.நா.வால் கூட்டப்பட்ட முன்னணி விஞ்ஞானிகள் குழு கடந்த திங்களன்று ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை, மனிதகுலத்திற்கு ஒரு அப்பட்டமான எச்சரிக்கையை விடுக்கிறது. அது கூறுவதாவது : “பருவநிலை நெருக்கடி இங்கே உள்ளது; அதன் மிகவும் நாசகரமான விளைவுகளில் சில இப்போது தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. ஆக மிகப் பெருமளவிலும் விரைவாகவும் பசுமைக்குடில் வாயுக்கள் (Green house Gases) வெளியேற்றப்படுவதை குறைப்பதன் மூலம் மட்டுமே வரவிருக்கும் பேரழிவைக் கட்டுப்படுத்த முடியும்.”

பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச குழுவால் (ஐபிசிசி) கூட்டப்பட்ட 200 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஒன்றுகூடி ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை இது. இந்த புதிய அறிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஆய்வுகளின் ஒரு பரந்த பகுப்பாய்வை பிரதிபலிக்கிறது. ஏனெனில் உலகெங்கிலும் உள்ள மக்கள் வரலாறு காணாத வெப்பநிலை மற்றும் கொடிய தீவிர வானிலையால் – பேரழிவு காட்டுத்தீ முதல் மிதமிஞ்சிய பருவ மழை, தீவிர வறட்சி வரை – பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஞ்ஞானிகளின் ஆய்வுப் பணி என்பது மனித செயல்பாடு – குறிப்பாக புதைபடிவ எரிபொருள்களை எரிப்பது – பருவநிலையை எந்த அளவிற்கு மாற்றியமைத்துள்ளது என்பது பற்றிய ஒரு திடுக்கிடச் செய்யும் மதிப்பீடு ஆகும் . “இதுவரையில்லாத அளவு” புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்ட உயர்வு மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும், பேரழிவை ஏற்படுத்தும் பிற மாற்றங்களை இத்தகைய மனிதச் செயல்பாடுகள் உருவாக்குகின்றன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும், பெரும் பவளப் பாறைத் திட்டுகள் மற்றும் அமேசான் மழைக்காடுகள் போன்ற பல்லுயிரியல் சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆபத்தில் ஆழ்த்துவது, அனைத்து நகரங்களும் துடைத்தெறியப்படுவது உள்ளிட்ட மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதே போல, உலகின் அடர்ந்த மக்கள்தொகை கொண்ட பெரும் நிலப்பரப்புகளுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன.

படிக்க :
♦ முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
♦ யூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் !

பாரிஸ்-சாக்ளே பல்கலைக்கழகத்தின் பருவநிலை விஞ்ஞானியும் அறிக்கையை தயாரித்த குழுவின் இணைத் தலைவருமான வாலரி மாசன்-டெல்மோட் “இந்த அறிக்கையானது உண்மை நிலவரத்தை உணர்த்துகிறது” என்று கூறுகிறார். மேலும், “இப்போது எங்களிடம் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பருவநிலை பற்றிய தெளிவான சித்திரம் உள்ளது. இது (பருவநிலை மாற்றத்தில்) நாம் எதை நோக்கிச் செல்கிறோம், என்ன செய்ய முடியும், நாம் எப்படி தயார் செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ள இன்றியமையாதது.” என்கிறார்

புதிய பகுப்பாய்வின் ஒரு மையக் கண்டுபிடிப்பு என்னவென்றால், பாரிஸ் உடன்படிக்கையின் இலக்கான உலக வெப்பநிலை உயர்வை, தொழில்துறை உற்பத்திக்கு முந்தைய கட்டத்தை விட 1.5° செண்டிகிரேடுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு பேரபாயத்தில் உள்ளது. கொள்கை வகுப்பாளர்கள் (நாடுகளின் ஆட்சியாளர்கள்) பசுமைக்குடில் வாயு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர்.

அறிக்கையின்படி, 1850-ம் ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கடந்த நான்கு பத்தாண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டும், அதற்கு முந்தைய எந்த பத்தாண்டையும் விட தொடர்ந்து அதிக வெப்பமடைதல் நிகழ்ந்துள்ளது. வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவானது இரண்டு மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் தற்போதுள்ள “பசுமைக்குடில் வாயு உட்பட சுற்றுச் சூழலை மாசு படுத்தும் கழிவுகளின் வெளியேற்றத்தை வைத்துப் பார்க்கையில் புவியின் மேற்பரப்பு வெப்பமயமாவது குறைந்தபட்சம் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொடரும்”

மறுகாலனியாக்க காலகட்டத்தில் தீவிரமாக அதிகரித்திருக்கும் புவி வெப்பமயமாதல்

“வரவிருக்கும் பத்தாண்டுகளில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) மற்றும் பிற பசுமைக்குடில் வாயு வெளியேற்றப்படுவது தீவிரமாக குறைக்கப்படாவிட்டால் 21-ம் நூற்றாண்டில் புவி வெப்பமடைதல் 1.5°C(செண்டிகிரேடு) மற்றும் 2°C க்குள் இருக்க வேண்டும் என்ற இலக்கு மீறப்படும்” என்று ஐபிசிசி குழு எச்சரிக்கிறது.

“பருவநிலையில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களைப் பார்க்கும்போது, நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் இல்லாவிட்டாலும்கூட, இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுளில் முன்னெப்போதும் நடந்திராத மாற்றங்களாகும். ஏற்படப் போகும் இந்த மாற்றங்களில் சில ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இவை மீண்டும் தமது பழைய நிலைமைக்குத் திரும்ப முடியாதவை. உதாரணமாக கடல் மட்டம் உயரத் தொடங்கியிருப்பதானது இன்னும் நூறு ஆண்டுகளிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் வரை தொடர்ந்து மாற்றமின்றி உயர்ந்து கொண்டே இருக்கும்” என்று இந்த அறிக்கை கூறுகிறது. இது ஐபிசிசியின் 195 உறுப்பு நாடுகளால் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

“இருப்பினும், கரியமில வாயு மற்றும் பிற பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுவதை உறுதியாகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் குறைக்கும்போது அது பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும்” என்று அறிக்கை வலியுறுத்துகிறது.

“இதனால் காற்றின் தரம் அதிகரிப்பது (காற்று சுத்தமடைவது) போன்றவை விரைவாக நடக்கும் என்றாலும் உலக வெப்பநிலை நிலைப்படுத்தப்படுவதைக் காண 20-30 ஆண்டுகள் ஆகலாம்” என்பதையும் அறிக்கை வலியுறுத்துகிறது.
ஐபிசிசி பணிக்குழுவின் மற்றொரு இணைத் தலைவரான பன்மாவோ ஜாய், “பருவநிலையை மாற்றமின்றி நிலைப்படுத்துவதற்கு பசுமை க்குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுவதை வலுவாகவும், விரைவாகவும் நீடித்தும் குறைக்க வேண்டும். மேலும் கரியமில வாயு வெளியேற்றப்படுவது நிகர-பூஜ்ஜிய நிலைக்கு, அதாவது முழுமுற்றாக நிறுத்தப்பட வேண்டும்.”

“மற்ற பசுமைக்குடில் வாயுக்கள் மற்றும் காற்று மாசுபாடுகளை, குறிப்பாக மீத்தேன் வாயு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, மக்கள் சுகாதாரம் மற்றும் பருவநிலை ஆகிய இரண்டிற்கும் நன்மைகளை ஏற்படுத்தும்,” என்று ஜாய் மேலும் கூறினார்.
“மற்ற பசுமைக் குடில் வாயுக்கள் மற்றும் காற்று மாசுபாடுகளை, குறிப்பாக மீத்தேன் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது, சுகாதாரம் மற்றும் பருவநிலை இரண்டிற்கும் நன்மைகளை ஏற்படுத்தும்,” என்று ஜாய் மேலும் கூறினார்.

இந்த அறிக்கை மூன்று தவணைகளில் வெளியிடப்பட உள்ளது. முதல் தவணையாக, 2021-ல் ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய மாநாட்டிற்காக கிளாஸ்கோவில் உலகத் தலைவர்கள் கூடுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய பருவநிலை போராட்டத்திற்கு ஒரு முக்கிய தருணமாக அமையும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

“கிளாஸ்கோவில் நடக்க உள்ள ஐநாவின் பருவநிலை மாற்றம் பற்றிய மாநாடு உலக வெப்பநிலை கட்டுப்பாட்டை மீறி ஸ்பைரலாக உயர்ந்து செல்வதைத் தடுக்க நமக்குக் கிடைத்த கடைசி, சிறந்த வாய்ப்பாகப் பலரும் பார்க்கிறார்கள்,” என்று குளோபல் ஜஸ்டிஸ் நவ் என்ற அமைப்பின் டோரதி கிரேஸ் குயெர்ரெரோ கடந்த மாதம் எழுதினார்.

படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
♦ ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

“துரதிருஷ்டவசமாக, மிகவும் ஆபத்தான பருவநிலை தாக்கங்களைத் தடுப்பதற்கான ஒரு வழியாக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ள, உலக வெப்பமயமாதலை 1.5°C க்கு மட்டுப்படுத்துவதற்கான பாதையில் நாம் இன்னும் செல்லவில்லை. இந்த இலக்கை அடையத் தவறினால் மிகப்பெருமளவில் வகைதொகையில்லாத பாதிப்புகள் வளரும் நாடுகளுக்கு ஏற்படும்.” என்கிறார் டோரதி

ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், ஐபிசிசியின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் “மனிதகுலத்திற்கான அபாய எச்சரிக்கைக் குறியீடு” என்று கூறினார்.

“எச்சரிக்கை ஒலிகள் காதைச் செவிடாக்குகின்றன; ஆதாரங்கள் மறுக்க முடியாதவை; புதைபடிவ (கரிம) எரிபொருள் எரிப்பு மற்றும் காடழிப்பு ஆகியவற்றிலிருந்து பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் நமது கிரகத்தை மூச்சுத்திணறச் செய்து, பில்லியன்கணக்கான (ஒரு பில்லியன்=100 கோடி) மக்களை உடனடி ஆபத்தில் ஆழ்த்துகிறது,” என்றார் குட்டரெஸ். ” புவி வெப்பமடையும் நிகழ்வானது பூமியில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கிறது. இதன் விளைவாக ஏற்படும் பல மாற்றங்கள் (பாதிப்புகள்), பாதிப்புக்கு முந்தைய நிலைமையை மீட்டெடுக்க முடியாதவை” என்கிறார் குட்டரெஸ்.

“பருவநிலை நெருக்கடியால முதன்மையாகப் பாதிக்கப்பட இருப்பவர்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க ஒரு தெளிவான தார்மீக மற்றும் பொருளாதார அவசியம் இருக்கிறது.” என்று கூறும் குட்டரெஸ் தொடர்ந்து, “நாம் இப்போது நமது ஆற்றல்களை இணைத்தால், பருவநிலை பேரழிவைத் தவிர்க்க முடியும். ஆனால், இன்றைய அறிக்கை தெளிவுபடுத்துவது போல், தாமதத்திற்கு நேரம் இல்லை மற்றும் சாக்குபோக்குகளுக்கும் இடமில்லை. கிளாஸ்கோவில் நடக்க உள்ள ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய இந்த மாநாடு வெற்றி பெறுவதை உறுதி செய்ய அரசுத் தலைவர்கள் மற்றும் இவற்றுக்குப் பொறுப்பான அனைத்து பங்குதாரர்களையும் நான் நம்புகிறேன்” என்று கூறினார்.


கட்டுரையாளர் : ஜேக் ஜான்சன்
தமிழில்: நாகராசு

மூலக் கட்டுரை : Countercurrents

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க