேம்படவேண்டும். அதற்கு விவசாய உற்பத்தி உறவுகளில் மாற்றம் வேண்டும். நிலப்பங்கீடு, இயற்கை வளங்களின் மீது மக்கள் அதிகாரம், கந்து வட்டி ரத்து, கமிசன் மண்டிகளுக்கு முற்றுப்புள்ளி போன்ற நடவடிக்கைகளின் விளைவாக விவசாயிகளின் வாங்கும் சக்தி சிறிதளவு அதிகரித்தால்கூட அது சிறு தொழில் வளர்ச்சியை பெருமளவுக்கு ஊக்குவிக்கும்.
சந்தையை விரிவுபடுத்துதல்
ஒரு எளிய எடுத்துக்காட்டை பார்ப்போம். புடவை, வேட்டி, துண்டு, லுங்கி, சட்டை, காற்சட்டை, சுடிதார், உள்ளாடை, காலுறை, கையுறை, கோட்டு, தொப்பி, போர்வை, தலையணை, கொசுவலை, மிதியடி போன்ற அனைத்துக்கும் சேர்த்து ஒரு கிராமப்புற குடிமகன் ஆண்டொன்றுக்கு செய்யும் செலவு சராசரியாக 964 ரூபாய் என்கிறது தேசிய மாதிரி சர்வே, 2011−12. இது கிராமப்புற பணக்காரர்களையும் உள்ளடக்கி கணக்கிடப்பட்ட சராசரி.
கிராமப்புற மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்த 964 ரூபாய் கூட செலவழிக்க சக்தியில்லாதவர்கள். (ஆனால் கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் வெறும் 25.7% என்கிறது அரசின் 2011−12 புள்ளிவிவரம்.)
இவ்வளவு மோசமான பொருளாதார நிலையிலிருந்து ஏழை விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டால், அவர்கள் துணிமணி போன்றவற்றுக்கு கூடுதலாக செலவழிப்பார்கள். துணி, செருப்பு போன்ற எளிய நுகர்பொருட்களை உற்பத்தி செய்கின்ற சிறிய கிராமப்புற தொழிற்சாலைகள் பல இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்க முடியும். உயர் தொழில்நுட்பமோ, எந்திரமோ, பெரும் மூலதனமோ இவற்றுக்குத் தேவையில்லை.
விவசாயத்துறையில் செய்யப்படும் சீர்திருத்தம் இத்தகைய கிராமப்புறத் தொழில்களை ஊக்குவிக்கும். விவசாய வேலை இல்லாத காலத்தில் இந்த கிராமப்புறத் தொழில்கள் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும். விவசாயத்தில் மேற்கொள்ளப்படும் கூட்டுறவு முறையிலான உற்பத்தியிலிருந்து கிடைக்கின்ற உபரி, இந்த சிறு தொழிற்சாலைகளுக்கான முதலீட்டை வழங்க முடியும். இவையெல்லாம் யாரும் அறியாத உண்மைகள் அல்ல. எனினும் இவை காலாவதியானவை என்று ஒதுக்கப்படுகின்றன.
ஏனென்றால், நாம் கூறுகின்ற புரட்சிகரமான விவசாய சீர்திருத்தம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதையும் வழங்காது. மாறாக, கிராமப்புற நிலச்சீர்திருத்தம் கார்ப்பரேட்டுகளின் சந்தையான கிராமப்புற பணக்கார வர்க்கத்தினரின் சந்தையை சுருக்கவே செய்யும்.
முக்கியமாக, புரட்சிகரமான விவசாய சீர்திருத்தம் என்பது இந்திய வரலாறு கண்டிராத ஒரு சமூக கொந்தளிப்பை தோற்றுவிக்கும். சட்டத்தால் புனிதப்படுத்தப்பட்டிருக்கும் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்கும். மக்கள் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான அமைப்புகளைத் தோற்றுவிக்கும். உழைப்புச் சுரண்டல், அரசு மானியங்கள், இயற்கை வளக்கொள்ளை ஆகியவற்றால் கொழுத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்கு இது மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
ஆகையினால்தான், தொழில் வளர்ச்சி நீடிக்க வேண்டுமென்றால் நிலச்சீர்திருத்தமும் நில விநியோகமும் தேவை என்று முன்பெல்லாம் பேசிக்கொண்டிருந்த பொருளாதார வல்லுநர்கள், இப்போது அதுபற்றி மூச்சே விடுவதில்லை. விவசாய சீர்திருத்தம் என்பதே காலாவதியாகிப்போன விவகாரம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
என்ன விதமான தொழில் வளர்ச்சியை நாம் விழைகிறோம்? கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தை மேலும் கொழுக்க வைக்கின்ற வளர்ச்சியையா அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சியையா என்ற கேள்விக்கு முரண்பட்ட இரண்டு பதில்கள் உண்டு. அவை நேர் எதிரான வர்க்கப் பார்வைகளிலிருந்து வருபவை. மக்கள் மயப்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சியை வேறொரு புதிய சமூக அமைப்பின் கீழ்தான் நாம் சாதிக்க இயலும்.
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி