செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!

இதற்கு மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்தால், இன்னும் பல பில்லியன் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு” தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியுள்ளது.

லகின் பழமையான திரைத்துறைகளில் ஒன்றான ஹாலிவுட் திரைத்துறைக்கு அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்றளவும் ஆண்டுக்கு 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க, உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு சந்தையாக ஹாலிவுட் திரைத்துறை திகழ்கிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு “ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா” (Writers Guild of America) என்ற அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தினால் ஹாலிவுட் திரைத்துறை நிலைகுலைந்து போயுள்ளது.

“ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா” என்பது அமெரிக்காவிலுள்ள திரைத்துறை, தொலைக்காட்சி மற்றும் வானொலி எழுத்தாளர்கள் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் சங்கமாகும். கிட்டத்தட்ட 11,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க எழுத்தாளர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த மே மாதம் இச்சங்கத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள், அமெரிக்காவின் கார்ப்பரேட் ஸ்டுடியோக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்புக்கு” (Alliance of Motion Picture and Television Producers – AMPTP) எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டத்தில், ஊதிய உயர்வு, தங்களது எழுத்துக்களை திரையிடப்படும் எண்ணிக்கைக்கேற்ப உத்தரவாதமான தொகை (Better Residuals), ஸ்கிரிப்ட் எழுதுவதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைகளைப் புறக்கணித்துவிட்டு, அமேசான், நெட்ஃபிளிக்ஸ், பாரமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோக்களுக்கு வெளியே “கைகளை உயர்த்துங்கள், பேனாக்களை கீழே போடுங்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு தொழிற்சங்க நகரம்” என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது, 15 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க எழுத்தாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமாகும்; ஹாலிவுட்டில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய போராட்டமாகும்.


படிக்க: அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!


வேலைநிறுத்தம் தொடங்கிய உடனேயே, “தி லேட் ஷோ வித் ஸ்டீபன் கோல்பர்ட்”, “ஜிம்மி கிம்மல் லைவ்” போன்ற பல இரவு நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் நடிகர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து விலகி போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர். ஜூன் மாத இறுதியில் முன்னூறுக்கும் மேற்பட்ட நடிகர்கள் இப்போராட்டத்தில் இணைந்தனர்.

மேலும், ஜூலை மாதத்தில், ஒரு லட்சத்து அறுபதாயிரம் கலைஞர்களை உறுப்பினர்களாக கொண்ட “திரை நடிகர்கள் சங்கம் – அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்களின் கூட்டமைப்பு” (SAG-AFTRA), ஊதிய உயர்வு, திரைவேடங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, எழுத்தாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணைந்தது. இதனால், இன்னும் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக லண்டனில் நடந்த நடிகர் கிறிஸ்டோபர் நோலனின் “ஓப்பன்ஹெய்மர்” திரைப்படத்தின் முதல் திரையிடலை அத்திரைப்படக் குழுவினர் புறக்கணித்தனர்.

எழுத்தாளர்கள் சங்கத்துடன் கலைஞர்கள் சங்கமும் இணைந்தது ஹாலிவுட் திரைத்துறைக்கு பெரிய அடியாக விழுந்தது. இந்த ஆண்டு வெளியாகியிருக்க வேண்டிய முக்கியமான படங்களான “க்ராவன் தி ஹண்டர் மற்றும் கோஸ்ட்பஸ்டர்ஸ்”, “டூன்: பார்ட் டூ” மற்றும் “சேலஞ்சர்ஸ்” போன்ற படங்களின் வெளியீட்டு தேதிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு தற்போது அப்படங்கள் 2024-ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட “டெட்பூல்-3”, “கிளாடியேட்டர்-2”, “ஸ்பைடர்-மேன்: பியான்ட் தி ஸ்பைடர்-வெர்ஸ்” போன்ற உலக பிரபலமான படங்களின் தயாரிப்பு வேலைகளையே தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தின் வீரியத்தை கண்டு அஞ்சிய டிஸ்னி-யின் தலைமை நிர்வாக அதிகாரியான “பாப் இகர்” சி.என்.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், “வேலைநிறுத்தம் செய்யும் எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் கோரிக்கைகள் எதார்த்தத்திற்கு மாறாக உள்ளது” என்று கூறினார். மேலும், தாங்களே கடுமையான நெருக்கடியில் தான் உள்ளோம் என்றும் அப்பட்டமாகப் புளுகினார்.


படிக்க: ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்


“ஒரு நாளைக்கு 78 ஆயிரம் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கும் “பாப் இகர்”, ஆடம்பர ஆடைகளை அணிந்து கொண்டு, தனக்கென தனியாக உல்லாசமான படகில் பயணித்துக் கொண்டு, கோடீஸ்வரர்களின் கூட்டத்தில் ஒருவராக இருக்கிறார். ஆனால், எங்களது கோரிக்கைகள் எதார்த்தத்திற்கு மாறானவையாக இருப்பதாகக் கூறுகிறார்” என்று போராட்டக்காரர்கள் பதிலடி கொடுத்தனர்.

ஹாலிவுட் திரைத்துறை ஆண்டுக்கு பல பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டினாலும், அதன் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் நிலை அடிப்படை வாழ்க்கை தேவைகளுக்கே  போராடுவதாகவே உள்ளது. ஸ்ட்ரீமிங் சேவை, டிஜிட்டல் தளம் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் ஹாலிவுட் திரைத்துறை மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருந்தாலும் எழுத்தாளர்களின் ஊதியம் முன்பை காட்டிலும் பல மடங்கு குறைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், மூத்த எழுத்தாளர்களின் சராசரி ஊதியம் நான்கு சதவிகிதம் குறைந்துள்ளதாக அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிலும் செயற்கை நுண்ணறிவின் வருகை ஒட்டுமொத்த தொழிலாளர்களின் வேலையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தொடக்கத்தில், பல்வேறு கோரிக்கைகளுடன் எழுத்தாளர்களால் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. வளர்ச்சிப் போக்கில் விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நடிகர்கள், வரை கலைஞர்கள், சிறிய நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் போன்றவர்களும் இந்தப் போராட்டத்தில் இறங்கியதைத் தொடர்ந்து, “திரைத்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கை போராட்டத்தின் முதன்மை கோரிக்கையாக மாறியது.

சொல்லப்போனால், செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தல் தான் ஆயிரக்கணக்கான அமெரிக்க எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூ யார்க் போன்ற நகரங்களின் வீதிகளுக்கு வரவழைத்தது. ஐந்து மாதங்களுக்கும் மேலாக, பட்டினிக் கிடந்தாலும் பரவாயில்லை என்று தொழிலாளர்கள் மேற்கொண்ட உறுதிமிக்கப் போராட்டத்தின் விளைவாக, ஹாலிவுட் திரைத்துறை மூன்று பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது.

இதற்கு மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்தால், இன்னும் பல பில்லியன் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு” தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியுள்ளது. அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம், பெரிய ஸ்டுடியோக்களுடன் மூன்று வருட ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. ஐந்து மாதப் போராட்டத்தின் விளைவாய், ஒட்டுமொத்த திரைத்துறை உழைக்கும் மக்களின் ஆதரவினால், அமெரிக்க கார்ப்பரேட் ஸ்டுடியோக்களை பணியவைத்து வெற்றியடைந்துள்ளனர், ஹாலிவுட் எழுத்தாளர்கள்.

திரைத்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கலைஞர்கள் சங்கம் போராட்டத்தைத் தொடர்கிறது.

அமெரிக்க எழுத்தாளர்கள், கலைஞர்கள் தொடங்கியிருக்கும் இந்தப் போராட்டம், செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான முதலாவது மாபெரும் போராட்டமாகும். தற்போது அமெரிக்க எழுத்தாளர்கள், கலைஞர்களுக்குக் கிடைத்துள்ள இவ்வெற்றி தற்காலிகமானது என்ற போதிலும், இனிவரும் காலங்களில் இப்போராட்டங்கள் வளர்வதை ஏகாதிபத்திய கார்ப்பரேட் உலகத்தால் தடுக்க முடியாது.

ஓவியங்களை வரைதல், கட்டுரைகள், கவிதைகள், பாடல்களை எழுதுதல், நடித்தல், தொழில்துறைக்குத் தேவையான கிராஃப் வேலைகள், வரைபட வேலைகளைச் செய்தல், மருத்துவ ஆலோசனைகள், குடும்ப நல ஆலோசனைகள் வழங்குதல் போன்ற சமூகத்தின் பல்வேறு சேவைப் பிரிவினரின் வேலைகளை எல்லாம் இந்த செயற்கை நுண்ணறிவு விழுங்க இருக்கிறது. தொழில் அடிப்படையில் பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள், தாங்கள் செயற்கை நுண்ணறிவினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம் என்றுணர்ந்து, வர்க்க உணர்வுடன் ஒன்றுபட்டுப் போராடுவதும் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய உணர்வு பெறுவதும்தான் தீர்வு.

இதற்கு அமெரிக்க எழுத்தாளர்கள், கலைஞர்கள் போராட்டம் நமக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. அந்தப் போராட்ட அனுபவங்களை வரித்துக் கொள்வோம்!


துலிபா

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க