இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
கோரத்தாண்டவமே கொரோனா ! – பகுதி 3

பகுதி 1 :  உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
பகுதி 2 : வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !

நவீனகால கொள்ளைநோய் அச்சுறுத்தலும் நவீன முதலாளித்துவ உற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதமும் :

வீன உலகின் முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்று வைரஸ்களால் ஏற்படும் உலகளாவிய கொள்ளைநோயின் பரவலாகும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இத்தகையதொரு அச்சுறுத்தலைப் புரிந்து கொள்ள முதலாளித்துவ சமுதாயக் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமகால வேளாண் கட்டமைப்புக்கும் நோய்க்கிருமிகளின் சூனாடிக் தாவல்களுக்கும் (Zoonotic transmission) இடையிலான உறவை ராப் வாலஸ் தனது “பெரும் பண்ணைகள் பெரும் ஃபுளுக்காய்ச்சலை உருவாக்குகிறது” எனும் புத்தகத்தில் விலாவாரியாக விளக்கியுள்ளார்.13  இதில் புதுவகையான கொள்ளைநோய்களை உருவாக்கிப் பரப்பும் வல்லமை வாய்ந்ததாக மீப்பெரும் வேளாண் உற்பத்தி & வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறார்.

நவீன வேளாண் வணிகத்தில் அதிக எண்ணிக்கையில் மிக நெருக்கமாக ஒரேவகையான பண்ணை விலங்குகளை (பிராய்லர் கோழி, வாத்து, வெண்பன்றி போன்றவை) ஒன்றுகுவிப்பதால் அதிக அளிவிலான நோய்த்தொற்றிற்கும் குறைவான நோயெதிர்ப்பு சக்திக்கும் காரணமாவதையும் விவாதிக்கிறார். பெரும் பண்ணைகளுக்கும் கொள்ளை நோய்கள் உருவாகுவதற்கும் இடையிலான தொடர்பு குறித்து இனி பார்க்கலாம்.

படிக்க :
♦ கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
♦ அறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் !

1990-களுக்குப் பின், உலகமயமாக்கலால் வேளாண் உற்பத்தி & வணிக வளர்ச்சியும் உலகளாவிய நிகழ்ச்சிப்போக்காக மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக தொழிற்துறைமயமாக்கப்பட்ட கோழி மற்றும் கால்நடை உற்பத்திக்கான மாதிரியாக டைசன் ஃபுட்ஸ் எனப்படும் பன்னாட்டு நிறுவனத்தைக் கூறலாம். ஆண்டுதோறும் 220 கோடி கோழிகளை இறைச்சியாக்கும் இந்நிறுவனம், அதிகரித்த, செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி ஒப்பந்த விவசாயிகளைச் சுரண்டுதல் தொழிற்சங்க உரிமைகளைப் பறித்தல் வேலைமுறையால் தொழிலாளர்கள் பரவலாக காயமடைதல் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் விதமாகக் கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் அரசியல் ஊழல்களை நிகழ்த்துவது போன்றவற்றிற்கான இலக்கணமாக திகழ்வதாக மைக் டேவிஸ் குறிப்பிடுகிறார்.

சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் டைசன் போன்ற பெருமுதலைகள், உள்ளூர் விவசாயிகளை மீப்பெரும் கோழி மற்றும் பன்றி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ள நிர்பந்திக்கின்றன. முழு விவசாய மாவட்டங்களும் கோழிப்பண்ணைகளின் களஞ்சியமாக மாற்றப்பட்டுள்ளன; விவசாயிகள் கோழிப் பராமரிப்பாளர்களை விட சற்று அதிகமான பாத்திரத்தையே ஆற்றுகிறார்கள்14.

H5N1 வைரஸ் தாவல்

நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையில், பெரும் இலாப அடையும் நோக்கத்திற்காக மேலே முந்தைய பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமீறல்களோடு நடைபெறும் பெருவீத கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு துறை எப்படி நுண்கிருமிகள் பரிணாமம் அடைவதற்கும் வேகமாக பரவுவதற்கும் அடிப்படையை உருவாக்கி கொண்டுக்கின்றன என்பதை புரிந்துக்கொள்வது முக்கியமானது.

இதைப் புரிந்துகொள்ள 1997-ல் H5N1 என்ற பரிணாமமடைந்த வைரஸால் ஏற்பட்ட “பறவைக் காய்ச்சலில்” இருந்து ஆரம்பிக்கலாம். முதன்முதலில் இது ஹாங்காங் கோழி பண்ணைகளில் தோன்றியது. ஆரம்பத்தில் கோழி மந்தைகளிடையே அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ஏற்படுத்திய பின்னர் மனிதர்களுக்கு தாவியது. அந்த ஆண்டு இறுதியில், 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அதில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் இறந்தனர்.

இலாப வெறி கொண்ட பெரும்பண்ணைகள் ஆட்கொல்லி வைரஸின் விளைநிலமாக மாறுவது எப்படி ?

டிசம்பர் 1997-இல், ஹாங்காங்கில் உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்கு விற்கும் “ஈரச் சந்தையில்” (wet market) இறைச்சிக் கோழிகள் நோய்த்தொற்றால் தாக்கப்பட்டன மீண்டும் H5N1 வைரஸ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டது. இக்கோழிகள் குவாங்டாங்க் எனும் பகுதியிலிருந்து ஹாங்காங்கிற்கு கொண்டுவரப்பட்டவை.

ஹாங்காங் பண்ணைகள் பலவிதமானவை. மிக அதிக அளவில் இறைச்சிக் கோழிகளை ஒன்றாக அடைத்து வைத்து வளர்க்கும் பெருவீதப் பண்ணைகள் முதல் பிற பண்ணை விலங்குகள், நீர்வாழ் பறவைகள் மற்றும் காட்டுப் பறவைகளுடன் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் இறைச்சிக் கோழிகளைக் கொண்ட சிறுவீதப் பண்ணைகள் வரை இங்கு காணப்படுகின்றன.

சந்தை விலையின் ஏற்றஇறக்கத்திலிருந்து பாதுகாக்க உயிருள்ள கோழிகளை அடைத்து வைக்கும் மிகப் பெரிய கிடங்குகளும் இங்குள்ளன. மிகக் குறைவாகவே ஒழுங்குபடுத்தப்பட்ட இத்தகையதொரு தொழிற்துறையில் வீட்டுவளர்ப்பு வாத்துக்கள், மணிவாத்துக்கள், பாலூட்டிகள், ஊர்வன, காட்டுயிர்கள் மற்றும் நீர்வாழ்ப்பறவைகள் ஆகியவற்றுடன் சேர்த்தே இந்த இறைச்சிக் கோழிகளும் அடைக்கப்படுகின்றன.

ஹாங்காங்கின் எல்லையாக இருக்கும் குவாங்டாங், புதிய கோழி வளர்ப்பு முறைகளுக்கான ஓர் ஆய்வகமாக இருந்தது. அதாவது இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய பத்தாண்டுகளில் அமெரிக்காவில் முன்னோடியாக இருந்த தொழில்துறை கோழி வளர்ப்பை இது பிரதிபலித்தது. இப்பண்ணைகளே “ஃபுளுக் காய்ச்சலின் பரிணாம மையமாக” (epicenter) விளங்குகின்றன.

இங்கு அமெரிக்க டைசன் நிறுவனத்தின் மாதிரியில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களால் உருவாக்கப்பட்ட சரோயன் போக்பாண்ட் வணிகப் பேரரசு, சீனாவின் தொழில்துறை விவசாயத்திற்கான திருப்பமாக அமைந்தது. இங்கு வைரஸ்களை இனப்பெருக்கம் செய்தது மட்டுமல்ல, உண்மையில் அதிக தொற்றுத்தன்மை ள்ளனவாகவும், தேர்ந்தெடுக்கும் வல்லமை வாய்ந்ததாகவும் பரிணாமமடைந்தது. இது எப்படி ஏற்படுகிறது?

படிக்க :
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !
♦ சுகாதாரத்தை சீர்கெடுக்கும் PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடு!

பொதுவாக நோய்க்கிருமிகள் தங்களை இன்னொரு ஓம்புயிரிக்கு (Host) (தன்னைத் தொற்றுகின்ற கிருமியைப் பேணிப் பாதுகாக்கின்ற உயிரி ஓம்புயிரி) கடத்துமுன்னே தற்போதைய ஓம்புயிரிக்கு சேதத்தை ஏற்படுத்தும் திறனை (உயிரியல்ரீதியாக பார்த்தால்) வளர்த்துக் கொள்ளாது. அதாவது ஒரு நோய்க்கிருமி மற்றொரு ஓம்புயிரியை கண்டடையும் முன் தற்போதைய ஓம்புயிரியை தீவிரமாக தாக்கினால், அது தனது தொற்றுச் சங்கிலியை (தனது சந்ததிகளின் அபிவிருத்தியை) தானே அறுப்பது போன்றது என்பதால் அப்படி பரிணாமமடையாது. ஆனால் நோய்க்கிருமி தாவுவதற்கு ஏற்ற அடுத்த ஓம்புயிரி தாயாராக இருக்கும்பட்சத்தில், அது வீரியமிக்கதாக பரிணமிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் து தன் ஓம்புயிரியை தீவிரமாக தாக்குவதற்கு முன்பே அது சங்கிலியின் அடுத்த தொற்றை வெற்றிகரமாக ஏற்படுத்துகிறது.

[தொழில்துறை] பண்ணைகளின் உற்பத்தியின் சுகாதாரமற்ற, நெருக்கமான தன்மையின் காரணமாக, ஃபுளு வைரஸ்களின் வீரியம் அதிகமாக ஆவதற்கும் பரிணாமமடைவதற்கும் ஏற்றவகையில் அதன் மீது கூடுதல் அழுத்தங்கள் உள்ளன. தொழில்துறை விலங்குகள் குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்தவுடன் அவை கொல்லப்படுகின்றன. அதனால், இந்நவீன பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கோழி, வாத்து அல்லது பன்றி கொல்லப்படுவதற்கு முன்பு, எந்தவொரு விலங்கிலும் வசிக்கும் இவ்வைரஸ்கள் விரைவாக அவற்றின் பரவல் வரம்பை அடைய வேண்டும்.

பண்ணைக் கோழிகள் 65 நாட்களில் இறைச்சியாக்கப் படுவதாலும், ஒரே இடத்தில் மிக நெருக்கமாக வளர்க்கப் படுவதாலும் நோய்க்கிருமிகள் வாழ ஏதுவான ஓம்புயிரிகள் மிகக் குறுகிய காலத்தில் பெரும் அளவில் இவற்றிற்குக் கிடைப்பதால் அதன் வீரியம் துரிதமாக அதிகரித்துப் நோய்ப்பரவல் வேகமாக நடைபெறுகிறது.

பண்ணை விலங்குகள் அல்லது இறைச்சிக் கோழிகளை ஒப்பிடும்போது, ஒரு குறிப்பிட்ட சிறப்பின காட்டு விலங்குகளுக்குள்ளே கூட (உதாரணமாக, காட்டு வௌவால்களுக்கு உள்ளே கூட) வைரஸ் பரவுவது ஒப்பீட்டளவில் கடினம். ஏனென்றால், ஒரு சிறப்பினத்திற்குள்ளே ர் உயிரி மற்றொரு உயிரியிடமிருந்து வேறுபட்டது; அதனால் அவைகளின் நோயெதிர்ப்புத் தன்மையும் வேறுபட்டது. ஆனால், பண்ணை விலங்குகள் இறைச்சிக்காக மனிதனால் செயற்கை தேர்வு செய்யப்படுவதால், கிட்டதட்ட மரபணுக்கள் வேறுபாடே இல்லாததாக, ஒரே மரபணு பிரதியாக எல்லா விலங்குகளும் (more or less genetically identical) ஆகிவிடுகின்றன.

அதனால், வைரஸ்கள் எந்தவித எதிர்ப்புமின்றி பண்ணையின் எல்லா விலங்குகளுக்கும் பரவுவதற்கு ஏற்றவாறு அவற்றின் உயிரியில் அமைப்பு இருக்கிறது. மேற்குறிப்பிட்ட எல்லா அம்சங்களில் இருந்தும் நவீன பெருவீத கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு துறையின் உற்பத்தித்தன்மை வைரஸ் பரவுவதற்கு ஏதுவாக இருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

பன்றிப் பண்ணைகள்

மேலும் கோழி, பன்றி உள்ளிட்ட கால்நடை வளர்ப்புப் பண்ணை விலங்குகள் உயிரோடு இருக்கையில் மனிதர்களோடு (பண்ணைப் பணியாட்கள், சந்தை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள்) பெருமளவில் தொடர்பில் இருக்கின்றன. இதன் காரணமாகவே சூனாசிஸ் தாவலுக்கு உகந்த சூழல் இவற்றுக்கு வாய்க்கப் பெறுகின்றன. குறிப்பாக, பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற வேலை நிலைமைகளே மனிதர்களை தொற்றுமாறு இவ்வைரஸ்கள் பரிணாமமடைவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

குவாங்டாங்கிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான பண்ணைக் கோழிகளின் விற்பனை வலைப்பின்னல், இத்தகையதொரு கொள்ளைத் தொற்று உருவாவதற்கு ஏற்ற தளமாகச் இருப்பதற்கு இன்னொரு காரணம், இப்பகுதியில் தொழிற்மயமான ஆனால் இலாப நோக்கிற்காக ஒழுங்குபடுத்தப்படாத பண்ணைகள் முதல் வயற்காடுகளையொட்டி வளர்க்கப்படும் புறக்கடைப் பண்ணைகள் வரை அக்கம்பக்கமாக உள்ளன.

கூடவே இங்கு பண்ணைப்பறவை முதல், வளர்ப்புப் பறவை, காட்டுப்பறவை வரை எல்லாவகையான பறவையினங்களையும் ஒரே இடத்தில் குவிக்கும் ஈரச்சந்தைகளும் உள்ளன. அதாவது காட்டுபறவை அல்லது விலங்குகளிடம் இருந்து பண்ணை விலங்குகளுக்கு வைரஸ் பரவ ஏதுவான நிலைமைகள் உள்ளன.

பறவைக் காய்ச்சல் வைரஸ் பெரும்பண்ணைகளில் கடந்து வந்த பாதை :

வாத்துகளில் காணப்படும் ஃபுளு வைரஸ் இரண்டு காடை வகைகளில் தாவி பின்னர் H5N1 வைரஸாக பரிணாமமடைந்து, இறைச்சிக் கோழிகளை தொற்றியது. நோய்த்தொற்று வெடிப்பால் ஹாங்காங்கில் 20 கோடி பறவைகள் வரை இறந்தன அல்லது கொல்லப்பட்டன. குவாங்டாங்கிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்வதை ஹாங்காங் தடை செய்தது. சந்தைகள் மூடப்பட்டு வெவ்வேறு விலங்குகளுக்கு தனித்தனி இடங்களை ஒதுக்கும் விதமாக அவை மறுசீரமைப்பு செய்யப்பட்டன.

உயிரோடு கூடிய வாத்து விற்பனை தடை செய்யப்பட்டது. இந்நடைமுறைகள் குறைந்த காலம் வேலைசெய்தன. ஏனென்றால் துவக்கத்தில் H5N1 வைரசானது, மனிதன் மனிதன் தாவலை அவ்வளவாக நடத்தவில்லை. ஆகவே, பெரும்பாலான மனிதத் தொற்று கோழிப்பண்ணை விவசாயிகளின் குழந்தைகள், பராமரிப்பாளர்கள் என யாரெல்லாம் இப்பறவைகளுடன் நெருக்கமான உறவைப் பேணினார்களோ அவர்களை மட்டுமே தாக்கியது.

முதலில் இது சூனாடிக்காகத்தான் இருந்துவந்தது. இருந்தும் உலக சுகாதார நிறுவனக் கணக்குப்படி உலகெங்கும் H5N1-ல் பாதிக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 861 ஆகவும் இறப்பு 455 ஆகவும் இருந்தது. இதில் எகிப்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டன.

000

இடைக்குறிப்பாக ஒன்றை கூறுவோம் – இப்போது கோவிட்-19 பற்றி எளிதாக “சீன வைரஸ்” என்று இனவெறி பார்வையில் முத்திரை குத்துகின்றனர். இது தவறானது எனபதைத்தான் மேற்கூறிய சூனாட்டிக் தாவல் மற்றும் வைரசின் பரிணாம வளர்ச்சி பற்றிய விளக்கம் தெரிவிக்கிறது.

பூகோளரீதியாக வேறுபட்ட வைரஸ்கள் (அல்லது உருதிரிந்த வைரஸ்கள்) ஒன்று கலப்பதற்கு நவீன முதலாளித்துவ உற்பத்திமுறை அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது; எந்த நாட்டில் தோன்றினாலும் அது உலகளாவிய முதலாளித்துவத்தின் படைப்பாகவே இருப்பதை நவீன அறிவியல் நிரூபித்துள்ளது.

இதிலிருந்தே இலாபவெறி கொண்ட உலமயமாக்கல், புதிய வைரஸ்களை உருவாக்குவதை உய்ந்துணரலாம்.

000

விஷயத்தைத் தொடர்வோம். 21-ம் நூற்றாண்டில் மனித சமூகத்திற்கு ஏற்பட்ட முதல் கொள்ளை நோய்க்கு காரணமாக இருந்தது H5N1 அல்ல. மாறாக 2009-ல், H1N1 எனப்படும் ஃபுளு வைரஸ் (பன்றிக் காய்ச்சல்) தொற்று அமெரிக்காவைத் தாக்கியது. இவ்வைரஸ் மனிதன்மனிதன் தொற்று ஏற்படுத்தும் வகையில் பரிணமித்தது.

இந்நோய்க்கிருமிகள் மெக்ஸிகோவின் மீப்பெரும் பன்றி வளர்ப்பு தொழிற்சாலைகளில் உள்ள பன்றிக்கூடத்தில் பரவியது. அதாவது இவ்வைரஸின் மரபுக் கால்வழிக்கூறு (strain) மனிதன், பறவைகள், யுரேஷியா மற்றும் அமெரிக்க பகுதிகளைச் சேர்ந்த இரு பன்றியினங்கள் ஆகியவற்றின் மரபணு துணுக்குகள் (gene segments) மூலம் பரிணமித்தது.

பன்றிக் காய்ச்சலை உலகளாவிய கொள்ளை நோயென உடனே அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். ஆனால் இதன் வீரியம் சாதாரண பருவகால ஃபுளுக் காய்ச்சலை ஒத்ததாக இருந்தால் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது. பின்னர் உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் மருந்து மற்றும் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சம்பளப் பட்டியலில் இருப்பதால் தான் இப்படி முந்திரிக்கொட்டைத்தனமாக அறிவிப்பு வெளியிட்டதென இங்கிலாந்து மருத்துவ இதழ் குற்றஞ்சாட்டியது.

படிக்க :
♦ பன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?
♦ Trust WHO ஆவணப்படம் : உலக சுகாதார நிறுவனத்தின் மறுபக்கம் !

இலாபநோக்கம் கொண்டவர்கள் ஊடுருவியிருக்கும் உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனத்தின் மீது பொது சமூகத்திற்கு சந்தேகமோ விரோதமோ ஏற்படுவது ஆச்சரியமானல்ல. ஆனால் H1N1-ஓ அல்லது H5N1-, இரண்டுமே முற்றுப்பெறாத அல்லது தள்ளிவைக்கப்பட்ட பேரழிவுகளாகவே கருதப்பட வேண்டும். ஏனென்றால் H5N1 தேவையான அளவுக்கு மனிதமனிதத் தொற்றுக்கு தயாராகவில்லை, H1N1 போதுமான அளவு வீரியமிக்கதாக இல்லை.

ஆனால், இவற்றின் சமகாலத்தில் ஏற்பட்ட இரண்டு கொரோனா வைரஸ் வெடிப்புகளும், இதைப் போலவே இருந்த என்று கூற முடியாது. 2003-ம் ஆண்டில் குவாங்டாங்கில் ஒரு கொரோனா வைரஸ் தோன்றியது. இதனால் அம்மாகாணத்தில் நிமோனியா நோய் அதிகமாக பதிவாகியது. இது SARS-ன் அறிகுறியாகும். இதனால் ஏற்பட்ட இறப்பு விகிதம் சுமார் 10 சதவிகிதம் இருந்தது.

SARS-கொரோனா வைரஸ் அம்மாகாணத்தின் ஈரச்சந்தையில் விற்கப்படும் ஒருவகை புனுகுப்பூனைகளிலிருந்து (masked palm civets) தொற்றியது. SARS-கொரோனா வைரஸின் வாழ்கலனாக இருக்கும் ஒருவகை வெளவால்களுக்கும் (Chinese horseshoe bats) மனிதர்களுக்கும் இடையில் இப்பூனைகள் இடைநிலைப் பாத்திரம் (intermediate host) வகித்தன. புனுகுப் பூனைகள், வௌவால்கள், குரங்குகள், யானைகள் ஆகியவை காபி (Coffee) கொட்டைகளை நொதிக்க செய்வதற்காக பண்ணைகளில் வளர்க்கப்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். (இந்த விலங்களுக்கு உணவுடன் சேர்த்து காப்பிக் கொட்டைகள் கொடுக்கப்படுகின்றன. அவை உண்டு செறித்தப்பின்னர் வெளியேற்றும் கழிவுகளில் இருந்து காப்பிக் கொட்டைகள் எடுக்கப்படுகின்றன. இது, இயற்கையான முறையில் நொதிக்க வைக்கும் முறை. இந்த முறையில் தயாரிக்கப்படும் காப்பிக் கொட்டைகள் மிக மிக விலை உயர்ந்தவை).

சார்ஸ் கொரோனா-1-க்கு பின்னர் அதைவிடக் வீரியமான, மெர்ஸ் கொரோனா வைரஸ் (MERS) 2012-ல் சவுதி அரேபியாவைத் தாக்கியது. இந்நோய்த் தாக்குதலுக்கு ஆளான 35 சதவீதத்தினரை இக்கொள்ளை நோய் கொன்றது. இது ஐரோப்பா, ஆசியா, அமெரிக்க என எல்லா இடங்களிலும் பரவியது. மெர்ஸ் வைரஸ் வௌவால்களிலிருந்து மனிதர்களுக்கு வருவதற்கு ஒட்டகங்கள் இடைநிலைப் பாத்திரம் ஆற்றி. அரேபியாவில் ஒட்டகங்கள் ரேஸ் நடத்தவும், சுற்றிலா கண்காட்சியிலும், இறைச்சிக்காகவும் பாலுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. இதனாலேயே ஒட்டக வளர்ப்பு நவீன அரேபியாவில் தீவரமடைந்துள்ளது. கூடவே உயிருள்ள ஒட்டகங்கள் இறக்குமதியும் செய்யப்படுகின்றன.

கடந்த 2013-ம் ஆண்டு அரேபியாவில் வெட்டப்பட்ட 70% ஒட்டகங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியகிழக்கு நாடுகளுக்குள் ரேஸ் நடத்தவும், சுற்றிலா கண்காட்சிக்காகவும் எல்லைகளைத் தாண்டி ஒட்டகங்கள் நகர்கின்றன. இத்தகைய வணிக நடவடிக்கைகள் காரணமாகவே பல்வேறு இன மக்கள் வழி வைரஸின் பல்வேறுபட்ட மரபுக் கால்வழிக்கூறுகள் ஒன்றுகலந்து மெர்ஸ் கொள்ளைநோய் வெடிப்பு ஏற்பட்டது. மெர்ஸ், சார்ஸ் போன்றவை கோவிட்-19-ன் முந்தைய மரபுக் கால்வழிக்கூறுகளே.

இது போன்ற வைரஸ்களின் தோற்றத்திற்கும் நவீன இறைச்சிக் கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு பெரும் முதலாளித்துவ பண்ணைகளுக்கும் தொடர்பியிருப்பதை பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டு வெளிவந்துள்ளன. உதாரணமாக, சார்ஸ்கோவிட்-1 கொள்ளைநோயின் போது ஓ..சி.டி வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின் முன்னுரை இவ்வாறு தொடங்குகிறது15 :

நமது தாத்தாக்களின் காலத்தைவிட தற்போது புது வகையான நோய்கள் அடிக்கடி மேலெழுகிறது என்று கருதப்படும் பொதுவான நம்பிக்கையில் எதிர்பாராதவிதமாக, அதிகளவில் உண்மை இருக்கிறது. அதிக அளவிலான பயணங்கள், வேலைக்காக புலம்பெயர்வது மற்றும் ஜன நெருக்கடி அதிகமுள்ள நகரங்கள் என்று நாம் வாழும் விதம் தற்காலத்தில் பெருவாரியாக மாறியுள்ளது; பெரும்பாலான சமயங்களில் விலங்குகளுடன் அக்கம்பக்கமாகவும் வாழ்கிறோம். இவையெல்லாம் புதிய வகையிலான தொற்றுநோய்களின் பரவலின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

நுண்ணுயிர்கள் இயற்கையாகவே மாற்றமும் தகவமைப்பும் அடையும் தன்மை உடையவை. இந்த இயற்கையான நிகழ்ச்சிப்போக்குடன், சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் சேர்ந்து புதிய நோய்களை என்றுமில்லாத வேகத்தில் தோன்றியெழச் செய்கிறது…”

இறைச்சிக்கான விலங்குகளின் உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு புதிய நோய்களின் தோற்றத்திற்கான வாய்ப்பையும் அதிகரித்திருப்பதாக சுகாதாரத்திற்கும் மருத்துவத்திற்குமான லண்டன் கல்லூரியின் சமூக அறிவியலாளரான மெக்ரோ லிவர்னி கூறுகிறார்16. இந்த சூனாடிக் ஆபத்தை கடுமையான கட்டுபாடுகள் விதிப்பதன் மூலம் நிறையவே குறைக்கலாம் என்றும்; கால்நடை வளர்ப்புத்துறையின் உற்பத்தி அதிரித்திருப்பதால் சூனாசிஸ்கான வாய்ப்பும் அதிகரித்துவிட்டது என்றும் கூறுகிறார், லிவர்னி.

பல நூற்றாண்டுகளாக மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் உறவுகள் இருக்கிறது; இருந்தபோதிலும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வரும் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு கடந்த சில ஆண்டுகளில் அதிகரிந்துவிட்டது; கொள்ளைநோய்களின் சகாப்தம் தொடங்கிவிட்டது என்று அறிவிக்கிறார், கிர்கர்17.

பெருவீத கால்நடை தொழிற்துறை எங்ஙனம் புதிய தொற்றுநோய்களை சூனாசிஸ் தாவல் மூலம் உருவாவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது; அதை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது பற்றியும் பல ஆய்வுகள்18  உள்ளன.

குறிப்பாக, இப்பெருவீத பண்ணைகளில் அதிக எண்ணிக்கையிலான இறைச்சிக் கோழிகள் / கால்நடைகள் அடைத்து வைக்கப்படுவதால் உண்டாகும் வெப்பத்தை குறைக்கவும், காற்றோட்டத்தை அதிகப்படுத்தவும் உயரமான மேற்கூரைகள் அமைக்கப்படுவது; அதன்மூலம் வௌவால் போன்ற பறவைகள் (காட்டு பறவையினங்கள், பூச்சிகள்) அங்கு அடைக்கலமாவது; இதன்மூலம் சூனாசிஸ் தாவல் ஏற்படுவதற்கான வழித்துறைகள் அதிகரிப்பது;

மேம்படுத்தப்பட்ட கட்டுபாடுகள் உள்ள ரஷ்ய, தென்கொரிய, நைஜீரிய பண்ணைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் எங்ஙனம் காற்றின் நீர்த்துளிகளில் கிருமிகள் 7 நாள் வரை உயிருடன் இருக்கின்றன; காற்றோட்டதிற்காக பண்ணையில் வைக்கப்பட்டுள்ள பெரிய காற்றாடிகள் மூலம் அக்கிருமிகள் பண்ணைகளுக்கு வெளியில் 100 மீட்டர் வரை விரவியிருப்பதையும் இன்னும் சூனாடிக் தாவல் நடப்பதற்கான சூழல்கள் கண்டறியப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய ஆய்வு முடிவுகள், பெரும்பண்ணைகளில் வைரஸ் சூனாட்டிக் தாவல்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களைக் கொடுத்தும் அவை எதையும் பின்பற்றாமல் வெறுமனே இலாபவெறி மட்டுமே நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் பெருவீத முதலாளித்துவ உற்பத்திமுறை தான் இந்த பெருந்தொற்று நோய்களின் அடிப்படையாக இருக்கிறது.

உலகளாவிய அளவில் நடைபெறும் பெரும்பண்ணை தொழில்களின் பிரம்மாண்டத்தைப் பற்றிப் பார்க்கையில்தான் இந்த பெருந்தொற்றுக்களின் பின்னணியில் உள்ள முதலாளித்துவ அடிப்படையை புரிந்து கொள்ள முடியும்.. இது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்…

(தொடரும்)

தொடரின் பிற பகுதிகள் :

பகுதி 1 :  உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !
பகுதி 2 : வைரஸ்கள் எப்படி உருமாறுகின்றன ? || ஓர் அறிவியல் விளக்கம் !
பகுதி 4 : இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!
பகுதி 5 (இறுதி) : கொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் ?

அடிக்குறிப்புகள் :

13. Wallace, Rob, 2016, Big Farms Make Big Flu (Monthly Review Press).
14. Davis, Mike, 2006b, The Monster at Our Door: The Global Threat of Avian Flu (Owl Books).
15. OECD Report on Biotechnology And Sustainability: The fight against infectious disease, 2003, Introduction by Dr. Quintanilha who served as Chairman of the OECD Working Group on Human Health-Related Biotechologies at time of this report,
அழுத்தம் நம்முடையது
16.
Liverani M, et al. Understanding and managing zoonotic risk in the new livestock industries. Environ Health Perspect 121(8):873–877 (2013)
17. Greger M. The human/animal interface: emergence and resurgence of zoonotic infectious diseases. Crit Rev Microbiol 33(4):243–299 (2007)
18.
Industrial Livestock Production and Global Health Risks, June 2007, Research Report funded by John Hopkins Bloomberg School of Public Health, The Royal Veterinary College, University of London

தங்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க