செயற்கை நுண்ணறிவு குறித்து நடந்து வரும் ஆராய்ச்சிகள் எந்தளவுக்கு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறதோ அதே அளவுக்கு புதிய கேள்விகளையும், அறம் சார்ந்த ஊசலாட்டங்களையும் ஏற்படுத்துகின்றது. செயற்கை நுண்ணறிதிறன் தன் வளர்ச்சியின் ஊடாக தன்னுணர்வு சார்ந்த முடிவெடுக்கும் ஆற்றலை மெல்ல மெல்ல அடைந்து வருகின்றது. கூகிள், பேஸ்புக், ஐபிஎம் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இந்த திசையிலான ஆராய்ச்சிகளுக்கு ஏராளமாக செலவிட்டு வருகின்றது. எதிர்காலத்தில் மனிதப் பண்புகள் கொண்ட இயந்திரங்கள் (Humanoids) தன்னுணர்வுடன் முடிவெடுக்கும் ஆற்றலை அடையும் திசையில் ஆராய்ச்சிகள் முன்னேறி வருகின்றன. அதற்கு முன், நாய் பூனை போன்ற பிராணிகளுக்கு ஒப்பான தன்னுணர்வு கொண்ட எந்திரங்கள் செயல்பாட்டுக்கு வரும் சாத்தியங்களும் அதிகரித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அதனுள் மூன்று பிரிவுகள் உள்ளன. ”துணைபுரியும் நுண்ணறிவு” (Assisted intelligence) – மிக எளிதான தானிமயமாக்கும் (Automation) போக்கு. தொழிற்சாலைகளில், ஐடி துறைகளில் இன்னபிற பணியிடங்களில் மனிதர்களை ஈடுபடுத்தும் ஒரே விதமான செயல்களை இயந்திரங்களைக் கொண்டு மாற்றீடு செய்வது. விரிவாக்கப்பட்ட நுண்ணறிவு (Augmented intelligence) – இது மனிதர்கள் உள்ளீடு செய்யும் தரவுகள் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளில் இருந்து கற்பது போன்றவற்றின் மூலம் ஒரு முடிவை எடுக்கும் திறன் கொண்டது. தானிமயமாக்கப்பட்ட நுண்ணறிவு (Autonomous intelligence) – இங்கே மனிதர்களின் இடையீடு தேவையில்லை; தானிமயமான கார் மற்றும் மனித இயந்திரங்கள் இதற்கான உதாரணம்.

இம்மூன்று துறைகளிலும் நடந்து வரும் ஆராய்ச்சிகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு தன்னுணர்வுடன் முடிவெடுக்கும் ஆற்றலை செயற்கை நுண்ணறிவு பெறும் நிலையை – அதாவது செயற்கை மூளை என்கிற நிலையை – நோக்கி நகர்ந்து வருகின்றது. உள்ளீடு செய்யப்பட்ட மற்றும் திரட்டப்பட்ட மின்தரவுகளை ஆழ்நிலைக் கற்றலுக்கு உட்படுத்துவது (Deep learning), இயந்திரக் கற்றல் முறையின் மூலம் ஆராய்வது (Machine Learning) போன்ற தொழில்நுட்ப உத்திகளின் மூலம் செயற்கை நுண்ணறிவு சுயேச்சையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு உயர்ந்து வருகிறது. நிதி நிறுவனங்களில் இந்த முறை தற்போது அமல்படுத்தப்பட்டும் வருகின்றது.

படிக்க:
ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !
சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்திலிருந்து சுமார் 320 மில்லியன் அமெரிக்கர்களின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த மின் தரவுகளை செயற்கை நுண்ணறிதிறன் கொண்டு ஆய்வு செய்த ப்ரைஸ் வாட்டர் கூப்பர் என்கிற நிறுவனம், அதன் மூலம் வாடிக்கையாளர் செயல்பாடுகள், சிந்தனைப் போக்கு, ஆளுமை, முடிவெடுக்கும் முறைமை (pattern) போன்றவை குறித்த வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிதி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் குறித்து எம்மாதியான முடிவை எடுக்கலாம் என்கிற பரிந்துரையை வழங்குகின்றது. போலவே, ஓட்டுனர் இல்லா தானியங்கி மகிழ்வுந்துகள் மேலை நாடுகளில் சிறிய அளவுகளில் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இவற்றை மேலும் அன்றாடப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. மருத்துவ ஆலோசனை, சட்ட ஆலோசனை என இதுகாறும் மனிதர்கள் மட்டுமே செய்யக் கூடிய வேலைகள் எனக் கருதப்பட்ட பல வேலைகளில் தற்போது இயந்திரங்கள் அமர்வது சாத்தியமே என்கிற நிலை எட்டப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் இந்த வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் மிக விரைவில் தன்னுணர்வு கொண்ட மனித இயந்திரங்களின் பயன்பாடு சாத்தியமே என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. தன்னுணர்வு (Cognition) என்பதைக் குறித்த ஆராய்சிகளுக்கு உளவியல், உயிரியல், உடலியல், நரம்பியல் துறைகளில் நடந்து வரும் ஆய்வு முடிவுகள் மேலும் செறிவூட்டுகின்றன. மனித மூளையின் தன்னுணர்வு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைக் குறித்த ஆராய்ச்சிகளுக்கே செயற்கை நுண்ணறிதிறன் பயன்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உயிரியல் துறையிலும் கணினித் துறையிலும் நடக்கும் ஆராய்ச்சிகள் ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் எட்டப்படும் ஒவ்வொரு மைல்கல்கள் ஒவ்வொன்றும் மனித மூளையைக் குறித்த புதிய புரிதல்களை ஏற்படுத்துவதோடு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடைய வேண்டிய புதிய இலக்கையும் நிர்ணயிக்கின்றன.

மனித மூளையானது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை அல்லது சிக்கலுக்கான முடிவை தர்க்கப்பூர்வமாக சிந்திப்பதன் மூலமும், விவரங்களைப் பகுத்தாராய்வதன் மூலமும் எடுக்கின்றது. இதற்கு அடிப்படை தரவுகள். தரவுகளை ஒப்பீடு செய்வதன் மூலம் (inductive reasoning) அல்லது பொருந்தாதவற்றைக் கழிப்பதன் மூலம் (deductive reasoning) ஒரு குறிப்பான சூழலுக்கு ஒரு குறிப்பான முடிவை எடுக்கிறது. அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் கால தேச வர்த்தமானங்களுக்கும், குறிப்பான சமூக பொருளாதார சூழலுக்கும் தொடர்புடையதாகவும் வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியில் ஒரு மனித மூளையின் கற்றல் திறனுக்கு உட்பட்டதாகவும் இருக்கும். எவ்வாறாயினும், மூளையின் தன்னுணர்வானது ஒரு குறிப்பிட்ட முடிவை எடுப்பதற்கு மிக ஆதாரமானது தரவுகள் அல்லது விவரங்கள். மனித மூளையின் செயல்பாடுகள் குறித்து நவீன அறிவியலுக்கு ஏற்றபட்டு வரும் புதிய புரிதல்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் ஆய்வுகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திச் சென்றுள்ளது. இதன் விளைவாகவே சுயேச்சையான தன்னறிவு கொண்ட மனித இயந்திரங்கள் நடைமுறைப் பயன்பாட்டுக்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்கிறார்கள் இத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள்.

இப்போது ஒரு அறம் சார்ந்த கேள்வியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சுயமாய் சிந்திக்க முடிந்த, தன்னுணர்வு கொண்ட, பகுத்தறியும் ஆற்றல் கொண்ட, ”ஒன்றை” அஃறிணையாய்க் கருதுவதா உயர்திணையாய்க் கருதுவதா என்கிற கேள்வி எழுகின்றது. செயற்கை நுண்ணறிதிறனின் அடுத்த கட்டம் விலங்குகளின் தன்னுணர்வுக்கு ஒப்பான நிலையை அடையும் என்கிற போது, விலங்குகளுக்கென்று வகுக்கப்பட்டுள்ள சட்ட நெறிமுறைகளையும், உரிமைகளையும் இயந்திர மனிதர்களுக்கும் பொருத்துவதா என்கிற விவாதம் அறிவியல் தொழில்நுட்ப உலகில் எழுந்துள்ளது.

மேற்குலகில் உள்ள சட்டங்களின் படி முதுகெலும்புள்ள விலங்குகள் (vertebrate animals) உயிராபத்து கொண்ட பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. அதே போல் உயிரியலின் நரம்பியல் துறையில் மனித மூளையின் திசுக்களைக் கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளும் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. சுயேட்சையாய் சிந்திக்கும் ஆற்றலும் தன்னுணர்வும் கொண்ட தனியொரு உருப்பொருள் (entity) என்கிற விளக்கத்திற்கு இயந்திய மனிதர்கள் வெகு விரைவில் பொருந்தக் கூடும்.

மகிழ்ச்சி, துயரம், ஏக்கம், வியப்பு, காதல், கருணை, அச்சம், கோபம், வீரம் போன்ற உணர்வுகளற்ற, வலி போன்ற உணர்ச்சிகளற்ற ஒரு ”ஜடம்” என்ன தான் தன்னுணர்வோடு முடிவுகள் எடுத்தாலும், சுயேட்சையாய் சிந்திக்கத் தெரிந்திருந்தாலும், இறுதியில் ”அது” வெறும் இயந்திரம் தானே என்கிற ஒரு தர்க்கமும் முன் வைக்கப்படுகின்றது. ஆனால், இங்கே ஒரு சிக்கலான கேள்வியும் எழுகின்றது. அவ்வாறான உணர்வுகளும், உணர்ச்சிகளும் கொண்ட ”ஒன்றை” உருவாக்கியிருக்கிறோம் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? “அதுவாகவே” சொல்ல வேண்டும் – அல்லது தனது உரிமைக்காகவும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காகவும் குரல் எழுப்ப வேண்டும்; அடிப்படையில் “தான்” என்கிற சுயத்தை பிரகடனப்படுத்த (Manifest) தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு விலங்கை ஒத்த தன்னுணர்வு கொண்ட இயந்திர மனிதனால் அவ்வாறான பிரகடனகப்படுத்தல் சாத்தியமா?

இந்த கேள்வியை நவீன அறிவியல் தீர்க்காத வேறு சில கேள்விகள் மேலும் சிக்கலாக்குகின்றன. உதாரணமாக உள்ளுணர்வு அல்லது பிரக்ஞை (consciousness) குறித்த ஒரு அறுதியான முடிவை நவீன அறிவியல் இன்னும் எட்டவில்லை. இதில் சற்றே நெகிழ்வாக (லிபரல்) சிந்திக்க கூடிய தரப்பினர் ஒரு விளக்கத்தை வைக்கிறார்கள். அதாவது, தரவுகளைக் கையாள்வதில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறைமையை நெறிப்படுத்தப்பட்ட கவனக்கட்டுப்பாட்டுடன் கையாண்டு நீண்டகாலத் திட்டமிடலுக்கான ஆற்றல் கொண்டிருப்பது உள்ளுணர்வுக்கான ஒரு இலக்கணம் என்கிறார்கள் (guided attentional capacities and long-term action-planning). இந்த ஒழுங்கமைக்கப்பட்ட முறைமை எனப்படுவது ஒரு குறிப்பிட்ட விவரத்தை அது நிலவும் புறநிலைக்கு தக்கபடி புரிந்து கொள்வது என்கிறார்கள்.

இதே கேள்விக்கு பழைமைவாத தரப்பு வேறு ஒரு விளக்கத்தை முன்வைக்கிறார்கள். உள்ளுணர்வுக்கு சில குறிப்பான உயிரியல் தன்மைகள் இருக்க வேண்டும்; விலங்கினங்களில் காணப்படுவதை ஒத்த கட்டுமானத்தோடு கூடிய மூளை இருக்க வேண்டும். பழமைவாத தரப்பினரின் விளக்கத்தை ஏற்பதாக இருந்தால் செயற்கை மூளை என்பது உடனடி சாத்தியம் கிடையாது – ஆனால், லிபரல் தரப்பினரின் விளக்கத்தை நவீன அறிவியல் உறுதிப்படுத்தும் பட்சத்தில் ஏறத்தாழ இயந்திர மனிதர்கள் அந்த நிலையை அடையும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மனிதனைப் போன்றே உணர்வுப் பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும், தர்க்கரீதியிலும், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு இயந்திரம் பெறுவது – அதாவது இயந்திரம் முழுமையான ”மனித” நிலையை அடைவதற்கான வளர்ச்சிப் போக்கு மேலும் பல சிக்கலான கேள்விகளையும் எழுப்புகின்றன. உதாரணமாக தனது இருப்புக்காகவும், பெருக்கத்திற்காகவும் ”அவை” மனிதர்களோடு முரண்படும் நிலை ஏற்படுமா? இந்த முரண்பாடு இறுதியில் பூமி யாருக்கானது என்கிற திசையை நோக்கிச் செல்லுமா?

படிக்க:
செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு
ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !

இதை ஒட்டி ஹாலிவுட் திரைப்பட பாணியில் ஏராளமான சதிக் கோட்பாடுகளை மேற்குலக ”ஹீலர் கோஷ்டிகள்” உருவாக்கி வருகின்றனர். எனினும், நவீன அறிவியலின் பாய்ச்சலான முன்னேற்றம் இதுகாறும் அஞ்ஞானத்தில் இருளில் பதுங்கியிருந்த “மர்மங்களை” பகல் வெளிச்சத்திற்கு இழுத்து வந்துள்ளது; செயற்கை நுண்ணறிவு என்பது அறிவியலின் வளர்ந்து வரும் அம்சம் என்பதையும், இது முன்னேறும் வேகத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் வெகு விரைவில் எஞ்சியுள்ள “அமானுஷ்யங்களுக்கும்” விடை கிடைக்கும் என உறுதியாக நம்பலாம்.

சாக்கியன்

மேலும் படிக்க: AIs should have the same ethical protections as animals

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க