தவியேற்ற சில மணி நேரங்களிலேயே சுற்றுச்சூழலுக்கு எதிராகவும் பாதுக்காக்கப்பட்ட அமேசான் மழைக்காடுகளுக்கு எதிராகவும் ஒரு நிர்வாக ஆணையை பிறப்பித்துள்ளார் பிரேசிலின் புதிய அதிபர் சயீர் பொல்சனரோ (Jair Bolsonaro). இதுவரை பழங்குடி மக்களின் பாதுகாப்பில் இருந்த அமேசான் காடுகளை வேளாண்துறை நிறுவனங்கள் ஆட்டுவிக்கும் விவசாயத்துறை அமைச்சகத்திடம் வழங்குவதற்கான ஒரு ஆணையைதான் அவர் பிறப்பித்துள்ளார்.

அதிபர் சயீர் பொல்சனரோ.

இதற்கு பழங்குடி தலைவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தற்போது பிரேசிலின் மொத்த நிலப்பரப்பில் பாதுகாக்கப்பட்ட [அமேசான்] காடுகள் 13 விழுக்காடாக உள்ளது. ஏற்கனவே காடழிப்பு தொடர்ந்து நடந்து வரும் சூழலில் வேளாண்துறை நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் இந்நடவடிக்கையானது தாங்கள் பாதுகாத்து வரும் காடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

“இனி காடழிப்பு தீவிரமாக நடக்கும். மேலும் பழங்குடி மக்கள் மீது வன்முறையும் ஏவப்படும்” என்று பிரேசில் பழங்குடி மக்களின் குரல் (Articulation of Indigenous People of Brazil) அமைப்பின் நிர்வாக ஒருங்கிணைப்பாளரான டினாமன் டக்ஸா (Dinaman Tuxá) கூறினார். “பழங்குடி மக்கள் பாதுகாவலர்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

“காடுகளை அழிக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது” என்று பழங்குடி மக்களின் தலைவர்களுள் ஒருவரான சோனியா கௌஜஜாரா (Sonia Guajajara) பதிவிட்டிருந்தார். சோசலிசம் மற்றும் சுதந்திரக் கட்சியின் (Socialism and Freedom party) சார்பில் துணை அதிபருக்கு இவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லைகளை முந்தைய ஆட்சிகளில் பழங்குடியினரின் நிறுவனமான புனாய் (Funai) நிர்வகித்தது. தற்போது இது நீதி அமைச்சகத்திடம் இருந்து புதிய பெண்கள், குடும்பம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரு சுவிஷேச பாதிரியாரின் கட்டுப்பாட்டில் அது செயல்படும்.

ஒரு நிர்வாக ஆணை மூலம் எடுக்கப்பட்ட இம்முடிவு அரசு சாரா நிறுவனங்கள் மீதான பெரும் அதிகாரத்தை பொல்சனரோ அரசின் செயலருக்கு கொடுத்திருக்கிறது.

இந்த தற்காலிக ஆணையானது காங்கிரசிடமிருந்து ஒப்புதல் வாங்கவில்லை எனில் 120 நாள்களில் காலாவதியாகிவிடும். இது அந்நாட்டிற்குள் இயங்கும் சர்வதேசிய அமைப்புகள் மற்றும் அரசுசாரா நிறுவனங்களின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், உடன் சேர்ந்து இயங்கவும், ஒருங்கிணைக்கவும், மேலதிகாரம் செலுத்தவும் பிரேசில் அரசின் செயலாளரான கார்லோஸ் ஆல்பர்டோ தாஸ் சாண்டோஸ் குரூஸ் (Carlos Alberto Dos Santos Cruz) அலுவலகத்திற்கு அதிகாரத்தை அளித்திருக்கிறது.

பிரேசிலுக்குள் மூக்கை நுழைப்பதாக பிரேசிலைச் சேர்ந்த மற்றும் சர்வதேச என்.ஜி.ஓக்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டிய பொல்சனரோ இம்முடிவினை ஆதரித்து டுவிட்டரில் கருத்திட்டுள்ளார். “பழங்குடிகளது நிலம் மற்றும் ஆப்பிரிக்க மக்களின் நிலப்பகுதிகள் (quilombos) ஆகியவை ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 15 விழுக்காட்டிற்கு மேலிருப்பதாக அவர் கூறினார். வெறும் பத்து இலட்சம் மக்கள் மட்டுமே வாழும் இப்பகுதி உண்மையான பிரேசிலிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தொண்டு நிறுவனங்களால் சுயநலத்திற்காகவும் தவறான வகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

பழங்குடி மக்களுக்கான நலத்துறை ஒதுக்கீடுகள் இனி குறைக்கப்படும் என்று புதிய நலத்துறை அமைச்சரான லூயிஸ் ஹென்றிக் மண்டேட்டா (Luiz Henrique Mandetta) கூறினார். “பழங்குடி மக்களை விட தற்போது குறைவாகவே பொது மக்களுக்கு சுகாதார நிதி ஒதுக்கப்படுகிறது” என்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

பழங்குடி மக்களுக்கான எல்லையை நீக்குவதாகவும், சுற்றுச்சூழல் நிறுவனங்களின் அதிகாரத்தை குறைத்து பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சுரங்கம் தோண்டவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வேளாண்மை செய்ய ஏற்பாடு செய்வதாகவும் கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பொல்சனரோ கூறினார். இவரது ஆணை ஆப்பிரிக்கா மக்களுடைய நிலப்பகுதிகள் (quilombos – முன்னாள் ஆப்பிரிக்க அடிமைகளுடைய சந்ததிகளின் நிலப்பகுதிகள்) மீது அதிகாரத்தை செலுத்த பிரேசில் வேளாண்துறை அமைச்சகத்திற்கு வழிவகை செய்கிறது.

புதிய வேளாண்துறை அமைச்சராக பதவியேற்ற பின் தெரசா கிறிஸ்டினா டயஸ் (Tereza Cristina Dias), சுற்றுச்சூழலை பலிகடா கொடுத்து வளர்ந்துள்ள வேளாண்துறைக்கு எதிரான குற்றச்சாட்டுகளிடமிருந்து அதனை பாதுகாத்துள்ளார்.

படிக்க:
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !

”பிரேசில் அமேசானை பாதுகாக்க வேண்டுமென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்களது சொந்தக் காடுகளை அழித்து வளர்ந்த நாடுகள்தான் செலவழிக்க வேண்டும்” என்று தொலைக்காட்சி சுவிசேச போதகரும் பொல்சனரோவின் நெருங்கிய நண்பருமான சிலாஸ் மலபியா (Silas Malafaia) கூறினார்.

“ஆங்கில மொழி பேசும் வெளிநாட்டவர் (gringos – ஆங்கில மொழி பேசும் வெளிநாட்டவர் குறிப்பாக ஐக்கிய அமெரிக்க ஆண்களை ஸ்பானிய அல்லது டச்சு மொழி பேசும் இலத்தின் அமெரிக்க மக்கள் கிரிங்கோஸ் என்று அழைக்கின்றனர்) அவர்களது காடுகளை அழித்துவிட்டதால், அனைத்தையும் நாங்கள் பாதுகாக்க வேண்டுமா?” என்று அவர் கேட்டிருக்கிறார்.

“பொல்சனரோ அவரது அரசாங்கத்தை மோசமான பாதைக்கு அழைத்து செல்ல தொடங்கிவிட்டார்” என்று முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரினா சில்வா (Marina Silva) டிவிட் செய்துள்ளார்.

“மீண்டுமொரு காலனியாதிக்கத்தை நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம் அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்” என்று பழங்குடி தலைவர்களுள் ஒருவரான டக்சா கூறுகிறார்.

 

மூன்றாம் உலக நாடுகள், முழுவதும் கார்ப்பரேட் சேவைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன. பிரேசில் பழங்குடியினருக்கு வந்திருக்கும் இந்த நிலை கடந்த 2007-ம் ஆண்டு வாக்கிலேயே மத்திய இந்தியாவின் பழங்குடியினருக்கு நிகழ்ந்திருக்கிறது. வேதாந்தா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக ஒட்டுமொத்த பழங்குடி இன மக்களையும் விரட்டியடிக்க, சல்வா ஜூடும் எனும் கொலைகாரப் படையை உருவாக்கி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை உட்பட அனைத்து வகையான ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டது அன்றைய மத்திய காங்கிரசு அரசு. அதற்கு முழு ஆதரவு தந்து பச்சைப் படுகொலைகளை நடத்தி முடித்தது சட்டீஸ்கர் மாநில அன்றைய பாஜக அரசு.

அடுத்ததாக மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்ததும், கார்ப்பரேட்டுகள் காடுகளையும், மலைகளையும், அனைத்து இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். சுற்றுச் சூழல் விதிமுறைகளையும் கார்ப்பரேட்டுகள் மீறுவதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவது முதல் சுற்றுச்சூழல் தொடர்பான என்.ஜி.ஓ-க்களைத் தடை செய்வது வரையில் அனைத்து கார்ப்பரேட் சேவைகளையும் செய்து கொடுத்தது மோடி அரசு.

கார்ப்பரேட் மூலதனக் கொள்ளையின் பாதுகாவலராக இங்கு மோடி அமர்ந்திருப்பது போல், பிரேசிலில் ஒரு பொல்சனரோ வீற்றிருக்கிறார்.

 


நன்றி: தி கார்டியன்
கட்டுரையாளர்: டாம் பிலிப்ஸ்
தமிழாக்கம்: சுகுமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க