பணி நிரந்தரம் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (16.12.2024) மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். தூய்மைப் பணியாளர்களுக்கு அரசாணை 62(2D)-யின்படி தினசரி சம்பளமாக ரூ.754 வழங்கிட வேண்டும்; தூய்மைப் பணியாளர்களிடம் அராஜகமான முறையில் செயல்படும் அவர்-லேண்ட் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சிக்கு எதிராகவும் தி.மு.க. அரசிற்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பது, தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்குகின்ற அரசாணை 152-ஐ ரத்து செய்வதுடன் “அவர்-லேண்ட்” நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகையில், “ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்குகின்ற அவர்-லேண்ட் நிறுவனம் எங்களை முறையாக நடத்தாமல் வேலையை மட்டும் அதிகளவில் வாங்கிக்கொண்டு குறைவான சம்பளத்தையே வழங்குகின்றது. கடந்த மூன்று வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கின்ற ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை, பணி பலன்களும் வழங்கப்படுவதில்லை. வேலை பார்க்கின்ற இடத்தில் ஓய்வு எடுப்பதற்கான வசதியையும் குடிநீர் வசதியையும் அவர்-லேண்ட் நிறுவனம் செய்து கொடுப்பதில்லை” என்று தங்கள் மீதான அவர்-லேண்ட் நிறுவனத்தின் சுரண்டலை தோலுறித்தனர்.
மேலும், “எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்-லேண்ட் நிறுவனத்துடன் நடைபெற்ற நான்கு பேச்சுவார்த்தைகளிலும் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லிவிட்டு பிறகு அதனை நடைமுறைப்படுத்துவது கிடையாது. இதுபற்றி மாநகராட்சியிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை” என்றனர். மதுரையில் அவர்-லேண்ட் நிறுவனத்தின் கழிவுகள் அகற்றும் பணியில் வெளிப்படைத்தன்மை இல்லை என ஏற்கெனவே அம்மாவட்ட கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு முன்வைத்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசானது வருடந்தோறும் தீபாவளிப் போன்ற பண்டிகைக் காலங்களில் சாலைகளில் உள்ள குப்பைகளை அள்ளவும் மழை வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் தூய்மைப் பணியாளர்களை அளவுக்கு அதிகமான நேரம் தூய்மை பணியில் ஈடுபடுத்துகிறது. அவ்வபோது நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லுவதன் மூலமும் சிறு சிறு நலத்திட்ட உதவிகள் மூலமும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்குவது போன்ற பிம்பத்தை தி.மு.க. அரசு ஏற்படுத்துகிறது.
ஆனால், தூய்மைப் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம், சம்பள உயர்வு, தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இன்றுவரை நிறைவேற்றாத தி.மு.க. அரசு தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சி, மாநகராட்சி வேலைகளை தனியாருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வழங்குகின்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
எனவே, தூய்மைப் பணி உள்ளிட்டு கல்வித்துறை, போக்குவரத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களும் ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே அரசு துறைகளை கார்ப்பரேட்மயமாக்கி வரும் தி.மு.க. அரசை பணிய வைத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram