ர் எழுத்தாளர் எதிரெதிர் கருத்துகளைப் பேசுகிற இரண்டு புத்தகங்களை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதுகிறார். இரண்டுமே பெரிய அளவில் கவனம் ஈர்க்கின்றன. இப்படியெல்லாம் நடப்பது மிக அரிது. தமிழில் அரசியல் சார்பு எழுத்துகளில் இப்படி நிகழ்வது உண்டு. உதாரணங்கள் தேவையில்லை. ஆனால் இது ஆங்கில நூல். எழுத்தாளரின் பெயர் நிர் எயல் (Nir Eyal). தொழில்நுட்பம் சார்ந்த எழுத்துகளில் கில்லாடி. கேமிங் மற்றும் விளம்பரத்துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர். கன்ஸ்யூமர் சைக்கலாஜி பயின்றவர். இவருடைய முதல் நூல் Hooked: How to Build Habit-Forming Products.

எப்படியெல்லாம் இணையத்தில் வித்தியாசமான வலைத்தளங்களை, சமூகவலைத்தள பக்கங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களை கவர்வது என்பதைப்பற்றிய கையேடுதான் இந்த நூல். நம் இணையதளத்துக்குள் வருகிற ஒருவரை எப்படி எல்லாம் தூண்டில் போட்டு பாயைப்போட்டுப் படுக்கவைக்கலாம் என்பதன் சூட்சமங்களை விரிவாகப் பேசும் நூல் இது. சோஷியல் மீடியா மார்க்கெட்டிங், எஸ்ஈஓ, இணையதள வடிவமைப்பாளர்களுக்கெல்லாம் மிகப்பிடித்த சூப்பர் ஹிட் இது. வெளியான ஆண்டு 2014.

நான்காண்டுகளுக்குப் பிறகு 2018ல் தன் அடுத்த நூலை எழுதினார் நிர். நூலின் பெயர் “Indistractable: How to Control Your Attention and Choose Your Life”. இது முந்தைய நூலுக்கு நேர் எதிரான கருத்துக்களை பேசுகிறது.

இணையதளங்களும் சமூகவலைத்தளங்களும் எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால் நாம் எந்த அளவுக்கு கவனச்சிதறலை எதிர்கொள்கிறோம் என்பதுதான் இந்த நூலின் கருத்து! நான் முதலில் வாசித்தது இன்டிஸ்ட்ராக்டிபிளைதான். அதற்குப்பிறகுதான் தேடிப்பிடித்து Hooked -ஐ வாசித்தேன். இரண்டுமே மிக எளிமையான அமெரிக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுவாரஸ்யமான நூல்கள். வாய்ப்பிருப்பவர்கள் படிக்கலாம்.

ஏன் அப்படி ஒரு நூலை 2014-ல் எழுதிய நிர், அதற்கு நேர் எதிரான இன்னொரு நூலை நான்காண்டுகளுக்குப் பிறகு 2018-ல் எழுதவேண்டும்?

படிக்க:
♦ காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !
♦ பயனர்களின் ஆளுமையை வடிவமைக்கும் சமூக வலைத்தளங்கள் !

நிர்ரே சமூகவலைத்தளங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டார்.

ஒருநாள் நிர்ரின் சிறிய மகள் அவரோடு உரையாடிக்கொண்டிருந்திருக்கிறார். பேசும்போது அவ்வப்போது தன் மொபைலை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டே உரையாடுகிறார் நிர். அவருடைய மகள் ஏதோ கதையை சொல்லிக்கொண்டிருக்க, அதில் கவனமில்லாமல் போனை பார்த்துக்கொண்டிருந்ததால், மகளுக்கு கோபம் வர ஆரம்பித்திருக்கிறது. மகள் பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி எதையோ கேட்க இவர் எதையோ உளறியிருக்கிறார். மகளுக்கு கோபம் உச்சத்திற்கே சென்றுவிட்டது. இதனால் வாரக்கணக்கில் பேசாமல் இருந்திருக்கிறார் மகள். நிர்ருக்கு அப்போதுதான் உரைத்திருக்கிறது தனக்கே இவர்கள் விபூதி அடித்தது. தானே சமூகவலைத்தளங்களுக்கும் மொபைலுக்கும் அடிமையாகிவிட்டோம் என்பது!

கொஞ்ச கொஞ்சமாக தன்னுடைய இந்த மோசமான பழக்கத்தை ஆராயத்தொடங்குகிறார். ஏன் உரையாடல்களின் போது போனை எடுத்து நோண்டுகிறோம்… ஏன் நம்மால் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களை, மெசேஞ்சர்களை பார்க்காமல் இருக்கமுடிவதில்லை என்கிற தேடலில் உருவானதுதான் நிர்ரின் இரண்டாவது நூலான இன்டிஸ்ட்ராக்டிபிள். இணையத்திற்கு அடிமைபட்டிருக்கிறோம் என நினைப்பவர்களுக்கு இந்த நூலை நிச்சயம் பரிந்துரைப்பேன். நிச்சயம் ஓரளவு உதவும்.

நிர் மட்டுமல்ல நம் எல்லோருக்குமே இது சகஜமாகிவிட்டது. உரையாடல்களின் போது எதிரில் இருப்பவரை அவமதிப்பதைப்போல மொபைலை எடுத்து விரல் தேய்த்துக்கொண்டிருப்பது இன்று வழக்கமாகிவிட்டது. நம்மிடம் பேசும்போது யாராவது அப்படி செய்தால்தான் நமக்கு கடுப்பாகும். ஆனால் நாமும் அதையே ஏன் செய்கிறோம்?

உரையாடல்களின் போது மட்டும் அல்ல, திரைப்படம் பார்க்கும்போது, புத்தகம் வாசிக்கும்போது, முக்கியமான சந்திப்புகளின் போது என அன்றாட வாழ்வில் இந்த இணைய இடையீடுகள் அதிகரித்துவிட்டன. குறிப்பாக இந்த இடையீடுகள் நம் வாழ்க்கையில் நேரடியாகவே பாதிப்புகளை உண்டாக்கவும் தொடங்கிவிட்டன. நமக்கு பிடித்தமானவர்களோடு பேசும்போது மட்டுமல்ல காதலிக்கும் போது, கலவியின் போது, படிக்கும்போது, எழுதும்போது, சாப்பிடும்போது என கவனச்சிதறல் நம் வாழ்வில் அங்கமாகிவிட்டத. எதையுமே முழுமையாக உணர்ந்து செய்கிற உணர்வுகளை இழந்துவிட்டோம்! அது தரும் மகிழ்ச்சியை மறந்துவிட்டோம்.

இடையீடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்வோம். ‘ஆமாங்க பேஸ்புக்கால படிக்க முடியல, வாட்ஸப்பால சிந்திக்க முடியல’ என்பது சகஜமாக சொல்லக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. நிர் இரண்டு விதமான மனிதர்களை பற்றிச் சொல்கிறார். Blamers and Shamers. ப்ளேமர்ஸ் என்பவர்கள் காலில் முள் குத்திவிட்டது என்பவர்கள். ஷேமர்ஸ் முள்ளில் காலை வைத்துவிட்டேன் என்று சொல்பவர்கள்.

ப்ளேமர்ஸ் ‘சமூகவலைதளங்களால்தான் தனக்கு கவனச்சிதறல் உண்டாகிறது’ என மொத்த குற்றத்தையும் பேஸ்புக் மீது போடுகிறவர்கள். ஷேமர்ஸ் ”நான் சமூகவலைதளங்களுக்கு அடிமையாக இருப்பதால் கவனச்சிதறல் ஏற்படுகிறது” என அப்ரூவர் ஆகிறவர்கள். இதில் நாம் எல்லோருமே முதல்வகைதான் என்கிறார் நிர். முதலில் அந்த மனநிலையை உடைத்தெறியவும் சொல்கிறார். இதை உணர்ந்துவிட்டாலே நீங்கள் பாதி திருந்திவிட்டீர்கள் என்கிறார். காரணம் நம்மை உள்ளிருந்து ஊக்குவிக்கும் Internal Triggers எது என்பது தெரிந்தால்தான் இதை சரிசெய்ய முடியும். மேலும் நான்கு வழிகளை பரிந்துரைக்கிறார் நிர்.

வழி 1 – Mastering the internal triggers

நாம் ஒரு செயலை செய்யும்போது அதில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாமல், செல்போனை தேடுகிற உணர்வு ஏன் எழுகிறது? அந்த உணர்வுக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வது. தனிமை, சோகம், சோர்வு, ஊக்கத்திற்கான ஏக்கம், போர் அடிப்பது, FOMO (Fear of missing out) ­என இந்த உள்ளிருந்து தூண்டும் சாத்தானுக்கு பல பெயர்களைப் பட்டியலிடுகிறார் நிர். நூலில் Distraction Tracker என்கிற விஷயத்தை நமக்கு அறிமுகப்படுத்தவும் செய்கிறார். எப்போதெல்லாம் நமக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது என்பதை குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள சொல்கிறார். போதைப்பழக்கத்திலிருந்து வெளியேறுதலுக்கு இணையான மிகுந்த உழைப்பையும் நீடித்த மனப்போராட்டங்களையும் கோரக்கூடியது இது!

நிர் எயல் (Nir Eyal)

வழி 2 – Make time for Traction

Distraction என்கிற சொல்லுக்கு எதிரான சொல் Traction என்கிறார் நிர். ட்ராக்‌ஷன் என்பது ஒரு செயலை செய்கிற உந்துவிசை. அதை கண்டறிவது முக்கியம் என்கிறார் நிர். அடுத்து எந்த செயல்களை எல்லாம் கவனச்சிதறல் இல்லாமல் செய்யவேண்டும் என்கிற பட்டியலையும் அதற்கென நேரத்தையும் திட்டமிடுவது முக்கியம் என்கிறார். நம்மிடம் அப்படிப்பட்ட பட்டியல் எதுவுமே எப்போதும் இருந்ததில்லை. வாழ்க்கையில் எதுவெல்லாம் கவனச்சிதறல் இன்றி செய்யவேண்டிய முக்கியமான வேலைகள் என்பது தெரியாமல் எதை கவனமாக செய்யப்போகிறோம்!

வழி 3 – Hack Back the external triggers

இணைய போதைக்கு தீர்வு சொல்கிற எல்லோருமே அதிலிருந்து மொத்தமாக வெளியேறவே சொல்வதை பார்த்திருக்கலாம். ஆனால் நிர் அதற்கு நேர்மாறாக… முள்ளை முள்ளால் எடுக்க வலியுறுத்துகிறார். இணையம் உங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காமல் இணையத்தை உங்களுக்கேற்றபடி மாற்றுங்கள் என்கிறார். சமூகவலைத்தளங்களுக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்துங்கள் என்கிறார். Extrenal triggers களை உங்களுக்கு ஏற்றபடி உருவாக்குதல் முக்கியம். செல்போனின் கின்கினி ஒலியோசை அடித்தால்தானே மூளை துடிக்கிறது. அந்த கின்கினியை ஜிம்முக்கு போகும் நேரம், புத்தகம் படிக்கும் நேரம், மீட்டிங் நேரம் என உங்களுடைய நல்ல வேலைகளை நினைவூட்டும் விஷயமாக மாற்றப் பரிந்துரைக்கிறார். இணையத்திற்கு நாம் சேவை செய்யாமல், நம் வேலைகளுக்கு உற்ற துணையாக இணையத்தை மாற்றுங்கள் என்கிறார்!

படிக்க:
♦ செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு
♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

வழி 4 – Prevent Distraction with Pacts

நமக்குநாமே சில உடன்படிக்கைகளை போட்டுக்கொண்டு செயலாற்ற வற்புறுத்துகிறார். இரவு பத்து மணிக்கு மேல் நிர் தன் வீட்டில் இன்டர்நெட் தானாகவே ஆப் ஆகிவிடும்படி செட் செய்து வைத்திருக்கிறார். அவர் நினைத்தால் ஆன் பண்ணிக்கொள்ள முடியும்தான் என்றாலும், வலிந்து சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அதை பின்பற்றுகிறார். இதை Effort pact என்கிறார், போலவே நண்பர்களோடு குடும்பத்தோடு பேசும்போது போனை எடுத்து நோண்டும் பழக்கத்தை தவிர்க்க தனக்குத்தானே அபராதம் விதிக்கிற முறையையும் பின்பற்றுகிறார். கடைசியாக Identity pact என்கிற விஷயத்தையும் சொல்கிறார். அது நம்மை நாமே இணைய அடிமைத்தனத்திற்கு எதிரானவர் என்கிற பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டு செயல்படுவது.

***

ப்படி பலவழிகளை சொன்னாலும் அடிப்படையில் அவர் முன்வைப்பது, சுயக்கட்டுப்பாடுதான். “கடவுள் திடீரெனத் தோன்றி உனக்கு ஒரு சூப்பர் பவர் வழங்குகிறேன் என்று சொன்னால் நான் கவனசிதறல் இல்லாத மனிதனாக இருக்கவேண்டும் என்றுதான் கேட்பேன், காரணம் 21ம் நூற்றாண்டில் அதுதான் மிகக்கடினமான ஒன்று… அப்படி கவனச்சிதறல் இல்லாதவன்தான் சூப்பர்மேன்… ஏன் என்றால் கவனச்சிதறலை கவனிக்காமல் போனால் சீக்கிரமே நம்மை இணையம் முழுவதுமாக விழுங்கிவிடும், ஏன் இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் தெரியுமா அதற்கென திட்டம் போட்டுக்கொடுத்தவனே நான்தான்” என்றும் எச்சரிக்கிறார்!

நன்றி : ஃபேஸ்புக்கில் Athisha Vinod. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க