ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்

உற்பத்தித்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டு அனைத்து துறைகளும் செயற்கை நுண்ணறிவின் வருகையால் கொத்து கொத்தான வேலையிழப்புகளைச் சந்தித்து வருகிறது.

மீபத்தில் ஒடிசாவை சேர்ந்த தனியார் செய்தி நிறுவனமான ஒ.டி.வி (ஒடிசா டிவி), இந்தியாவின் முதல் பிராந்திய செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் லிசாவை அறிமுகப்படுத்தியது. பொதுவாக ஆங்கில செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை இரண்டு மூன்று நாட்கள் கழித்தே பதிவிடும் பாலிமர், புதியதலைமுறை, நியூஸ் தமிழ் போன்ற தமிழ் செய்தி தொலைக்காட்சிகளின் சமூக வலைத்தள பக்கங்களில் இந்த செய்தி உடனடியாகவே இடம்பெற்றது. ஒரு மாநிலத்தின் பிராந்திய தொலைக்காட்சி ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழியில் சரளமாக பேசும் ஏ.ஐ செய்தி வாசிப்பாளரை வடிவமைத்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

பத்திரிகைத் துறையில் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் என்பது புதியது இல்லை. கடந்த 2018 ஆம் ஆண்டே சீனாவை சேர்ந்த சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ஆண் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் பிறகு பல நாடுகளில் செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளர்கள் பயன்படுத்தப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா டுடே இந்தியாவின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர் சனாவை அறிமுகப்படுத்தியது. விகடன் டிவி-யின் “இம்பெர்பெக்ட் ஷோ” போன்ற யூடியூப் நிகழ்ச்சிகளில் கூட ஏ.ஐ செய்தி வாசிப்பாளர்கள் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் லிசாவிற்கு தனி கவனம் கொடுக்கப்பட்டது. லிசா அசலாக பெண்ணை போல் காட்சியளித்ததும் இந்திய முக ஜாடையில் பொட்டு வைத்துக்கொண்டு காட்டன் புடவையில் கொண்டையோடு ‘சர்வ லட்சணத்துடன்’ காட்சியளித்ததும் இதற்கு முக்கிய காரணம்.

இன்ஸ்டாகிராமில் இந்த செய்திக்குக் கருத்து பதிவிட்டவர்களில் பலர் தமிழ் செய்தி வாசிப்பாளரை  “உனக்கு ஆப்பு வைக்க போறத நீயே வாசிக்கிற பாரு”, “நியூஸ் ரீடர்ஸ் ஃபுட் டெலிவரி வேலைக்கு தயாராகுங்கள்”, “இந்த செய்தியை வாசிக்கும் போது வெச்சான் பாரு ஆப்பு எனக்கு என்று செய்தி வாசிப்பவர் நினைத்திருப்பார்”, “நியூஸ் ரீடர்ஸ்க்கு வேல இல்லாம  போயிரும் போல இருக்கு”, “ரைட் டா அப்போ நியூஸ் ரீடர் வேலைய காலி பண்ண போறீங்க”, “செய்தி தொகுப்பாளர்களுக்கு பை” என்று தங்களது கருத்துகளை ’நகைச்சுவை’யுடனும் ஆதங்கத்துடனும் வெளிப்படுத்தியிருந்தனர்.


படிக்க: செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !


எப்படியிருப்பினும் அனைவரின் கருத்திலும் இந்த ஏ.ஐ செய்தி வாசிப்பாளர்கள் மூலம் செய்தி வாசிப்பாளர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்படவுள்ளது என்ற பொதுவான உண்மை மட்டும் வெளிப்பட்டது.

ஏனெனில் சமீப காலங்களாகவே செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் இதழியல் துறை பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி வருகிறது. தரவுகள் செய்திகள் சேகரிப்பது, ஆய்வு செய்வது, தரவுகள் சரிபார்ப்பது, கட்டுரை எழுதுவது போன்ற வேலைகளை தற்போது ஏ.ஐ-யே செய்கின்றது. சாட் ஜிபிடி-யின் வருகையானது இதில் ஒரு பாய்ச்சலாக அமைந்துள்ளது. குறிப்பாக  இதன் மூலம் சுதந்திர பத்திரிகையாளர்களின் (Independent Journalist) வேலை கேள்வி குறியாக்கியுள்ளது.

சான்றாக, கடந்த பிப்ரவரி மாதம் அசேல் ஸ்பிரிங்கர் என்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய பதிப்பகத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி மத்தியாஸ் டூப்ஃப்னர், “செயற்கை நுண்ணறிவு சுதந்திர பத்திரிகைத்துறையை முன்னெப்போதும் இருந்ததை விடச் சிறந்ததாக்கவும் அதை மாற்றுவதற்கும் ஆற்றல் கொண்டுள்ளது” என்று ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. மேலும் சாட் ஜிபிடி போன்ற ஏ.ஐ கருவிகள் தகவல் ஒருங்கிணைப்பில் ஒரு புரட்சியை செய்துள்ளது என்றும் சிறந்த அசல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மட்டுமே இனி தாக்குப்பிடிக்க முடியும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதன் மூலம் பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து லண்டனைச் சார்ந்த சுதந்திர பத்திரிகையாளரான ஹென்றி வில்லியம்ஸ், “ஏ.ஐ சாட் ஜிபிடி-யிடம் நான் எனது வேலையை இழக்கப் போகிறேன்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் எனது ஒரு மணிநேர வேலையை ஏ.ஐ சாட் ஜிபிடி நொடிகளில் செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


படிக்க: செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் நோக்கமும் வளர்ச்சியும்


ஹென்றி, மென்பொருளுக்கு ஒரு தலைப்பைக் கொடுத்து அதில் வரும் கட்டுரையைச் சோதித்துள்ளார். முதலில் அந்த கட்டுரையின் தொனி சற்று எந்திரகதியாகவும் இருப்பினும் முக்கியமான புள்ளிவிவரங்களை உள்ளடக்கியதாகவும் இருந்துள்ளது. ஆனால் அதில் சில மாற்றங்களை செய்த பிறகு மற்ற கட்டுரைகளை போல அதுவும் நன்றாக இருந்ததைக் கண்டு ஹென்றி அதிர்ச்சியடைந்தார். “நான் 500 பவுண்ட் வாங்கும் ஒரு கட்டுரையை சாட் ஜிபிடி 30 வினாடிகளில் இலவசமாக உருவாக்கியுள்ளது” என்றார். மனித தலையீடு இல்லாமல் ஏ.ஐ இயங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

இந்த நிலை பத்திரிகை துறையில் மட்டும் இல்லை. ஒட்டுமொத்த சமூகமும் இந்த படுபாதக நிலையைத் தான் எதிர்நோக்கியுள்ளது. உற்பத்தித்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டு அனைத்து துறைகளும் செயற்கை நுண்ணறிவின் வருகையால் கொத்து கொத்தான வேலையிழப்புகளைச் சந்தித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் 30 கோடி வேலைகளை அகற்றக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் என்ற பன்னாட்டு முதலீட்டு வங்கி அறிவித்துள்ளது. இது போன்ற எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்த வண்ணமே உள்ளன.

லிசா போன்ற ஏ.ஐ செய்தி வாசிப்பாளர்கள், ஏ.ஐ பேராசிரியர்கள், வீட்டு வேலைக்கான எந்திரங்கள் போன்றவை உருவாக்கப்படுவதை வளர்ச்சி என்று பார்க்க முடியாது. தொழிலாளர்களை தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் ஏ.ஐ இயந்திரங்களைப் பொறுத்த வேண்டும் என்ற லாபவெறியே முதலாளித்துவத்தின் நோக்கம். இதனை சாட் ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்டபோதே பலர் எச்சரித்தனர். தொழில்நுட்பங்களையும் அறிவியலையும் தனது கேடான லாபநோக்கிற்காக பயன்படுத்தும் முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி சோசலிச சமூகத்தைப் படைக்கும் வரை தொழிலாளர்கள் வேலையைவிட்டுத் தூக்கி எறியப்படுவதை தடுத்துநிறுத்த முடியாது.


சோபியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க