ஒன் இந்தியா தமிழ் (One India Tamil) என்ற யூடியூப் சேனலுக்கு பொருளாதார ஆய்வாளரும், தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத்தலைவருமான ஜெயரஞ்சன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்த கருத்துகள் கண்டனத்துக்குரியவையாக உள்ளன. அதைப் பற்றிய விமர்சனமே இக்கட்டுரை.
அந்தப் பேட்டியில் ஜெயரஞ்சன் வைக்கின்ற வாதங்கள் தீவிரமாக கார்ப்பரேட்மயத்தை ஆதரிக்கக் கூடியதாகவும், அதைத் தீவிரமாக அமல்படுத்துவதுதான் வளர்ச்சி என்பதாகவும், உழைக்கும் மக்களின் நலனை பலிகொடுப்பது சரிதான் என்ற கோணத்திலும் இருக்கின்றன.
அந்தப் பேட்டியில் ஜெயரஞ்சன் பேசுகின்ற பல்வேறு விசயங்கள் விமர்சனத்துக்குரியவையாக உள்ளன. அதில் ஒரு சில விசயங்களை மட்டும் தற்போது பேசுவோம்.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்று கூறுகிறார், ஜெயரஞ்சன். அதற்காக நமது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். வேலையிழப்பு ஏற்பட்டாலும், அதன் பிறகு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறுகிறார்.
படிக்க: ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்
உண்மையில், தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கணினி தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது. அப்போதும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றே கூறி வந்தனர். ஆனால் இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்புகள் உருவான அளவை விட பறிக்கப்பட்ட அளவே மிக அதிகம். விவசாயம் அழிக்கப்பட்டு நாடு முழுக்க கோடிக்கணக்கான விவசாயிகள் போண்டியாக்கப்பட்டுள்ளனர். தொழில்துறையிலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவான வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை விட அதனால் பறிக்கப்பட்ட வேலைவாய்ப்பே அதிகம். கார்ப்பரேட்டுகளின் கொள்ளைதான் செங்குத்தாக வளர்ந்தது. இதனால் மீண்டும் கிராமப்புறங்களுக்கே செல்லும் அவலநிலை இந்தியாவில் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே இந்த நிலைமை என்றால், பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் என்ன நிலைமை ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். குறிப்பாக AI தொழில்நுட்பம் அமலுக்கு வந்த மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம்.
AI தொழில்நுட்பத்தின் காரணமாக கூகுள், அமேசான், யூடியூப், டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை “லேஆஃப்ஸ்” இணையதளம் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1190 தொழில்நுட்ப நிறுவனங்களில் 2,62,595 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறையை நெருக்கமாகக் கண்காணிக்கும் பிரபல தொழில்நுட்பவியலாளர் ரே வாங், இந்நிலைமை 2027 இல் இந்தியாவில் AI மற்றும் ஆட்டோமேஷன் மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்.
மென்பொருள் நிறுவனங்கள் மட்டுமல்ல, AI அனைத்துத் துறைகளிலும் வேலையிழப்பைத் தீவிரப்படுத்தும் என்பதை பல்வேறு புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. ”கிரேட் லேர்னிங்” நடத்திய சமீபத்திய ஆய்வில் 67.5% பொறியாளர்கள் AI தொழில்நுட்பத்தினால் வேலையிழப்பு அபாயத்தினை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம், எழுத்துத்துறை, குறியீட்டு முறை, வாடிக்கையாளர் சேவை, டிரைவர்கள், சட்டம், சந்தைப்படுத்துதல், உற்பத்தி, ஆசிரியர்கள், பயணம் மற்றும் சுற்றுலா, மொழிபெயர்ப்பாளர்கள், நிதி, வரைகலை வடிவமைப்பாளர்கள், பொறியியல், மனித வளங்கள், சில்லறை விற்பனை, விநியோகச் சங்கிலி ஆகிய துறைகள் AI யால் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடிய துறைகளாகக் கூறப்படுகிறது.
படிக்க: செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்துகளை எப்படி பார்ப்பது?
சமீபத்தில் ஹாலிவுட் எழுத்தாளர்களும், கலைஞர்களும் “திரைத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து மிகப்பெரிய அளவில் போராடியது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில், அரசுத்துறைகளைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தற்பொழுதே, அரசுப் பணியிடங்களுக்கான தேர்வில் சில நூறு பணியிடங்களுக்குப் பல லட்சக்கணக்கான பேர் தேர்வு எழுதும் அவலநிலையைப் பார்த்து வருகிறோம். எந்தத் துறையிலும் காலியாக இருக்கும் பணிக்கே ஆள் எடுப்பது கிடையாது. AI நுழைந்தால் என்ன ஆகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்?
மேலும் ஜெயரஞ்சன் கூறும்போது, AI க்கு ஏற்ப திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். AI சார்ந்து திறனை வளர்த்துக் கொள்ள உண்மையில் இங்கு யாருக்கு வாய்ப்புள்ளது. ஓரளவு வசதி வாய்ப்புள்ள, எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களுக்குத் தான் அதற்கான வாய்ப்புள்ளது. இதுதான் கணினி தொழில்நுட்பம் வளர்ந்த காலகட்டத்திலும் நடந்தது. பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பிரிவிலிருந்து வருபவர்கள் AI சார்ந்து திறன் வளர்த்துக் கொள்வது எந்த வகையில் சாத்தியம்? இது அனைவருக்குமான வளர்ச்சியைக் கொண்டு வராது. குறிப்பிட்ட தரப்பினருக்குத்தான் வளர்ச்சியைக் கொண்டு வரும். மற்றவர்களை ஏற்கனவே உள்ள நிலைமையை விட மோசமான நிலையில் அத்துக்கூலிகளாக மாற்றுவதற்கே வழிவகுக்கும்.
இது மட்டுமல்லாமல், அந்தப் பேட்டியில் வேறு பல விசயங்களையும் கூறுகிறார், ஜெயரஞ்சன். கார்ப்பரேட் திட்டத்தை அமல்படுத்துவதற்கு நிலங்களைக் கையகப்படுத்துவது சரிதான் என்ற கோணத்தில் வாதங்களை முன்வைக்கிறார். தமிழ்நாட்டில் அதற்கு நிறைய தடை இருக்கிறது, சுதந்திரமாக நிலங்களைக் கைப்பற்ற முடியவில்லை என்று வருத்தப்படுகிறார். டெல்டா மாவட்டங்களில் வளர்ச்சிக்காக (கார்ப்பரேட்) நிலங்களைக் கையகப்படுத்த முடியவில்லை என வருத்தப்படுகிறார். “நிலம்தான் சாமி” என்று ஒரு கோஷ்டி சுற்றுவதாகவும், நிலங்களைக் கைப்பற்றத் தடையாக இருப்பதாகவும் நிலத்தைக் காப்பதற்காகப் போராடும் மக்களையும், இயக்கங்களையும் கிண்டலடிக்கும் தொனியில் பேசுகிறார்.
அப்படியென்றால் திமுக அரசு டெல்டாவை “வேளாண் பாதுகாப்பு மண்டலம்” என்று அறிவித்ததை திட்டக் குழுத் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஏற்கவில்லையா? இதுபற்றி திமுக-வின் கருத்து என்ன?
ஜெயரஞ்சன் கூறும் வாதங்கள் அனைத்தும் ’அனைத்து மக்களுக்குமான வளர்ச்சி’ என்ற பெயரில் அப்பட்டமாக கார்ப்பரேட் கொள்ளையை நியாயப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. இதை உழைக்கும் மக்களுக்கு இழைக்கும் துரோகம் என்பதன்றி வேறென்னவென்று கூறுவது.
படிக்க: செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!
கடந்த காலங்களில் சமூகநீதி, பி.ஜே.பி எதிர்ப்பு, சமூக நலக் கொள்கைகள் என்ற அடிப்படையில் தனது உரைகள், எழுத்துக்கள் மூலமாகப் பிரபலமாக அறியப்பட்டவர்தான் ஜெயரஞ்சன். அன்று பி.ஜே.பி-யின் பல்வேறு கார்ப்பரேட் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தார். இன்றோ, திமுக அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு அப்பட்டமாக கார்ப்பரேட் கொள்ளையை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். கார்ப்பரேட் சுரண்டலால் பாதிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுக்க போராடி வரும் மக்களுக்கு இது துரோகம் செய்வதாகாதா?
தனியார்மயக் கொள்கைகளை ஆதரிக்கும் யாரும் கடைசியாக இணையும் புள்ளி இதுதான். அதனால்தான் AI யால் வேலைவாய்ப்பு பெருகும் என்ற நிர்மலா சீதாராமனின் கருத்தோடு ஜெயரஞ்சனின் கருத்து ஒன்றுபடுகிறது. தனியார்மயத்திற்கென்று மனித முகமெல்லாம் இல்லை. மிருக முகம்தான். தனியார்மயத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பது மக்களை ஏமாற்றுவதாகும். இதுகுறித்து CPM, CPI மற்றும் திமுக-வை ஆதரிக்கும் பிற ஜனநாயக சக்திகள் தங்களது கருத்தைக் கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும்.
உண்மையில் திமுக அரசு கார்ப்பரேட் திட்டங்களை ஆதரித்துக் கொண்டே, மூர்க்கமாகச் செயல்படுத்திக் கொண்டே ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. அது பாசிசத்திற்குத் துணைபுரிவதாகத்தான் சென்று முடியும்.
உண்மையில் ஜனநாயகம் வேண்டுமென்றால், உழைக்கும் மக்களுக்கெதிரான கார்ப்பரேட் திட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும். கார்ப்பரேட் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு மாற்றாக உழைக்கும் மக்களின் நலனை முன்னிறுத்திய மாற்றுக் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அறிவியல் வளர்ச்சி என்பது தனியாக வளர்ச்சியைக் கொண்டு வந்துவிடாது. அது யாருடைய நலனுக்கானதாக இருக்கிறது என்பதுதான் முக்கியமானது. அறிவியல் வளர்ச்சி மக்கள் நலனோடு இணைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட உண்மையான ஜனநாயகத்தைத்தான் மக்கள் வேண்டுகிறார்கள்.
அந்த வகையில் மக்கள் நலனின் அடிப்படையில் மாற்றுச் செயல்திட்டத்தை முன்வைத்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டியுள்ளது. மேற்சொன்ன உள்ளடக்கத்திலிருந்து “வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கம், மக்களை நேசிக்கும் அனைவரது முழக்கமாக மாறவேண்டும்.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram